Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

என் வலியின் நீட்சியே கிட்டான் கேரக்டர்!

நன்றி குங்குமம் தோழி

நடிகை ஹரிதா

ஓவியர்... நேஷனல் அத்லெட்ஸ்... நடிகை... சவுண்ட் ஹீலர் என பல முகங்களைக் கொண்டவர் நடிகை ஹரிதா. மாமன்னன், மாரீசன் படங்களில் ஏற்கனவே நடித்திருந்தவர். ‘பைசன்’ திரைப்படத்தில் நடிகர் துருவ் நடித்த கிட்டான் பாத்திரம் வெற்றியை நோக்கி நகர, நடிகை ஹரிதா ஏற்று நடித்த கேரக்டரும் ஒரு காரணம்.

நேஷனல் அத்லெட்ஸ் மற்றும் நடிகையுமான ஹரிதாவிடம் அவர் கடந்து வந்த பாதை... அவரின் வெற்றி...

அவரது வலிகள் குறித்தெல்லாம் விரிவாகப் பேசியதில்…

‘‘எனது பெற்றோர் கடலூர் என்றாலும் என் ஸ்கூல், காலேஜ், படிப்பு எல்லாம் சென்னையில்தான். சின்ன வயதிலேயே அம்மா எனக்கு வரையக் கற்றுக் கொடுத்தார். என் இரண்டரை வயதிலேயே தூரிகையை பிடிக்கத் தொடங்கினேன். நான் வளர வளர வரைகிற ஆர்வமும் வளர்ந்தது. வெறும் பொழுது போக்காக வரையாமல், அப்ஸ்ட்ரக்ட் ஆர்டிஸ்டாக என்னை நிலைநிறுத்திக் கொண்டதில், சென்னை மியூசியம் ஆஃப் பாஸிபிளிட்டிஸ் சென்டரில், எனது இரண்டு ஓவியங்கள் இடம்பிடித்தன. என் திறமைக்கான அங்கீகாரமாகவே இதை நினைக்கிறேன்’’ என்றவரிடத்தில், அவரின் அத்லெட்ஸ் பயணம் குறித்த கேள்வியை முன் வைத்ததில்...

‘‘10 வயதில் வீட்டருகே ஷட்டில்காக் விளையாடத் தொடங்கி, பிறகு பள்ளியில் படிக்கும் போது, மாவட்டம், ஜோனல் என்று முன்னேறி பரிசுகளை வென்றேன். ஆறாவது படிக்கும் போது ஷட்டில்காக் பயிற்சி எடுக்க பணம் கட்ட வேண்டி இருந்ததால், அத்லெட்ஸ் பக்கமாக என் கவனத்தை திருப்பி, ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்று ஓட ஆரம்பித்தேன். எனது விடாமுயற்சியால் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றேன்’’ என்றவரிடத்தில், ரன்னிங் டிராக்கில் இருந்து மாறி கேமரா முன் வந்தது எப்படி என்ற கேள்வியை முன் வைக்க...

‘‘தேடல்கள் என்னிடம் எப்போதும் இருந்து கொண்டே இருந்தது. நடிக்கணும் என்பது என் நேரடி திட்டம் கிடையாது. முதலில் தொலைக்காட்சித் தொகுப்பாளராகவே முயற்சித்தேன். அதற்கான வாய்ப்பைத் தேடியதில் கிடைத்தது என்னவோ டப்பிங் வாய்ப்புதான். ஒரு கேரக்டரின் உணர்ச்சியை குரலில் கொண்டு வரும்போது, ஏன் நாமே நடிக்கக் கூடாது எனத் தோன்றிய இந்த ஸ்பார்க்தான் நடிப்பின் பக்கம் என் கவனத்தை திருப்பியது.

ஆரம்பத்தில் சின்னச் சின்ன ரோல்கள், ஜூனியர் ஆர்டிஸ்ட் என்றுதான் அமைந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, சப்போர்டிங் ரோலுக்கு

முன்னேறி, இன்று லீட் ரோல்களை செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கேன். நான் நடிக்க வந்தே 8 வருடங்கள் ஆச்சு’’ என்றவரிடம், ‘பைசன்’ படத்தில் திருப்புமுனையாய் அமைந்த அவரின் வீல்சேர் ஆர்டிஸ்ட் நடிப்பு குறித்த கேள்வியை முன் வைத்ததில்...

திறமை இருந்தும் செலக் ஷனில் புறக்கணிக்கப்படும் கிட்டானுக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்புண்டு. நான் வாழ்ந்த... நான் உணர்ந்த வலியின் நீட்சிதான் கிட்டான் கேரக்டர். என்னோட அத்லெட் வாழ்க்கையிலும் இது நடந்தது. என் ஸ்போர்ட்ஸ் பயணத்தில் ஆறு முறை தமிழ்நாட்டை நான் ரெப்ரசென்ட் பண்ணியிருக்கேன். ஸ்டேட் லெவல் அத்லெட்டிக் மீட்ல வெள்ளிப் பதக்கத்தை நான் பெற்றிருந்தும், என்னை புறக்கணித்து, வெண்கலம் வாங்கிய நபரை நேஷனலுக்கு அழைத்துச் சென்றார்கள்.

அந்த ஏமாற்றமும்... புறக்கணிப்பும் என் மனசுல அப்படியே வடுவா பதிய, ‘பைசன்’ படத்தின் கிட்டான் கேரக்டர் என்னை பாதித்தது. இது என் நடிப்பை இன்னும் கூடுதல் நம்பகத் தன்மையோடு வெளிப்படுத்தக் காரணமாக அமைந்தது. அந்த வலியை என் நடிப்பிற்கான ஃப்யூலாய் மாற்றினேன். அவ்வளவுதான். அதற்காக அந்த ஏமாற்றத்தை ஒதுக்கி வச்சுட்டெல்லாம் நான் நடிக்க வரல.

என்னோட அத்லெட் பேக்ரவுண்ட் என்பது என்னோட பயோடேட்டாவில் வருகிற ஒன் லைன் இல்லை. என் கலைப் பயணத்திற்கான எமோஷனல் சோர்ஸ். நமது கஷ்டமான அனுபவங்களை மறக்க முயற்சிக்கிறதை விட, அதை நமது கிரியேட்டிவிட்டியோடு கனெக்ட் பண்ணும் போது தனி பவர் அதற்கு கிடைக்கும்தானே. அப்படித்தான் என்னோட வலியும் புறக்கணிப்பும், ‘பைசன்’ படத்தில் கிட்டான் கேரக்டருக்கு உதவி செய்கிற எனது நடிப்புக்கு உயிர் கொடுத்திருக்குன்னு சொல்லலாம். அதனால்தான் நான் ஏற்று நடித்த கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாய் கவர்ந்தது.

இந்த கேரக்டரை எழுதும் போதே, நான் இதை பண்ணா நல்லா இருக்குன்னு இயக்குநர் எங்கேயோ ஃபீல் பண்ணியிருக்கார். ‘மாமன்னன்’ படத்திலும் ஏற்கனவே என் நடிப்பு அவருக்கு பிடிச்சிருந்தது. நானொரு ஆர்ட்டிஸ்ட். நல்லா வரைவேன். நல்லா நடிப்பேன். நிறைய மெனக்கெடுவேன் என்கிற என்னுடைய பன்முகத்தன்மையும் அவருக்குத் தெரியும். கூடவே நானொரு அத்லெட்ஸ் என்பதையும் அறிவார். எனவே என்னைக் கூப்பிட்டு “இந்தக் கேரக்டரை நீ பண்ணா நல்லா இருக்கும்னு” சொன்னாரு. “சரி, ஓகே சார்”னு நானும் நடித்தேன்’’ என்றவரிடம் அவரின் இன்னொரு டிராக்கான சவுண்ட் ஹீலிங் தெரபி குறித்து கேட்டதில்...

‘‘ஆமாம். நானொரு மல்டி இன்ஸ்ட்ரூமென்டலிஸ்டும் கூட. பல்வேறு ஒலிகளை உருவாக்கும் இசைக் கருவிகள் பலவற்றையும் வாசிப்பேன். கடந்த 4 வருடமா இதில் தீவிரமாக இயங்கியும் வருகிறேன். பல்வேறு விதமான மியூஸிக் இன்ஸ்ட்ரூமென்ட் அல்லது குரல் வழியாக எழும் ஒலிகளை வைத்து, கேட்பவர்கள் மன அழுத்தத்தைக் குறைப்பது, மனதையும் உடம்பையும் சமநிலைக்குக் கொண்டு வருவது, இதுவே சவுண்ட் ஹீலிங். இதில் எனக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைச்சிருக்கு.இங்கிலாந்தில் உள்ள ஈஸ்ட் லண்டனில் தொடர்ந்து பல வாரங்கள் கிட்டதட்ட 28 சவுண்ட் ஹீலிங் செஷனை நடத்தியிருக்கிறேன். எனது திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாகவே இதனை நான் பார்க்கிறேன். இந்தியாவிலும் எனது சவுண்ட் ஹீலிங் தெரபியினை தொடர்ந்து செய்து வருகிறேன்.

இவை அனைத்தும் ஒன்றில் இருந்து ஒன்றுக்கு தாவுகிற பயணம் கிடையாது. என் பார்வையில் இவையெல்லாம் தனித்தனி விஷயமும் இல்லை. ஒரு சென்டர் பாயிண்டில் பல கிளைகளாய் விரியும் மரம் மாதிரியான கிளை பரப்புதல் நிகழ்விது. இவை அனைத்தையும் இன்டகிரேட்டட் ஆர்ட் என்கிற வடிவத்திற்குள் வைத்து நான் பார்க்கிறேன். இதில் என் ஆணிவேர் அத்லெட்தான். Once an athlete... always an athlete forever’’ என்றவர், ‘‘இந்தப் பின்னணியே மற்ற முயற்சிகளுக்கான மன உறுதியை எனக்குக் கொடுத்தது.

எனக்குள் இருக்கிற அத்லீட் மைன்ட்செட்தான் மற்ற எல்லாத்தையும் டிரைவ் பண்ணுது... கனெக்ட் பண்ணுது... அத்லெட்டிக்ஸுக்கு நான் கொடுத்த டிஸிபிளின்... போக்கஸ்... மென்டல் ஸ்ட்ரெந்த்... இதுதான் என்னுடைய மற்ற ஃபீல்டான பெயின்டிங்... ஆக்டிங்... சவுண்ட் ஹீலிங் என அனைத்திற்கும் அடிப்படையா இருக்கு. மற்றபடி என்னைப் பொறுத்தவரை எல்லாமே ஒன்னுதான்.

நேஷனல் மீட்ல நான் செலக்ட் ஆகாமல் போன வலி மிகுந்த அனுபவங்கள் கூட எனக்கு வீண் போகல. அது வெறும் கசப்பான நினைவுகள் மட்டுமில்லை... ‘பைசன்’ படத்தில் என் நடிப்புக்கான பவர்ஃபுல் ரா மெட்டீரியலா, இன்ஸ்பிரேஷனாகவே அது மாறியது. நம்முடைய கடந்தகால வடுக்கள், நமது கிரியேட்டிவிட்டியை ஆழமாய் வடிவமைக்க முக்கிய பங்கு வகிக்கிது என்பதற்கு நானே உதாரணம்’’ என்றவரிடம் வாழ்த்துச் சொல்லி விடைபெற்றோம்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்