Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கிராமப்புற பெண்களின் வளர்ச்சியே என் மகிழ்ச்சி!

நன்றி குங்குமம் தோழி

பிடித்தமான வேலையை செய்ய வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம். மனதிற்கு நெருக்கமான விஷயங்களை வேலையாக செய்யும்போது அதில் அலாதியான இன்பம் நிறைந்திருக்கும். பெல்ஜியம் நாட்டிலிருந்து இந்தியாவை பார்வையிட வந்த டேவிட் வண்டேவோர்டுக்கு, இந்தியா பிடித்துப் போனது. இங்கேயே தனக்குப் பிடித்தமான தொழிலை செய்ய துவங்கியவர், அதன் மூலம் கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பினையும் ஏற்படுத்தி வருகிறார்.

“பெல்ஜியம்தான் என் சொந்த ஊர். அங்கு ஃபார்மஸி படிப்பை முடித்திருந்தேன். ஆனால் என் அப்பா என்னை பிஹெச்டி படிப்பை தொடரச் சொன்னார். அதற்கு கொஞ்சம் இடைவேளை தேவைப்பட்டதால், சிறிது காலம் வெளிநாட்டில் இருந்து வரலாம் என முடிவு செய்தபோது, நான் இந்தியாவை தேர்ந்தெடுத்தேன். இந்தியா உயர்வான கலாச்சாரம் கொண்ட நாடாக எனக்கு தெரிந்தது. நான் இந்தியா வந்தபோது, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பின்னர் பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நான் சேவைகளை செய்யத் தொடங்கினேன்.

இங்குள்ள மக்கள் பலரும் நட்புடன் பழகினார்கள். குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் தங்களின் அன்பை வெளிப்படுத்தினார்கள். சில காலம் கடந்து நான் மீண்டும் பெல்ஜியம் சென்று என் பிஹெச்டி படிப்பை தொடர்ந்தேன். ஆனால் என்னால் அதை நிறைவு செய்ய முடியவில்லை.

அதனால் பெல்ஜியத்திலேயே வேலையை செய்யலாமா அல்லது மீண்டும் இந்தியாவிற்கு செல்லலாமா என யோசித்த போது இம்முறையும் இந்தியாவையே தேர்ந்தெடுத்தேன். இங்கு வந்ததும் பலரும் தங்களிடம் இருப்பதை வைத்தே சந்தோஷமாக வாழ்ந்தது என்னை கவர்ந்தது. எனக்கும் தோட்டக்கலையில் ஈடுபடுவதும், குழந்தைகளுடன் பழகுவதும் பிடித்தமான செயலாக இருந்தது. தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தன்னார்வலராக சேவைகளை செய்ய ஆரம்பித்தேன்.

கொரோனாத் தொற்றுக் காலத்தின்போது குழந்தைகள் பலரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அந்த சமயத்தில் பெரிதாக எந்த சேவைகளிலும் ஈடுபட முடியவில்லை. அப்போது அதிக நேரம் கிடைத்த போது, என் தோழி ஒருவர் பொழுதுபோக்கிற்காக நறுமண சாம்பிராணிகளை தயாரிக்க முயற்சி செய்துகொண்டிருந்தார். அவற்றின் தயாரிப்புக்கு உதவுமாறு என்னிடம் கேட்டார். நான் ஃபார்மஸி படித்திருந்ததால் அதன் உதவியுடன் என்னால் அவரின் தயாரிப்புக்கு உதவ முடிந்தது. இது அவருக்கு ஒரு பொழுதுபோக்காக மட்டுமே இருந்தது. ஆனால் அதன்பின்னர் நான் நறுமண சாம்பிராணி தயாரிப்புகளை தொடர்ந்தேன்” என்றவர், ‘பிரேமா நேச்சர்’ (Prema Nature) எனும் ப்ராண்ட் உருவானதை பற்றி விளக்குகிறார்.

“ஊரடங்கு காலத்தில் கிடைக்கின்ற நேரத்தில் நான் எதையாவது செய்ய வேண்டுமென சாம்பிராணி, தூபம் போன்றவற்றை தயார் செய்து கொண்டிருந்தேன். இயற்கையான பொருட்களை கொண்டு ஆரோக்கியமான முறையில் தயார் செய்யப்படும் இந்தப் பொருட்கள், நல்ல நறுமணம் கொண்டவையாகவும் மன அமைதிக்கு உதவுவதாகவும் இருந்தன. எல்லோருடனும் என் தயாரிப்புகளை பகிர்ந்து கொண்டபோது நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஊரடங்கு முடிந்து எல்லாம் சகஜ நிலைக்கு மாறிய போதும் நான் இதனை நிறுத்தவில்லை. ஏதோவொன்றை தொடங்குவதற்கான ஆரம்பப்புள்ளி வைத்திருக்கிறேன். எனவே இதனை மேலும் தொடர வேண்டுமென்று நினைத்தேன். திருச்சியில் நான் வசிக்கும் நாகமங்கலம் கிராமத்தில் உள்ள பெண்கள் எனக்கு உதவ முன்வந்தனர். ஆரம்பத்தில் ஒரு பெண்ணுக்கு தயாரிப்பு பயிற்சியை கொடுத்தேன். அதனைத் தொடர்ந்து நாங்க தயாரித்த பொருட்களை விற்பனை வலைத்தளம் அமைத்து அதன் மூலம் விற்பனையை துவங்கினேன்.

ஆர்டர்கள் வரத்தொடங்கின. முறையாக ‘பிரேமா நேச்சர்’ எனும் ப்ராண்டை உருவாக்கினேன். கிராமத்தில் உள்ள பெண்களுக்கு பயிற்சி அளித்து அதன் மூலம் அவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்தேன். இதன் மூலம் அவர்களால் தங்களின் குடும்பத்திற்கு ஒரு வருமானம் ஈட்ட முடிகிறது.

கிராமப்பகுதிகளில் வேலை பார்க்கும் பெண்களுக்கு ஒரு நாள் கூலி மிகக் குறைவாகத்தான் கிடைக்கும். அதையே நான் பின்பற்ற விரும்பவில்லை. என்னிடம் பணியில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் நல்ல சம்பளம் வழங்கி வருகிறோம். தயாரிப்பு பொருட்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதால் அவர்களுக்கு நல்ல வருமானம் கொடுக்க முடிகிறது. இந்த வருமானம் அவர்களின் வீடு மற்றும் குழந்தைகளின் கல்வி செலவிற்கு மிகவும் உதவியாக இருக்கிறது. காரணம், கிராமத்தில் சில ஆண்கள் குடும்பப் பொருளாதாரத்தில் பங்கெடுக்காமல் இருப்பதால், பல பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.

அவர்களைப் போல் உள்ளவர்களுக்கு இந்த வருமானம் பெரிய உதவியாக இருக்கிறது. இது எனக்கு வெறும் தொழில் மட்டுமல்ல... மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இதை துவங்கினேன். இந்தப் பொருட்களை இயந்திரங்கள் மூலம் தயாரிக்க முடியும். ஆனால் பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இதனை கை முறையாக தயாரிக்கிறோம். பொருட்களின் தயாரிப்பு மட்டுமின்றி கணினி பயன்படுத்துவது, ஆர்டர்கள் எடுப்பது, மார்க்கெட்டிங் செய்வது, கணக்குகளை பராமரிப்பது போன்றவற்றையும் பெண்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை முழுமையாக இந்தத் தொழிலில் பங்காற்ற செய்கிறேன்.

என்னால் என் நாட்டிற்கு சென்று கை நிறைய சம்பாதிக்க முடியும். அதைக்காட்டிலும் இது போன்று பெண்களின் வளர்ச்சியில் பங்கெடுப்பதில் எனக்கு மன நிறைவு கொடுக்கிறது. இதனைத் தொடர்ந்து அவர்கள் வாழ்வில் முன்னேற மேலும் பல்வேறு வழிகளை ஏற்படுத்தித்தர விரும்புகிறேன்” என்றவர், தங்கள் தயாரிப்பு பொருட்களையும் அதன் நன்மைகள் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

“இப்போதெல்லாம், சாம்பிராணி, தூபம் போன்ற பொருட்கள் நறுமணத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. எங்களின் தயாரிப்பில் பல்வேறு மூலிகைப்பொருட்களை பயன்படுத்துவதால், நல்ல ஆற்றல் வெளிப்படுகிறது. இதன் நறுமணம் நம் மன நலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். இதில் உள்ள மருந்து பொருட்களின் நன்மைகள் ஆரம்பத்தில் எனக்குத் ெதரியாது. அதன் பிறகு அவற்றின் பலனை தெரிந்து கொண்டேன்.

தீர்த்தம், நெய், தேன், கற்பூரம், எஸ்ஸென்ஷியல் ஆயில், சூரிய ஒளியில் உலர்த்தப்பட்ட மாட்டுச் சாணம், வேதிப்பொருள் அல்லாத நிலக்கரி தூள், பென்சாயின் ஸ்டைராக்ஸ் ரெசின், ஹவன் சமகிரி போன்ற இயற்கை மூலப்பொருட்களால் ஆனது. எங்களது தயாரிப்பு பொருட்களை இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் மார்க்கெட் செய்கிறோம். இயற்கையான பொருட்களை கொண்டு ஆரோக்கியமான முறையில் தயாரிக்கப்படுவதால் இவற்றின் நன்மைகளை உணர்ந்தவர்கள் எங்களுக்கு முழு ஆதரவினை அளிக்கிறார்கள். இது போன்றே உதவி மனப்பான்மையுடன் மக்களுக்கு மேலும் பலவற்றை செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம்” என்றவர், தமிழ் பெண் ஒருவரை மணமுடித்து திருச்சியில் உள்ள நாகமங்கலம் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்