Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கலை ஆர்வமுள்ளவர்களுக்கு ‘கேளிர்’ன் கதவு திறந்திருக்கும்!

நன்றி குங்குமம் தோழி

“கலை மீது ஆர்வம் இருந்தாலும் அது சார்ந்து படிக்கவும், அதை தொழிலாக தேர்ந்தெடுக்கவும் பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. பள்ளி படிப்புக்கு செலவு செய்வது போல், பணம் கொடுத்து ஓவிய வகுப்புகளுக்கு பிள்ளைகளை அனுப்ப வேண்டுமென்றால் பெற்றோர்கள் சற்று தயங்கவே செய்வார்கள். பல்வேறு காரணிகளால் கலையை முதன்மையாக தேர்ந்தெடுப்பதில் பலருக்கும் சிரமங்கள் இருக்கலாம். குறிப்பிட்ட சிலரால் மட்டுமே கலை சார்ந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள முடிகிறது.

கலை ஆர்வம் கொண்ட பலருக்கும் அவை எளிமையாக கிடைத்துவிடுவதில்லை. உதாரணமாக என்னை சுற்றியிருக்கும் நண்பர்களையே பார்க்க முடிந்தது. ஓவியக் கலையை கற்றுக்கொள்வதற்கான பயிற்சியில் கூட சுதந்திரமாக ஈடுபட முடியாது. ‘என்ன எப்போ பார்த்தாலும் எதையாவது வரைஞ்சுட்டே இருக்க, உனக்கு வேறு வேலை இல்லையா?’ என்பார்கள். கலை மீது ஆர்வம் இருந்தும் பெற்றோர்கள் ஆதரவு இல்லையெனில் சிலரின் வீடுகளில் கூட இந்த சுதந்திரம் கிடைப்பதில்லை. மேலும் ஓவிய வகுப்புக்கு போக வேண்டும் என்றால் கூட அதற்கான வசதிகள் இருக்காது. ஆனால், இது போன்றவர்களிடம் ஓவியத் திறமை அதிகமாக இருக்கும். கலையை கற்றுக்கொள்வதில் உள்ள இந்த ஏற்ற இறக்கம் எப்போதும் என் சிந்தனையில் இருக்கும். இதன் விளைவாக தோன்றியதுதான் ‘கேளிர்’...” எனும் வர்ஷா தர், ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரம் எனும் ஊரில் தன் வீட்டிலேயே கலை பயிற்சிக்கூடம் அமைத்திருக்கிறார்.

“எங்க ஊரில் நிறைய இளைஞர்களும் சிறுவர்களும் ஓவியக் கலையில் ஆர்வமாக இருப்பார்கள். ஓவியப் பயிற்சி வகுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாதவர்களும் அதற்கான வசதியில்லாதவர்களும் இதில் அடங்குவார்கள். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஓவியக்கலைஞர்கள் ஒரு சமூகமாக இணையும் போது கலைத் தொடர்பான அறிவுத் திறன்களை பகிர்ந்து கொள்ளவும் கற்றுக்கொள்ளவும் இங்கு உபயோகமாக செயல்பட முடியும்.

ஓரிடத்தில் ஒன்று கூடி வரைந்து பழகுவதற்கும் பயிற்சியினை மேற்கொள்வதற்கும் ஒரு பயிற்சி கலைக்கூடத்தை அமைக்க விரும்பினேன். அப்போது என் வீட்டின் பின்புறத்தில் எப்போதும் பூட்டியே கிடக்கும் அறை என் நினைவுக்கு வந்தது. புழங்காத பொருட்களை போட்டு வைத்துக்கொள்ளும் அறையாக அதனை பயன்படுத்தி வந்தோம். உடனே என் பெற்றோரிடம் அனுமதி கேட்டு அறையை சுத்தம் செய்து, எளிமையாக அலங்கரித்தேன். அந்த இடத்தை நான் கலைக்காக பயன்படுத்தப் போகிறேன் என்ற போது நான் விளையாட்டுத்தனமாக எதையோ செய்யப் போகிறேன் என பெற்றோர் நினைத்துக்கொண்டனர்.

ஓவிய பயிற்சிக்காக நான் அமைத்திருக்கும் இடத்தை பற்றி ஈரோடு சுற்றியுள்ள பகுதிகளில் தெரிய வந்ததும் நிறைய இளைஞர்களும் சிறுவர்களும் வந்தனர். சில வண்ணங்கள், தாள்கள், தூரிகைகள் போன்றவற்றை கூடத்தில் வைத்திருப்பேன். பொருட்கள் இல்லாதவர்கள் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். பெரும்பாலும் சிறுவர்களுக்கு இது பயனுள்ளதாக இருந்தது. இளைஞர்கள் அதிகம் பயிற்சி செய்வதிலும் சிறுவர்கள் அதிகம் கற்றுக்கொள்வதிலும் ஆர்வமாக இருந்தனர்.

இங்கு ஓவியக் கலைஞர்களால் வகுப்புகளும் எடுக்கப்படுகின்றன. அதற்கு மலிவான கட்டணம்தான் வசூலிக்கிறோம். கட்டணம் செலுத்த முடியாதவர்களுக்கு இலவசம் அல்லது அவர்களால் எவ்வளவு கொடுக்க முடிகிறதோ அதை கொடுத்தும் கற்றுக்கொள்வார்கள். பயிற்சி அளிப்பவருக்கு நேரடியாக கட்டணம் செலுத்தாமல் நானே வசூலித்து கொடுப்பதால், யார் கட்டணம் செலுத்தினார்கள், யார் செலுத்தவில்லை என்பதெல்லாம் தெரியாது. எனவே உயர்வு, தாழ்வு இல்லாமல் எல்லோருக்கும் சமமாக கற்றுத்தரப்படுகிறது.

சில நேரங்களில் ஓவிய ஆசிரியர்களுக்கு வகுப்புகளை எடுப்பதற்கான இடவசதி இருக்காது அல்லது மாணவர்களை அணுக முடியாமல் இருக்கலாம். எனவே ஓவிய ஆசிரியர்கள் வகுப்புகளை எடுக்கவும் இந்த இடத்தினை பயன்படுத்திக் கொள்வார்கள். இது தீவிர ஆர்வமுடைய மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். பெரும்பாலான ஓவியக் கலைஞர்களுக்கு தங்கள் திறமைகளை சந்தைப்படுத்துவதிலும் சிரமம் உள்ளது. எனவே, இரு வேறு கோணங்களிலும் இதற்கான தீர்வினை காண முயற்சி செய்கிறோம். பயிற்சிக் கூடத்தில் அவ்வப்போது சில பயிற்சி பட்டறைகளை நடத்துகிறோம். பத்திக் பெயின்டிங், சயனோடைப் பெயின்டிங், பிலிம் மேக்கிங், போட்டோகிராஃபி போன்ற கலை சார்ந்த பயிற்சி பட்டறைகள் நடைபெற்றன.

சுதந்திரமாக ஓவியப் பயிற்சிகளை எடுக்கும் வசதியில்லாத இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் அமைக்கப்பட்ட இந்த இடத்தில் எல்லோரும் ஒன்று கூடி ஓவியங்கள் படைப்பதை பார்க்கும் போது நெகிழ்ச்சியாக இருக்கும். இங்கு பயன்பெறும் சிறுவர்களின் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். வீட்டில் வரைவதை பார்த்து திட்டிக்கொண்டிருந்த மற்றும் பிள்ளைகளுக்கு திறமை இருந்தும் பயிற்சி பெற இயலாத பிள்ளைகளின் பெற்றோர்கள் இப்போது “இங்கு வந்து பயிற்சி எடுத்ததும் என் பிள்ளை நன்றாக ஓவியம் வரைகிறான்” என்றெல்லாம் மனம் நெகிழ்வார்கள். மேலும், கேளிர் பயிற்சிக்கூடத்தில் ஒரு சிறிய நூலகமும் அமைத்துள்ளோம். யார் வேண்டுமானாலும் புத்தகத்தை எடுத்துச்சென்று படித்துவிட்டு மீண்டும் கொண்டுவந்து வைக்கலாம்.

புத்தகம் வாங்கி படிக்க முடியாதவர்கள் நூலகத்தை பயன்படுத்துவதை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கும். கிராமத்தில் உள்ள சிறுவர்கள் புத்தகம் படிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களுக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரித்திருப்பதாக பெற்றோர்களும் சொல்கின்றனர். கலைஞர்கள் சமூக பொறுப்பிலான செயல்பாடுகளையும் செய்ய கடமைப்பட்டிருப்பதாக நாங்க நம்புகிறோம். குழுவாக இணைந்து விதை பந்துகளை தயார் செய்வது, கடற்கரையை சுத்தம் செய்வது போன்றவற்றையும் அவ்வப்போது செய்து வருகிறோம்.

முதியோர் இல்லங்களுக்கு சென்று அவர்களை புத்துணர்வுடன் வைக்க, க்ளே ஆர்ட் பயிற்சிகளை அளித்து அவர்களுடன் இணைந்து பொம்மைகள், உருவங்கள் போன்றவற்றை செய்வோம். இது போன்ற செயல்பாடுகளின் போது அவர்களுடன் சந்தோஷமாக சிரித்துப் பேசுவது கலகலப்பாக இருக்கும். திருப்பூரில் உள்ள ஒரு சிறப்பு பள்ளிக்கு சென்று அங்குள்ள சிறப்பு மாணவர்களுக்கு க்ளே ஆர்ட் பயிற்சிகளை அளித்தோம்.

இந்த நிகழ்வு அவர்களுக்கு உபயோகமாக இருந்தது. மாணவர்களுடன் ஆசிரியர்களும் இதில் கலந்து கொண்டனர். சிறப்பு மாணவர்களுக்கு புத்துணர்வு அளிக்கும்படி மீண்டும் இது போன்ற நிகழ்வை நடத்த வேண்டுமென எங்களிடம் கேட்டுள்ளனர். எனவே மீண்டும் நடத்த திட்டமிட்டுள்ளோம். ஈரோட்டில் உள்ள அரசுப் பள்ளியில் சுவர் ஓவியங்களை வரைந்து அழகுபடுத்தியிருக்கிறோம்.

நான் சென்னையில் அரசினர் கவின்கலை கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பதால் விடுமுறை நாட்களில் எல்லாம் ஈரோட்டிற்கு சென்று விடுவேன். பயிற்சி பட்டறைகள், வகுப்புகள் நடைபெறும் போது முடிந்தவரை நான் கேளிர் கூடத்தில் இருக்கவே முயற்சி செய்வேன். அவ்வப்போது சென்னையிலும் பயிற்சி பட்டறைகளை நடத் துவோம். ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய என் அப்பா, இப்போது பயிற்சிக்கூடத்தில் ஏதாவது நிகழ்வுகளை நடத்திக்கொண்டேயிரு என ஊக்கம் அளிக்கிறார். ஆர்வம் இருந்தும் கலைப் பயிற்சியை எடுக்க சிரமப்படுபவர்களுக்கு ‘கேளிர்’ எப்போதும் ஆதரவாக இருக்கும்’’ என்றார்.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்