நன்றி குங்குமம் தோழி
நம் இந்திய பண்பாட்டில் பண்டிகைகளுக்கு குறைவில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பருவக் காலங்களிலும் பல்வேறு பண்டிகைகளை அனைவரும் ஒன்றுகூடி கொண்டாடி மகிழ்கிறோம். தீப ஒளி திருநாளான ‘தீபாவளி’ பண்டிகையும் அனைவராலும் விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. தீபாவளியின் அடிப்படை அர்த்தமே நம் வாழ்வில் இருள் விலகி ஒளி பெருகட்டும் என்பதுதான்.
கொண்டாட்டத்தின் முடிவில் மகிழ்ச்சி நிறைந்திருப்பதே சிறப்பு. ஆனால், பண்டிகை காலங்களில் அதிகளவு சுற்றுச்சூழல் சீர்கேட்டினை ஏற்படுத்துவது நமக்கும் நம் பூமிக்கும் ஏற்புடையதல்ல. பூஜைப் பொருட்கள், பட்டாசுகள், ஆடைகள், அலங்காரப் பொருட்கள், விளக்குகள், ஆபரணங்கள் என அனைத்திலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்குகள், வேதிப்பொருட்கள், மற்ற சில மக்கும் தன்மையற்ற பொருட்களை பயன்படுத்துகிறார்கள். இவையன்றி பண்டிகை கொண்டாட்டம் சிறப்பாக அமையாது என்றாலும், சுற்றுச்சூழலை பாதிக்காத மாற்றுத்தீர்வாக உள்ள சில பொருட்களை பயன்படுத்தலாம்.
விளக்குகள்
தீப ஒளி திருநாள் என்பதால் நம் வீடுகளில் தீபங்களை ஏற்றி வைப்பது வழக்கம். ஆனால், காலப்போக்கில் பலரும் பிளாஸ்டிக் மின் விளக்குகளை பயன்படுத்த தொடங்கி விட்டனர். அவை பாரம்பரியமான அகல் விளக்குகளின் சிறப்பினை கொண்டிருப்பதில்லை. களிமண், நல்லெண்ணெய், நூல் திரி போன்றவை இயற்கையான பொருட்கள் என்பதால் எந்தவித தீங்கும் ஏற்படுத்தாது. அகல் விளக்கு, பித்தளை விளக்குகள் போன்றவற்றை பண்டிகையில் பயன்படுத்தலாம்.
பூஜைப் பொருட்கள்
சாமியை வழிபடும் போது நாம் பயன்படுத்தும் சாம்பிராணி மற்றும் ஊதுவர்த்தி போன்றவற்றில் ரசாயனங்களின் சேர்க்கை அதிகமாக உள்ளது. இதனால் சுவாச தீங்கு ஏற்படாமல் இருக்க, இயற்கையான பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் தூபம், ஊதுவர்த்தி, சாம்பிராணி போன்றவற்றை பயன்படுத்தலாம். நெய், தேன், வேதிப்பொருட்கள் அல்லாத நிலக்கரி, சூரிய ஒளியில் உலர்த்தப்பட்ட சாணம் போன்றவை பயன்படுத்தப்படுவதால் இவை சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி நம் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்காது.
மஞ்சள், குங்குமம்
இயற்கையான முறையில் குங்குமம் தயாரிக்க, ஆரோக்கியமான மஞ்சளை நன்கு காயவைத்து பொடியாக அரைத்த பின்னர் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். நறுமணத்திற்கு ரோஸ் வாட்டர் அல்லது நெய் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கலந்தால் குங்குமம் கிடைக்கும். மஞ்சளில் சேர்க்கப்பட்ட எலுமிச்சை சாறு வேதிவினையினால் அடர் சிவப்பாக மாறும். ரசாயனமற்ற குங்குமம் பயன்படுத்துவதால் தோல் எரிச்சல் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
அலங்காரப் பொருட்கள்
வீட்டை அலங்கரிக்க பல்வேறு வகையான அலங்காரப் பொருட்கள் உள்ளன. பிளாஸ்டிக் பயன்படுத்தி தயாரிக்கப்படும் மா இலை தோரணங்கள், பூக்கள், சுவரில் தொங்கவிடப்படும் ஹாங்கிங்ஸ் போன்றவற்றையே இப்போது பலரும் பயன்படுத்துகின்றனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி அவற்றை தவிர்த்து இயற்கையான மா இலைகள், பூக்கள், வாழை இலை போன்றவற்றையே பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் அல்லாத கைவினைப் பொருட்களை பயன்படுத்துவதன் மூலம், இயற்கையை போற்றுவதாகவும், உள்ளூர் கைவினை கலைஞர்களை ஆதரிப்பதாகவும் இருக்கும்.
பரிசுப் பொருட்கள்
உறவினர்கள், நண்பர்கள், அண்டைவீட்டார்களுக்கு வீட்டில் செய்கின்ற தீபாவளி பலகாரங்கள், இனிப்புகள் போன்றவற்றை கொடுப்பது நம் பழக்கம். ஆனால், அவற்றை சுருக்கி சிறிய அளவிலான பெட்டியில் இனிப்புகளை அடுக்கி தீபாவளி பரிசாக கொடுத்துவிடுகிறோம். இது காலத்திற்கேற்ற மாற்றம். ஆனால் அந்தப் பெட்டியில் ஆரோக்கியமான இனிப்புகளையும் பலகாரங்களையும் வைத்துக் கொடுக்கலாம். முடிந்தவரை அதிகளவிலான பிளாஸ்டிக் பேக்கேஜினை தவிர்ப்பது நல்லது.
பேப்பர், ஜூட் பை, துணி பை என மக்கும் தன்மை கொண்ட பொருட்களால் பேக்கேஜ் செய்யலாம் அல்லது நீங்கள் பயன்படுத்தும் பொருள் மறுசுழற்சி செய்யப்படுபவையாக இருக்கலாம். பெரும்பாலும் கைகளால் தயாரிக்கப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பரிசாக கொடுங்கள்.
பட்டாசுகள்
தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதை தவிர்க்கவே முடியாது. அதற்கு பசுமை பட்டாசுகள் சிறந்த தேர்வு. பெரிதளவில் தீங்கினை ஏற்படுத்தாது. மேலும், இவ்வளவுதான் வெடிக்கலாம் என்பதில் கட்டுப்பாடுடனும் விழிப்புணர்வுடனும் இருப்பது அவசியம். சுற்றுச்சூழலில் ஆர்வமுள்ளவர்கள் பெரும் விழிப்புணர்வுடன் விதை பட்டாசுகளை தயாரிக்கின்றனர். இவை வெடிப்பதில்லை என்றாலும் பசுமையான செடிகளாக வளர்கின்றன.
ஆடை, ஆபரணங்கள்
ஃபாஸ்ட் ஃபேஷன் உலகில் ட்ரெண்டிற்காக நிறைய ஆடைகள் சந்தையில் உள்ளன. அவற்றை விரும்பி வாங்குபவர்கள் குறைவான கால அளவில் மட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கிவீசுகின்றனர். சுற்றுச்சூழலுக்கு பெரிதளவில் பாதிப்பினை ஏற்படுத்தாமல், பயன்பாட்டிற்கு பின் மக்கும் தன்மை கொண்ட தறிகளாலான ஆடைகளை தேர்ந்தெடுக்கலாம். ஃபேஷனில் இருந்து ஆபரணங்களை நீக்க முடியாது.
அவை நமக்கு மேலும் அழகு சேர்ப்பவை. திறமையான கைவினைக் கலைஞர்கள் இயற்கையான பொருட்களை கொண்டு நேர்த்தியாக நகைகளை தயாரிக்கின்றனர். பெண்கள் விரும்பி அணிகின்ற அனைத்து வகையான நகைகளும் நிலைத்தன்மை கொண்டதாக தயாரிக்கப்படுகின்றன. டெரகோட்டா, பேப்பர், நூல், மூங்கில் இழைகள், மரம் போன்றவற்றில் தயாரிக்கப்படும் நகைகள் எந்தவித தீங்கினையும் ஏற்படுத்தாமல் இருப்பதோடு வழக்கமான நகைகளை விடவும் இவை தனித்துவமான தோற்றத்தை அளிக்கின்றன.
தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்
