Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அறியாமல் வரும் உறவுகள்!

நன்றி குங்குமம் தோழி

உன்னத உறவுகள்

தாத்தா-பாட்டி போன்ற நம் மூதாதையர்கள் வழியில் வரும் அனைத்து உறவுகளும் ரத்த பந்த உறவுகள். அந்த குடும்பத்தின் பாரம்பரியங்கள் அனைத்தும் அவர்கள் சொல்லி வழி வழியாக நடந்து கொண்டிருக்கும். ஒரு இறந்த திதி என்றால் கூட, அவர்கள் வீட்டில் என்னென்ன சமைப்பார்களோ அதைத்தான் சந்ததிகளும் பின்பற்றுவார்கள். அதனால்தான் ஒரு பெண் திருமணமாகி, மாமியார் வீடு செல்லும் போது பழகிக் கொள்ள பல நாட்களாகும். ஒரு காயை சமைக்கக் கூட, வெவ்வேறு முறையை கையாள்வார்கள். அம்மா வீட்டில் மிளகாய் பயன்படுத்தினால், மாமியார் வீட்டில் மிளகு பயன்படுத்துவார்கள். உறவு சமைப்பது முதல் பழக்க வழக்கங்களிலும் மாற்றங்கள் இருக்கலாம்.

அம்மா வீட்டில் வெகு நேரம் தூங்கி எழுந்து, பொறுமையாக அனைத்தையும் செய்தவர்களுக்கு, திடீரென சீக்கிரம் எழுவதும், நிறைய வேலைகளை அவசரமாக செய்வது சமயங்களில் அதிகமான மன உளைச்சலைக் கூட ஏற்படுத்தலாம். இப்பொழுது பெரும்பாலும் தனிக்குடுத்தனங்கள் வந்துவிட்டதால் அனைத்தும் இஷ்டம் போல் செய்ய முடிகிறது. முதலில் மற்றொரு வீட்டுப் பழக்கங்களை புரிந்து நடந்து கொள்வது ஒரு பக்கம் இருந்தாலும், இரண்டு-மூன்று மருமகள்கள் இருக்கும் வீடுகளில் அவர்களுக்குள் சகோதரி உணர்வு ஒருமித்துப் போனால்தான் குடும்பத்தின் காரியங்கள் அனைத்தும் சுமுகமாக நடைபெறும்.

இத்தகைய உறவுகள் எதுவுமே குடும்பத்திலிருந்து ஏற்படுவது கிடையாது. வெவ்வேறு வீட்டிலிருந்து வரும் பெண்கள், முன் பின் தெரியாதவர்கள், பேசிப் பழகாதவர்கள் ஒரே வீட்டில் மருமகள்களாக அமையும் பொழுது அவர்களுக்குள் ஒற்றுமை உணர்வு ஏற்பட்டு விட்டால்தான் பிள்ளைகள் - வாரிசுகள் குடும்பப் பெயரை பெருமையுடன் கூறிக் கொண்டு உறவுமுறையை வெளிப்படுத்த முடியும். வேலைகளை பகிர்ந்து செய்வது, பிள்ளைகள் விவகாரத்தில் கல்வியை கவனிப்பது, பெரியோர்களை அனுசரிப்பது போன்ற பல்வேறு பொறுப்புகளை பிரித்துக் கொண்டு செய்தார்கள். அதனால் அக்கா, தங்கைகளாகவே திகழ்ந்தார்கள்.

எல்லோர் பிள்ளைகளும் ஒன்றாக வளர்ந்ததால், அம்மா ஊரில் இல்லா விட்டால் கூட, சித்தியோ, பெரியம்மாவோ பொறுப்போடு தங்கள் பிள்ளைகளாக பார்த்துக் கொண்டார்கள். வெளியூரோ, பிறந்த வீடு சென்றாலும் குடும்ப ஒற்றுமை குறையாமல் பார்த்துக் கொண்டார்கள். யாரும் யாரிடமும் போட்டியிட்டதில்லை. யார் பிள்ளை முதல் மதிப்பெண் எடுத்தாலும் போட்டியில் ஜெயிச்சாலும் அனைவரும் அவர்களைப் பாராட்டி ஊக்குவித்தனர். எந்தக் கலை அவர்களுக்கு வருமோ அதில் மட்டும் நிபுணத்துவம் பெறச் செய்தனர். தாத்தாவோ, பாட்டியோ பாடகராக இருந்த பல குடும்பங்களில் பிள்ளைகள் அவர்களையே குருவாகக் கொண்டு சிறந்து விளங்கினார்கள். இன்றும் நிறைய வாரிசுகள் அதுபோல் காணப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். போட்டி, பொறாமை, ஏற்றத்தாழ்வு போன்ற ஏதாவது ஒன்றில் வித்தியாசம் தெரிந்துவிட்டால் உடன் பெரியவர்கள் கண்டுபிடித்து அதை சரி செய்ய

முயற்சிப்பர்.

ஒரே வீட்டின் மருமகள்கள் என்றால், அனைவரும் மகள்களாகத்தான் பார்க்கப்பட்டார்கள். ஒரு மருமகள் தன்னை உயர்த்திக் காட்ட நினைத்தால், அது மற்றவர்களை பாதிக்கும் என்பதால், வசதி படைத்தவர் என்ற பாகுபாடு பார்க்க விடமாட்டார்கள். வெளிப்படையாக பேசி மகிழும் குடும்பங்களில் எப்போதுமே பிரச்னைகள் ஏற்படுவதில்லை. பெண்கள் சுமுகமாக நடத்திச் சென்றுவிட்டால், அண்ணன், தம்பிகளுக்குள் வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பற்று போகும். பிள்ளைகள் தன் தந்தையிடம் பணம் இல்லாத போது பெரியப்பா, சித்தப்பாவிடம் உரிமையுடன் பெற்றுக் கொள்வார்கள். அத்தகைய உன்னத உறவுகள் இன்று ஒன்றாக இல்லாமல் போனதால், தனித்தனி குடும்பங்களில் ஏற்படும் பிரச்னைகளை எதிர்கொள்ள நேருகிறது.

வேறு குடும்பத்திலிருந்து பெண்கள் ஒரு வீட்டிற்கு வந்து சேர்ந்து இருப்பதன் மூலம் குடும்ப உறவுகள் கட்டிக் காக்கப்படுகிறது. அதே போல், ஒரே வீட்டின் இரண்டு பெண்களுக்கும் வெவ்வேறு இடங்களிலிருந்து மாப்பிள்ளைகள் வருகிறார்கள். ஒரே வீட்டின் இரு மாப்பிள்ளைகளும் வெவ்வேறு சூழலிலிருந்து வந்தாலும், கொஞ்ச நாட்களிலேயே உறவைப் பாதுகாத்து, பின் நெருங்கிய நண்பர்கள் போல் ஆகி விடுகிறார்கள்.

வீட்டின் பொறுப்பில் பெரும் பங்கு வகிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அக்கா-தங்கைகளுக்குள் கூட சில சமயங்களில் வாக்குவாதங்கள் வரலாம். ஆனால் மாப்பிள்ளைகள் பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்து உறவு நெருக்கமாகவே இருப்பதற்கு முயலுவார்கள். ஆண் பிள்ளையில்லாத குடும்பங்களில், மாப்பிள்ளைகள்தான் பிள்ளைகள். மாமனார், மாமியாரை அப்பா, அம்மாவாக ஏற்று கடமைகளை சரிவர செய்கிறார்கள். அவர்களின் தேவையை அறிந்து செய்கிறார்கள்.

பெண்களின் பெற்றோரும் இவை அனைத்தும் தங்கள் பாக்கியமாகக் கருதி பெருமைக் கொள்கிறார்கள். பெண்ணின் பெற்றோரும் மாப்பிள்ளையை மகனாகவே நினைத்து பெயர் சொல்லிக் கூப்பிடுவதும் வழக்கத்தில் வந்துவிட்டது. தாத்தா-பாட்டி வாழ்ந்த காலத்தில் மாப்பிள்ளை எதிரில் கூட சிலர் அமர்ந்து பேசாமல் கதவின் பின்புறத்திலிருந்தோ, மறைந்து நின்றோ கூட பேசியிருக்கிறார்கள். இப்பொழுது சரிசமமாக அமர்ந்து பேசும் காலம் நம் நாகரீக முன்னேற்றத்தின் ஒரு பங்கு என்று கூட சொல்லலாம்.

பெண்கள் பெற்றோரை பார்த்துக் கொள்வது கடமையாகக் கொண்டாலும் ஆண்கள் ஒத்துழைப்பும் கிடைத்தால்தான் செயல்கள் வெற்றியாகும். வேறு இடத்தில் பிறந்து, மாப்பிள்ளையாக அமைந்து, பிள்ளை போன்ற பொறுப்பை எடுத்துக் கொள்வது ஒரு அற்புதம்தானே! குடும்ப உறவுகள் ஒன்றுக்குள் ஒன்றாக பின்னி நெருக்கத்தை ஏற்படுத்தினால், என்றுமே மகிழ்ச்சி காணப்படும்.

தொகுப்பு: வாசகர் பகுதி