Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாற்றத்தை ஏற்படுத்தும் மாரத்தான் வீராங்கனை!

நன்றி குங்குமம் தோழி

‘‘பெண்கள் தனது வாழ்க்கை யில் எந்தவொரு பிரச்னைக்காகவும் தங்களின் திறனை வெளிப்படுத்த தயங்கக் கூடாது. அதனை முழு மனதுடன் எதிர்கொள்ள வேண்டும்... சாதனை படைக்க வேண்டும் என்று பெண்கள் பல்வேறு காரணங்களுக்காக ஓடுகிறார்கள். என்னுடைய காரணம் மிகவும் சிறியது. செயல் திறன், விடாமுயற்சி, பொறுமை மூன்றும் கொண்ட நபராகவும்,

மனிதர்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் விதத்தில் இருக்க வேண்டும்.

சுருக்கமாகச் சொன்னால், வெற்றிக்காக ஓடாமல் மன மகிழ்ச்சிக்காக ஓடுகிறேன்’’ என்கிறார், மாரத்தான், சைக் கிளிங், கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளில் தனக்கென முத்திரைப் பதித்துள்ள நௌஷீன் பானு சாந்த்.‘‘காஷ்மீர் மொழியில் நௌஷீன் என்றால் புதிய பனி என்று பொருள்.

எங்களுடைய பூர்வீகம் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு. ஆனால், தற்போது குனியமுத்தூரில் வசித்து வருகிறோம். எனக்கு இரண்டு வயது இருக்கும் போது அப்பாவின் வேலை காரணமாக நாங்க ஓமனுக்கு சென்றோம். அங்குதான் படிச்சேன். எனக்கு ஆரம்பத்தில் இருந்தே விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வம் இருந்து வந்தது. ஆறு வயதில் பள்ளியில் நடைபெறும் நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கு பெற்று முதல் பரிசினை பெற்றேன்.

எனக்கு தடகள விளையாட்டுகளில் இருக்கும் ஆர்வத்தை புரிந்து கொண்டு என் அண்ணன் அந்த விளையாட்டின் தந்திரங்களைக் கற்றுக் கொடுத்தார். அங்கு உயர்நிலைப் பள்ளி வரைதான் படிச்சேன். அதன் பிறகு தமிழகத்திற்கு திரும்பினேன். இங்கு விமானப் பொறியியல் படித்தேன். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து கையாளுதலில் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றினேன். நான் பணிபுரிந்த நேரத்தில் வாரம் 5 நாட்கள் நாள்தோறும் 21 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டி பல்வேறு விழிப்புணர்வும் ஏற்படுத்தியிருக்கிறேன்.

எனது தடகள ஆர்வமானது தொழில் வாழ்க்கைக்கு அப்பாற்பட்டது என்பதால், முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு சராசரி தடகளத்தைத் தாண்டி பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அதனால் உயரமான மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள விரும்பினேன். முதலில் மாவட்ட, மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டேன்’’ என்றவர், தொலைதூர கல்வி மூலமாக உளவியலில் முதுகலைப் படித்து வருகிறார்.

‘‘மாரத்தான் என்பது சாலைகளில் ஒரு குறிப்பிட்ட கிலோ மீட்டரை குறிப்பிட்ட நேரத்தில் கடக்க வேண்டும். ஆனால், இந்த மாரத்தான் உயரமான மலைகளில் நடைபெறும். உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் டென்சிங்-ஹிலாரி என்ற பெயரில் உலக அளவிலான மாரத்தான் போட்டி நடைபெறும். 2024ல் 70 கிலோ மீட்டர், 42 கிலோ மீட்டர், 21 கிலோ மீட்டர் என மூன்று பிரிவுகளில் நடைபெற்றது. அதில் ஆண் - பெண் என தனித்தனியாக நடந்தது. இந்தப் போட்டியில் அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, ஜெர்மனி, தாய்லாந்து, வியட்நாம் போன்ற பல்வேறு நாடுகளிலிருந்து வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் என்னுடன் கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்றனர். அதில் 42 கிலோ மீட்டர் தூர மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு பந்தயத் தூரத்தை 10 மணி நேரம் 36 நிமிடத்தில் கடந்து முதல் பெண் வீராங்கனை என்ற சாதனையை படைத்தேன்.

இந்த விளையாட்டில் தமிழக அளவில் முதலிடமும், உலக அளவில் 137-வது இடத்தை பெற்றுள்ளேன். அதனைத் தொடர்ந்து உலகின் 3-வது உயர்ந்த சிகரமான காஞ்சன்ஜங்காவில் நடைபெற இருந்த போட்டிக்குத் தகுதி பெற்றேன். ஆனால், போட்டியின் போது நிலச்சரிவு ஏற்பட்டதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை செய்யப்பட்டுள்ளது. அண்மையில் 10 மணி நேரம், 44 நிமிடங்கள், 35 வினாடிகளில் மாரத்தான் ஓட்டத்தை முடித்தேன்.

17,600 அடி உயரத்தில் -15 டிகிரி வானிலை கொண்ட கடினமான நிலப்பரப்பில் இந்த மாரத்தான் நடந்தது. உயரம் அதிகமாகும் போது ஆக்சிஜன் அளவு பாதியாகக் குறையும். இது போன்ற உயரங்களில், ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போது உடல் உறுப்புகளுக்கு எதிரான போராட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். இவை தவிர 18,300 அடி உயரம் மற்றும் 12,500 அடி உயரத்தில் ரோலர் ஸ்கேட்டிங் செய்திருக்கிறேன். இதனைத் தொடர்ந்து டிரான்ஸ்-இமயமலையில் ஓட்டம் மற்றும் ஸ்கேட்டிங் ஆகியவற்றை இணைந்து இரட்டை விளையாட்டு முடித்த முதல் இந்தியப் பெண் என்ற சாதனையைப் பெருமையுடன் பெற்றேன்’’ என்றவர், உயரத்தில் மாரத்தான் செய்யும் போது எவ்வாறு உடலை பராமரிக்க வேண்டும் என்று கூறினார்.

‘‘முதலில் நம்முடைய உடலை தட்பவெப்ப நிலை எதிர்கொள்ளும் அளவிற்கு வைத்துக்கொள்ள வேண்டும். காரணம், இது போன்ற போட்டிகள் குளிர் பிரதேசங்களில்தான் நடைபெறும். அதனால் நம் உடலை நாம் மிகவும் கவனமாக பராமரிக்க வேண்டும். அடுத்த கோடை ஒலிம்பிக் ஆண்டான 2028ம் ஆண்டுக்குள் எவரெஸ்ட் சிகரத்தில் 70 கிலோ மீட்டர் அல்ட்ரா மாரத்தானை வெல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இந்த போட்டியை பொறுத்தவரை நம்பிக்கை என்ற முதல் படியில் கால் பதித்து, தன்னம்பிக்கையுடன் கடைசி படியை அடையும் போதுதான் நமக்கான அடையாளமும், அங்கீகாரமும் கிடைக்கிறது.

தற்போது, கோவையில் உள்ள விளையாட்டுப் பயிற்சி மையத்தில், தடகள பயிற்சியாளராகப் பணிபுரிகிறேன். என்னுடைய நிறுவனம் அளித்த ஊக்குவிப்பால் தான் டென்சிங் ஹிலாரி எவரெஸ்ட் மாரத்தான் போட்டியில் பங்கு பெற முடிந்தது. என்னுடைய உடல் வலிமையை விட, மன வலிமையை அதிகரிக்க சைக்கிள் ஓட்டுதல், ரோலர் ஸ்கேட்டிங், மாரத்தான் ஓட்டத்தைத் தொடர்ந்து செய்து வருகிறேன். மேலும், தமிழ்நாடு மலையேறுதல் சங்கத்தைச் சேர்ந்த திருலோகச் சந்திரன் அவர்களிடம் மலையேறுதல், சறுக்குதல் குறித்த பயிற்சியினை மேற்கொண்டேன். விளையாட்டு, குடும்பம், பணி ஆகியவற்றை ஒரே நேரத்தில் சமாளிப்பது கொஞ்சம் கடினம்தான். ஆனாலும், அதனை சுலபமாக கையாண்டால் இரண்டையும் எளிதாக சமாளிக்க முடியும்’’ என்றார் நௌஷீன்.

தொகுப்பு: பொ.ஜெயச்சந்திரன்