Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தலைமை ஆசிரியரின் தலையாய கடமை!

நன்றி குங்குமம் தோழி

தமிழ் மீது ஆர்வம், வளர் கல்வி செம்மல் விருது, தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, நற்பணி நங்கை விருது, தனித்துவமிக்க தலைமை ஆசிரியர், சிறந்த பேச்சாளர், கட்டுரையாளர், பள்ளிக் கல்வித் துறையில் சிறப்பான பங்களிப்பு, தமிழ் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான மாநில கருத்தாளர், ஆவணப்படங்கள் இயக்கம் உட்பட மேலும் பல்வேறு பாராட்டத்தக்க விஷயங்களை தன்னகத்தே கொண்டுள்ளார் தனபாக்கியம். முனைவர் பட்டம் பெற்ற இவர், தற்போது ஈரோடு மாவட்டத்தில், திருவாச்சி அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பொறுப்பு வகிக்கிறார். தான் பொறுப்பேற்கும் பள்ளிகள் அனைத்திலும் பயனுள்ள தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறார்.

“பெயருக்கு பள்ளி, கல்லூரிக்கு வந்து செல்வதில் பயனில்லை, உன் பெயர் சொல்லும் நிகழ்வாக அதை மாற்ற வேண்டும் என்று என் அப்பா சொல்வார். சிறுவயதிலேயே வாசிக்கத் தொடங்கியதால், இலக்கிய கூட்டங்களுக்கு கையை பிடித்து கூட்டிச் செல்வார். அப்படித்தான் தமிழ் மீது எனக்கு பற்று ஏற்பட்டது. மேலும், நான் படித்த பள்ளி, கல்லூரி மற்றும் என்னை சுற்றியிருந்த மனிதர்கள் என்னை மேலும் செதுக்கினார்கள். தமிழ் மீது கொண்ட பற்றினால், கல்வியிலும் தமிழையே தேர்ந்தெடுத்தேன்.

அதில் முனைவர் பட்டம் பெற்றேன். ஒரு தமிழாசிரியராக என் பணியை தொடங்கிய போது என் பள்ளி மாணவர்களின் வளர்ச்சியில் அதிகம் கவனம் செலுத்த தொடங்கினேன். அவர்களின் பேச்சு மற்றும் எழுதும் திறன்களை ஊக்குவித்தேன். வட்டார, மாவட்ட அளவில் பேச்சு, கவிதை, நாடகப் போட்டிகளில் அவர்கள் பரிசுகளை பெற்றது என் பணிக்கான மகுடமா அமைந்தது.

ஒரு தமிழாசிரியராக தமிழ் இலக்கியங்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தவும் பயிற்சியளிக்கவும் குழந்தைகளிடம் தமிழ் உணர்வை ஊட்ட வேண்டும் எனும் நோக்கத்தோடு தமிழ் குறித்து குழந்தைகளிடம் அதிகம் பேசினேன். 16 வருடங்கள் தமிழாசிரியராக பணியாற்றிய பின்னரே தலைமை ஆசிரியர் பதவி கிடைத்தது. கொரோனா விடுமுறை காலத்தில் மாணவர்களின் எழுதும் திறனை ஊக்குவிக்க அவர்களை புத்தகங்கள் எழுத வைத்தேன்.

மாணவர்கள் எழுதிய 84 புத்தகங்களை ஈரோடு புத்தகத் திருவிழாவின் போது வெளியிட்டோம். மட்டுமின்றி எங்களின் பள்ளி மாணவர்களின் கவிதைகள், கதைகள், விடுகதைகள், ஓவியம் போன்றவற்றை உள்ளடக்கிய ‘அரும்பு’ என்ற மாத இதழும் வெளியிட்டோம். இதன் மூலம் மாணவர்களின் சுய சிந்தனைகள் வெளிப்பட உதவின. சிறந்த கதை சொல்லிகளை பள்ளியிலும் உருவாக்கி வருகிறோம்.

அனுபவம் வாய்ந்த கதை சொல்லிகளை பள்ளிக்கு அழைத்து கதை உருவாக்கம் குறித்த பயிலரங்கம் நடத்தி வருகிறோம். எழுத்தாளர்கள் மூலம் மாணவர்களுக்கு புத்தகம் எழுதும் பயிற்சி வழங்கப்படுகிறது. எங்க பள்ளியின் அனைத்து குழந்தைகளும் ஊர் புற நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். ஒரு ஆளுமை மிக்க, தலைமை பண்புமிக்க தலைமுறையை நாம உருவாக்கணும் என்கிற பொறுப்பு மிகவும் கனமானது. ஆனால், தலைமை பண்புகளையும் சிறந்த குடிமக்களையும் உருவாக்கணும் என்கிற நோக்கம் தொடர்ந்து உத்வேகத்துடன் செயல்பட வைக்கிறது.

சிறந்த திறன் வளர்ச்சியுடன் குழந்தைகளை உருவாக்கி வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்ல மாணாக்கர்களை கல்வி நிலையத்திலிருந்து உருவாக்கி அனுப்புகின்ற பொறுப்புமிக்க பணியாக இந்த தலைமைஆசிரியர் பணியை உணருகிறேன்” என்றவர் தலைமை ஆசிரியராக மட்டுமின்றி கல்வி மற்றும் சமூக வளர்ச்சியிலும் பங்காற்றியுள்ளார். “தமிழ் மொழியின் வளம், இன்றைய தலைமுறையினருக்கு தமிழை பிழையின்றி எழுதுவது எப்படி என்பது குறித்தும், தமிழ் மொழியின் தொன்மை, ஆழம், மொழி ஈர்ப்பு குறித்தும் ஒரு கட்டுரை எழுதினேன். மலேசியாவின் மலேயா பல்கலைக்கழகத்தின் பன்னாட்டு கருத்தரங்கில் தமிழ் பாடம் கற்பித்தலில் நவீன உத்திகள் என்ற என் கட்டுரை சிறந்த கட்டுரையாக தேர்வு செய்யப்பட்டது.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு நிறைய அனுபவங்களை கொடுத்துள்ளது. தமிழக அரசின் சமச்சீர் கல்வி மறுசீரமைப்பு குழுவில் பங்கேற்பு, தமிழ் பாடநூல் குழுவில் குழு உறுப்பினராக பணியாற்றியது, CCE பாடத்திட்ட வரைவு குழுவின் உறுப்பினர், தமிழ் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான மாநில கருத்தாளராகவும் இருக்கிறேன்.

மெல்ல கற்கும் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெறுவதற்கு அனிமேஷன் முறையில் தமிழ் பாடத் திட்டத்தை வடிவமைக்கும் மாநில பாடக் குழுவில் இணைந்து பணியாற்றியது, இலக்கிய மன்ற சொற்பொழிவாளராக மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் பயிற்சியாளராகவும் சிறப்பு பேச்சாளராகவும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பங்கேற்பது, வெளிநாட்டு தமிழ் ஆசிரியர்கள் தமிழக பள்ளியை பார்வையிடும் போது அதை ஒருங்கிணைப்பது என பள்ளிக்கல்வித்துறையில் பங்காற்றினேன்’’ என்றவர் தன் ஆவணப்படம் இயக்கம் குறித்தும் பகிர்கிறார்.

“கழைக் கூத்தாடிகளான பழங்குடியின குடும்பங்களை சார்ந்த குழந்தைகள் உடலை நன்றாக வளைப்பது, தலைகீழாக நின்று கைகளால் நடப்பது போன்ற செயல்களை செய்வதை கவனிக்கும் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் அவர்களுக்கு ஜிம்னாஸ்டிக் பயிற்சி கொடுத்து, ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பங்கேற்க மாணவர்களை ஊக்குவிக்கும்போது, அந்தக் குழந்தைகள் மாவட்ட, மாநில, தென்னிந்திய அளவிலும், தேசிய அளவிலும் சென்று பதக்கம் பெறுகிறார்கள் என்பது போற்றத்தக்க விஷயம். மரபு வழியாக அந்தக் குழந்தைகளுக்கு வளையும் தன்மை இருக்கிறது.

இதனை அடிப்படையாக வைத்து அந்தக் குழந்தைகள் எவ்வாறு இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர், அவர்களின் திறமை, இயற்கையாக அமைந்த திறனை ஜிம்னாஸ்டிக் செய்ய எவ்வாறு பயன்படுத்துகின்றனர், அதற்காக எவ்வாறு பயிற்சி செய்கின்றனர் போன்ற விஷயங்களை உண்மை காட்சிகளாக படம் பிடித்து ‘உன்னை அறிந்தால்’ எனும் ஆவணப்படமாக உருவாக்கினேன். பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக இயங்கும் கல்வி தொலைக்காட்சியிலும் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது. அவர்களின் திறமையை வெளிக்காட்டினதும் அரசு சார்பாக அவர்களுக்கு தேவையான உதவிகளும் கிடைத்தன.

அடுத்ததாக ஈரோடு மாவட்டத்தில் மலைவாழ் கிராமங்களில் வசிக்கின்ற குழந்தைகள் என்னெல்லாம் சவால்களை சந்தித்து பள்ளிக்கு வருகின்றனர், அந்தக் குழந்தைகளுடைய பண்பு நலன்கள் எவ்வாறு இருக்கின்றன, இயற்கையோடு தன்னை பொருத்தி எவ்வாறு சூழலுக்கு எந்த மாசுபாடுகளும் ஏற்படுத்தாமல் வளர்க்கின்றனர். கல்வி அவர்களின் வாழ்வியலை எவ்வாறு மாற்றியுள்ளது என்பது குறித்த ஆவணப்படம் ‘காட்டின் மொழி.’ நான் பொறுப்பு வகிக்கும் பள்ளியில் சிறந்த தாக்கங்களை ஏற்படுத்த வேண்டும் என்பது என் குறிக்கோள். அரசு வேளாண் ஆராய்ச்சி நிலையத்தின் நிதி உதவியுடன் வளையபாளையம் பள்ளியில் மாணவர்கள் ஒவ்வொருவரையும் விதைகளை கொண்டுவரச் செய்து பள்ளியின் மாடித்தோட்டத்தை அமைத்தோம்.

மாணவர்களே அந்தச் செடிகளை பராமரிப்பார்கள். இயற்கை வேளாண் விவசாயத்தையும் தன்னிறைவு வாழ்க்கையையும் அவர்களுக்கு கத்துக் கொடுத்தது எனக்கு மனநிறைவினை கொடுத்தது. அந்தப் பள்ளியிலிருந்து நான் மாறுதல் ஆகிவிட்டேன். இன்றளவும் அங்கு மாடித்தோட்டத்தை மாணவர்கள் சிறப்பாக பராமரித்து வருகிறார்கள். அதைத் தொடர்ந்து திருவாச்சி அரசுப் பள்ளி மாணவர்களை கழிவு மேலாண்மை செயல்களில் ஈடுபட செய்கிறோம். மட்கும், மட்கா குப்பைகளை வீட்டிலும், பள்ளியிலும் பிரித்து பராமரிக்கின்றனர்.

ஊராட்சியுடன் இணைந்து அவற்றை மறு சுழற்சி செய்து, அதன் மூலம் தயாரிக்கப்பட்ட காகிதங்களை பள்ளியில் பயன்படுத்துகிறோம். யோகா பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகளை பள்ளிக்கு வரவழைத்து அவர்கள் எழுதிய அறிவியல் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கினோம். பள்ளியினுள்ளே காய்கறி சந்தை அமைத்துள்ளோம். மாணவர்கள் தயாரித்த கைவினைப் பொருட்களின் கண்காட்சியினை ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம். கல்வியை தாண்டி மாணவர்களின் கலை சார்ந்த திறமைகளிலும் ஊக்குவிக்கிறோம். ஒரு குழந்தை உலகில் மிகப்பெரிய ஆளுமையாக உருவாக ஆசிரியர்கள் ஏற்படுத்துகின்ற தாக்கம் மிகப்பெரியது” என்றார்.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்

படங்கள்: ராஜா