Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சுனிதா வில்லியம்ஸ் திக்... திக்... நிமிடங்கள்!

நன்றி குங்குமம் தோழி

விண்ணில் இருந்து மண்ணுக்கு... அந்த ராக்கெட் நுனி பற்றி எரிந்து வளி மண்டலத்தை தொட்டபோது நமக்குள்ளும் பயம் பற்றியது. இறுதியில் கேப்சூலை டால்பின்கள் சுற்றிய பொழுது நமது மனங்கள் நெகிழ்ந்து போனது. ஆங்கிலப் படத்திற்கு இணையான காட்சிகளோடு, உலகமே திக்... திக் என பார்த்துக்கொண்டிருந்த விண்கலத்தில் வந்திறங்கியது நான்கு உயிர்கள். இன்னும் ஏழு பேர் ஐஎஸ்எஸ் எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கின்றனர். இது ஒரு அறிவியல் நிகழ்வுதான். ஆனால் இதை ஏன் சாதாரணமாக நம்மால் கடந்து போக முடியவில்லை?

விண்ணில் என்ன நடந்தது..?

கடந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், நிக் ஹேக்கூ, அலெக்ஸாண்டர் கேர்புனோவ் என நான்கு விண்வெளி வீரர்கள் மிஷன் க்ரூ 9 என்கிற அடைமொழியோடு, விண்வெளி ஆய்வு மையத்திற்கு 10 நாட்கள் பயணம் சென்றனர். எட்டே நாட்களில் பூமிக்குத் திரும்ப வேண்டியவர்கள், ஜூன் முதல் மார்ச் வரை 9 மாதங்களுக்கு மேலாக திரும்ப வழியின்றி விண்வெளியில் சிக்கிக்கொண்டனர். காரணம், இவர்கள் சென்ற விண்கலம் பத்திரமாக இவர்களை அழைத்துவரும் தன்மையை இழந்தது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு இவர்களை மீட்கும் பொறுப்பை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க்கிடம் ஒப்படைக்க, நாசாவுடன் எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் இணைந்து ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-10 என்கிற மீட்பு விண்கலத்தை அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கடந்த 13ம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் புறப்படத் தயாரான நிலையில், கடைசி நேரத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில்தான், அமெரிக்காவின் நாசாவைச் சேர்ந்த இருவர், ஜப்பான் நாட்டின் ஜாக்ஸாவை சேர்ந்த ஒருவர், ரஷ்யாவின் ராஸ்கோஸ்மாஸை சேர்ந்த ஒருவர் என நால்வர் கொண்ட புதிய குழுவுடன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் விண்ணில் சீறிப்பாய, சர்வதேச விண்வெளி ஆய்வு உலகில் ஒரு அழியாத முத்திரை பதித்து சுனிதா வில்லியம்ஸ் உட்பட அவரோடு இருந்த நால்வர் குழுவை மீட்டு பூமிக்கு கொண்டு வந்தது.

யார் இந்த சுனிதா..?

ஓஹியோவில் உள்ள யூக்லிடில், இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர். தீபக் பாண்ட்யா மற்றும் ஃபோனி பாண்ட்யா இணையருக்கு சுனிதா பாண்ட்யா செப்டம்பர் 19, 1965ல் கடைக்குட்டி பெண்ணாய் பிறந்தவர். சுனிதாவின் தந்தையின் குடும்பம் குஜராத் மாநிலம், அஹமதாபாத்தைச் சேர்ந்தது. தாயின் குடும்பம் ஸ்லோவேனியா நாட்டைச் சேர்ந்தது. இந்த தம்பதியருக்கு மூன்று குழந்தைகள். சுனிதா, மாசசூசெட்ஸின் நீதம் நகரில் வளர்ந்தார்.

வெட்னரி மருத்துவராக ஆக நினைத்து, விண்வெளி வீராங்கனையாக மாறிய சுனிதாவின் வெற்றிப் பயணம் மிக நீண்டது.நீதம் நகரில் பள்ளிப் படிப்பை முடித்தவர், தன் 11 வயதில் இருந்தே மன வலிமை மிக்க பெண்ணாக மிளிர்ந்தார் என, மகள் சுனிதாவின் நினைவுகளை ஊடகத்திடம் பகிர்ந்திருக்கிறார் அவரின் தாயார். தனது 20 வயதில் டெஸ்ட் பைலட் ஸ்கூலில் இணைய சுனிதா விண்ணப்பிக்க, அங்கிருந்த அதிகாரி ஒருவர், சுனிதாவை நோக்கி நீயெல்லாம் ஆஸ்ட்ரோநெட் ஆகப் போகிறாயா என்பது மாதிரியான தொனியில் ஏளனப்படுத்தி சிரிக்க, சுனிதாவின் வாழ்வில் அந்த நிகழ்வு திருப்புமுனையாக இருந்திருக்கிறது.

அந்த நிகழ்வை அடிக்கடி தனது மூளைக்குள் ஓட்டிப் பார்த்த சுனிதா, அமெரிக்க கடற்படை அகாடமியில் இணைந்து, இயற்பியல், அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அங்குதான் தனது கணவரான மைக்கேல் வில்லியம்ஸை சந்தித்து, தொடக்கத்தில் இருவரும் நண்பர்களாகப் பழக ஆரம்பித்தனர்.

1987ம் ஆண்டு யு எஸ் நேவியில் பைலட்டாக வாழ்க்கையை தொடங்கிய சுனிதா, 1989ல் ஹெலிகாப்டர் பைலட்டாகவும் பணியாற்றி இருக்கிறார். அப்போது சர்வதேச விண்வெளி மையத்தின் அறிவியல் ஆராய்ச்சிகளிலும், மிஷன் ஆப்ரேஷன்களிலும் தொடர்ந்து பங்கேற்றவர், 30க்கும் மேற்பட்ட வெவ்வேறு விமானங்களில் 3000க்கும் அதிகமான மணிகள் பயணித்து தனது பயணங்களை பதிவு செய்தார். இந்த நிலையில் சுனிதா ஃபுளோரிடா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் இணைந்து பொறியியல் மேலாண்மையில் முதுகலைப் பட்டமும் பெற்றார். தானும் ஒரு விண்வெளி வீராங்கனையாக மாற வேண்டும் என்கிற ஆசை சுனிதாவுக்குள் துளிர்விட, 1998ல் நாசா விண்வெளி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பிறகு சர்வதேச விண்வெளி நிலையத் துணைத் தலைவராகவும், பின்னர் தலைவராகவும் பணியமர்த்தப்பட்டார் சுனிதா.

முதல் விண்வெளிப் பயணத்தை சுனிதா மேற்கொண்ட போது, 192 நாட்கள் அங்கேயே தங்கியிருந்து பூமிக்கு திரும்பினார்.​​ விண்வெளி நடைப்பயண நேர பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் சுனிதா, ஒன்பது விண்வெளி நடைப்பயணங்களை மேற்கொண்டு, மொத்தம் 62 மணி நேரம், 6 நிமிடங்கள் விண்வெளியில் நடந்து, உலக சாதனை நிகழ்த்தியவர். கூடுதலாக விண்வெளியில் ரன்னிங், சைக்கிளிங், ஸ்விம்மிங் என டிரையத்தலானும் நிகழ்த்தி இருக்கிறார். விண்வெளியில் அதிக நாள் தங்கி ஆய்வு செய்த வீராங்கனை என்கின்ற பெருமையோடு, சூரியனை தொடுகிற மாதிரியான புகைப்படத்தையும் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பதிவு செய்த சுனிதா, நான்குவிதமான ஸ்பேஸ் க்ராஃப்டில் பயணித்த அனுபவத்தையும் பெற்றிருக்கிறார்.சுனிதா பாண்ட்யா-மைக்கேல் ஜே.வில்லியம்ஸ் காதல்...

கடற்படை அகாடமியின் ராணுவத்தில் இருந்த போது மைக்கேல் ஜே.வில்லியம்ஸை சந்தித்திருக்கிறார் சுனிதா. வில்லியம்ஸ் அப்போது பைலட்டாக பணியில் இருந்திருக்கிறார்.

இருவருக்குமே விமானத்தில் பறப்பது பிடித்தமானதாக இருக்க, ஆரம்பத்தில் நட்பாகி, பிறகு காதலாகி, பின்னாளில் வாழ்நாள் முழுமைக்குமான இணையராக இணைந்தனர். இந்த தம்பதியருக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் நிறைவுற்ற போதும் குழந்தைகள் கிடையாது. சுனிதா வில்லியம்ஸின் விண்வெளிப் பயணத்தில் அவரின் குடும்பம் எப்போதும் சுனிதாவுக்கு துணையாகவும், தூணாகவும் செயல்பட, தனது மனைவி குறித்து ஊடகத்திடம் மைக்கேல் ஜே.வில்லியம்ஸ் பேசும்போது, விண்வெளிதான் சுனிதாவின் ‘மகிழ்ச்சியான இடம்’ எனப் பகிர்ந்திருக்கிறார்.

‘ஐயோ அம்மா’ என அலறாமல், வார்த்தைகளை வெளிப்படுத்தி புலம்பாமல், தனக்கு மகிழ்ச்சி தரும் இடத்தில் காத்திருத்தல் எத்தனை அழகானது. ஒரு காத்திருப்பு அழகாக முடிந்த அந்த தருணம்தான், மன உறுதி வெளிப்படும் இடம் என சுனிதா வில்லியம்ஸ் நமக்கு சொல்லாமல் சொல்லும் உளவியல் பாடமே இது நமக்கு. ஆயிரம் அறிவியல் கண்டுபிடிப்புகள் நடந்தாலும், அவை மனித உயிரைக் காப்பாற்ற மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். உயிரை எடுக்க கோடி கோடியாக பயன்படுத்தும் பொழுது அதில் பெருமையில்லைதான். போரில் ஜெயிப்பதல்ல வீரம். மனித உயிர்களை காப்பதே வீரம். அதுதானே நிஜ வீரம். அதனால்தான் அவர்களை விண்வெளி வீரர்கள் என்கிறோம்.வாழ்த்துகள் சுனிதா. உங்களுடைய மகிழ்ச்சியான இடம் மீண்டும் வெற்றிப் பயணமாக அமையட்டும்.

மீட்புக்கு சீறி பாய்ந்த அடேங்கப்பா நால்வர் டீம்…

1. கமாண்டர் ஆனி மெக்லென்(Anne McClain). இவர் நாசா விண்வெளி வீராங்கனை. யுஎஸ் ஆர்மி கர்னெலான இவருக்கு பைலட் எக்ஸ்பீரியன்ஸ் உண்டு. இரண்டு ஸ்பேஸ் வாக்கினை ஏற்கனவே முடித்தவர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் 204 நாட்கள் இருந்த அனுபவம் இவருக்கு உண்டு.

2. நிக்கோல் அயர்ஸ் (Nichole Ayers). யுஎஸ் ஏர்போர்ஸ் மேஜரான இவரும் நாசா விண்வெளி வீராங்கனை ஆவார்.

3. டக்குயா ஒனிஸி (Takuya Onisi). இவர் ஜப்பான் நாட்டு விண்வெளி வீரர். மிஸன் ஸ்பெஷலிஸ்டான இவரின் இரண்டாவது மிஷன் இது. 113 நாள் விண்வெளியில் இருந்த அனுபவம் இவருக்கு இருக்கிறது.

4. க்ரில் பெஸ்கோவ் (Kirill Peskov). ரஷ்யாவின் ரோஸ்கோமோட் விண்வெளி வீரரான இவர், போயிங் ஏர்க்ராஃப்டின் கோ பைலட். இவருக்கு இது முதல் சர்வதேச விண்வெளிப் பயணமாக இருக்கிறது

தொகுப்பு: மணிமகள்