நன்றி குங்குமம் தோழி
முகம்தான் நம்முடைய கண்ணாடி. உடல் சோர்வு... மனதில் குழப்பங்கள் எதுவாக இருந்தாலும் நம்முடைய முகம் காட்டிக் கொடுத்துவிடும். அதேபோல் ஒருவர் ஆரோக்கியமாக இருந்தாலும் அதன் பிரதிபலிப்பினை முகத்தில் பிரகாசமாக பார்க்க முடியும். இன்று சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள பல முறைகள் உள்ளன. அழகு நிலையத்தில் செய்யப்படும் ஃபேஷியலை ெதாடர்ந்து ஏஸ்தெடிக்ஸ் மூலம் சருமத்தை என்றும் இளமையாக வைத்துக்கொள்ள முடியும் என்பதை ஒருபடி மேலே சென்று வெல்னெஸ் சிகிச்சைகள் மூலம் சருமம் மட்டுமில்லாமல் நம்முடைய உடல், மனம் என அனைத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். அப்படிப்பட்ட வெல்னெஸ் சிகிச்சையினை வயதிற்கு ஏற்ப வழங்கி வருகிறார் சென்னையை சேர்ந்த டாக்டர் ஐஸ்வர்யா செல்வராஜ். இவர் சென்னை, தேனாம்பேட்டையில் ‘பயோ ரிவைவ்’ மூலம் இந்த சிகிச்சை முறைகளை வழங்கி வருகிறார்.
‘‘நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். மருத்துவத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு முடிச்ச பிறகு, அதில் முதுகலை பட்டமும் பெற்றேன். அதனைத் தொடர்ந்து ஏஸ்தெடிக்ஸ் குறித்து பயிற்சிகளை பல நாடுகளில் மேற்கொண்டேன். படிப்பை முடித்த கையோடு ‘ஸ்கில் என்வி’ என்ற பெயரில் முழுக்க முழுக்க ஏஸ்தெடிக்ஸ் மற்றும் சருமம் சார்ந்த அனைத்து சிகிச்சை முறைக்கான மையம் ஒன்றை துவங்கி நடத்தி வந்தேன்.
அடிப்படையில் டாக்டராகவே இருந்தாலும், நமக்கு ஏற்படும் சில அனுபவங்கள் தான் நம்மை அடுத்த கட்டத்திற்கு வழி நடத்தி செல்லும். அப்படித்தான் எனக்கும் நடந்தது. என்னுடைய சிகிச்சைகள் முழுக்க முழுக்க மருத்துவம் சார்ந்து இருப்பதால், அதனை நான் தரமானதாக கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன். அதனால் என்னுடைய வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும் சிறப்பான சிகிச்சை முறைகளும் அதற்கு பயன்படுத்தப்படும் பொருட்களும் தரமாக கொடுத்து வந்தேன். அதே சமயம் என் உடல் நிலையை நான் பார்த்துக் கொள்ள தவறிட்டேன். ஒன்றரை வருடத்திற்கு முன்பு என் உடலில் ெபரிய மாற்றத்தினை சந்தித்தேன்.
விளைவு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய சூழல். அது என் வாழ்க்கையை புரட்டி போட்டது. ஒரு மருத்துவராக அடிப்படையான விஷயங்கள் தெரிந்திருந்தும் என் உடலினை பேணிக்காக்க முடியவில்லை. அப்பதான் நான் உணர்ந்தேன். முதலில் என்னை நான் சரி செய்ய வேண்டும். ஆரோக்கிய வாழ்வினை பின்பற்ற ஆரம்பித்தேன். எனக்கான நேரம் ஒதுக்கினேன். இவ்வாறு சின்னச் சின்ன மாற்றங்களை கொண்டு வந்தேன். அது என் உடலை மட்டுமல்ல மனநிலையையும் மாற்றியது’’ என்றவர், முழுக்க முழுக்க வெல்னெஸ் குறித்து சிந்திக்க ஆரம்பித்துள்ளார்.
‘‘எல்லோருக்கும் உடலில் இருக்கும் உறுப்புகள் ஒன்று தான். ஆனால் அதில் ஏன் இவ்வளவு பிரச்னைகள். இது குறித்த தேடலில் ஈடுபட்ட போது, பல விஷயங்கள் புரிந்தது. நம்முடைய உடல் ஒரு அருமையான இயந்திரம். அதில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் ஒன்ேறாடு ஒன்று இணைக்கப்பட்டு இருக்கிறது. ஒரு இடத்தில் பிரச்னை ஏற்பட்டால், அதற்கான மருத்துவம் பார்த்தால் மட்டுமே தீர்வினைக் காண முடியாது. ஆணிவேர் என்ன என்று தெரிந்து கொண்டு அதை சரி செய்தாலே மற்றது எல்லாம் தானாகவே சரியாக இயங்க ஆரம்பிக்கும். நம் பாட்டி பத்து குழந்தை பெத்தாங்க. இன்று ஒரு குழந்தை பெறுவதே மலைப்பாக இருக்கிறது. தெருக்கு தெரு இன்ஃபெர்டிலிட்டி மையங்கள் இயங்கி வருகிறது. உடம்பில் எந்த மாற்றமும் இல்லை... ஆனால் நம் பழக்க வழக்கங்கள் மாறிவிட்டது.
நம் உடலில் உள்ள அணுக்கள் சாதாரணமா இயங்க அடிப்படை விஷயங்களை கடைபிடித்தாலே போதும். சூரிய ஒளியில் விட்டமின் டி இருக்கு. ஆனால் ஓசோன் மண்டலம் பாதிப்பால், அதுவே நமக்கு எதிரியா மாறிடுச்சு. இன்றுள்ள அவசர காலக்கட்டத்தினை நிறுத்த முடியாது. அதற்கு ஏற்ப நம்முடைய ஆரோக்கியத்தை மாற்றி அமைக்கக்கூடிய ஒரு மறுசீரமைப்பு இடம்தான் இந்த வெல்னெஸ் மையம். அதன் மூலம் ஒரு மணி நேரத்தில் மனம் மற்றும் உடல் நிலையில் மாற்றத்தினை கொண்டு வர முடியும்’’ என்றவர், தன் வெல்னெஸ் குறித்தும் அதற்கான சிகிச்சை முறைகள் பற்றியும் விவரித்தார்.
‘‘வெல்னெஸ் என்றால் ஆரோக்கிய வாழ்வு என்று பொருள். ஒருவர் ஆரோக்கியமாக இருக்க சில அடிப்படையான விஷயங்களை பின்பற்ற வேண்டும். அதில் மிகவும் முக்கியமானது தூக்கம். தூக்கம் மிகவும் முக்கியம் என்று பலருக்கு தெரிவதில்லை. காரணம், லைப் ஸ்டைல். ரத்த அழுத்தம், நீரிழிவு பிரச்னைக்கு மாத்திரை சாப்பிட்டாலும் டாக்டர் கடைசியாக சொல்வது லைஃப் ஸ்டைலில் மாற்றம் கொண்டு வாங்க என்பதுதான். அதற்கான சிகிச்சைகளைதான் ஒருவரின் வயது மற்றும் உடல்நிலைக்கு ஏற்ப கொடுக்கிறோம்.
முதலில் வெல்னெஸ் சிகிச்சை எடுக்க வருபவர்களுக்கு ஸ்பெக்ட்ரோஃபோட்டோமெட்ரி என்ற ஆய்வினை செய்வோம். அதன் மூலம் ஒருவரின் உடலில் உள்ள மினரல்கள் மற்றும் பிரச்னை என்ன என்பதை கண்டறிய முடியும். அதன் பிறகு அவர்களுக்கு எதில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு சிகிச்சை அளிப்போம். அழகு சார்ந்த மட்டுமில்லாமல் ரெக்கவரி சிகிச்சைக்கும் முக்கியத்துவம் தருகிறோம். தசை வளர்ச்சி, ஆரோக்கிய குறைபாடு, விட்டமின், ஊட்டச்சத்து என ஆரோக்கியம் சார்ந்த சிகிச்சை முறைகளையும் அளித்து வருகிறோம்.
கிரையோபாத், இது ஐஸ் குளியல் என்றும் சொல்லலாம். ஐஸ்கட்டி நீரில் 5 முதல் 10 நிமிடம் இருக்க வேண்டும். இதன் மூலம் சோர்வான தசைகளுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். சருமத்திற்கு ஊட்டமளிக்கும். உடலில் ரத்த ஓட்டம் சீராகி லேசாக உணர்வீர்கள். சிந்தனைஃப்ரெஷ்ஷாக மாறுவதால், எந்தவித சிக்கல்களையும் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும். மன உளைச்சலை குறைத்து நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும். இன்பிராரெட் சோனா, இது பாரம்பரிய சிகிச்சை முறை. 20 நிமிடத்தில் மொத்த உடலையும் டீடாக்ஸ் செய்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். கெட்ட கொழுப்பை வெளியேற்றி, உடல் எடையை குறைக்க உதவும். மேலும் இன்பிளமேஷனை நீக்கி ரத்த
ஓட்டத்தினை சீராக்கும்.
ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் தெரபி, 90% ஆக்சிஜன் வாயு உடல் முழுக்க செலுத்தப்படும். அதன் மூலம் அணுக்கள் புத்துயிர் பெறும். புதிதாக பிறந்தது போல் உணர்வீர்கள். ஓலிக்ளோஸ்கேன், உங்களின் கைகளை இயந்திரத்தில் செலுத்துவதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் நீக்கப்பட்டு, மினரல்கள் சமன் செய்யப்பட்டு மன உளைச்சலை இன்ஸ்டென்டாக குறைக்க உதவும்.
எம்ஸ்லிம், அரை மணி நேரத்தில் முழுமையாக உடற்பயிற்சி செய்த உணர்வினை அளிக்கும். இதன் மூலம் தசைகள் வலுவாகும், 20% கொழுப்பினை நீக்கும், சருமத்தை மிளிரச் செய்யும். அவாசென், தசைகளில் வலி, தூக்கமின்மை, பொலுவிழந்து காணப்படும் சருமம் போன்றவற்றுக்கு தீர்வு கொடுக்கும். உடலில் ரத்த ஓட்டத்தினை சீராக்கி, உடலில் புது சக்தி வந்த உணர்வினை கொடுக்கும். மனம் அமைதியாகும்.
18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் முதல் வயதானவர்கள் வரை இந்த சிகிச்சையினை மேற்கொள்ளலாம். அதில் பேஸ்மேக்கர் வைத்திருப்பவர்கள் இங்கு சிகிச்சை பெற முடியாது. ஒருவரின் உடல் நிலைக்கு ஏற்ப டாக்டரின் ஆலோசனைபடி சிகிச்சை அளிக்கப்படும். இந்த சிகிச்சையினை மாதம் ஒருமுறை எடுத்தாலே ஆரோக்கிய வாழ்வு கியாரன்டி.
மேலும் இங்கு சிகிச்சைக்கு வருபவர்களின் தேவை என்ன என்று தெரிந்து கொண்டு அதற்கேற்ப கொடுக்கப்படும். சிலர் உடலை டீடாக்ஸ் செய்ய வருவாங்க. ஒரு சிலர் உடல் சோர்வு நீங்க வருவாங்க. பிரசவம் தரித்த பெண்களும் தங்களின் ஆரோக்கியம் மேம்பட வருகிறார்கள். அனைத்தும் இயந்திரம் சார்ந்த சிகிச்சை என்பதால், அதனை இயக்கக்கூடிய நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் உதவியுடன்தான் சிகிச்சை அளிக்கப்படும். ஒருவரின் ஆரோக்கியம் மட்டுமில்லாமல் அவரின் அழகு சார்ந்த மைக்ரோபிளடிங், சரும பராமரிப்பு, ஹேர் இம்பிளான்ட் போன்ற அழகியல் சிகிச்சையும் இங்குண்டு. ஒருவரின் தலை முதல் கால் வரைக்குமான அனைத்து ஆரோக்கிய அழகியல் தீர்வினையும் நாங்க வழங்கி வருகிறோம்’’ என்றார் ஐஸ்வர்யா.
தொகுப்பு: ஷன்மதி