Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மூன்று உலக சாம்பியன் பட்டங்களை வென்று அசத்திய சென்னை பெண்!

நன்றி குங்குமம் தோழி

பழமையான பயிற்சி மையம், ஆட்டோ ஓட்டுநரின் மகள், பொருளாதார நெருக்கடி, கேரம் சாம்பியன் கனவு, தொடர் பயிற்சி, விடாமுயற்சி இவையே உலக சாம்பியன் காசிமா வெற்றியின் அம்சங்கள். 6வது உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டி, அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், சான் பிரான்சிஸ்கோவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 10ம் தேதி தொடங்கி 16ம் தேதி வரை நடைபெற்றது. யுனைடெட் ஸ்டேட்ஸ் கேரம் அசோசியேஷன் (USCA) தலைமையில் நடைபெற்ற, 18 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் நம் இந்திய வீராங்கனை காசிமா மகளிர் ஒற்றையர், இரட்டையர் மற்றும் குழு ஆகிய மூன்று பிரிவுகளிலும் வெற்றியை சொந்தமாக்கி மூன்று தங்கப் பதக்கங்களை தன் வசப்படுத்தியுள்ளார்.

உலக சாம்பியன்ஷிப் பட்டத்தைப் பெற்றிருக்கும் காசிமா, தமிழ்நாட்டின் புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர். உலக அளவிலான கேரம் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று குவித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள காசிமா தன் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். “உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்று நம் நாட்டிற்கு பெருமை சேர்த்தது சந்தோஷமாக இருக்கிறது. போட்டியின் இறுதிக் கட்டத்தில் பதட்டமான நிலையில் இருந்தாலும் கவனக்கூர்மையுடன் விளையாடவே முயற்சி செய்தேன். மகளிர் ஒற்றையர் பிரிவில் பீகாரைச் சேர்ந்த ராஷ்மி குமாரியுடன் விளையாடும்போது எனக்கு நல்ல அனுபவம் கிடைத்தது.

ராஷ்மி குமாரி ஒரு நல்ல பிளேயர். அவர் இதுவரை 11 முறை தேசிய அளவிலான பட்டங்களையும் 3 முறை உலக அளவிலான பட்டங்களையும் வென்றுள்ளார். ஆனால் எனக்கு இதுதான் முதல் உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் போட்டி என்பதால் அவருடன் விளையாடுவது சவாலான தருணங்களாகத்தான் இருந்தன. இறுதி வினாடிகளில் வெற்றி என் பக்கம் இருந்தது. இரட்டையர் பிரிவில் விளையாடும்போது நானும் மதுரையை சேர்ந்த மித்ரா என்பவரும் ஒரு பிரிவாகவும், எங்களின் எதிரணியாக ராஷ்மி குமாரி மற்றும் நாகஜோதி இருவரும் இருந்தனர். இந்தப் போட்டியிலும் நான் தங்கம் வென்றேன்.

குழு பிரிவில் இந்தியா மற்றும் இலங்கை என்றிருக்கையில் இந்திய அணிக்கு தங்கம் வெல்லும் வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு 18 நாடுகள் பங்கேற்ற இந்த உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியின் வெற்றிகளில் நான் முதலிடமும், பீகாரை சேர்ந்த ராஷ்மி குமாரி இரண்டாம் இடமும், அமெரிக்காவை சேர்ந்த ப்ரீத்தி ஜகோட்டியா மூன்றாம் இடமும், மதுரையை சேர்ந்த மித்ரா

நான்காம் இடத்தையும் பிடித்தோம்.

இந்த உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் போட்டிக்காக இந்திய கேரம் விளையாட்டு வீரர் மரிய இருதயம் அவர்கள்தான் எங்களுக்கு தில்லியில் நடைபெற்ற பிரத்யேக பயிற்சி முகாமில் பயிற்சியளித்தார். அவர் பலமுறை உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பதால், அந்தப் போட்டியின் பல நுணுக்கங்களை எங்களுக்கு சொல்லிக் கொடுத்தார். எனக்கு இதுவே முதல்முறை என்பதால் அவரின் பயிற்சி யுக்திகள் எனக்கு போட்டியில் வெற்றி பெற பெரிதும் உதவியது. அவர் எங்களுக்கு பயிற்சி அளித்தாலும் நான் அதை மிகவும் சீரியசாக எடுத்துக் கொண்டு கடுமையாக பயிற்சி செய்தேன். அந்த விடாமுயற்சிதான் உலக சாம்பியன் பட்டம் வெல்ல அடித்தளமாக இருந்தது” என்று நெகிழ்ந்த காசிமா இந்த உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றதில் சில சிரமங்களையும் சந்தித்து இருக்கிறார்.

“இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்கான முயற்சியில் இரண்டு முறை எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. முதலில் மும்பையில் பின்னர் ஹைதராபாத் ஆகிய இரண்டு இடங்களிலும் காரணமே தெரியாமல் நிராகரிக்கப்பட்டபோது கொஞ்சம் சிரமமாக இருந்தது. ஆனாலும் எப்படியாவது இந்த உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க வேண்டுமென்ற துடிப்பில் முயற்சி செய்து கொண்டே இருந்தேன்.

மூன்றாவது முறை விண்ணப்பிக்கும்போதுதான் போட்டியில் பங்கேற்பதற்காக தேர்ந்தெடுக்கும் செயல்முறையில் நேர்காணல் செய்யப்படுவதற்கான அழைப்பு எனக்கு வந்தது. அதில் தேர்வான பிறகுதான் இறுதி கட்டமான உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டேன். அதன்பின்னர் போட்டியில் பங்கேற்க தேவையான 1.50 லட்சம் ரூபாயை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்தான் எனக்கு தந்து உதவினார்.

அவர் கொடுத்த அந்த உதவித்தொகை எனக்கு பெரும் உதவியாக இருந்தது. எங்கள் குடும்பமே நிதி நெருக்கடியில் உள்ள நிலையில் பயணச் செலவுகள் அதிகமாக இருந்ததால், எப்படி சமாளிக்க போகிறோம் என்ற பதட்டம் இருந்தது. ஆனால் அவரிடம் நான் இது குறித்து மனு அளித்ததும் அவர் எந்த ஒரு தாமதமும் இன்றி எனக்கு உதவி செய்துள்ளார்’’ என்று பேசிய உலக சாம்பியனான காசிமாவின் வெற்றிக்கு அவரின் அப்பாதான் அடிக்கல் நாட்டியிருக்கிறார்.

“எனக்கு 6 வயதாக இருக்கும்போதே கேரமில் ஆர்வம் வந்தது. காரணம், என் அப்பா மெஹபூப் பாஷா. அவர் செரியன் நகரில் கேரம் க்ளப் ஒன்றை நடத்தி வருகிறார். அங்குதான் அப்பா எனக்கு முதல் முறையாக பயிற்சி அளிக்கத் தொடங்கினார். அவரிடம் பலரும் பயிற்சி பெற்ற நிலையில் என் அண்ணன் அப்துல் ரஹ்மான் கேரமில் நேஷனல் சாம்பியன் பட்டம் பெற்றபோது எனக்கும் கேரம் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற கனவு எழுந்தது. என் விருப்பத்தை நான் அப்பாவிடம் சொன்ன போது அவருக்கு ரொம்பவே சந்தோஷமாக இருந்தது.

உடனே எனக்குப் பயிற்சி அளிக்க ஆரம்பித்தார். பயிற்சிகளை தொடர்ந்து முதலில் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெற்றேன். அதனைத் தொடர்ந்து தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கு பெறும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதில் சப்-ஜூனியர் பிரிவில் விளையாடி சாம்பியன் பட்டம் வென்றேன். அடுத்தடுத்து தேசிய அளவில் ஜூனியர் பிரிவுகளில் விளையாடி ஒருமுறை ரன்னர்-அப் ஆகவும், அடுத்த முறை சாம்பியன் பட்டமும் வென்றேன். எனது அடுத்தடுத்த முயற்சிகளில் ஆல்-இந்தியா கேரம் ஃபெடரேஷன் நடத்திய போட்டியில் சீனியர் பிரிவில் வெற்றி பெற்றேன்.

இந்த வெற்றிகள்தான் உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியில் தேர்வாக சாதகமாக இருந்தன. என் அப்பா நடத்தி வரும் கேரம் பயிற்சி மையத்தில்தான் நான் சிறுவயதில் இருந்து பயிற்சி பெற்றேன். இப்போது வரை என் அப்பாதான் என்னுடைய குரு. அவர் அளித்த பயிற்சிதான் நான் சாம்பியன் பட்டம் பெற உதவியிருக்கிறது. அப்பா ஆட்டோ டிரைவராகத்தான் இருந்தார். அந்த வருமானத்தில்தான் அப்பா எங்களை படிக்க வைத்தார், கேரம் கிளப்பினையும் கவனித்துக் ெகாண்டார். ஆனால் இப்ேபாது முழுக்க முழுக்க கிளப்பில் சிறுவர்களுக்கு முழு நேரம் கேரம் பயிற்சி அளித்து வருகிறார். அப்பாவிடம் பயிற்சி பெற்ற பலர் இன்று கேரம் விளையாட்டில் தேசிய அளவிலான சாம்பியன்களாக உள்ளனர். எனது வெற்றிப் பாதையின் முழு பங்களிப்பு என் அப்பாவிற்குதான் சேரும்.

பலர் கேரம் விளையாட்டினை பொழுதுபோக்காகத்தான் நினைக்கிறார்கள். வீட்டில் அனைவரும் ஒன்றாக கூடும் நேரத்திலோ அல்லது நண்பர்கள் கூடும் இடங்களில் கேரம் விளையாடுவதை நாம் பார்த்திருப்போம். கேரம் விளையாட்டும் ஒரு முக்கியமான ஸ்போர்ட்ஸ்தான். இதில் ஆர்வம் உள்ளவர்கள் தொடர்ந்து அதற்கான பயிற்சி எடுத்துக் கொண்டால் கண்டிப்பாக வெற்றியடைய முடியும். என்னைத் தொடர்ந்து எங்களின் கேரம் க்ளப்பில் பல பெண்களும் இணைந்து கேரம் விளையாட்டுப் பயிற்சியினை பெற்று வருகிறார்கள். அதில் 2023ம் ஆண்டுக்கான தேசிய அளவிலான சாம்பியன் பட்டத்தை என் சித்தப்பா மகள் பெற்றிருக்கிறாள்.

அவளைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு எங்க நகரில் இருந்து மற்றொரு பெண்ணான காவியாவும் நேஷனல் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றுள்ளார். இவர்கள் இருவருக்கும் என் அப்பாதான் பயிற்சியாளர். இவர்களை போல் மேலும் பல கேரம் சாம்பியன்களை எங்களின் கேரம் க்ளப் மூலமாக உருவாக்க இருக்கிறோம். என்னைப் போல் பலர் இங்கு விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு பல விளையாட்டில் பயிற்சி எடுத்து வருகிறார்கள். அவர்களுக்கும் எனக்கு உதவியது போல் தமிழக அரசு உதவ வேண்டும்’’ என்று தன் கோரிக்கையை முன் வைத்தார் காசிமா.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்