Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முதலமைச்சர் கோப்பையில் முத்திரைப் பதித்த மாணவர்கள்!

நன்றி குங்குமம் தோழி

சமீபத்தில் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் சென்னை மற்றும் சேலத்தில் நடைபெற்றது. அதில் நடைபெற்ற பல போட்டிகளில் மாணவர்கள் பலர் தங்களின் வெற்றிக் கனிகளை தொட்டு முத்திரை பதித்துள்ளனர். சென்னையில் ‘பேட்மிட்டன்’ ஒற்றையர் பிரிவுக்கான போட்டி நடைபெற்றது. அதில் மதுரையை சேர்ந்த +1 வகுப்பு படிக்கும் மாணவி அனுஷ்கா ஜெனிஃபர், முதலாவது இடத்தினை வென்றார். அவர் அதே பள்ளியில் தன்னுடன் படிக்கும் சக மாணவியான சிவரஞ்சனா உடன் இரட்டையர் பிரிவில் சேர்ந்து விளையாடி இருவரும் மூன்றாம் இடத்தினை பிடித்தனர்.

அதே போல் ‘சிலம்பம்’ போட்டியில் மதுரையை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவன் கவின் சூரிய வரதன், தன்னை விட அனுபவம் வாய்ந்த மற்றும் வயதில் மூத்த மாணவர்களுடன் சிலம்பம் சுற்றி, முதலிடம் பெற்று, முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் வெற்றி வாகை சூடியுள்ளார். 8ம் வகுப்பு மாணவன் ஆகாஷ் மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவன் அபினவ் கார்த்திக் இருவரும் சேலத்தில் நடைபெற்ற இரட்டையர் கேரம் போட்டியில் மூன்றாம் பரிசினை வென்றுள்ளனர். தாங்கள் வெற்றி பெற்ற அனுபவங்கள் மற்றும் அதற்கு அவர்கள் எடுத்துக் கொண்ட பயிற்சிகள் குறித்து முதலில் பகிர்ந்தார் அனுஷ்கா ஜெனிஃபர்.

‘‘என் பெற்றோர் இருவரும் அரசுப் பணியில் உள்ளனர். எனக்கு சின்ன வயது முதலே பேட்மிட்டன் விளையாட்டு மேல் தனிப்பட்ட ஈடுபாடு இருந்து வந்தது. அதை புரிந்து கொண்டு எங்க வீட்டில் அதற்கான பயிற்சியில் என்னை ஈடுபடுத்தினார்கள். பொதுவாக பெற்றோர், தங்களின் குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். எங்க வீட்டில் எனக்கு விளையாட்டின் மேல் ஆர்வம் இருப்பதை புரிந்து கொண்டனர். அதனால் படிப்புடன் தனிப்பட்ட திறமையும் வளர்த்துக் கொள்வது அவசியம் என்று என்னுடைய விருப்பத்திற்கு ஊக்கமளித்தார்கள்.

பெண் குழந்தைகளை விளையாட்டுகளில் ஈடுபட செய்வதால், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும் என்று நினைக்காமல் என்னுடைய அனைத்து விளையாட்டிலும் உறுதுணையாக இருந்தார்கள். விளையாட்டு உடலுக்கு மட்டுமில்லை மனதுக்கும் சுறுசுறுப்பு அளிக்கும். மேலும், படிப்பிலும் கவனம் செலுத்த உதவும் என்று நம்பினார்கள். நானும் அவர்களின் நம்பிக்கைக்கு உயிரூட்டி பேட்மிட்டன், படிப்பு என இரண்டிலும் சிறந்து விளங்கினேன்.

என்னுடைய 15 வயதில் இருந்து நான் விளையாட ஆரம்பித்தேன். மதுரையில் உள்ள மேக்ஸ் பாயின்ட் பேட்மிட்டன் அகாடமியில் சரவணன் சார் மற்றும் நவீன் சார் இருவரும் எனக்கு சிறப்பு பேட்மிட்டன் பயிற்சி தந்தார்கள். தினமும் காலை, மாலை என பத்துமணி நேரம் பயிற்சி இருக்கும்.

ஒற்றையர் பிரிவில் தனியாக விளையாடி ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் பரிசு பெற்றேன். சிவரஞ்சனாவும் என்னுடைய அகாடமியில்தான் பயிற்சி பெற்று வந்தார். நானும் அவரும் இணைந்து இரட்டையர் பிரிவில் விளையாடினோம். அதில் மூன்றாவது பரிசினைப் பெற்றது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. அடுத்து என்னுடைய இலக்கு தேசிய மற்றும் சர்வதேச அளவில் விளையாட வேண்டும் என்பதுதான். அதிலும் முதல் பரிசினை பெற வேண்டும். அதற்கான முழு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்’’ என்றவரை தொடர்ந்தார் சிலம்பத்தில் முதல் பரிசு பெற்ற கவின் சூரிய வரதன்.

‘‘மதுரையில் கலை பண்பாட்டுத்துறையை சேர்ந்த மணிகண்டன் அவர்களிடம்தான் கடந்த இரண்டு வருடங்களாக பயிற்சி பெற்று வருகிறேன். தினமும் காலை ஐந்து மணி முதல் ஆறு மணி வரையும் மற்றும் மாலை ஆறு மணி முதல் ஏழு மணிவரை சிலம்பம் பயிற்சி இருக்கும். என் தாத்தா சிலம்பாட்டத்தில் சிறந்த வீரர். அவர் சிலம்பத்தைச் சுற்றி ஆடுவதை என்னுடைய சின்ன

வயதில் இருந்தே நான் பார்த்து வளர்ந்திருக்கிறேன். அதன் பிறகுதான் எனக்கும் அந்த விளையாட்டின் மேல் ஆர்வம் ஏற்பட ஆரம்பித்தது. என்னுடைய முதல் குரு என் தாத்தாதான். இன்றும் அவர் என்னுடன் இல்லை என்றாலும் அவரின் ஆசீர்வாதம் எனக்கு என்றும் இருக்கும். சமீபத்தில் தொடர்ந்து பத்தரை மணி நேரம் சிறு இடைவேளை கூட தராமல் கம்பு சுற்றி உலக சாதனை படைத்து, நோபல் வேர்ல்டு ரெக்கார்ட் சான்றிதழ் பெற்றேன்.

என்னுடன் போட்டியில் பங்கு பெற்றவர்கள் அனைவருமே என்னைவிட வயதில் பெரியவர்கள் மற்றும் அந்த விளையாட்டில் அனுபவம் கொண்டவர்கள். வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்தோட விளையாடினேன். முதல் ரவுண்டில் புதுக்கோட்டை, வேலூர், திருப்பத்தூர் சிலம்பாட்ட மாணவர்களுடன் விளையாடி வெற்றி பெற்றேன். இறுதி ஆட்டத்தில் தேனி மாணவருடன் விளையாடி வெற்றி பெற்றேன். தொடர்ந்து தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று அதற்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்’’ என்றார் கவின் சூரிய வரதன்.

தொகுப்பு: வி கண்ணன்