நன்றி குங்குமம் தோழி
இன்னர் வீல் கிளப்... 100 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள ரோட்டரி கிளப்பின் தொடர்புடைய சர்வதேச அளவில் இயங்கி வரும் அமைப்பு. இதில் முற்றிலும் பெண்கள் குழுக்களாக இணைந்து சமூகத்திற்கான பல நலத்திட்டங்களை செய்து வருகிறார்கள். அதில் இன்னர்வீல் கிளப் ஆஃப் மெட்ராஸ் அமைப்பில் சென்னையில் மட்டும் 80க்கும் மேற்பட்ட கிளப்கள் உள்ளன. இதில் சென்னை சென்ட்ரல் பகுதியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள லதா பாலமுகுந்தன் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விளக்குகிறார்.
“பெண்கள் குழுக்களாக இணைந்து ‘கிவ் பேக் சொசைட்டி’ எனும் முறையில் சமூகத்தில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துவதும், அடிப்படைத் தேவைகள் கிடைக்காத மக்களுக்கு உதவி செய்வதுமாகத்தான் இந்த அமைப்பு முக்கியமாக செயல்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் 80க்கும் மேற்பட்ட கிளப்கள் உள்ளன. எங்க கிளப்பில் 64 உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு செயலாற்றுவார்கள். இந்தாண்டின் 37வது தலைவராக நான் பொறுப்பேற்றுள்ளேன்.
இந்த அமைப்பு மூலமாக சென்னையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம். ஒரு தனிநபருக்கு அதிகம் கவனம் செலுத்தாமல், ஒரு சமூகமாக வாழும் மக்களுக்கு உதவுவதில் அதிக கவனம் செலுத்துகிறோம். கழிப்பறை இல்லாத ஒரு பள்ளிக்கு அதை கட்டித்தரும் போது அங்குள்ள மொத்த மாணவர்களுக்கும் பயன்படுகிறது. இது போன்ற உதவிகளால்தான் சிறந்த மாற்றத்தை கொண்டு வரமுடியும். உதாரணமாக ஒரு நபரிடம் உள்ள 1000 ரூபாய் பெரிய மாற்றத்தினை கொண்டு வராது.
ஆனால், குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் 1000 ரூபாய் பணம் வழங்கினால் அது ஒரு பெரிய தொகையாக வரும். அது மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய உதவிகளை செய்ய உதவும். இந்த வகையில்தான் கிளப்பில் உள்ள பெண்கள் குழுவாக இணைந்து எங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம்’’ என்றவர், குழுவாக மேற்கொண்ட உதவி திட்டங்கள் குறித்து விவரித்தார்.
‘‘நாங்க குழுவாக பல வேலைகளில் ஈடுபட்டுள்ளோம். அதில் முக்கியமாக குறிப்பிட வேண்டும் என்றால், அடையார் மருத்துவமனையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை அமைத்தோம். அதனைத் தொடர்ந்து தேனாம்பேட்டையில் உள்ள மாநகராட்சி பள்ளியினை புதுப்பிக்கும் பணிகளில் ஈடுபட்டோம். மேலும் சில பள்ளிகளில் திறன் மேம்பாட்டு திட்டங்கள், மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டிகளை வழங்குவது போன்றவற்றை செய்து வருகிறோம்.
புற்றுநோய் பாதிப்பு காரணமாக சிறுவர்களால் படிப்பினை தொடர முடியாமல் இடைநிறுத்தம் செய்திருப்பார்கள். அவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் ஓவியம் வரைதல் போன்ற கலை சார்ந்த செயல்பாடுகளை கற்றுத்தருவார்கள். அவர்களுக்கு பயன்படும் வகையில் ஸ்டேஷனரி பொருட்களை வழங்குகிறோம். கண் பார்வை பிரச்னையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு சிகிச்சைக்கு தேவையான நிதி உதவியை அளிக்கிறோம். குழந்தைகள் மட்டுமல்லாது, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள, பார்வைக் கோளாறு உள்ள வயதானவர்களின் சிகிச்சைகளுக்கு உதவுகிறோம். குறிப்பாக கேட்டராக்ட் அறுவை சிகிச்சைக்கான நிதிக்கு பங்களித்து வருகிறோம்.
இதன் மூலம் ஒரே சமயத்தில் இரு வேறு நிலையில் உள்ள மக்களை ஆதரிக்க முடியும். உதாரணமாக திருநங்கைகள் நடத்தும் ஒரு பேக்கரி தயாரிக்கும் பிஸ்கெட்டுகளை வாங்கி, அடையார் புற்றுநோய் மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு வழங்குகிறோம். இதனால் திருநர் சமூகத்தினரை ஆதரிக்க முடிந்தது. அதே சமயம் சிகிச்சையில் உள்ளவர்களுக்கு உணவளிக்கவும் முடிந்தது. ‘மழலை ஒலி’ எனும் நிகழ்வின் மூலம், ஆண்டுதோறும் தீபாவளியன்று பெற்றோர்களை இழந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள குழந்தைகளை வெளியில் அழைத்து சென்று பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்தி, தீபாவளியை இணைந்து கொண்டாடி, உணவளித்து அவர்களை மகிழ்விப்போம். தொடர்ந்து 25 ஆண்டுகளாக இன்னர் வீல் கிளப் சார்பாக இதனை செய்து வருகிறோம். சென்னையில் சில இடங்களில் சுகாதாரமில்லாத நீர்நிலைகளை சரி செய்துள்ளோம்” என்றவர் உதவி மனப்பான்மை குறித்து பகிர்ந்து கொண்டார்.
“சில நேரங்களில் உதவி என்பது பணமாக மட்டுமே இருக்காது. ஒருவரை மகிழ்விப்பதும் உதவிதான். நான் நன்றாக பாடுவேன்... முதியோர் இல்லத்திற்கு சென்று அவர்கள் விரும்பும் பாடல்களை பாடி சந்ேதாஷப்படுத்தினேன். அப்போது அங்கிருந்த பாட்டி ஒருவர் என்னிடம் இருந்த மைக்கினை வாங்கி அருமையாக பாடினார். இது சாதாரண நிகழ்வுதான் என்றாலும், அவர்களுக்குள் இருக்கும் சந்தோஷத்தை வெளிக்கொண்டுவர முடிந்தது. இந்த வருடம் தலைவராக என்ன உதவிகள் செய்யப்போகிறோம் என்பதைத் தாண்டி, சமூகத்தில் என்ன மாற்றங்களை நடைமுறைக்கு கொண்டுவர முடியும் என்ற சிந்தனைதான் அதிகமாக உள்ளது.
அதற்காக ஒவ்வொருவரும் முற்படுகிறோம். இந்த மாற்றங்களை குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம் கொண்டு வரவேண்டும் என்பதுதான் என் முக்கிய நோக்கம். முக்கியமாக நம் நாட்டை தூய்மையாக வைத்திருப்பது. நம்மைச் சுற்றி தூய்மையாக வைத்திருந்தால் நம் தெரு, ஊர், மாவட்டம், மாநிலம் என நம் நாட்டையே தூய்மையாக வைத்திருக்கலாம். இதுகுறித்து இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இருக்கிறேன். நாங்க பெண்கள் குழுக்களாக இணைந்து மேலும் பல திட்டங்களை செயல்படுத்த இருக்கிறோம்’’ என்கிறார் லதா.
தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்