Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பழையன கழிதலும் புதியன புகுதலும்!

நன்றி குங்குமம் தோழி

‘ஓல்ட் இஸ் கோல்டு’ என்று சொல்வார்கள். செல்போன், லேப்டாப், கார், பைக் போன்ற வாகனங்களை கடைகளில் மறுபயன்பாட்டுப் பொருட்களாக வாங்கி இருப்போம். எல்லா நேரங்களிலும் நம்மால் புது பொருட்களை வாங்க முடியும் என்று சொல்ல முடியாது. கையில் பணமில்லாத நிலையிலும் அவசரத் தேவைக்கும் மறுபயன்பாட்டுப் பொருட்களை குறைந்த விலையில் வாங்கி பயன்படுத்துவோம். ஆனால் அவ்வாறு மின்சாதனப் பொருட்களையும் வாகனங்களையும்தான் மறுபயன்பாட்டுப் பொருட்களாக உபயோகப்படுத்த வேண்டும் என்றில்லை.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆடைகள் முதல் காலணிகள் வரை அனைத்தையும் மறுபயன்பாட்டுப் பொருட்களாக வாங்கி மீண்டும் பயன்படுத்தலாம். சென்னை தியாகராய நகரில் இயங்கி வரும் ‘தி ரீபர்த் கலெக்டிவ்’ கடை இதற்கு உதாரணம். கண்கவரும் வகையில் அலங்கரிக்கப்பட்டு மிக நேர்த்தியாக வைக்கப்பட்டிருக்கும் ஆடைகள் மற்றும் பொருட்களை பார்த்தாலே அவை மறுபயன்பாட்டுப் பொருட்கள் என்று நம்ப முடியாது. பழைய பொருட்களை மீண்டும் பயன்படுத்துவதா என சிலர் நினைக்கும் இந்தக் கடைக்கு ஜென் தலைமுறையினர்தான் ரெகுலர் கஸ்டமர்ஸ்.

இந்தியா வேஸ்ட்டெட் ட்ரஸ்ட் என்ற அமைப்பின் மூலம் இந்தக் கடை இயங்கி வருகிறது. இந்த அமைப்பை இயக்கியது குறித்தும், கடை குறித்தும் விளக்கம் அளிக்கிறார் அமைப்பின் நிறுவனர் ஆன் அன்ரா. “முன்பெல்லாம் அக்கா, அண்ணா பயன்படுத்திய ஆடைகளை அவர்கள் வளர வளர அடுத்தடுத்த பிள்ளைகள் பயன்படுத்தினார்கள். சில பொருட்களை கூட பல வருடங்களாக பல நினைவுகளாக வீட்டில் வைத்திருந்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஏற்கனவே பயன்படுத்திய பொருட்கள் மற்றும் ஆடைகளை தூக்கி எறிந்துவிடுகிறார்கள். அந்தப் பொருளின் தரமும் நீண்ட காலத்திற்கு உழைக்கும் தன்மையுடன் இருந்தாலும் அவை குப்பைத் தொட்டிகளுக்குத்தான் செல்கின்றன.

குப்பைகளை பிரித்தெடுக்கும் போது கிடைக்கும் மட்கா குப்பைகள் குப்பைக் கிடங்குகளுக்கு செல்கின்றன. அவற்றில் பல மதிப்பு வாய்ந்த பொருட்களும் இருக்கும். அந்தப் பொருட்களையெல்லாம் சிலரால் பணம் கொடுத்து புதிதாக வாங்கக்கூட முடியாது. பிளாஸ்டிக், காகிதங்கள் போன்றவற்றை மறுசுழற்றி அல்லது குறை சுழற்சி செய்யலாம். ஆனால் மற்ற சில பொருட்களை குப்பைக்கிடங்கிற்கு தான் அனுப்ப முடியும். அது என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. மேலும் வீடுகளில் பழைய பொருட்கள் சேகரிக்கும் தொழில் செய்பவர்களை இதன் மூலம் ஆதரவளிக்க நினைத்தேன்.

2017ல் நான் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்த போது குப்பைகளை பிரிக்கும் செயல்களை செய்தேன். அதில் நிறைய பழைய பொருட்கள் இருக்கும். அது பழைய பொருட்கள் சேகரிப்பவர்களுக்கு சென்றடைய விரும்பினேன். அதனை குப்பைகளில் போடாமல் தானமாக வழங்க முடிவு செய்து, பல இடங்களில் ‘ட்ராப் ஆஃப்’ நிலையங்களை அமைத்தேன். அதில் பல்வேறு பழைய பொருட்களை வைப்பேன். அதனை சேகரிப்பாளர்கள் எடுத்து சென்றனர். இதனால் அவர்கள் வீடு வீடாக அலைந்து பொருட்களை சேகரிக்க வேண்டிய அவசியம் குறைந்தது. சில சமயம் குப்பைகளில் ஆடைகள், மற்ற பொருட்கள் புதிதாக இருக்கும். அவற்றை இல்லாத மக்களுக்கு கொடுத்தால் என்ன என்று தோன்றியது. அந்த ஆடைகளை தரம் பிரித்து, சலவைக்கு கொடுத்து, அயர்ன் செய்து ஆதரவற்ற இல்லங்களுக்கு கொடுத்தோம்.

இதுமட்டுமின்றி விலை உயர்ந்த பொருட்களை கடையில் காசு கொடுத்து வாங்க முடியாத மக்களுக்கு கொடுக்க விரும்பினோம். அதன் அடிப்படையில் உருவானதுதான் இந்தக் கடை. இங்கு பல்வேறு உயர் தரமான பொருட்கள் உள்ளன. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்கள் எளிதாக அணுகும் வகையில் ‘Pay What You Want’ என்ற பிரிவும் இங்குள்ளது. எந்தப் பொருளை எடுத்தாலும் அதற்கு அவர்களால் முடிந்த தொகையை கொடுத்து பொருளை எடுத்துச் செல்லலாம்.

பயன்படுத்திய பொருள் என்றாலும் அதற்கும் மதிப்புண்டு. இலவசமாக கொடுத்தால் மக்களுக்கு அதன் மதிப்பு தெரியாது. அதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதால்தான் பொருளாதாரத்தில் பின்னிலையில் இருப்பவர்கள் அவர்களால் முடிந்த தொகையை கொடுத்து வாங்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டு வந்தோம். அவர்களால் அதிக விலையில் வாங்க முடியாத பொருட்களை குறைந்த விலையில் மன நிறைவாக வாங்கிச் செல்கிறார்கள்’’ என்றவர், அமைப்பின் செயல்பாட்டினை விவரித்தார்.

‘‘இது முழுக்க முழுக்க ஒரு தொண்டு அமைப்பாகத்தான் செயல்படுகிறது. பழைய பொருட்களை சேகரிக்கும் தொழிலாளர்கள் இங்கு நாங்க சேகரித்து வைத்திருக்கும் பொருட்களை அவர்களே பிரித்தெடுத்து மறுசுழற்சி செய்யும் இடங்களுக்கு விற்பனை செய்கிறார்கள். இவர்கள் பொருட்களை பிரித்தெடுப்பதால், அந்த வேலைக்கான ஊதியத்தை கொடுக்கிறோம். பொருளை பிரிக்கவும், அதை விற்பதற்கும் பணம் கிடைப்பதால் அவர்களும் உற்சாகமாக செய்கிறார்கள். ஆனால் சிலரால் இங்கு வந்து பழைய பொருட்களை எடுத்து செல்லமுடிவதில்லை என்று கவலைப்பட்டனர். இதனால் இது போன்ற தொழிலாளர் சமூகம் வசிக்கின்ற இடங்களில் மேலும் பல ‘ட்ராப் ஆஃப்’ நிலையங்களை அமைத்து, குறிப்பிட்ட நாட்கள் மற்றும் இடங்களில் அதற்கான வசதிகளை ஏற்படுத்தினோம்.

இதனால் தொழிலாளர்களுக்கு பலதரப்பட்ட பொருட்கள் ஒரே இடத்தில் கிடைத்தது. பழைய பொருட்கள் சேகரிக்கும் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்ததான் இந்த அமைப்பினை செயல்படுத்தி வருகிறோம். ஆடைகளை மறுசுழற்றி செய்யும்போது அவற்றை மற்றொரு பயனுள்ள பொருளாக மாற்ற முடியும். அதற்காக ெதாழிலாளர்களின் வீட்டில் உள்ள பெண்களுக்கு தையல் பயிற்சிகள் அளித்து அதன் மூலம் ஆடைகளை மறுசுழற்சி செய்கிறோம். உதாரணமாக புடவையை சல்வாராகவும், முழுதாக பயன்படுத்த முடியாத ஆடைகளின் துண்டுகளை சேகரித்து அவற்றை ஒரே போர்வையாகவும், உறைகளாகவும் மாற்றி அமைக்க முடியும். இதன் மூலம் அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பதோடு பல தொண்டு நிறுவனங்களின் உதவி மூலம் தொழில் பயிற்சிகளும் கிடைக்கிறது. மேலும் அவர்களின் குழந்தைகளுக்கும் கல்வி உதவித் தொகையும் பெற்றுத்தர முடிகிறது.

ஆரம்பத்தில் என் வேலையை விட்டுவிட்டு இந்த அமைப்பை தொடங்க வேண்டுமா என்ற கேள்வி இருந்தது. இருந்தாலும் தொழிலாளர் சமூகத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற

எண்ணம் மட்டும் என் மனதில் இருந்தது. அதை நாம் தொடங்கவில்லை என்றால் வேறு யார் செய்வார்கள். அதனால்தான் இந்த அமைப்பை தொடங்கினேன்’’ என்றவர், ஆதரவற்ற இல்லங்கள், மற்ற தொண்டு நிறுவனங்களில் கழிவு மேலாண்மையை பராமரித்து வருவதாக தெரிவித்தார்.

நிறுவனரை தொடர்ந்து கடையில் பணிபுரிபவர்களிடம் பேசிய போது அவர்கள் தங்களின் சுவாரஸ்யமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.“நான் முதலில் இந்தக் கடைக்கு கஸ்ட

மராக வந்தேன். இப்போது நான் இங்கு ஸ்டோர் மேனேஜர்” என்று நெகிழ்கிறார் மீனா. “என் மகள்தான் இங்கு முதலில் ஆடைகளை வாங்கினாள். குறைந்த விலையில் கிடைக்கிறது, மறுபயன்பாட்டுப் பொருள் என்று சொன்னதும் முதலில் நான் அவளை திட்டினேன்.

யாரோ பயன்படுத்திய பழைய பொருளை இவள் பயன்படுத்திய போது எனக்கு சங்கடமாக இருந்தது. அவள்தான் இந்தக் கடை பற்றி புரிய வைத்தாள். அதன் பிறகு நானே நேரில் வந்து, கடையின் சுற்றுச்சூழல் மற்றும் பொருட்கள் வைத்திருக்கும் தரத்தைப் பார்த்து வியந்தேன். நிஜமாகவே இது பழைய பொருள் கடைதானா என்று எனக்கு சந்தேகம் வந்தது. இந்தக் கடையின் சூழல் எனக்கு பிடித்துப் போகவே வேலை வாய்ப்பு கேட்டு, இப்போது இங்கு ஸ்டோர் மேனேஜராக பணிபுரிகிறேன்.

பணிக்கு சேர்ந்ததும் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். பழைய பொருட்கள் குப்பைகளில் போக வேண்டியவை அல்ல. அவை பொக்கிஷம். யாரோ ஒருவர் விருப்பப்பட்டு வாங்கிய பொருளின் தேவை முடிந்துவிட்டது. எனவே ஒதுக்கிவிட்டனர். ஆனால் அப்போதும் அந்தப் பொருளின் தரமும் மதிப்பும் மாறாமல் இருக்கிறது. விலை உயர்வான பொருட்கள் இங்கு மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். மறுபயன்பாட்டுப் பொருளின் மேல் பலரும் தவறான கருத்துக்களை வைத்திருக்கின்றனர். குறிப்பாக பழைய காலத்து ஆட்கள். ஆனால் வசதியான மக்கள் அவ்வாறு பார்ப்பதில்லை. இது பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்காக செயல்படுகிறது என்றாலும் வசதிப்படைத்தவர்களும் இங்கு வந்து பொருட்களை வாங்குகின்றனர்.

மொத்தத்தில் இங்கு பணிபுரிவது எனக்கு மன நிறைவாக இருக்கிறது” என்றார். கடையின் கீழ் தளத்தில் ட்ராப் ஆஃப் செய்யும் இடமும், பொருட்களை பிரித்தெடுக்கும் பிரிவும், மேல் தளத்தில் கடையும் அமைந்துள்ளது. இங்கு பணிபுரியும் மாணவர்கள் ஹரீஷ் மற்றும் தீபன் ஆகியோரிடம் பேசினோம்.“ஒரு தொண்டு நிறுவனம் மூலம்தான் நான் இங்கு வந்தேன். கல்லூரியில் படித்துக்கொண்டே இங்கு பணிபுரிகிறேன். பழைய பொருட்களை கொடுக்க விரும்புகிறவர்கள் எங்களை தொடர்பு கொள்வார்கள்.

நான் அவர்களின் வீடுகளுக்கு சென்று சேகரித்து வருவேன். இந்த அமைப்பால் பலரும் பயனடைகின்றனர். இது தொடர வேண்டும்” என்ற ஹரீஷை தொடர்ந்தார் தீபன். “கல்லூரி மூலமாக இன்டெர்ன்ஷிப் செய்ய வந்தேன். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்த அமைப்பின் பங்கு என்னை வெகுவாக கவர்ந்தது. அப்போதிலிருந்து நானும் இங்கு பணிபுரிகிறேன். பொருட்களை பிரித்தெடுக்கும் பணி என்னுடையது. இங்கு வரும் ஒவ்வொரு பொருளும் பொக்கிஷம். நாங்க வாழ்க்கையில் பார்க்காத பல பொருட்களை இங்கு பார்ப்போம். என் நண்பர்களுக்கும் இங்கிருந்து உடைகளை வாங்கிக் கொடுக்கிறேன். தரமான பொருட்கள் குறைவான விலையில் கிடைக்கும் ேபாது சந்தோஷம் தானே” என்றார்.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்