Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திறமைக்கு வறுமை தடையில்லை!

நன்றி குங்குமம் தோழி

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிறிய கிராமம்தான் தாதன்குளம். அங்கு பிறந்து வளர்ந்தவர் மாலதி. பசுமை நிரம்பிய தன் கிராமத்து மக்களுக்காக குறிப்பாக பெண்கள் மற்றும் மாற்றுத்

திறனாளிகளுக்காகவே ஒரு அமைப்பினை துவங்கி அவர்களின் வாழ்வில் வசந்தம் வீசி வருகிறார். தமிழகமெங்கும் உள்ள மாற்றுத்திறனாளிகளை விளையாட்டு வீரர்களாக மாற்றி ஒரு அடையாளமாக வாழ்ந்து வருகிறார். இவர் தன் வாழ்க்கையில் சந்தித்த பல தடைகளை கடந்து இவர்களுக்கு பயிற்சி மட்டுமில்லாமல் அவர்களை விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடச் செய்து, தனித்துவ அடையாளத்தை பெற்றுத் தந்து வருகிறார்.

‘‘பிறந்து வளர்ந்தது, படிச்சது தாதன்குளம். கல்லூரிப் படிப்பு முடிச்சதும் வீட்டில் திருமணம் பேசி முடிச்சிட்டாங்க. என் கணவர் சிவில் என்ஜினியர். திருமணம், குழந்தைகள், வீடு என்றானது என்னுடைய வாழ்க்கை. ஆனால் என் வாழ்க்கையும் எல்லா பெண்களை போல் பிடிச்சதை செய்ய முடியாமல் ேபாய்விடுமோ என்று பயந்தேன். என் மனநிலையை புரிந்து கொண்ட என் கணவர் எனக்கு எல்லா விஷயத்திலும் உறுதுணையாக இருக்க ஆரம்பித்தார். நான் இப்போது ஒரு பயிற்சியாளராக மாற அவர்தான் முக்கிய காரணம். என்னை விளையாடச் சொல்லி உற்சாகப்படுத்தியதும் அவர்தான்’’ என்றவர், திருமணத்திற்குப் பிறகு தனக்குப் பிடித்த விளையாட்டுத்துறையில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.

‘‘எனக்கு சின்ன வயசில் இருந்தே விளையாட்டு மற்றும் சமூகத்திற்கு ஏதாவது சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. என் கணவரிடம் சொன்ன போது அவர் மறுப்பேதும் சொல்லாமல் அதற்கு சம்மதித்தார். முதலில் இறகுப் பந்து விளையாட கற்றுக் கொண்டேன். மாவட்ட அளவில் போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகளும் பெற்றேன். அந்த சமயத்தில்தான் மாற்றுத்திறனாளிகளுக்கு என பாரா விளையாட்டுப் போட்டிகள் இருப்பதைப் பற்றி தெரிந்துகொண்டேன்.

எனக்குள் இருந்த சேவை மனப்பான்மை முழித்துக் கொள்ள, நான் அவர்களுக்கு உதவ நினைத்தேன். அவர்களின் மென்டாராக மாறினேன். அவர்களை போல் உள்ளவர்களுக்கு விளையாட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அவர்களின் உடல் ஒத்துழைக்குமா என்ற சந்தேகம் இருக்கும். அவர்களாலும் முடியும் என்ற விழிப்புணர்வினை அவர்கள் மனதில் ஏற்படுத்தினேன். அவர்களால் நின்று கொண்டு விளையாட முடியாது என்பதால் வாலிபால், கூடைப்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டினை வீல் சேரில் உட்கார்ந்து விளையாடலாம்.

கடந்த பத்தாண்டுகளாக ஓய்வின்றி பாரா விளையாட்டு வீரர்களுக்கான ஒரு அடையாளம் ஏற்படுத்தி தரவேண்டும் என்று பல மாவட்டங்களுக்கு சென்று விளையாட்டுத் துறையில் விருப்பம் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். அதன் பிறகு அவர்களுக்கு நாமே பயிற்சி அளித்தால் என்னவென்று தோன்றியது. ‘தமிழ்நாடு வீல்சேர் கிரிக்கெட் அசோசியேஷன்’ என்ற பெயரில் பயிற்சி மையம் ஒன்றை துவங்கி அதில் மாற்றுத்திறனாளிகள் மட்டுமில்லாமல், பொருளாதார பின்னணியில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கும் பயிற்சியினை அளிக்க ஆரம்பித்தேன், குறிப்பாக பெண்களுக்கு.

பயிற்சிக்கு வருபவர்களுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் அவர்களின் போட்டிக்கான நிதி திரட்டுவது முதல் அனைத்தும் மையத்தின் சார்பாக செய்து வந்தேன்’’ என்று கூறும் மாலதி, தூத்துக்குடி மாவட்ட மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணிப் பொறுப்பாளர் மற்றும் வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறார். இவரது முயற்சியால் பல்லாயிரக்கணக்கான கிராமப்புறப் பெண்கள் விளையாட்டுத் துறையில் தங்களை ஈடுபடுத்தி வருகிறார்கள்.

‘‘என்னைப் பொறுத்தவரை திறமைக்கு வறுமை ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதுதான். அதனால்தான் மாற்றுத்திறனாளிகள் மட்டுமில்லாமல் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் பெண்களுக்கும் நாங்க நிதி உதவி செய்து அவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். ஒட்டப்பிடாரம் என்ற கிராமத்தில் சைக்கிளிங் போட்டிக்காக மாநில அளவில் எங்களிடம் பயிற்சி பெற்ற ஒரு பெண்ணிற்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்து அவளை சர்வதேச அளவில் போட்டியில் பங்கு பெற உதவினோம். இப்போது அந்தப் பெண் மட்டுமில்லாமல் அவளின் தங்கையும் சர்வதேச அளவிலான போட்டியில் பங்கு பெற்று வருகிறார்கள்.

எங்களின் பயிற்சி மையத்திற்கு என் நண்பர்கள் பெரும்பாலும் நிதியுதவி செய்து வருகிறார்கள். மேலும் எங்களிடம் பயிற்சி பெறுபவர்களுக்கும் வேலை வாய்ப்பினையும் தெரிந்தவர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் ஏற்படுத்தி தருகிறோம். பல கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பினை கொடுக்க முன் வருகிறார்கள். அந்த வாய்ப்பினை நாங்க இவர்களுக்காக பயன்படுத்திக் கொள்கிறோம்.

தூத்துக்குடி மட்டுமில்லாமல் தமிழகம் முழுதும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கு எங்களின் பயிற்சி மையம் மூலம் என்னால் முடிந்த உதவியினை செய்து தருகிறேன். அதில் தமிழக வீல்சேர் கிரிக்கெட் அணியினர் வீல்சேர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றனர். தேசிய அளவில் நடைபெற்ற வீல்சேர் வால் வீச்சுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றார் எங்க மாணவரான ஜிக்னேஷ். அதே போல் ஷோபனா என்பவர் தேசிய அளவில் நடைபெற்ற வீல்சேர் இறகுப் பந்து போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றார். இவர்கள் பல சாதனைகள் செய்தாலும், பல தடைகளை கடந்து தான் அந்த நிலைக்கு செல்ல வேண்டி இருக்கிறது.

வெளி இடங்களுக்கு பயணிப்பது சிரமமாக இருக்கும். மேலும் வெளிநாட்டிற்கு செல்லும் போது அதற்கான விமானக் கட்டணங்கள், பயணச் செலவுகள் அனைத்தும் சவாலாக இருக்கும். அதையெல்லாம் சமாளித்துதான் அவர்களுக்கு என ஒரு அடையாளத்தினை ஏற்படுத்தி வருகிறோம். எதிர்கால திட்டம் நிறைய இருக்கு. மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான வசதிகளை ஒருங்கிணைக்க தனி அமைப்பு ஒன்றை துவங்க வேண்டும். அதே போல் விளையாட்டில் ஆர்வமுள்ள பெண்களும் தங்களின் விருப்பத்தை நிறைவேற்ற முன் வரவேண்டும்’’ என்றார் மாலதி.

தொகுப்பு: திலகவதி