Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மனதை ஒருநிலைப்படுத்தும் குரோஷே கலை!

நன்றி குங்குமம் தோழி

பொழுது போக்கிற்காகவும், ஆர்வத்தின் பேரிலும் கலைகளை கற்றுக் கொண்டாலும், இந்தக் கலைகளை மருத்துவ ரீதியாக கற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. அந்தக் கலை வடிவம் இசையோ, தையல் கலையோ, ஓவியமோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கோபத்தை கட்டுப்படுத்தவும், மனதை ஒருநிலைப்படுத்தவும், அமைதியான சூழ்நிலையினை உருவாக்கவும் இந்தக் கலைகள் பயன்படுகின்றன. அதில் ஒன்றாக தற்போது அதிகமாக மருத்துவர்களாலும் பரிந்துரைக்கப்படுவது குரோஷே.

இதனை கற்பதன் மூலமும், தொடர்ந்து பயிற்சி செய்வதால் ஒருவருடைய நியாபகத் திறனை அதிகரிப்பதோடு, அவர்களின் மன ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். இத்தகைய கலையை தன்னுடைய இளம் வயதிலிருந்து பிறருக்கு கற்றுக் கொடுப்பதோடு, ஆர்டர்களின் பேரில் பொருட்களை செய்து விற்பனையும் செய்து வருகிறார், சென்னையைச் சேர்ந்த இளம் குரோஷே பயிற்சியாளர் மற்றும் ‘ஆர்டிடெக்சர் குரோஷே’ பயிற்சி மையத்தின் நிறுவனர் ஐரின் எட்வின்.

‘‘பள்ளி படிக்கும் போதே ஆர்ட் சம்பந்தமான விஷயம் மேல் எனக்கு தனி ஈடுபாடு இருந்தது. எங்க பள்ளியில் ஆர்ட்டுக்கு என தனி வகுப்பு இருக்கும். அதில் பலவிதமான கலைகளை சொல்லிக் கொடுப்பாங்க. ஆனால் எனக்கு குரோஷே மீது தனிப்பட்ட ஈர்ப்பு இருந்தாலும், அப்போது என்னால் அந்தக் கலையை கற்றுக் கொள்ளமுடியவில்லை.கல்லூரி முடித்ததும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தேன். ஆர்ட் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் குரோஷே, எந்த இடத்தில் இருந்தாலும் எளிமையான முறையில் இதனை பயன்படுத்தி பொருட்களை தயாரிக்கலாம். இதற்குள் எனக்கு திருமணமானது. என மாமியார் க்ராப்ட் டீச்சராக பணியாற்றியவர். அவங்க குரோஷே ரொம்ப அழகா பின்னுவாங்க.

அவர்களிடம் தான் குரோஷேவை கற்றுக் கொண்டேன். என்னடைய பலநாள் கனவு அவர்கள் மூலம் தான் நிறைவேறியது. அனைத்து வகையான கலைகளில் குரோஷேதான் மிகவும் எளிதில் குறைந்த காலத்தில் கற்றுக்கொள்ள கூடிய ஒரு எளிமையான கலை. ஒரு வாரம் இதனை பயிற்சி எடுத்தாலே போது. ஒரு பொம்மையோ அல்லது ஸ்லிங்க் பேக்ஸ்களோ தயாரிக்க முடியும். ஆனால் நான் முழுமையாக ஒரு வருடம் இந்த கலையினை கற்றுக் கொண்டு பல வகையான பொருட்களை தயாரித்து பார்த்தேன். பொம்மைகள், பைகள், துணி வகைகள் மற்றும் சின்னச் சின்ன அலங்கார பொருட்கள் என பல வகை பொருட்களை நான் பின்னுவேன்.

2015ல், முழுவதுமாக கற்றுக் கொண்டதும், அதில் பயன்படுத்தப்படும் நுணுக்கங்களை செயல்படுத்தி பார்க்க துவங்கினேன். 2016-லிருந்து நான் செய்ததை தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விற்பனை செய்வதும், புதியதாக ஆர்டர்கள் எடுக்கவும் துவங்கியிருந்தேன். அப்போதிருந்தே, சிலர், குரோஷே செய்வதற்கான வகுப்புகள் எடுக்க சொல்லி என்னிடம் கேட்டாங்க. அப்போது எனக்கு குழந்தை பிறந்திருந்ததால், என்னால் பயிற்சி அளிக்க முடியவில்லை. பிறகு பார்த்துக் ெகாள்ளலாம் என்று விட்டுவிட்டேன்’’ என்றவர் 2019-ல் இருந்து இதற்கான பயிற்சிகளை அளிக்க ஆரம்பித்துள்ளார்.

‘‘குரோஷேவிற்கான நேரடி வகுப்பிற்கு பலர் ஆர்வமுடன் சேர்ந்தார்கள். அந்த சமயத்தில் தான் கொரோனா அதிகரித்து, முழு ஊரடங்கு அறிவிப்பு வந்தது. அதனால் ஆன்லைனில் வகுப்புகளை எடுக்க ஆரம்பித்தோம். அதில் வெளிநாடுகளில் இருந்தும் பலர் கலந்து கொண்டு குரோஷேவினை கற்றுக் கொண்டாங்க. பின் 2021லிருந்து நேரடி வகுப்புகள் வழக்கம் போல துவங்கியது. ஆனால் ஆன்லைனில் கிடைத்த வரவேற்பு, நேரடி வகுப்புகளுக்கு கிடைக்கவில்லை.

அதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு இதற்கான வர்க் ஷாப்புகள் நடத்துவதற்காக கேட்டாங்க. அதன் பேரில் தற்போது ஒரு சில பள்ளிகள், கல்லூரிகளுக்கு 3 நாள் ப்ரோகிராமாக இதை நடத்திக் கொண்டு இருக்கிறேன். குரோஷேவின் நன்மைகளை புரிந்து கொண்டு சில கார்ப்பரேட் நிறுவனங்களும் தங்களின் பணியாளர்களின் நலன் மற்றும் மன ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு ஒரு நாள் ப்ரோகிராமாக வர்க்‌ஷாப் நடத்த சொல்லி கேட்கிறாங்க. ஒன்றரை மாத பயிற்சியில், ஒரு பேட்சில் பத்து பேர் தான் சேர்ப்போம்’’ என்ற ஐரின் இதுவரை 800க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் குரோஷே பயிற்சி அளித்துள்ளார்.

மேலும் இதனால் ஏற்படும் மருத்துவ நன்மைகளை பகிர்ந்துகொண்டார்.‘‘குரோஷே அமர்ந்த நிலையில் செய்வதன் மூலம் முதுகு வலி ஏற்படாதா என பலர் கேட்பாங்க. இந்தக் கலை நம்முடைய உடல் மற்றும் மனம் இரண்டையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் என மருத்துவ ரீதியாக நிரூபணமாகியுள்ளது. பொழுது போக்கிற்காக செய்ய ஆரம்பித்தவர்கள் பலர் மன அமைதியாகவும், கவனச்சிதறல் ஏற்படாமல் இருப்பதாகவும், ஞாபக திறனை வளர்ப்பதற்காகவும் கூறுகின்றனர்.

முழுக்க முழுக்க அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டது. மேலும் என்னிடம் குரோஷே கற்க வருபவர்களில் பலர் மருத்துவரின் பரிந்துரைப்படி வந்ததாக கூறுவார்கள். இதனை உட்கார்ந்த நிலையில் செய்வதால், இருபது நிமிடங்களுக்கு ஒரு முறை சின்னதாக ஒரு நடை அல்லது வேறு சில வேலைகளை ஒரு 5 நிமிடம் செய்து பின் மீண்டும் பின்ன சொல்வேன்.

என்னிடம் நேரடியா கற்பவர்களுக்கு வருடத்திற்கு ஒரு முறை க்ராஜுவேஷன் நடத்துவோம். அதில் அவர்கள் செய்த தயாரிப்புகளை முன்வைப்பாங்க. மேலும் பயற்சிக்கு பிறகு அவர்களின் குரோஷே பயணத்தையும் பகிர்ந்து கொள்வாங்க. அதை கேட்கும் மற்றவர்களுக்கு இதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ள உதவியா இருக்கும். நிகழ்ச்சிக்கு வருபவர்களில் ஒரு சிலர் அவர்களைப் பார்த்தும் பயிற்சி பெற முன்வந்துள்ளார்கள். நான் இந்தக் கலையில் இவ்வளவு தூரம் முன்னேற காரணம் என் குடும்பத்தினர் தான். கொரோனா காலத்தில் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் இருக்கும் அந்த நேரத்தில் என் குழந்தைகளுக்கு தேவையான அனைத்தும் என் கணவர் மற்றும் என் அம்மாவும்தான் பார்த்துக்கிட்டாங்க’’ என்றவர் தன் பயிற்சி மையம் குறித்து விளக்கினார்.

‘‘என்னதான் இதன் மேல் ஆர்வம் இருந்தாலும், ஒரு சிலருக்கு இதற்கு தேவையான பொருட்கள் என்ன என்று தெரியாது. எந்த மாதிரியான ஊசி, நூல்கள் வாங்கணும்ன்னு புரியாது. அவர்களுக்காகவே 2021-ல் குரோஷே சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பதற்கான ஒரு சிறிய கடையினையும் துவங்கினோம். மேலும் இந்த நூல் கண்டுகளை குறைந்த அளவில் வாங்க முடியாது. நாங்க பல்காகதான் வாங்கி வைத்திருப்போம். இதனை பார்த்த பஞ்சாபின் புகழ்பெற்ற நூல் நிறுவனம் ஒன்று அவர்களின் பொருட்களையும் எங்க கடையில் விற்பனை செய்ய முன்வந்தாங்க’’ என்றவர் தன்னிடம் பயிற்சி பெற்றவர்களுடன் இணைந்து உலகின் மிக நீளமான ஸ்கார்ஃபை உருவாக்கி 2017-ல் கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்