நன்றி குங்குமம் தோழி
இயற்கையில் கிடைக்கும் காய்கனிகளில் எத்தனை இருந்தாலும் பெண்களுக்கு மிகவும் பயன்தரக்கூடியது வாழைப்பூ. அப்படிப்பட்ட வாழைப்பூவைக் கொண்டு மதிப்புக்கூட்டும் பொருளாக மாற்றி, அதில் ஒரு மால்டினை தயாரித்து விற்பனை செய்து வருகிறார் ஈரோட்டைச் சேர்ந்த சவீதா குப்புசாமி மற்றும் ரமேஷ். ‘பனானா ப்ளஸ்’ என்ற பெயரில் ஒரு ஸ்டார்டப் நிறுவனத்தை இவர்கள் இருவரும் இணைந்து நிர்வகித்து வருகிறார்கள்.
‘‘ரமேஷ் என் நிறுவனத்தின் ஒரு பார்ட்னர். நாங்க இருவரும் சேர்ந்துதான் இந்த பிசினசை ஆரம்பித்தோம். அடிப்படையில் நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவள். எங்க ஊரில் வாழைப்பழத்திற்கு தரும் முக்கியத்துவம் வாழைப்பூவிற்கு தரமாட்டார்கள். அதனை வீணாக எறிந்து விடுவதை பார்த்திருக்கிறேன். ஆனால், அதில் பெண்களுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளது. குறிப்பாக பெண்களின் கருப்பை ஆரோக்கியம், மாதவிடாய் சீர்மை, ரத்த சோகை குறைப்பு போன்ற பல மருத்துவ குணங்கள் இருப்பதை கண்டறிந்தேன்.
இவ்வளவு மதிப்புள்ள பொருள் வீணாகிப் போகிறதே என்று என் மனதை உறுத்தியது. அதை மதிப்புள்ள பொருளாக மாற்றினால் என்னவென்று தோன்றியது. இதனால் பெண்களின் ஆரோக்கியம் விவசாயிகளுக்கும் பயன்தரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அதன் அடிப்படையில் 2022ம் ஆண்டு வாழைப்பூவில் இருந்து மதிப்புக்கூட்டும் பொருட்களை தயாரிக்க தொடங்கினோம். இது ஒரு தொழில் மட்டுமல்ல பெண்களின் ஆரோக்கியத்தையும், விவசாயிகளின் வருமானத்தையும் இணைக்கும் ஒரு முயற்சி.
எங்களின் முதல் முயற்சியாக வாழைப்பூவினைக் கொண்டு மால்ட் ஒன்றை தயாரித்தோம். முதலில் எங்களுக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்தோம். அவர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மாதவிடாயின் போது வலியினால் அவதிப்படுபவர்கள், முறையற்ற மாதவிடாய் பிரச்னை உள்ள பெண்களுக்கு கொடுத்தோம். அவர்களிடம் நல்ல மாற்றம் இருப்பதாக கூறினார்கள். அதே உற்சாகத்தில் இதனை மார்க்கெட்டில் அறிமுகம் செய்தோம்.
இது முழுக்க முழுக்க ஆரோக்கியம் சார்ந்தது என்பதால், இயற்கை முறையில் வாழை விவசாயம் செய்பவர்களிடம் இருந்துதான் வாழைப்பூவினை பெறுகிறோம். இந்த மால்டில் வாழைப்பூவுடன் செவ்வாழை, நாட்டுச் சர்க்கரை, முந்திரி மற்றும் பாதாம் சேர்த்து தயாரிக்கிறோம். எந்தவித ரசாயனமும் சேர்க்கப்படாமல், ஆரோக்கியம் மற்றும் சுவையையும் கருத்தில் கொண்டு தயாரித்து வருகிறோம்.
இதனை சூடான பாலில் கலந்து குடிக்கலாம், சுடு தண்ணீரில் நாட்டுச் சர்க்கரை சேர்த்தும் பருகலாம். மில்க் ஷேக் வடிவத்திலும் சாப்பிடலாம். தேங்காய்ப்பால், பழச்சாற்றிலும் கலந்து குடிக்கலாம். இதில் மால்ட் மட்டுமில்லாமல் தொக்கு, பருப்புக் கலவை, ஊறுகாயும் தயாரிக்கிறோம். அதனைத் தொடர்ந்து வாழைத்தண்டு ஊறுகாய், நேந்திர காய் பவுடர் போன்றவையும் உள்ளன. எங்கள் தயாரிப்புகளை இணையம் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் விற்பனை செய்கிறோம். இந்தியா முழுதும் விற்பனை செய்கிறோம். அடுத்து உலக சந்தையிலும் இடம் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
குழந்தைகளுக்கு வாழைப்பூவினை சமைத்து கொடுத்தால் அதிகம் விரும்பி சாப்பிட மாட்டார்கள். மேலும், இதனை சுத்தம் செய்வதும் கொஞ்சம் கடினம் என்பதால், பலர் இதனை சமைக்க தயங்குவார்கள். அவர்களுக்கு எங்களின் மால்ட் ஒரு நல்ல மாற்றாக பயன்படும். இதனை தினமும் சாப்பிடலாம் என்பதால், பெண்களுக்கு மிகவும் நல்லது. எங்களுடைய இலக்கு வாழையை முழுமையாகப் பயன்படுத்தி உலக சந்தைக்கு ஆரோக்கியமான தயாரிப்புகளாக கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான். அதற்கான பணியில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம்’’ என்ற சவீதா, சிறந்த தொழில் முனைவோர் விருதினை ெபற்றுள்ளார்.
தொகுப்பு: மதுரை கணேசன்