Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிறப்புக் குழந்தைகளை மரியாதையுடன் நடத்துங்கள்!

நன்றி குங்குமம் தோழி

சிறப்புக் குழந்தைகளின் பயிற்சியாளர், பயிற்சி உபகரணம் தயாரிப்பாளர், எழுத்தாளர், விழிப்புணர்வு பேச்சாளர், பல்வேறு விருதுகள் பெற்றவர்... இவை அனைத்துக்கும் சொந்தக்காரர்தான் புதுச்சேரி, கிருஷ்ணா நகரில் வசிக்கும் கீதா ஷ்யாம் சுந்தர். ‘‘சொந்த ஊர் மதுரை சிம்மக்கல். என்னுடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரிகள். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் ராணுவத்தில் மருத்துவராக வேண்டும் என்ற கனவில் நுழைவுத் தேர்வு ரிசல்ட்டுக்காக காத்திருந்தேன்.

அந்த சமயத்தில் அப்பா பணியில் இருந்து ஓய்வு பெறும் காலம் என்பதால், உறவினர்கள் எல்லோரும் அப்பாவிடம் மூன்று பெண்களை கரை சேர்க்க வேண்டும். அதனால் பணியில் இருக்கும் போதே மூத்தப் பொண்ணான எனக்கு திருமணம் செய்து வைக்க சொன்னார்கள். அப்பாவும் என்னுடைய மேல்நிலைப்பள்ளிப் படிப்பு முடித்தவுடன், திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார். மறுப்பு சொல்ல முடியாமல் திருமணத்திற்கு சம்மதித்தேன். எனக்கு இரண்டு குழந்தைகள். ஆனால் அவர்கள் இருவருமே சிறப்புக் குழந்தைகள்.

முதல் குழந்தை பிறந்த மூன்று மாதத்தில் அவனை மருத்துவரிடம் அழைத்து சென்ற போதுதான் அவனுக்கு டவுன் சிண்ட்ரோம் குறைபாடு இருப்பதாக தெரியவந்தது.

இது கருவிலேயே ஏற்படும் மரபணுக் குறைபாடு. குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பு இருக்கும். அறிவுசார் குறைபாடு, கண்-காது- இதயம் போன்ற உள் உறுப்புகளில் பிரச்னைகள் இருக்கும். பேச்சுத் திறனும் சரியாக இருக்காது என பிரச்னைப் பட்டியல்களை மருத்துவர் எங்கள் முன் சமர்ப்பித்தார்.

அவர்களை சாதாரணப் பள்ளியில் சேர்க்க முடியாது. சிறப்பு பள்ளியில்தான் சேர்க்க முடியும். முதல் குழந்தை பிரச்னையுடன் பிறந்ததால், இரண்டாவது குழந்தை வேண்டாம் என்று முடிவு எடுத்தோம். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் முதல் குழந்தைக்கு ஒரு ஆதரவு தேவை என்று அறிவுரை சொல்ல... எங்களுக்கு இரண்டாவது குழந்தையும் பாதிப்புடன் பிறந்துவிட்டால் என்ற பயம் ஏற்பட்டது.

இது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெற்றோம். அவர் எங்களுக்கு பல சோதனைகளை எடுக்கச் சொல்லி பரிந்துரைத்தார். அவை அனைத்தும் நார்மல் என்று வந்தது. அதனால் பிரச்னை இல்லை என்ற தைரியத்தில் நான் மீண்டும் கருவுற்றேன். இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. 5 மாதம் வரை குழந்தையிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை. பல சோதனைக்குப் பிறகு எந்த அசைவும் இல்லாமல் இருந்தது. மருத்துவரிடம் காண்பித்த போது Agenesis of the corpus callosum (ACC) என்ற குறைபாடு இருப்பதாக தெரிவித்தனர்.

மூளையில் இடது-வலது என இரண்டு பகுதிகள் இருக்கும். அதனை தண்டு போன்ற ஒரு உறுப்பு இணைக்கும். அந்தப் பகுதி வளர்ச்சி இல்லாமல் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். இது ஒரு வகையான மூளை வளர்ச்சிக் குறைபாடு என்றும், இயல்பான வாழ்க்கையை வாழ முடியாது, பார்வைக் குறைபாடு, வலிப்பு போன்ற பிரச்னை ஏற்படும் என்று ெதரிவித்தார்கள். கண் பரிசோதனை செய்த போது, இடது கண்ணில் முற்றிலும் பார்வை இல்லை என்றும் வலது கண்ணில் 80% பார்வை மட்டுமே இருப்பது தெரிவந்தது.

இருவருமே சிறப்புக் குழந்தைகள் என்பதால் நானும் என் கணவரும் அவர்களை கண்ணும் கருத்துமாக பார்த்து வந்தோம். என் மகளுக்கு ஒரு வயது இருக்கும் போது என் மகன் ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டான். பெண் குழந்தையை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று தன்னம்பிக்கை சார்ந்த பயிற்சிகளை அளிக்க ஆரம்பித்தேன். தற்போது 70-க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகளை குவித்துள்ளாள்.

முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையிடம், ‘சாதனைக் குழந்தை’ என்ற விருதினைப் பெற்றுள்ளாள். ஓவியம் வரைவதிலும் திறமைசாலி. அரசியல் தலைவர்கள் மற்றும் இயற்கை சார்ந்து 150-க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளாள். இவளின் வளர்ச்சி எனக்குள் ஒரு நம்பிக்கையை கொடுத்தது. ஒன்றுமே செய்ய முடியாது என்று கூறிய குழந்தையை பயிற்சிகள் மூலம் மாற்ற முடியும் என்றால் இவளைப் போன்ற மற்ற சிறப்புக் குழந்தைகளையும் ஏன் மாற்றக்கூடாதுன்னு எனக்குள் எண்ணம் ஏற்பட்டது’’ என்றவர், தான் தயாரிக்கும் பயிற்சி உபகரணங்கள் குறித்து விவரித்தார்.

‘‘குழந்தைகளின் வளர்ச்சிக்காக அரசு மூலம் உபகரணங்களை பெற்றாலும், சிலவற்றை தனியார் கடைகளில் வாங்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. அவை விலை அதிகமாக இருந்தது. எல்லா நேரத்திலும் விலை உயர்ந்த பொருட்களை வாங்க முடியாது என்பதால், அதை நானே தயாரிக்க முடிவு செய்தேன். வீட்டில் இருக்கும் உபயோகமற்ற பொருட்களை கொண்டு உருவாக்க திட்டமிட்டேன்.

வேண்டாம் என்று தூக்கியெறியும் பிளாஸ்டிக் டப்பா, காகிதங்கள், அட்டைப் பெட்டிகளைக் கொண்டு பயிற்சி உபகரணங்களை செய்யத் தொடங்கினேன். உதாரணமாக ஒரு பயிற்சி உபகரணம் பெக் போர்டு. இதன் விலை ரூ.400 முதல் 500 வரை இருக்கும். அதை ரூ.20 செலவில் வீட்டில் உள்ள நாளிதழ்களை கொண்டு செய்யலாம். அதை மற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்களிடம் கொண்டு செல்ல விரும்பினேன். அந்த நேரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஊரடங்கு காரணத்தால், பல பெற்றோர்களால் குழந்தைளுக்கான உபகரணங்களை வாங்க முடியாமலும் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க முடியாமல் சிரமப்பட்டார்கள். அவர்களை வாட்ஸப் குழு மூலமாக இணைத்து உபகரணங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரம்பித்தேன்.

பலர் தானாகவே முன்வந்து பயிற்சி உபகரணங்களை செய்ய கற்றுக் கொண்டார்கள். 200-க்கும் மேற்பட்ட உபகரணங்களை தயாரித்து, தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக அளிக்கத் தொடங்கினேன். இதில் எனக்கு வருமானம் இல்லை என்றாலும், மன நிறைவும், மகிழ்ச்சியும் கிடைத்தது. அவர்களுக்கு என்னால் ஒரு சிறு உதவியினை செய்ய முடிந்தது என்ற திருப்தி கிடைத்தது’’ என்றவர், பயிற்சி உபகரணங்களை பற்றிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

‘‘இந்த சமுதாயத்தில் சிறப்புக் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் சந்திக்கும் பல சமூக பிரச்னைகளை குறித்து நட்புடன் நேசிப்போம் என்ற தலைப்பில் ஆறு சிறுகதைகள் கொண்ட புத்தகம் ஒன்றை எழுதினேன். என் மகளின் ஓவியங்களுக்கு ஏற்ப ஒரு கதையை உருவாக்கி ‘தூரிகை தீட்டிய வண்ணங்கள்’ என்ற பெயரில் மற்றொரு புத்தகம் எழுதினேன். வீட்டில் இருக்கும் சிறு சிறு பொருட்களை வைத்து, குழந்தைகளுக்கு எளிய முறையில் எவ்வாறு பயிற்சி அளிக்கலாம் என்பதை புகைப்படத்துடன் விளக்கி, ‘கற்பித்தலில் புதிய உத்திகள்’ புத்தகம் வெளியிட்டேன். இதன் அடுத்தடுத்த பாகங்கள் விரைவில் வெளிவர உள்ளன.

ஒவ்வொரு சிறப்புக் குழந்தைகளும் சாதனையாளர்கள்தான். தொடர் பயிற்சி, தன்னம்பிக்கை, பாராட்டுகள் மூலம் அவர்களை சரியான முறையில் வழிநடத்த வேண்டும். எதிர் காலத்தில் சிறப்புக் குழந்தைகளையும் அரவணைத்து ஒரு சமுதாயத்தை உருவாக்க நாம் ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும். சிறப்புக் குழந்தைகளும் இந்த சமுதாயத்தில் மதிப்புடனும், மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும். இதுதான் என் கனவும், லட்சியமும்’’ என்றார்.

தொகுப்பு: பொ.ஜெயசந்திரன்