Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிரதமர் ரேஸில் தமிழ்ப் பெண்!

நன்றி குங்குமம் தோழி

கனடா நாட்டில் அக்டோபர் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்நாட்டின் பிரதமராக இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில், அவருக்கு ஆதரவு அளித்துவந்த என்.டி.பி. கட்சி ஆதரவை விலக்கிக்கொள்ள, ட்ரூடோவின் பதவிக்கு நெருக்கடிகள் அதிகரித்தது. மேலும் அவர் இடம்பெற்றுள்ள லிபரல் கட்சிக்குள்ளும் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கைகள் அதிகரிக்கத் தொடங்கியது.

ஜஸ்டின் ட்ரூடோ பதவியில் நீடித்தால், லிபரல் கட்சி தேர்தலில் தோற்றுவிடும் என்ற நிலையில், கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக ட்ரூடோ அறிவித்ததுடன், தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை ஜஸ்டின் ட்ரூடோ தொடர்ந்து பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரூடோ 2015ம் ஆண்டு முதல் தொடர்ந்து 9 ஆண்டுகளாக கனடா நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருகிறார்.

இதையடுத்து அடுத்த தலைவரை தேர்வு செய்யும் பணியில் கட்சித் தலைமை ஈடுபட்டுள்ளது. கட்சித் தலைவராகும் நபர், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் பொதுத் தேர்தலில், பிரதமர் வேட்பாளராகவும் களம் காண்பார் என்பதால், அதற்கான தகுதி உள்ள நபர்களைத் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இந்தப் போட்டியில் பலர் உள்ளனர். இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த போக்குவரத்து மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை அமைச்சரான அனிதா ஆனந்த் பெயரும் அடிபடுகிறது.

யார் இந்த அனிதா ஆனந்த்?

நோவா ஸ்கோடியாவின் கென்ட்வில்லில் பிறந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அனிதா ஆனந்த். இவரின் தந்தையான சுந்தரம் விவேக் ஆனந்த் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட பிரபல அறுவை சிகிச்சை நிபுணர். இவரது தாயார், சரோஜ் டி. ராம், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மயக்கவியல் நிபுணர். அனிதாவுக்கு கீதா ஆனந்த் மற்றும் சோனியா ஆனந்த் என இரண்டு சகோதரிகளும் உண்டு.57 வயது நிறைந்த அனிதா ஆனந்த், குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் இளங்கலைப் பட்டமும், ஆக்ஸ்போர்டு மற்றும் டல்ஹவுசி பல்கலைக்கழகங்களில் சட்டமும், டொரன்டோ பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். டல்ஹவுசி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றபோது ஜான் என்பவரைச் சந்தித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.

அனிதா ஆனந்த் அரசியலில் இறங்குவதற்கு முன்னர், டொரன்டோ பல்கலைக்கழகத்தில் சட்டப்பேராசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார். 2019ம் ஆண்டு அரசியலில் காலடி வைத்தவர், லிபரல் கட்சியின் முக்கிய நபர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருகிறார். பாதுகாப்பு அமைச்சராகவும், தற்போது போக்குவரத்து மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகவும் அனிதா ஆனந்த் பணியாற்றி வருகிறார்.

தேசிய பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட போது, கனடா ஆயுதப் படைகளில் பாலியல் முறைகேடுகளைத் தீர்ப்பதற்கான சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். ராணுவத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களின் சார்பாக வாதிட்டதற்காக இவருக்கு அமைதிக்கான காந்தி விருதும் வழங்கப்பட்டது.விருதைப் பெற்ற அனிதா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘என்னைப் பெருமைப்படுத்தும் மகாத்மா காந்தி அமைதி விருதினை பெறுவதை விளக்க எனக்கு வார்த்தைகள் போதவில்லை.

காந்தி எங்கள் குடும்பத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றவராக எப்போதும் இருக்கிறார். காரணம், என் தாத்தா, வி.ஏ. சுந்தரம் காந்தியின் நம்பகமான சீடராக இருந்தவர். என் பெற்றோர் எப்போதும் எங்களுக்கு காந்தியின் போதனைகளை கற்க தூண்டுகோலாய் இருந்தனர்’ எனகுறிப்பிட்டுள்ளார்.கொரோனா பரவல் நேரத்தில், அதற்கான தடுப்பூசிகள் மற்றும் பாதுகாப்பு சாதனங்களை விரைந்து கொள்முதல் செய்ததற்காகவும் அனிதா ஆனந்த் பாராட்டப்பட்டார். ரஷ்யாவுடனான மோதலில் உக்ரைனுக்கு இவர் ஆதரவளித்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு: மணிமகள்