நன்றி குங்குமம் தோழி
வயது என்பது வெறும் எண்ணிக்கைதான். சாதனைக்கும் வயதுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது அடிக்கடி நிரூபிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலகின் சாதனை படைத்த 50 வயதுக்கு மேற்பட்ட பிரபலங்களின் பட்டியலை அமெரிக்க வர்த்தக நாளிதழான ஃபோர்ப்ஸ் சமீபத்தில் வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ஊர்மிளா ஆஷர், கிரண் மஜும்தார் ஷா, ஷீலா படேல் என்ற மூன்று பெண்கள் இடம்பிடித்துள்ளனர்.
அரசியல், சட்டம், அறிவியல், தொழில் நுட்பம், தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் நாளிதழ் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண் பிரபலங்களின் பட்டியலையும் சமீபத்தில் வெளியிட்டது.
ஊர்மிளா ஆஷர்
பட்டியலில் இடம்பெற்ற, குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட ஊர்மிளா ஆஷர் மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் வசித்து வருகிறார். தற்போது அவரின் வயது 80. இந்த வயதிலும் சமையல் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு விருதுகளை குவித்து வருகிறார் இவர். தனது மூன்று குழந்தைகளின் மரணம் உட்பட, கற்பனைக்கு எட்டாத தனிப்பட்ட இழப்பை சந்தித்த நிலையில், தனது 75ம் வயதில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு, பல்வேறு இன்னல்களைச் சந்தித்து மீண்டவர் ஊர்மிளா.
ஊறுகாய் மற்றும் தின்பண்டத் தயாரிப்பில் தொடங்கி, தனது 40 ஆண்டுகால சமையல் அனுபவத்துடன், மற்றவர்களை ஊக்குவிக்கும் ஓர் தளமாக, தனது
சமையல் ஆர்வத்தை மாற்றி, உணவுத் தயாரிப்புத் துறையில் தன் வணிகத்தை விரிவுபடுத்தியவர்.
கிரண் மஜும்தார் ஷா
முதல் தலைமுறை தொழில்முனைவோராகக் கொண்டாடப்படும், 71 வயது கிரண் மஜும்தார் ஷா, கர்நாடக தலைநகர் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பயோகான் நிறுவனத் தலைவர். 3.6 பில்லியன் டாலர் சொத்திற்கு அதிபதியான கிரண், நாட்டின் மிகச் சிறந்த பெண் தொழில்முனைவோரில் ஒருவராக அனைவரின் கவனத்தையும் பெறுகிறார். உலக அளவில் மலிவு விலை மருந்துகளை விநியோகிக்கும் நிறுவனத்தை, உயிரி மருந்து ஆற்றல் மையமாக மாற்றி சாதனை படைத்து முன்னணியில் இருக்கிறார்.
சிறந்த சிந்தனையாளர். அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட நன்கொடையாளர். பெங்களூருவை முக்கியத் தளமாக கொண்ட புற்றுநோய் மையம் மற்றும் நகர உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி வழங்கி, உலக அளவில் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த தன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியவர்.
ஷீலா படேல்
மகாராஷ்டிர தலைநகர் மும்பையை சேர்ந்த 72 வயது சமூக ஆர்வலர் மற்றும் கல்வியாளர் ஷீலா படேல். 1984ல் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை தொடங்கி ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த செயலாற்றி வருபவர். இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் சுமார் 33க்கும் மேற்பட்ட நாடுகளில், ஷீலா படேலின் தன்னார்வத் தொண்டு அமைப்பு, சர்வதேச குடிசை வாழ் மக்களுக்கான சேவைகளை செய்து வருகிறது. இவரின் முயற்சியால் ஏழை குடும்பங்களுக்கு 11 அடுக்குமாடி குடியிருப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
தொகுப்பு: மணிமகள்