நன்றி குங்குமம் தோழி
“செவிலியராக பணியாற்றுவதையே ஒரு சேவையாக செய்துவந்தேன். மேலும் மக்களுக்காக சமூக சேவைகளில் பங்காற்றத் தொடங்கியதும் எனக்கு அதில் ஆத்ம திருப்தி கிடைத்தது” எனும் திலகவதி 10க்கும் மேற்பட்ட அறக்கட்டளை மற்றும் தொண்டு அமைப்புகளுடன் இணைந்து சமூக சேவைகளில் பங்களித்து வருகிறார். இலவச சட்ட சேவையில் வேலை, விடுமுறை தினங்களில் சேவை என பிஸியாக இருக்கும் சமூக சேவை தன்னார்வலர் திலகவதி நம்மிடம் பேசுகையில்...
“ஈரோடு அருகே திண்டல் என்பது தான் என் ஊர். என் அம்மா முப்பது வருடங்களாக அரசு மருத்துவமனையில் பராமரிப்பாளராக வேலை செய்தார். என் சகோதரனும் மருத்துவமனையில் பணியாற்றினார். அவர்களை பார்த்துதான் செவிலியராக வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. பயிற்சி முடித்து எங்கள் ஊரிலேயே 10 வருடங்கள் செவிலியராக பணியாற்றினேன். ஆனால், முழுமையாக சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் அறக்கட்டளைகளில் இணைந்து சேவை செய்ய தொடங்கினேன். நான் முதலில் விதைகள் என்கிற அறக்கட்டளையில் தன்னார்வலராக சேர்ந்து, மரக்கன்றுகளை நடும் சேவையில் ஈடுபட்டேன். ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமை மரம் நடுவதற்காக கிளம்பிவிடுவேன். ஈரோடு மாவட்டம் சுற்றிலும் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் சாலையோரங்களிலும் மரக்கன்றுகளை நடவு செய்துள்ளோம். மரங்களின் வளர்ச்சியை அவ்வப்போது சரி பார்த்து பராமரித்து வருகிறோம். அறக்கட்டளை மூலம் அரசு மருத்துவமனைகளில் ரத்ததான முகாம்களை நடத்துவோம். சிறப்பு தினங்களில் குழந்தைகள் காப்பகத்திற்கு உடைகள் வழங்கி, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வோம்.
இதனைத் தொடர்ந்து ஜீவிதம் அறக்கட்டளையுடன் இணைந்து சேவைகளை செய்ய ஆரம்பித்தேன். வார இறுதி நாட்களில் சாலையோரங்களில் உணவளிக்கும் சேவையில் தன்னார்வலராக செயல்படுவேன். சாலையோரங்களில் தங்கியிருக்கும் ஆதரவற்றவர்களை மீட்டெடுத்து, குளிப்பாட்டி, உடைகள் அணிவிப்பது, காயங்களுக்கு மருந்தளித்து, அவர்களை காப்பகத்தில் சேர்க்கும் வரை உடனிருந்து பராமரிப்பேன். சிலர் காப்பகங்களில் சேர விரும்ப மாட்டார்கள்.
அவர்களின் உடல்நிலை சரியில்லை என்றால் உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்வேன். அமைப்பிலுள்ள அனைவரும் பணம் சேர்த்து அவர்களுக்கு ஸ்பெஷலாக ஏதேனும் வாங்கிக் கொடுத்து தேவைகளை நிறைவேற்றுவோம்” என்றவர் மேலும் தொடர்ந்தார்.
“இப்போது சிறகுகள் என்கிற அமைப்பில் இணைந்து கடந்த 4 வருடங்களாக சேவையில் ஈடுபட்டு வருகிறேன். இதில் மரங்கள் நடுவது, அடர்வனங்களை உருவாக்குவது, அரசு மருத்துவமனைகளில் தங்கியிருக்கும் நோயாளிகளின் உறவினர்களுக்கு மாலை நேர உணவு வழங்குவது, நிகழ்ச்சிகளில் மீதமாகும் கைப்படாத உணவுகளை பின்தங்கிய பகுதிகளில் தங்கியிருக்கும் மக்களுக்கு கொடுப்பது, தானமாக பெறப்பட்ட நல்ல நிலையில் உள்ள ஆடைகளை இல்லாதவர்களுக்கு கொடுப்பது போன்ற பணிகளை செய்து வருகிறேன். அடுத்து சுக்கிரா அறக்கட்டளையுடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவது, அவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கி, உணவளித்து மகிழ்விப்போம். கடம்பூர் மலைப்பகுதியில் பேச, பார்க்க, கேட்க முடியாத மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள்ளனர்.
பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொடர்பான மற்றும் போதைப்பழக்கம் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம். நேசம் என்ற அமைப்பு தற்கொலை தடுப்பு குறித்து செயல்பட்டு வருகிறது. வாரத்தில் ஒரு நாள் 4 மணி நேரம் இந்த சேவையில் 2 வருடங்களாக பங்காற்றுகிறேன். இதற்காக சிறப்பு பயிற்சியும் பெற்றேன். பாரதி அறக்கட்டளை மூலமாக வறுமையில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகங்கள், மற்ற தேவையான பொருட்களை வழங்கும் பணிகளிலும் ஈடுபடுவேன். கண் தானம், உடலுறுப்பு தானம் செய்யவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்’’ என்றவர், நீதிமன்ற சட்டப்பணி ஆணைக்குழுவில் இணைந்தது குறித்து பகிர்ந்தார்.
“ஈரோடு மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்கள் இதில் இணையலாம். அதற்கான நேர்காணல் நடைபெறும், அதில் தேர்ச்சி அடைந்தேன். இப்போது குழுவுடன் இணைந்து வேலை செய்து வருகிறேன். இந்தக் குழுவின் முக்கிய ேநாக்கங்கள் இலவச சட்ட சேவைகளை மக்களுக்கு வழங்குவது.
சட்ட உதவிகள் மற்றும் உரிமைகள் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண மக்கள் இந்த ஆணைக்குழுவை அணுகலாம். அது குறித்து பலருக்கும் தெரியாது என்பதால், மருத்துவமனை, பொது இடங்கள் என மக்கள் கூடும் இடங்களுக்கு சென்று அடிப்படை சட்டங்கள் மற்றும் இலவச சட்ட சேவை மூலம் கிடைக்கும் உதவிகள் குறித்தும் பேசுவோம். வழக்கறிஞர் வைத்து வழக்காட முடியாத வறுமை நிலையில் உள்ள மக்களுக்காக அரசு வழக்கறிஞர்களை நியமித்து வழக்கை நடத்த ஆணைக்குழு உதவுகிறது. சிறையில் இருக்கும் கைதிகளுக்கு தேவையான அடிப்படை தேவைகளை நிறைவேற்றவும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியும் ஆணைக்குழு செயல்பட்டு வருகிறது. மேலும் வழக்குகளை விரைவாகவும் செலவில்லாமலும் தீர்த்துக்கொள்ளும் வகையில் சமரசம் மையமும் இங்குள்ளது.
முதியவர்களான பெற்றோரிடமிருந்து சொத்துக்களை கட்டாயமாக பறித்துக்கொண்டு அவர்களை அடிப்பது, துன்புறுத்துவது போன்ற பிரச்னைகளை கண்டறிந்தால், குடும்பத்தினரை அழைத்துப் பேசி சமரசம் செய்து அவர்களுக்கு நியாயம் வாங்கித் தரவும் ஆணையக்குழு உதவும். இலவச சட்ட சேவைகள் இருப்பதை பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். கஷ்டப்படுபவர்களின் துயரம் தீர்க்கும் போது மன நிறைவாக இருக்கும்.
நீதிமன்றத்தில் காலை முதல் மாலை வரை வேலை இருக்கும். அதன் பிறகு அறக்கட்டளை சார்ந்த வேலையில் ஈடுபட ஆரம்பிப்பேன். வார விடுமுறை நாட்களிலும் அறக்கட்டளை தொடர்பான வேலைகளுக்கு ேநரம் ஒதுக்கிடுவேன். என் கணவர் இறந்துவிட்டார். என் மகள் கல்லூரியில் படிக்கிறாள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளும் என்னுடன் இணைந்து சேவைப் பணிகளில் உதவுகிறாள்” என்றார் திலகவதி.
தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்