நன்றி குங்குமம் தோழி
உன்னத உறவுகள்
ஒவ்வொரு உறவிற்கும் சில முக்கியத்துவங்கள் தரப்பட்டு காலம் காலமாக நம் பெரியோர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. குடும்பத்தினர் அனைவருக்குமே உறவினர்களை ஒரே உறவு முறையில் பார்க்க முடியாது. உதாரணத்திற்கு ஒருவனுக்கு அண்ணன் முறை கொண்ட பையன், மற்றவருக்கு தம்பியாக, மைத்துனனாக, வீட்டிற்கு மாப்பிள்ளையாக, பெரியப்பாவாக, சித்தப்பாவாக, மாமாவாக அமைவான்.
ஒரு உறவு பலவித பரிமாணங்களில் பயணிக்க ஏதுவாகிறது. அந்தந்த உறவுகளுக்கான பொறுப்புகள் ஏற்படும் போது அவர்கள் பல்வேறு அவதாரங்களை எடுப்பார்கள். அதுதான் நம் உறவுகளின் முக்கியத்துவம். இத்தகைய பல்வேறு பரிமாணங்கள் ஒருவருக்கே பல அடையாளத்தினை கொடுக்கும் போது, உறவினர் அனைவருக்கும் குடும்பத்தில் எத்தனை அக்கறையும், ஈடுபாடும் உள்ளது என்பதை நன்கு புரிந்துகொள்ளலாம்.
ஒரு வீட்டில் அறுபதாம் கல்யாணம் நடைபெற்றது. உடன் பிறந்தவர்கள் மட்டுமே கூடியிருந்தார்கள். தம்பதியினர் சபையில் அமர்ந்திருந்தனர். விழாவிற்காக வந்திருந்த அண்ணன், தம்பி, மனைவிமார்கள் நிகழ்விற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய ஆரம்பித்தனர். வந்தவர்கள் அனைவருமே திருமண தம்பதியினருக்கு சிறியவர்கள் என்றாலும், அவர்கள் பெரியவர்கள் கடமைகளை பங்கு போட்டுக் கொண்டு செய்தனர்.
அர்ச்சனை செய்ய ஒருவர், மாலையிட்டு அழைக்க ஒருவர், ஆரத்தி எடுத்து மரியாதை செலுத்த மற்றொருவர் என விசேஷம் சிறப்பாகவே நடைபெற்றது. உறவினர்கள் இல்லாமல் எத்தகைய விசேஷங்களும் நடைபெறுவதில்லை என்பது தெளிவாகிறது. அதனால்தான் திருமண பத்திரிகைகளில் சுற்றமும் நட்பும் சூழ வந்திருந்து வாழ்த்த வேண்டும் என நம் பெரியவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். இன்றைய காலகட்டத்தில் பெரியோர்களால் ஆதரிக்கப்படாத திருமணங்கள் பல நண்பர்களைக் கொண்டே நடைபெறுகிறது.
குடும்பத்தில் மூத்த வாரிசாக இருந்தால் அவர்கள்தான் ‘தூணாக’ நின்று குடும்பத்தைக் காப்பாற்றும் நிலை. உத்தியோகத்தில் பெயரும் புகழும் பெற்றிருப்பார்கள். ஆனால், வீட்டில் கவலைகள் சூழ்ந்திருக்கும். சகோதர, சகோதரிகளை கரை சேர்க்க வேண்டும். ஒன்றின் பின் ஒன்றாக சுமைகள் அவர்களை அழுத்தும். குடும்பத்திற்காக தங்களையே உருக்கிக் கொள்வார்கள். மூத்தவராக இருக்கும் அனைவருமே மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், உடன் பிறப்புகளை காப்பாற்றிய பலன். அவளுக்கு அன்பும், பாசமும் அனைவர் மூலமும் கிடைத்துக் கொண்டே இருக்கும். இனிய உறவுகள் பாசத்தைக் கொட்டி திக்குமுக்காடச் செய்வார்கள். அன்பையும் பாசத்தையும் அளவில்லாமல் பொழிவார்கள். நம்மைக் காக்க சுற்றிலும் உறவுகள் உள்ளார்கள் என்பதே கவலையை மறக்க செய்யும்.
குடும்பத்தில் கடைசி வாரிசாக அமைந்துவிட்டால், வீட்டிற்கே செல்லப்பிள்ளையாகிவிடுவார்கள். பெரியவர்கள் போட்டி போட்டுக் கொண்டு செய்வார்கள். கடைக் குட்டிகள் என்பதால், அடம்பிடித்துக் கூட தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள். ஆனால், திருமணத்திற்குப் பின் கடமைகளை உணர்ந்து புரிந்து நடப்பார்கள். குழந்தைப் பருவத்தில் செல்லமாக வளர்ந்த சிலர், திருமணமான பின் நிறைய குடும்பச் சூழல்களைக்கூட காண நேரிடுகிறது. பொறுப்புகளை சுமக்க வேண்டியும் உள்ளது. பெரிய பிள்ளைகள் குடும்பச்சூழல் காரணமாக, குடும்ப பொறுப்புகளிலிருந்து விலகும் போது, பெரிய பொறுப்புகள் அனைத்தும் கடைசி வாரிசை சேர்கிறது.
சிறுவயதில் செல்லப் பிள்ளையாக வலம் வந்தவன், பிற்காலத்தில் கடமை உணர்ச்சியோடும், பொறுப்புள்ள மகனாகவும் நடக்க நேரும். உறவுமுறை எப்போதும், ஒரே போல் இருப்பதில்லை. குடும்ப அமைப்பிற்கு ஏற்றபடி, வாழ்க்கை அமைவதைப் பொறுத்து நம் பரிமாணங்கள் மாறும் போது உறவு முறைகள் மாறலாம். உறவு என்றும் மாறாதது. எந்த உறவுமுறை சொல்லி அழைக்கிறோமோ, அதற்கேற்ற கடமை உணர்ச்சியும் நம்மில் தானே வந்துவிடும்.
பெண்கள் மூத்தவர்களாக அமைந்து விட்டால், ஒரு தாயின் கடமை உணர்ச்சி அங்கு பரிணமிக்கிறது. தான் சாப்பிடாமல் கூட, தம்பி, தங்கைகளுக்காக விட்டுக் கொடுப்பார்கள். சிறிய தம்பியோ, தங்கையோ தின்பண்டம் கேட்டால் கூட, தான் சாப்பிட்டு விட்டதாக பொய் சொல்லி அவர்களுக்கு தந்து விடுவார்கள். உடன் பிறப்பு பாசம் என்பது நம் ரத்தத்தில் கலந்திருப்பது. மூத்தவர் என்ற நினைப்பே நமக்கு கடமையை கற்றுக் கொடுத்து, பாச பந்தத்தை வலுவாக்குகிறது.
வீட்டில் கடைக்குட்டியாக வளர்ந்தவன், திருமணமாகி மற்றொரு வீட்டிற்கு மாப்பிள்ளையாகிறான். தந்தையில்லாத தன் மனைவி குடும்பத்திற்கு அவன்தான் ஆண் துணை. தன் வீட்டில் பொறுப்பில்லாதவன், குடும்பக் கவலைகளே தெரியாதவன் மற்றொரு வீட்டில் பிள்ளை அவதாரம் எடுப்பான். மனைவி குடும்பத்தின் மூத்த மகனாக மைத்துனிகள் படிப்பு முதல் அவர்கள் திருமணம் வரை அனைத்தும் கவனித்துக் கொள்வான்.
அவன் உடன்பிறப்புகள் அவர்கள் வீட்டை பார்த்துக் கொள்ள, இவன் மற்றொரு வீட்டுக்கு தத்துப் பிள்ளையாக மாறுவான். இன்றைய கால மாற்றம், அனைத்திலும் மாறுதல்கள் வந்துவிட்டன. இரண்டு குடும்பங்களும் விட்டுக் கொடுத்து, கணவன் உடன் பிறப்புகள் தன் உடன் பிறப்புக்களாக மனைவியும், மனைவியின் உடன் பிறப்புகள் தன் உடன் பிறப்புக்களாக கணவனும் நினைத்து வாழத் தொடங்குகிறார்கள். சில மாற்றங்கள் நம் சிறிய வயது நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டாலும், இது போன்ற ஆரோக்கியமான மாற்றங்கள் குடும்பத்தை கட்டிக் காக்கவே உதவுகின்றன. மகன்கள் யாரும் கண்டுகொள்ளாத நிலையில், வீட்டு மாப்பிள்ளையே மகனாக மாறுவார்கள். உறவு முறைகள் சரியாக அமைந்துவிட்டால் அதுவே சுகம்.
ஒவ்வொரு உறவின் சிறப்பைப் பார்க்கும் பொழுது, நிறைய நடைமுறைக் கல்வியை கற்கிறோம் என்றே சொல்லலாம். ஒரு பெண் பிறந்த வீட்டில் செல்லமாக வளர்வாள். பெற்றோரோ தங்கள் பிரச்னைகளை பிள்ளைகளிடம் காட்டிக் கொள்ள மாட்டார்கள். அதே பெண் திருமணமாகி குழந்தைகள் பிறந்து அவர்கள் வளரும் பொழுதுதான் தன் தாயை நினைத்து பார்ப்பாள். இன்றைய காலகட்டத்தில் ஒன்றிரண்டு பிள்ளைகள் பெற்று வளர்ப்பது எவ்வளவு சிரமம் என்று யோசிக்கும் போது, நம் பெற்றோர்கள் நான்கைந்து பிள்ளைகளைப் பெற்று நம்மையெல்லாம் எப்படித்தான் ஆரோக்கியமாக வளர்த்தார்களோ என்று நினைக்காமல் இருக்க முடியாது.
காலம் எத்தனையோ மாற்றங்களைத் தந்தாலும், பழமையையும், வளர்ந்த விதத்தையும் நம்மால் மறந்து விட முடியாது. இன்றைய காலகட்டத்தில், வீட்டிலிருப்பவர்களைத் தவிர, பிள்ளைகளுக்கு அந்நிய உறவுகளின் அருமையும், பெருமையும் தெரிய வாய்ப்பில்லை. உறவு முறைகளை சொல்லித் தருவதோடு, அதற்கான முக்கியத்துவத்தையும் எடுத்துரைப்போம். உலகில் எந்த ஜீவனும் தனித்து வாழ்வதில்லை. பிரபஞ்சம் நமக்கு ஏற்படுத்தித் தந்த உறவுகளை கட்டிக் காப்போம்!
தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீ நிவாசன்