Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கின்னஸ் சாதனையாளர் பட்டியலில் 19 வயது சிறுமி!

நன்றி குங்குமம் தோழி

பட்டய கணக்காளராக தேர்ச்சிப் பெறுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. இதற்கான தேர்வு மிகவும் கடினமானது. இதில் தேர்ச்சிப்பெற பல ஆண்டு பயிற்சி மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக தளராத முயற்சி அவசியம். அப்படிப்பட்ட தேர்வில் 19 வயதில் பட்டய கணக்காளராக தேர்ச்சிப் பெற்றிருக்கிறார் நந்தினி அகர்வால். மத்திய பிரதேசத்தை சேர்ந்த இவர் இளம் வயதில் பட்டயக் கணக்காளராகி உலக சாதனை படைத்தது மட்டுமில்லாமல், கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார்.

பொதுவாக 19 வயதில் கல்லூரியில் படிக்க விண்ணப்பிப்பார்கள். நந்தினி அகர்வால் பட்டய கணக்காளராக தேர்வாகியது குறித்து அவரே விளக்கம் அளித்தார். ‘‘நான் படிப்பில் படு சுட்டி. அதனால் பள்ளியில் எனக்கு டபுள் பிரமோஷன் கொடுத்தார்கள். அதன் பலனாக 2 வயது மூத்த அண்ணனுடன் சேர்ந்து படிக்க ஆரம்பித்தேன். என்னுடைய அண்ணனே வகுப்புத் தோழனாக மாறியது எனது விஷயத்தில் மட்டுமே நடந்திருக்கும்.

13 வயதில் 10ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றேன். 12ம் வகுப்பு தேர்வு எழுதும் போது எனக்கு 15 வயதுதான். அப்போது தீர்மானித்தேன் வயதில் குறைந்த பட்டய கணக்காளராக வேண்டும். கின்னஸ் சாதனை புரிய வேண்டும் என்று. ஆனால் அந்த பாதையில் பல சவால்களை சந்திக்க நேர்ந்தது. ‘சி.ஏ’ தேர்வுக்குத் தயார் செய்ய நானும் அண்ணனும் தில்லி சென்றோம். எனக்கு 16 வயது என்பதால், பயிற்சி அளிக்க பல நிறுவனங்கள் முன் வரவில்லை. இந்தச் சின்ன வயதில் ‘CA’ படிப்பிற்கான முதிர்ச்சி இருக்குமான்னு சந்தேகப்பட்டார்கள். அதனால் சேர்த்துக் கொள்ளவில்லை. கடைசியில் ‘பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூபெர்ஸ்’ நிறுவனம் பெரிய தயக்கத்திற்குப் பிறகுதான் எனக்கு பயிற்சி அளிக்க ஒப்புதல் சொன்னது.

என்னை ‘சி.ஏ’ தேர்வுக்கு தயார் செய்ததில் முக்கிய பங்கு எனது மூத்த சகோதரருக்கு உண்டு. அதிலுள்ள சிரமங்கள் என்னவென்று தெரிந்து கொண்டு என் அண்ணன்தான் கேள்விகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று வழிகாட்டினார். 365 நாளும் படிச்சேன். விடுமுறை நாட்கள் கூட ஓய்வு கிடையாது. மாதிரி தேர்வுகளை எழுதி அதன் மூலம் பயிற்சி பெற்றேன். ஆனால் மாதிரி தேர்வுகளில் நான் சில பாடங்களில் தேர்ச்சிப் பெறவில்லை.

அது எனக்கு அதிர்ச்சி அளித்தது. மற்ற பாடங்களிலும் நான் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. ராப்பகலாக படிச்சும் இந்த முடிவுகளை கண்டு நொறுங்கிப் போனோம். தேர்வுகளில் தேர்ச்சிப் பெறுவோமா என்ற பயம் ஒரு பக்கம் தொற்றிக் கொண்டது.

அதன் பிறகு என்னுடைய முயற்சியினை இரட்டிப்பாக்கினேன். ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு தவறு செய்த இடங்களை மாற்றிக்கொண்டோம். அதன் பிறகு நானும் அண்ணனும் ஒன்றாக தேர்வு எழுதினோம். தேர்வு முடிவு வெளியானபோது அகில இந்திய அளவில் நான் முதல் இடத்தைப் பிடித்தேன். அண்ணன் பத்தாம் ஸ்தானத்தைப் பிடித்திருந்தார். என்னுடைய 19 வயதில் இறுதித் தேர்வுகளில் அகில இந்திய அளவில் 800 மதிப்பெண்களுக்கு 614 மதிப்பெண்கள் பெற்று தேர்வானேன்.

இரண்டு வருடம் கழித்து கின்னஸ் நிறுவனம் எங்களை அணுகி மிகக் குறைந்த வயதில் ‘சி.ஏ’ தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருப்பதால், கின்னஸ் சாதனையாளராக அறிவிக்கிறோம் என்று மின்னஞ்சலை எனக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். அன்று முதல் ‘உலகின் இளைய பெண் பட்டய கணக்காளர்’ என்ற பெருமைக்கு சொந்தக்காரியானேன். தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் பங்குச் சந்தை முதலீடு குறித்த பொறுப்புகளை நிர்வகித்து வருகிறேன்’’ என்று கூறும் நந்தினி, தன் யுடியூப் சேனல் மூலம் CA படிப்பு மற்றும் தேர்வுகள் குறித்த குறிப்புகளை பகிர்ந்து வருகிறார்.

தொகுப்பு: கண்ணம்மா பாரதி