நன்றி குங்குமம் தோழி
நட்பாகவும் அன்பாகவும் பழகுற டீச்சர் கிடைத்தால் குழந்தைகள் உற்சாகமாகிவிடுவார்கள். க்யூட் அண்ட் ஸ்மார்ட்டான திவ்யா டீச்சர் தொழில்நுட்பங்களின் உதவியுடன் தன் பள்ளி மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் காட்சி நம்மை நெகிழ வைக்கிறது. சேலம் அரசுப் பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றும் திவ்யா ஒரு பார்வை மாற்றுத்திறனாளி. ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு புத்துணர்வுடன் செல்லும் திவ்யா டீச்சர் பள்ளியில் மாணவர்கள் மட்டுமின்றி உடன் பணியாற்றும் ஆசிரியர்களின் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார். பள்ளிக்கே ஒரு செல்லக் குழந்தையாக இருக்கும் திவ்யா டீச்சர் தன் 12 வருட ஆசிரியர் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.
“எனக்கு பிறவியிலிருந்தே பார்வை கிடையாது. ஆரம்பத்தில் நானும் சேலத்தில் இருக்கும் ஒரு பொதுவான பள்ளியில் எல்லோருடனும் சேர்ந்து படித்தேன். பார்வை மாற்றுத்திறனாளிக்கென்று ஸ்பெஷல் ஸ்கூல் இருப்பது எனக்குத் தெரியாது. இதுபற்றி தெரிந்ததும் சென்னையில் உள்ள ஒரு சிறப்பு பள்ளியில் சேர்ந்து படித்தேன். அதன் பிறகு சேலத்தில் ஒரு கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்று பின்னர் பி.எட் படிப்புகளை முடித்தேன். 2012ல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சிப் பெற்றேன். அரசுப் பள்ளியில் ஆசிரியர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், எனக்கோ பணியில் சேர தயக்கமாக இருந்தது. நான் ஒரு மாற்றுத்திறனாளி. என்னை மாணவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்னுடன் எவ்வாறு பழகுவார்கள் என்ற சந்தேகங்கள் இருந்தன.
ஆசிரியர் பணியில் சேர்ந்ததும் ஆரம்பத்தில் சில சிரமங்களை சந்தித்தேன். காரணம், ஆசிரியர்கள் பாடம் எடுக்கையில் கரும்பலகையில் எழுதி விளக்குவார்கள். மாணவர்களுக்கும் புரிந்துகொள்ள எளிதாக இருக்கும். ஆனால், என்னால் அவ்வாறு எழுத முடியாது. வகுப்புகளை எடுத்த திருப்தியும் இருக்காது. அதற்கான தீர்வினை கண்டறிந்தேன். எனக்கு கணினி நன்றாக பயன்படுத்த தெரியும்.
பாடங்களை எளிமையாக தயார் செய்து பிரின்ட் அவுட் எடுத்து மாணவர்களுக்கு கொடுத்து விடுவேன். கரும்பலகையில் எழுதுவதை மாணவர்களுக்கு கையில் எழுத்தாக கொடுத்ததால், அவர்களுக்கு புரிந்துகொள்ள எளிமையாக இருந்தது. வீட்டுப் பாடங்கள், தேர்வு தாள்களை திருத்த என் சகோதரி உதவி செய்வார். ஆசிரியர் பணியில் இருந்தபடியே பகுதி நேரமாக எம்.ஃபில் பட்ட படிப்பையும் முடித்தேன். சில சிரமங்களை தாண்டி இப்போது 12 வருடங்களாக ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்” என்றவர் மாணவர்களை நட்புடன் கையாளுகிறார்.
“ஆரம்பத்தில் என்னை புரிந்துகொள்ள சிரமப்பட்ட மாணவச்செல்வங்கள் நாளடைவில் என் செல்லங்கள் ஆனார்கள். எனக்கும் மாணவர்களுக்கும் இடையே ஒரு தனிப்பட்ட அணுகுமுறை இருக்கும். அதனால் என்னுடைய வகுப்பில் சோர்வில்லாமல் ஆர்வத்துடன் பாடங்களை கவனிப்பார்கள். நான் வகுப்பிற்குள் நுழைந்ததுமே, பாடங்களை கவனிக்கும் ஆர்வம் இல்லை, பாடங்களை எழுதலாம் என்பார்கள். அவர்களின் மனநிலையை பொறுத்து என்னுடைய பாடத் திட்டங்களை மாற்றியமைப்பேன். அவ்வப்போது பாடம் தொடர்பாக சிறு போட்டிகள் வைத்து பரிசுகள் அளித்து அவர்களை மகிழ்விப்பேன். மாணவர்களை போலவே என்னுடன் பணியாற்றும் சக ஆசிரியர்களும் என்னுடன் அன்பாக பழகுவார்கள்.
கழிப்பறைக்கு அழைத்து செல்வது போன்ற உதவிகளையும் செய்வார்கள். என்னை அவர்களின் ஒருவராக சகஜமாக நடத்துவார்கள். என்னுடைய மாற்றுத்திறனை காரணமாக காட்டி ஒதுக்காமல், பள்ளியில் நடைபெறும் கண்காட்சி, புத்தக கண்காட்சி என எங்கு சென்றாலும் உடன் அழைத்து செல்வார்கள். சுற்றியிருக்கும் விஷயங்களை சொல்லிக்கொடுத்து நல்ல அனுபவங்கள் கிடைக்க உதவுவார்கள். நான் சமூகத்துடன் ஒன்றிணைவதற்கு அவர்களும் ஒரு காரணம். வீட்டிலும் எனக்கு நல்ல ஆதரவு உண்டு. என் சிறுவயதில் தந்தை இறந்துவிட்டார். என் அம்மாவும் அக்காவும் என்னுடன் உள்ளனர். சமையல் முதற் கொண்டு எல்லா வேலைகளையும் செய்வதற்கு அம்மா என்னை ஊக்கப்படுத்துவார்” என்றவர், தான் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் குறித்து பகிர்ந்தார்.
“ஆரம்பத்தில் எனக்கு மொபைல் ஃபோன் கூட பயன்படுத்த தெரியாது. 2014ம் ஆண்டிற்கு பிறகுதான் மொபைல் மற்றும் கணினி பயன்படுத்த கற்றுக்கொண்டேன். மாணவர்களுக்கு பாடம் தொடர்பான அனைத்தும் கணினியில் தயார் செய்திடுவேன். இப்போது அவற்றை இன்னும் சுலபமாக்க செயற்கை நுண்ணறிவு உதவுகிறது. மாணவர்களின் கேட்டல் திறனை மேம்படுத்த பாட்காஸ்ட், கதைகள் போன்றவற்றை உருவாக்குகிறேன். ஒரு புத்தகம் படிக்க வேண்டுமெனில் யாரையாவது வாசிக்க சொல்லித்தான் கேட்பேன். ஆனால், தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இப்போது புத்தகத்தின் சாஃட் காப்பி கணினியில் பதிவிறக்கம் செய்து ஸ்க்ரீன் ரீடரை பயன்படுத்தி புத்தகம் படித்துக்கொள்ளலாம்.
இன்னும் வசதியாக புத்தகத்தை மொபைல் திரை முன் காண்பித்தால் அதுவே ஸ்கேன் செய்து வாசித்துக்காட்டும் சாஃப்ட்வேர்களும் உள்ளன. தலையில் பொருத்திக்கொள்கிற ஹியர்சைட் என்ற தொழில்நுட்பக் கருவி பொருட்களின் பெயர்களை கண்டறிந்து சொல்லும். கடைகளில் ஏதேனும் பொருள் வாங்க சென்றால், அந்தப் பொருளிலுள்ள பார்கோட்-ஐ ஸ்கேன் செய்தால், அந்தப் பொருளின் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி போன்றவற்றை சொல்லிவிடும்.
புத்தகம் படிக்கும்போது இந்தக் கருவியில் உள்ள கேமரா புத்தக பக்கங்களை ஸ்கேன் செய்து வாசித்துக் காட்டும். இந்தக் கருவி இப்போது வரை தலையில் மாட்டிக்கொள்ளும் ஹெட்பேண்ட் வடிவில் உள்ளதால் சற்று சிரமமாக உள்ளது. இதனை எளிமையான வடிவில் கண் கண்ணாடி போல அணிந்து கொள்ளும் வகையில் வடிவமைத்தால் உதவியாக இருக்கும். இதுகுறித்து இக்கருவி தயாரிப்பு நிறுவனங்களிடம் கோரிக்கை வைத்துள்ளோம். செயற்கை நுண்ணறிவு உதவியாக இருப்பதுடன் நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது. நான் AI தொழில்நுட்பங்களை பயன்படுத்த தொடங்கியதும், எனக்கும் அதில் ஆர்வம் ஏற்பட்டது.
இப்போது நானும் AI தொழில்நுட்பம் படிக்கும் மாணவர்களும் இணைந்து, பார்வை மாற்றுத்திறனாளிகள் திரைப்படத்தின் காட்சிகளை புரிந்துகொள்ளும் வகையில் Active vision AI எனும் செயற்கை தொழில்நுட்ப செயலி ஒன்றை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அதாவது, ஒரு திரைப்படத்தில் வரும் உரையாடல்களை மட்டும்தான் பார்வை மாற்றுத்திறனாளிகளால் கேட்க முடியும். ஆனால், உரையாடல்கள் இல்லாத காட்சிகளில் என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது. எனவே, இதுபோன்ற காட்சிகளின் போது பின்னணி இசையின் அளவை சற்று குறைத்து காட்சியின் விளக்கத்தை இந்த AI குரல் வடிவத்தில் சொல்லும். இந்தத் தொழில்நுட்ப தயாரிப்பிற்கு என்னுடன் இணைந்து சில தொண்டு நிறுவனங்களும் நிதியுதவி செய்து வருகின்றனர். விரைவில் இது மக்கள் பயன்பாட்டுக்கு வரும்” என்றவர் மேலும் தொடர்ந்தார்.
“நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ளவும் தெரிந்து கொள்ளவும் எனக்கு ஆர்வம் அதிகம். கிடைக்கும் நேரங்களில் நிறைய புத்தகம் வாசிப்பேன். இப்போது இன்ஸ்டாகிராமில் நான் வாசித்த புத்தகங்களை பற்றி வீடியோ பதிவுகளை செய்து வருகிறேன். Guiding Stars எனும் புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளேன். சமையல் செய்வதும் எனக்குப் பிடிக்கும். தவிர்த்து கைவினைப் பொருட்கள் செய்வதும் என் பொழுதுபோக்குதான். பார்வை மாற்றுத்திறனாளிகளால் எல்லாவற்றையும் எளிதாக செய்துவிட முடியும் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது.
ஆனால், என்னால் பார்க்க முடியாது... அதனால் எதுவும் செய்ய முடியாது என்று புலம்பாமல் முடிந்தவரை கற்றுக்கொள்ள முயற்சிக்கணும். என்னைப் போன்றவர்களின் பெற்றோர்களும் உடனிருப்பவர்களும் ‘உனக்கெதுவும் தெரியாது’, ‘உனக்கெதற்கு கஷ்டம்... நாங்க செய்து தருகிறோம்’, ‘நீ வரவேண்டாம் இங்கேயே இரு’... என்றெல்லாம் சொல்லி அவர்களை முடக்கிவிடாதீர்கள். அடிப்படை விஷயங்கள் மட்டுமின்றி சவாலான விஷயங்களையும் செய்ய அனுமதியுங்கள்.
இது போன்ற பயிற்சிகள் யாரும் உடனில்லையென்றாலும் அவர்களால் முடிந்தவரை சுயமாக வாழ உதவியாக இருக்கும். அவர்களுக்கு குறைந்தபட்ச கல்வி வழங்குவது கட்டாயம். சிறந்த கல்வியை ஊக்குவிப்பது அவசியம். இந்த உலகம் அழகானது... முடிந்தவரை குறைகளை மனதளவில்
ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று நெகிழ்ந்தார் ஆசிரியர் திவ்யா.
தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்
படங்கள்: ஜெகன்