Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆர்கானிக் பொருட்களுக்கு மிகப்பெரிய மார்க்கெட் இருக்கு!

நன்றி குங்குமம் தோழி

இயற்கையாக தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு எப்போதுமே மவுசு அதிகம்தான். குறிப்பாக தற்போது பெருகி வரும் நோய்களுக்கு முக்கியமான காரணமாக இருப்பது நம்முடைய உணவுப் பொருட்கள்தான். நம் ஆரோக்கியத்தை பேணிக் காப்பதற்கு இப்போது எல்லோரும் நம்முடைய பாரம்பரிய உணவு முறைகளுக்கு மாறி வருகிறார்கள். இயற்கையாக தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்று சிலர் போலியாகவும் விற்பனை செய்து வருகிறார்கள். சந்தையில் எது இயற்கையாக தயாரிக்கப்பட்ட பொருள் என்பதை கண்டுபிடிப்பதே கடினம்தான். இயற்கை விவசாயம் செய்து அதிலிருந்து பொருட்களை விற்பனை செய்பவர்கள் குறைவு தான். அப்படியானவர்களில் ஒருவர்தான் நாமக்கல்லை சேர்ந்த பிரியா சிவப்பிரகாசம்.

தன்னுடைய நிலத்திலேயே இயற்கை விவசாயம் செய்து அதிலிருந்து 20க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரித்து ‘ஆர்கானிக் பார்மர்’ என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறார் இயற்கை விவசாயியான பிரியா. அவரிடம் இது குறித்து பேசிய போது, ‘‘சொந்த ஊர் நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஒரு குக்கிராமம். எங்க ஊர் முழுவதுமே விவசாயம் செழித்து வளரக்கூடிய பகுதிதான். குறிப்பா இங்கு வசிக்கும் பெரியவங்க எல்லாரும் இயற்கை விவசாயம்தாங்க செய்றாங்க. நான் எம்.பி.ஏவில் இன்டர்நேஷனல் பிசினஸ் படிச்சிருக்கேன். ஆனால் நிறுவனத்தில் சென்று வேலை பார்க்க பிடிக்காமல் விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அதனால என்னுடைய நிலத்தில் இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்தேன்.

இயற்கை விவசாயம் செய்ய முதலில் அதற்கான இயற்கை உரங்கள் அவசியம். எங்க கிராமத்தில் பலரும் இயற்கை விவசாயம் செய்து வந்ததால் அந்த உரத்திற்கான டிமாண்ட் அதிகமாக இருந்தது. அதனால் நாங்க விவசாயத்தில் முழு மூச்சாக இறங்கும் முன் இயற்கை உரம் தயாரித்து கொடுத்து வந்தோம். மேலும் இயற்கை விவசாயம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருந்தோம். அதற்கு முதல் கட்டமாக, சமூக வலைத்தளத்தில் இயற்கை விவசாயம் குறித்து செய்திகள், வீடியோக்கள் எல்லாம் வெளியிட ஆரம்பித்தோம். அதைப் பார்த்து மக்கள் எங்களின் உரம் தருவது போல் ஆர்கானிக் முறையில் மகசூல் எடுத்த விளைப் பொருட்களை தர முடியுமான்னு கேட்டார்கள். மக்கள் போட்ட விதையும் அவங்களின் ஆதரவும்தான் இன்று மரமா வளர்ந்து ‘ஆர்கானிக் பார்மர்’ என்கிற பெயரில் இயற்கை முறையிலான பொருட்களை தயாரித்து கொடுத்து வருகிறோம்’’ என்றவர் தன்னுடைய பொருட்கள் குறித்து பேசத் தொடங்கினார்.

‘‘விவசாயத்தில் எத்தனையோ வழி மற்றும் தொழில்நுட்பங்கள் இருக்கு. நாம நல்லதை மட்டும் எடுத்துப்போம். நல்ல காற்று, நல்ல தண்ணீர் இவை அனைத்தும் இயற்கை நமக்கு கொடுத்திருக்கும் சொத்து. அதை மாசுப்படுத்தாமல் இயற்கையோடு ஒன்றி விவசாயம் செய்வது ரொம்ப நாள் நீடிக்கும். உதாரணத்துக்கு ஒவ்வொரு செடியையும் நம்ம குழந்தைங்க மாதிரிதான் பார்க்கணும். செடி வாடாம இருக்க சரியான அளவு தண்ணீர் காட்டணும். செடிகளை பூச்சித் தாக்குதலில் இருந்து சமாளிக்க ரசாயன பூச்சிக்கொல்லிகளை தெளிக்காமல், வேப்பெண்ணை அடித்தாலே பூச்சித் தாக்குதலில் இருந்து செடிகளை பாதுகாக்கலாம். உரங்களையும் நாங்களே இயற்கையான முறையில் தயாரிக்கிறோம்.

விவசாயம் ஒரு சுறுசுறுப்பான வாழ்க்கை முறை. உரங்கள் தயாரிப்பது மட்டுமில்லாமல், இயற்கையான பொருட் களை தயாரிக்கும் வேலைகளிலும் இறங்கினோம். காரணம், மக்கள் தற்போது இயற்கையாக தயாரித்த பொருட்களை வாங்குவதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள். நாங்க இயற்கை முறையில் விவசாயம் செய்வதால் அந்தப் பொருட்களை எடுத்து ஒவ்வொன்றாக தயாரித்து வருகிறோம். நம்முடைய முன்னோர்கள் கடைபிடித்த பாரம்பரிய விவசாய முறைகளைதான் நாங்க பின்பற்றி வருகிறோம். ஒவ்வொரு பொருளையும் உற்பத்தி செய்து அதை நாங்க பயன்படுத்தி பார்த்த பிறகுதான் மக்களுக்கு விற்பனை செய்கிறோம்.

இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்களிலிருந்து 20க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரித்து வருகிறோம். மரச்செக்கில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், மூலிகை ஹேர் ஆயில், எலுமிச்சை ஊறுகாய், முருங்கைப் பொடி, மணத்தக்காளி கீரைப் பொடி மற்றும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பேஸ் பேக், தேன், முளைகட்டிய சோள மாவு, சோள குருணை, மஞ்சள் பொடி மற்றும் இயற்கை உரம் இவை அனைத்தையும் இயற்கை முறையில் தயாரித்து மக்களுக்கு விற்பனை செய்கிறோம்.

எங்களின் பொருட்கள் தரமானதாகவும், பாதுகாப்பானது என்று மக்களின் நம்பிக்கையை நாங்க என்றும் கடைப்பிடித்து வருவதால், அவர்களும் ஆர்வத்துடன் விரும்பி வாங்குகிறார்கள். அது மிகவும்ஆத்ம திருப்தியாக உள்ளது. மேலும் எங்க நிலத்தில் விலையும் பொருட்களை மதிப்புக்கூட்டும் பொருளாக மாற்றிக் கொடுப்பதால், மக்களும் அதை விரும்புகிறார்கள்.

இயற்கை வேளாண்மையில் சாதிக்க எத்தனையோ விஷயங்கள் உள்ளது. புதிய தொழில்நுட்பத்தை நல்ல முறையில் பயன்படுத்தி இயற்கை விவசாயத்தையும், அதன் மூலம் வரக்கூடிய மதிப்புக் கூட்டிய பொருட்களையும் மக்களிடம் நேரடியா கொண்டு போய் சேர்ப்பதன் மூலம் இயற்கை விவசாயத்தை மேலும் முன்னேற்ற முடியும். இதனால மக்கள் மட்டுமில்லை விவசாயிகளும் நன்மை பெறுவார்கள்’’ என்று சொல்கிறார் பிரியா சிவப்பிரகாசம்.

தொகுப்பு: மா.வினோத்குமார்