Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நான் படித்திருப்பது Doctor of Pharmacy

நன்றி குங்குமம் தோழி

சின்ன வயதில் இருந்தே பெரிய பொசிஷனுக்குப் போகணும் என்கிற கனவு இருந்தது எனப் பேச ஆரம்பித்த டாக்டர் அம்பை, மருந்துகளை பரிந்துரைக்கும் PharmD (Doctor of Pharmacy) படிப்பை 6 ஆண்டுகள் படித்து முடித்து, மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் Medical Scientific Liaison Officer பணியில் வெற்றிகரமாக வலம் வருகிறார். PharmD படிப்பு மற்றும் அதற்கான வேலை வாய்ப்பு குறித்தெல்லாம் விரிவாக அவரிடம் பேசியதில்...

‘‘பத்தாம் வகுப்பு வரை நான் விரும்பிப் படித்தது அறிவியல் பாடத்தைதான். அதையே இன்னும் ஆழமாகப் படிக்கலாம் என முடிவு செய்து, +2வில் முக்கியப் பாடமாக எடுத்தது அறிவியல் பிரிவைத்தான். கூடவே மருத்துவக் கனவும் இருந்தது. நீட் தேர்வில் மதிப்பெண் குறையவே, எனது மருத்துவக் கனவை சிதைக்காமல், மருத்துவம் சார்ந்து வேறென்ன படிப்புகள் இருக்கெனத் தேடத் தொடங்கியதில் PharmD படிப்பு குறித்து தெரியவந்தது.

இது மருந்து தொடர்பாக 6 ஆண்டுகளும் செயல்முறை கல்வியோடு இணைந்தே படிக்கும் படிப்பு என்பதால், மருத்துவமனையோடு இணைந்த கல்லூரிகளை தேடியதில், கோவை இராமகிருஷ்ணா கல்லூரியில் வாய்ப்புக் கிடைத்தது’’ என்கிற டாக்டர் அம்பையிடத்தில், PharmD படித்தவர்களும் தங்கள் பெயருக்கு முன்னால் டாக்டர் எனப் போட்டுக்கொள்ளலாமா என்ற கேள்வியை முன்வைத்ததில்..?

‘‘எம்.பி.பி.எஸ் படித்த ஒரு மருத்துவர் நோய் குறித்து முழுமையாகப் படித்தால், நாங்கள் நோய்க்கான மருந்து குறித்து 5 ஆண்டுகளும் முழுமையாகப் படிப்போம். 6வது ஆண்டில் இன்டன்ஷிப்

எங்களுக்கும் உண்டு. எம்.பி.பி.எஸ் படித்தவர்களைப் போலவே, நோயாளிகளோடு இணைந்து செயல்படுகிற நாங்களும் டாக்டர்தான்’’ எனப் புன்னகைத்தவர் மேலும் தொடர்ந்தார்.

‘‘எம்.பி.பி.எஸ் மாணவர்களைப் போலவே, முதலாம் ஆண்டில் நோய் அறிவது(diagnosis), நோய் எதனால் வந்தது, எப்படி உடலில் மாற்றம் பெறுகிறது, எது மாதிரியான அறிகுறிகளை அது வெளிக்காட்டுகிறது, என்ன நோயாக உருவாகிறது (pathophysiology) என்றெல்லாம் நாங்களும் படிப்போம். அப்படியே இரண்டாம் ஆண்டில் இருந்து மருந்து குறித்த முழுத்தகவல்களையும் படிக்கத் தொடங்குவதுடன், மனித உடலுக்குள் பயணிக்கும் மருந்து, உள்ளே நுழைந்ததும் எப்படி வேலை செய்கிறது, உடலில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதையும் சேர்த்து படிப்போம். சுருக்கமாய், குறிப்பிட்ட நோய்க்கான மருந்து இதுவென்று டாக்டர்களுக்கே மருந்தை பரிந்துரைப்பது PharmD துறைதான்.

நமது நாட்டைப் பொறுத்தவரை, ஆன்காலஜி, கார்டியாலஜி போன்ற முக்கியப் பிரிவுகளில் மட்டுமே PharmD மருத்துவர்கள், கிளினிக்கல் பார்மஷிஸ்டாக இருக்கிறார்கள். ஆனால் வெளிநாடுகளில், நோயாளியின் நோயை கண்டறிந்து, என்ன பாதிப்பு என்று மட்டுமே மருத்துவர்கள் எழுதி அட்டையை கொடுப்பார்கள். அவர்களுக்கான மருந்தை PharmD மருத்துவர்தான் பரிந்துரைப்பார்கள்’’ என்றவர், இது தவிர்த்து PharmD முடித்தவர்களுக்கு, மருத்துவத் துறையில் மிகப்பெரிய அளவிலான வேலை வாய்ப்புகள் ஏராளம் கொட்டிக் கிடக்கிறது என்கிறார்.

‘‘முக்கியமாக மருந்து உற்பத்தி நிறுவனங்கள் (Pharmaceutical Industry), மருந்து ஆராய்ச்சி (Pharmaceutical Researcher), மருந்து சோதனை (drug traial), மருந்து ஆலோசகர் (Drug Consultant), மருந்தாளுனர்(clinical Pharmacist) போன்ற பணிவாய்ப்புகளுடன், அமெரிக்கா, கனடா, யு.கே போன்ற பன்னாட்டு மருந்து நிறுவனங்களிலும்(MNC Pharma Companies) PharmD படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏராளம் இருக்கிறது’’ என்ற அம்பையிடம், அவர் பணி செய்கிற நிறுவனம் மற்றும் அவரின் பணி குறித்து கேள்வி எழுப்பியதில்..?

‘‘நான் பணி செய்கிற டிரக் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் பாயர்(BAYER). இதுவொரு பேட்டர்ன்ட் டிரக் தயாரிப்பு நிறுவனம். அதாவது, டிரக் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி (R&D) மூலம், முன்பிருந்ததைவிட மேம்பட்ட தீர்வை வழங்கக்கூடிய மருந்துகளை தயாரிக்கும் இன்னோவெடிவ் டிரக்ஸ் தயாரிப்பு நிறுவனம் இது.

ஒரு டிரக் சந்தைக்கு வருவதற்கு முன்பு, பலகட்ட ஆய்வுகள் மற்றும் கிளினிக்கல் ட்ரயல்ஸ் (Clinical Trials) செய்து முடிக்கப்பட்ட பிறகே மக்கள் பயன்பாட்டுக்கு வரும். புதிதாய் கண்டுபிடிக்கப்படுகிற மருந்துகளை பரிந்துரைக்க மட்டுமே, PharmD மெடிக்கல் புரொஃபஷனல்ஸ், மருத்துவர்களை நேரில் சந்திப்போம். இதில் எனது பணியென்பது, மெடிக்கல் டீமுக்கும், சயின்டிபிக் டீமுக்கும் இடையில் செய்கிற முக்கியமான வேலை.

அதாவது, ஒரு டிரக் அப்ரூவல் பெற்றவுடனே, எல்லா மருத்துவர்களும் அதனை மருந்துச்சீட்டில் எழுதிக் கொடுத்துவிட மாட்டார்கள். அதேபோல், குறிப்பிட் டிரக் குறித்த தகவல், எல்லா மருத்துவர்களையும் சென்றடைந்தும் இருக்காது. எனவே குவாலிட்டி அஸூயுரென்ஸ், குவாலிட்டி கன்ட்ரோல் தாண்டி என்னிடம் வருகிற புதிய டிரக்கின் மொத்த பயோடேட்டா மற்றும் அதன் கிளினிக்கல் ஸ்டெடி, எங்கள் நிறுவனம் குறித்தெல்லாம் புரோட்ஷர்ஸ் தயாரித்து, மெடிக்கல் கான்ஃப்ரென்ஸ் வழியாக, மருத்துவர்களுக்கு டிரக் குறித்த தகவல்களை விளக்கும் பிரெசன்டேஷன், இன்டர்நேஷனல் அளவில் பங்கேற்கும் மருத்துவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்வது, இவற்றுடன் புதிய மருந்து நோயாளிக்கு எப்படி வேலை செய்கிறது, அதன் குறை நிறை என்ன என்கிற அப்டேட்ஸ்களையும் மருத்துவர்களிடம் இருந்து பெற்று, நிறுவனத்திற்கும் அனுப்புகிற வேலையே என்னுடையது.

விரும்பிச் செய்தால் எந்த வேலையும் கஷ்டம் கிடையாது’’ என்கிற அம்பை, தான் செய்கிற நிறுவனத்தில் இருந்து, டாப் பெர்ஃபார்மர் விருதை மிகச் சமீபத்தில் வாங்கியிருப்பதை மகிழ்ச்சியோடு நம்மிடம் வெளிப்படுத்தியதுடன், எந்தவொரு நோயும் இறுதி நிலையை எட்டும் வரை விடாமல், நோயின் பாதிப்பை முதலிலே அறிந்து, அதற்கான மருந்துகளை சரியான முறையில் எடுக்க வேண்டும் என்ற அறிவுரையை வழங்குகிறார்.

மருந்து விற்பனைக் கடைகளை நேரடியாக அணுகி மருந்துகளை வாங்கும்போது, வாங்கிய மருந்தின் பெயர், அதன் ஜெனரிக் நேம், க்ளாஸ் ஆஃப் த டிரக், குறிப்பிட்ட டிரக் எப்படி வேலை செய்கிறது, என்ன மாதிரியான விளைவுகளை கொடுக்கும் போன்ற தகவல்களை கூகுள் செய்து பார்த்தாலே தெரிந்துவிடும். இதற்கென மெடிக்கல் வெப்சைட்ஸ் இணையத்தில் ஏராளம் இருக்கிறது’’ என்ற கூடுதல் தகவலையும் வழங்கி விடைபெற்றார்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்