Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கபடி வீராங்கனைகளின் காட்ஃபாதர்

நன்றி குங்குமம் தோழி

கோயமுத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் மெயின்ரோடு, டீச்சர்ஸ் காலனி காரமடையில் கடந்த முப்பது ஆண்டுகளாக கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருகிறார் சிவகுமார். திருமணம், பிறந்தநாள், நிச்சயதார்த்தம் போன்ற பல நிகழ்வுகளுக்கு கேட்டரிங் செய்வது இவரது தொழில். அதே சமயம் திறமை வாய்ந்த, வசதி இல்லாத விளையாட்டுத் துறையில் விருப்பம் உள்ள பெண்களுக்கு கபடி விளையாட்டுப் பயிற்சி அளிப்பது மட்டுமில்லாமல் தன் கேட்டரிங் மூலம் சத்தான உணவினையும் வழங்கி வருகிறார். இவரால் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் கபடி போட்டியில் மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றிக் கோப்பைகளை பெற்றுள்ளனர். கபடி வீராங்கனைகளின் காட்ஃபாதர் என்று அழைக்கப்படும் சிவகுமாரை சந்தித்துப் பேசினோம்.

‘‘சொந்த ஊர், தேக்கம்பட்டி தொட்டதாசனூர். அப்பா சிறிய அளவில் சமையல் தொழில் செய்து வந்தார். அம்மா தோட்டத்தில் கூலி வேலை பார்த்து வந்தாங்க. ரொம்ப ஏழ்மையான குடும்பம். அம்மா, அப்பா இருவரின் சம்பாத்தியத்தில்தான் நான், அப்பா, அம்மா, தம்பி, தங்கச்சி என ஐந்து பேரும் வாழ்ந்தோம்.தேக்கம்பட்டியில் ஏழாம் வகுப்பு வரை படிச்சேன். அதன் பிறகு இங்கு வசதி இல்லாததால், +2 வரை காரமடையில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள புஜங்கனூரில் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். ப்ளஸ் டூ முடித்து ஐ.டி பிட்டர் ரெண்டு வருடம். எட்டாவது படிக்கும் போதே அப்பாவின் கடையில் சமையல் வேலை செய்வேன். அப்போது இருந்தே எனக்கு சமையல் கலை மேல் ஈடுபாடு அதிகம். படிப்பு முடித்தபிறகு முழுமையாக சமையல் பணிகளை கற்றுக் கொண்டேன்.

அப்பா போல் கடை வைக்காமல், அவுட்டோர் கேட்டரிங் செய்ய ஆரம்பித்தேன். எங்க ஊருக்குள் நடக்கும் காதுகுத்து, வளைகாப்பு போன்ற சின்ன விழாக்களுக்கு சுமார் ஐம்பது முதல் நூறு பேருக்கான கேட்டரிங் செய்து வந்தேன். சமையலே என்றாலும் காலத்திற்கு ஏற்ப என்னுடைய சமையல் கலையை மாற்றிக் கொண்டதால் வளர்ச்சியும் அடைந்தேன். கோவை மட்டுமில்லாமல் கேரளா, கர்நாடகாவிலும் கேட்டரிங் செய்து வருகிறோம்.

எங்களின் கேட்டரிங்கில் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சைவம், அசைவ உணவுகளை தரமுடன், சுவையுடன் வழங்கி வருகிறோம். இதுவரை மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கேட்டரிங் பணிகளை வெற்றிகரமாக செய்திருக்கிறேன். விஐபிக்கள் வீட்டு விழாக்கள் முதல் அரசியல் சிறப்புக் கூட்டங்கள், கட்சி மாநாடுகள் என அனைத்து விழாக்களுக்கும் நாங்கதான் கேட்டரிங் செய்கிறோம்’’ என்றவர், கபடி வீராங்கனைகளை உருவாக்கும் எண்ணம் குறித்து விவரித்தார்.

‘‘என் ஊரில் இளம் பெண்கள் கபடி விளையாட்டில் அதிகம் ஆர்வமாக இருப்பதை அறிந்தேன். அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதனால் ‘கபடி ஸ்போர்ட்ஸ்’ கிளப் ஒன்றை துவங்கினேன். எங்க கிராமப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் கல்லூரியில் படிக்க அதிக செலவு செய்ய வேண்டும். ஆனால் அதற்கான போதிய வசதி அவர்களுக்கு இல்லை என்பதால், என்னால் முடிந்த உதவியினை செய்ய விரும்பினேன். அதனை பணமாக இல்லாமல் அவர்களின் திறமையை வளர்த்துக்கொள்ள திட்டமிட்டேன். கிளப் மூலமாக மாணவிகளுக்கு சிறந்த பயிற்சியாளர்கள் ெகாண்டு பயிற்சி அளித்தேன். அவர்களை மாநில மற்றும் தேசிய கபடி போட்டிகளில் பங்குபெற வைத்தேன்.

ஆர்வமாக பயிற்சி எடுத்து வெற்றியும் பெற்றார்கள். அந்த வெற்றி அவர்களை ஸ்போர்ட்ஸ் அடிப்படையில் கல்லூரியில் சேர வழிவகுத்தது. இதன் மூலம் அரசு வேலையும் கிடைக்க வாய்ப்புள்ளது. மாணவிகளும் ஆர்வத்துடன் பயிற்சி எடுத்து மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் விருது பெறும் அளவு கபடி போட்டியில் சாதனை படைத்து வருகிறார்கள்’’ என்றவர், தங்களின் கிளப் மூலம் பயிற்சி பெற்று சாதனை படைத்த வீராங்கனை குறித்து பகிர்ந்தார்.

‘‘எங்களிடம் இளம் வயது முதலே பயிற்சி பெற்றவர் தர்ஷினி. இவர் ஒரு மாற்றுத்திறனாளி. இவரால் பிறவியிலேயே பேச முடியாது, செவித்திறனும் இழந்தவர். ஆனால் இவர் மாற்றுத்திறனாளிக்கான போட்டிகளில் பங்கு பெறாமல் தன்னம்பிக்கையோடு அனைவரும் பங்குபெறும் பொதுவான கபடி விளையாட்டில் சப் ஜூனியர் பிரிவில் விளையாடி வெற்றிக் கோப்பைகளை வென்றார். அவரின் திறமை எங்களை மிகவும் பிரமிக்க வைத்தது. இவரின் பெற்றோர் கூலித்தொழில் செய்பவர்கள்தான். திறமைக்கு ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு கிடையாது என்பதை இவர் நிரூபித்து இருக்கிறார்.

ஒரு சேவை மனப்பான்மையோடு தான் நான் இந்தக் கிளப்பினை துவங்கினேன். ஆனால் சில சமயம் பிரச்னைகளையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். குறிப்பாக இளம் பெண் வீராங்கனைகளை வெளிமாநிலங்களுக்கு விளையாட அழைத்து செல்லும் போது அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் வராதபடி மிகவும் பாதுகாப்பாக இருப்போம். மீறி வந்தாலும் துணிச்சலாக எதிர்கொண்டு சமாளிக்கும் அளவுக்கு எங்க குழுவினர் தயாராக இருப்பாங்க.

காவல்துறையின் உதவியும் நாங்க நாடுவதால், இதுவரை எந்த ஒரு பிரச்னையும் நாங்க சந்தித்தது இல்லை. எங்க கிளப்பில் பள்ளிக் காலத்தில் இருந்தே வசதியில்லாத மாணவிகளை தேர்வு செய்து பயிற்சி அளிக்கிறோம். சிறந்த கபடி வீராங்கனைகளை மாநிலம் முழுவதும் இலவசமாகவே அரசே படிக்க வைத்து வருகிறது. இதுபோல் எழுபது கபடி வீராங்கனைகளை இலவசமாக கல்லூரியில் படிக்க வைத்து பட்டம் பெற வைத்து அரசு வேலை வாய்ப்பும் பெற்றுத் தந்திருக்கிறோம்.

கேட்டரிங், கபடி பயிற்சி இரண்டையும் ஆரம்பத்தில் பார்க்க கஷ்டமாக இருந்தாலும், இந்த சேவையில் கிடைக்கும் ஆத்ம திருப்திக்கு அளவே இல்லை. குறிப்பாக சஞ்சனா என்ற மாணவி மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் விருது பெற்ற போது என்னை அறியாமல் என் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வந்தது. காரணம், 104 டிகிரி காய்ச்சலை கூட பொருட்படுத்தாமல் அவர் வெற்றி பெற்றார்.

துணை முதல்வர் உதயநிதி அவர்கள் விளையாட்டுத் துறைக்கு பல உதவிகளை செய்து வருகிறார். என்னுடைய மாணவிகள் சார்பாக அன்பான கோரிக்கை ஒன்று தான். தமிழகத்தில் கபடி வீராங்கனைகளுக்கு காவல்துறையில் மட்டும் அரசு வேலை கொடுக்கிறார்கள். அந்த துறையில் மட்டுமில்லாமல் மற்ற துறையிலும் அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும் என்பதுதான். தற்போது என் கிளப்பில் 47 வீராங்கனைகள் பயிற்சி பெற்று வருகிறார்கள். 200க்கும் மேற்பட்ட கபடி வீராங்கனைகளை உருவாக்க வேண்டும் என்பதுதான் என் எதிர்கால லட்சியம்’’ என்றார் சிவகுமார்.

தொகுப்பு: விஜயா கண்ணன்

படங்கள்: கார்த்தீஸ்வரன்