Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கலை மீதான காதல்... என்னை தொடர்ந்து இயங்க வைக்கிறது!

‘‘கலை மேல் இருந்த ஆர்வம் தான் என்னை முழு நேர கலைஞராக மாற்றி இருக்கிறது’’

என்கிறார் ஆர்த்தி. மருத்துவரான இவர் அதனை துறந்துவிட்டு தன் சிறு வயது பேஷனை முழு நேர தொழிலாக மாற்றி அமைத்துள்ளார்.

‘‘பிறந்தது திருச்சி ரங்கத்தில் என்றாலும் அப்பாவின் வேலை புதுச்சேரி என்பதால் அங்குதான் பள்ளிப் படிப்பை முடித்தேன். அதன் பிறகு மருத்துவம் முடிச்சிட்டு சென்னையில் கார்டியாலஜி துறையில் உறைவிட மருத்துவராக பணியாற்றி வந்தேன். இரண்டு ஆண்டு முன்பு வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழு நேரமாக கலை மேல் கவனம் செலுத்த துவங்கினேன்.

எனக்கு சிறுவயது முதலே ஓவியம் வரைய பிடிக்கும். நான் ஆரம்ப நாட்களில் வரைந்த ஓவியங்களை என் அப்பா பாதுகாத்து வைத்திருந்தார். என்னுடைய ஓவிய ஆர்வத்திற்கு என் பெற்றோர்கள் தடை சொன்னதில்லை. இருவரும் அது சார்ந்த பல விஷயங்களை எனக்கு செய்து கொடுத்தார்கள். பள்ளி அளவில் பல ஓவியப் போட்டியில் பங்கேற்று பரிசும் பெற்றிருக்கிறேன். அதே சமயம் கல்விக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுத்ததால், என்னால் கலை மேல் அதிக கவனம் செலுத்த முடியவில்லை.

கல்லூரிப் படிப்பு முடித்த பிறகுதான் எனக்கு கலைக்கான நேரம் கிடைத்தது. இதற்கிடையில் எனக்கு திருமணமானது. என் கணவரும் என் ஓவியத் திறமையை ஊக்குவித்தார். பல கண்காட்சியில் பங்கு பெற சொன்னார். அதே சமயம் என்னுடைய உடல் நலம் காரணமாக என்னால் தொடர்ந்து மருத்துவ பணியில் ஈடுபட முடியவில்லை. வேலையை ராஜினாமா செய்து என் ஆரோக்கியம் மேல் முழு கவனம் செலுத்த துவங்கினேன். இப்போது முழு நேரம் ஓவியராக மாறிவிட்டேன். நான் யாரிடமும் முறையாக பயிற்சி பெற்றதில்லை. அதனால் ஆன்லைனில் அதற்கான பயிற்சியினை எடுத்தேன்’’ என்றவர், திருமணத்திற்குப் பிறகு பல ஓவியக் கண்காட்சியில் பங்கு பெற்றுள்ளார்.

‘‘சென்னையில் நடைபெறும் அனைத்து ஓவியக் கண்காட்சியிலும் என் ஓவியங்களை காட்சிப்படுத்த துவங்கினேன். அதில் என்னுடைய ஓவியங்கள் ரூ.15 ஆயிரத்திற்கு விற்பனையான போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பொதுவாக ஒரு பெரிய கேன்வாஸ் ஓவியங்கள் முடிக்க 2-3 நாட்களாகும். சிக்கலான கலைப்படைப்புகள் முடிக்க 6-8 மணி நேரம் எடுக்கும். ஓவியங்களை விற்பது என் நோக்கமில்லை. எனது கலையை பார்க்கும் மக்கள் மனதில் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும். எனக்கு தெய்வ உருவங்களை வரைய ரொம்ப பிடிக்கும்.

அதே போல் பல்வேறு காட்சிகளை கற்பனை செய்து காகிதத்தில் உயிர்ப்பிக்க விரும்புவேன். கோயில்களை ஓவியமாக வரைய பிடிக்கும். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் என தனிப்பட்ட அழகு இருக்கும். அதை என் ஓவியம் மூலம் வெளியே கொண்டு வர விரும்புவேன். கடந்த 2 ஆண்டுகளில், பல்வேறு அளவுகளில் 700 கலைப்படைப்புகளை வழங்கியுள்ளேன். அதில் சிலவற்றை வாழ்த்து அட்டைகளாக மாற்றி இருக்கிறேன்.

இந்த வருடம் கர்நாடக சங்கீத கீர்த்தனைகள், கடவுள்கள், இசையமைப்பாளர் அனைத்தும் ஒரே தாளில் வரைந்தேன். கச்சேரியில் பாடும் பாடல் ஒன்றை தேர்வு செய்து, அதை ஓவியமாக வரைந்து, அந்தக் கலைஞருக்கு பரிசளிப்பேன். அது போல் கடந்த ஆண்டு மார்கழி மாதக் கச்சேரியில் 45 கச்சேரிகளின் ஓவியங்களை நேரலையில் வரைந்திருக்கிறேன்.

கலை ஆர்வம் உங்களுக்குள் இருந்தால் அதை தைரியமாக வெளிப்படுத்துங்கள். ஒரு வணிகமாக கலையிலிருந்து பணம் சம்பாதிப்பது மிகவும் சவாலானது. எனக்கு கலை மூலம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஓவியம் வரைவது எனக்கு திருப்திகரமாக உள்ளது. அதை மக்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கலைஞராக இருப்பதை பெருமையாக உணர்கிறேன். கலை மீதான எனது காதல்தான் என்னை தொடர்ந்து இயங்க வைக்கிறது’’ என்றார் ஆர்த்தி.

தொகுப்பு: திலகவதி