நன்றி குங்குமம் தோழி
ஆசிரியர் பணியே அறப்பணி! அதற்காக தங்களை எல்லாவிதத்திலும் அர்ப்பணிப்பவர்கள்தான் ஆசிரியர்கள். எழுத்தறிவித்தவன் இறைவன் என கடவுளுக்கு நிகராக வைத்து எண்ணப்படுபவர்கள். மாணவக் குழந்தைகள் எத்தகைய குறும்புகள் செய்தாலும் தங்கள் சொந்த பிள்ளைகள் போல் பொறுத்து வழிநடத்தி வெற்றிக்கு வித்திடுபவர்கள் ஆசிரியர் பெருமக்களே! உலகத்தில் உயர்ந்த நிலைக்கு வந்த எந்த துறையைச் சேர்ந்தவரின் வெற்றிக்கும் அடித்தளம் இட்டது ஆசிரியர்களாகத்தான் இருப்பார்கள்.
செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினத்தில் அவர்கள் கொண்டாடப்பட்டாலும் இன்றைய காலக்கட்டத்தில் ஆசிரியர் பணி என்பது சவாலானதுதான். இன்றைய மாணவர்களை கவனச் சிதறலில் இருந்து மீட்டு ஒரு நிலைப்படுத்தி பாடத்தை சொல்லித் தருவதற்குள் அவர்களின் பாடு திண்டாட்டம்தான். ஆசிரியர்கள், பெற்றோர்கள் சொல்லித் தராத பாடங்களை இன்று கையடக்க செல்ஃபோன் சொல்லித் தந்துவிடுகிறது. புத்தக கருத்துகளைப் பார்த்து படிக்க இக்கால மாணவர்கள் விரும்புவதில்லை.
மாணவர்களை பாடம் கவனிக்க வைக்க புதுப்புது உத்திகளை ஆசிரியர்கள் தெரிந்து வைத்திருப்பது அவசியமாக உள்ளது. சாதாரணமாக புத்தகம் வாசித்து அதிலுள்ள கருத்துக்களை சொல்லித் தரும் ஆசிரியர்களை விட பாட்டு, நடனம்மூலமாக பாடம் நடத்தும் ஆசிரியரைத்தான் 2K மாணவர்கள் விரும்புகின்றனர்.
அதற்காக எல்லா ஆசிரியர்களும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். அவ்வகையில் மாணவர்களிடம் தமிழ் கற்றல் திறனை மேம்படுத்த பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார் சென்னை ஷெனாய் நகரில் உள்ள பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் தமிழ் ஆசிரியர் கனகலட்சுமி. ‘தமிழ் வாசிப்புத் திறனில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும்’ என்ற தலைப்பில் அவர் செய்த முனைவர் பட்ட ஆய்வு அடிப்படை தமிழ்மொழி கற்பித்தல் ஆராய்ச்சியில் உலகளவில் முதலிடம் பெற்றுள்ளது. ஆங்கில வழிக் கல்வி படித்த மாணவர்கள் தமிழ் வாசிக்க தடுமாறிய காலம் போய் தமிழ் வழிக் கல்வி படிக்கும் மாணவர்களும் வாசிப்பில் திறனின்றி இருப்பது கவலைக்குரிய ஒன்றாக உள்ளது. இந்நிலையில் கனகலட்சுமி ஆசிரியை அவர்களின் கள ஆய்வுடன் கூடிய ஆராய்ச்சி அனைத்து ஆசிரியர் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.
‘‘சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி. அப்பா பிசினஸ் மேன். அம்மா சின்ன வயசிலயே இறந்துட்டாங்க. திருமணத்திற்கு ஐந்து நாட்கள் வரை ஹாஸ்டலிலேயே வளர்ந்தேன். என் தாய் மாமன்தான் என்னை +2 படிக்க வைத்தார். +2 முடித்தவுடன் நேரடி நியமனம் மூலமா கடுக்காய் வலசை கிராம தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் பணி கிடைச்சது. ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்குதான் முதலில் வகுப்பு எடுத்தேன். அந்த மாணவர்கள்தான் இன்று நான் உயர்ந்த நிலைக்கு வரக்காரணம்’’ என்று நினைவுகளைப் பகிர்கிறார்.
‘‘ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் கற்றுத் தரும் போது அவர்களுக்கு எழுத்துக்களை அடையாளம் காண்பதில் தடுமாற்றம் இருப்பது புரிந்தது. எளிய முறையில் தமிழ் எழுத்துகளை அறிமுகப்படுத்தினேன். மாணவர்களிடம் நல்ல மாற்றம் வந்தது. ஆசிரியர்களுக்கென்று மாதாந்திர கூட்டம் நடைபெறும்.
அதில் உள்ள ஆசிரியர்களுக்கு ஆங்கில இலக்கணங்களை சொல்லித் தந்து கொண்டிருந்தேன். அதனை தற்செயலாகப் பார்த்த மாவட்ட கல்வி அலுவலர் என்னைப் பாராட்டி போகளூர் ஒன்றிய ஆசிரியர்களுக்கு வகுப்பு எடுக்க என்னை நியமித்துவிட்டார். ஆசிரியர் பணி தொடங்கிய நான்கு ஆண்டுகளிலேயே எனக்கு கிடைத்த முதல் அங்கீகாரம் என்னை மேலும் ஊக்கப்படுத்தியது’’ என்று பெருமிதத்துடன் கூறுகிறார்.
‘‘ஆசிரியர்களுக்கான பயிற்றுனர் பணியில் நான்கு ஆண்டுகள் இருந்தேன். இடைப்பட்ட காலத்தில் எம். ஏ. பி.எட். முடித்தேன். 2001ல் ‘சர்வ சிக்ஷா அபியான்’ - ‘அனைவருக்கும் கல்வி’ என்ற திட்டம் அமலுக்கு வந்த போது, நான் முதன் முதலில் பணியாற்றிய பள்ளியில் தலைமையாசிரியை பதவி கிடைத்தது. மேலும், ஊர்க் காவல் படையில் டெபுடி ஏரியா கமாண்டர் என்ற கௌரவ பதவியிலும் இருந்தேன். ஆனால், நான் மொழி ஆராய்ச்சித் தேடலில் ஈடுபட்டு இருந்ததால், தலைமையாசிரியை பதவி வேண்டாம் என்று கூறி, ஆசிரியர் பணிக்கே நியமிக்க வேண்டி விண்ணப்பித்தேன். ராமநாதபுர மாவட்டத்திலிருந்து மாற்றலுக்கு அணுகிய போது அங்குள்ள கல்வி அலுவலர் என் சிறந்த சேவை காரணமாக என்னை அந்த மாவட்டத்திலேயே பணியாற்ற கூறினார். ஆராய்ச்சியின் முக்கியத்துவம் கருதி சென்னையில் நான் தற்போது பணியாற்றி வரும் பள்ளிக்கு மாற்றலாகி வந்துவிட்டேன்.
உலக தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் விஜயராகவன் தலைமையில் ஆய்வு படிப்பை துவக்கினேன். கள ஆய்வுக்கு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி வழங்கினேன். குழந்தைகளுக்கு ஒரு காலக்கட்டத்திற்கு பிறகு தாய் கற்றுத் தராததைக் கூட தாய்மொழி கற்றுத் தரும். அத்தகைய தாய்மொழியைப் பிழையின்றி சொல்லித் தருவதில் என் முழு கவனம் இருந்தது’’ என்றார் கனகலட்சுமி.
‘‘களஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நான் எழுதிய புத்தகங்களையே உபகரணங்களாக பயன்படுத்தினேன். அதில் வெற்றியும் பெற்றேன். நான் எழுதிய புத்தகங்கள் மற்றும் செயல்பாடுகள் இருந்தாலே 45 நாட்களில் ஒரு மாணவனால் தமிழைப் பிழையின்றி வாசிக்கவும் எழுதவும் முடியும். இந்தப் புத்தகங்கள் வீட்டுக்கொன்று இருந்தாலே போதும். புத்தகத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் தலைப்பு தொடர்பான விடியோக்களை கியூ ஆர் கோடுடன் இணைத்திருக்கிறேன்.
அதற்காக லண்டன் பாராளுமன்றம் எனக்கு ‘தமிழ் பரப்பும் செந்தமிழ்ச் சான்றோர்’ விருதினைத் தந்து சிறப்பித்தார்கள். இன்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பயிற்சியை தொடர்ந்து வருகிறேன். மாதம் தோறும் நடைபெறும் ஜெனரல் கிளப் கூட்டத்தில் மாணவர்கள் மத்தியில் ஆண்-பெண் சமம் குறித்த செயல்பாடுகளை வலியுறுத்துவது என் வேலை. கொரோனா பெருந்தொற்று இன்றைய மாணவர்களை படிப்பில் தொய்வடைய செய்திருக்கிறது. மேலும், தமிழில் பாடக் குறைப்பு, அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கும் படியாக உள்ளது. குறைந்த பாடங்களை தவறின்றி படிக்கலாம். குறிப்பாக அடிப்படை எழுத்தறிவே இல்லாத பாடங்களால் பயன் ஏதுமில்லை.
ஆங்கில எழுத்துக்கள் 26. ஆனால், தமிழ் எழுத்துகள் 247. இந்த எண்ணிக்கையே குழந்தைகளை தமிழ் மேல் பயத்தை ஏற்படுத்துகிறது. அது தவறு. தமிழில் உயிர் எழுத்து பன்னிரண்டும், மெய் எழுத்து பதினெட்டும், ஆய்த எழுத்து ஒன்றும் சேர்ந்தால், 31 எழுத்துக்கள்தான். உயிர் மெய் எழுத்துகள், அதன் விரிவு என்ற புரிதலை மாணவர்கள் மத்தியில் உருவாக்க வேண்டும். அதைத்தான் நான் செய்கிறேன். என் புத்தகங்களை பள்ளிக் கல்வித் துறை தொடக்கக் கல்வியில் பாடமாக்கும் முயற்சியில் இருக்கிறேன்’’ என்றார் நல்லாசிரியர் பட்டத்தை நோக்கி பயணித்து வரும் தமிழாசிரியை கனகலட்சுமி.
தொகுப்பு: கலைச்செல்வி
படங்கள்:ஆ.வின்சென்ட் பால்