Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோர்ட்

நன்றி குங்குமம் தோழி

19 வயது சந்திரசேகர்(ஹர்ஷ ரோஷன்), 17 வயது ஜாபிலியும் (ஸ்ரீதேவி) காதலிக்கிறார்கள். இவர்களின் காதல் வீட்டிற்கு தெரிய வர ஜாபிலியுடைய மாமா மங்கபதி, சந்திரசேகர் மீது போக்சோ வழக்கு தொடுக்கிறார். தீர்ப்பு வர இரண்டு நாட்களே உள்ள நிலையில் வழக்கறிஞர் மோகன் ராவ் பற்றி கேள்விப்பட்டு அவரை வாதாட அழைப்பதற்கு செல்கிறார்கள் சந்திரசேகரின் குடும்பத்தினர்.

மோகன் ராவ் வழக்கை வாதாடாமல் விலகவே அவருடைய ஜூனியரான சூர்யா தேஜா(பிரியதர்ஷி புலிகொண்டா) தன் சீனியருக்கு தெரியாமல் வழக்கில் வாதாட செல்கிறார். இந்த வழக்கில் வென்றாரா சூர்யா தேஜா? வழக்கு என்னவானது? சந்திரசேகர் விடுதலையானாரா? அவருடைய காதல் என்னவானது? போக்சோ வழக்கில் இருக்கும் குறைகள் போன்றவற்றை எல்லாம் வெளிப்படையாக வாதாட அழைக்கிறது இந்த கோர்ட்.

கோர்ட் தெலுங்கு மொழியில் வெளியானது தற்போது ஓடிடியில் தமிழிலும் கிடைக்கிறது. 18 வயதிற்குட்பட்ட பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்காக 2012ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட போக்சோ சட்டத்தில் உள்ள குறைகளையும் விமர்சனங்களையும் மையப்படுத்தி கதை எழுதப்பட்டுள்ளது. போக்சோ சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுத்தாலும் அந்த சட்டத்தால் குற்றம் செய்யாதவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை காட்சிகளாக கொடுத்திருப்பது சிறப்பு. முக்கியமாக பெண்கள்தான் குடும்பத்தின் கெளரவம், உடலை மறைத்து உடை உடுத்த வேண்டும், யாரிடமும் பேசக்கூடாது, சாதி மறுப்பு காதல் கூடாது என நினைக்கும் கலாச்சார காவலர்கள் எப்படியெல்லாம் இந்த சட்டத்தை தவறான வழியில் பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்தான படம் தான் இது.

அறிமுக இயக்குநரான ராம் ஜெகதீஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். காதல் காட்சிகள், குடும்பத்தினரின் உணர்வுகள் வெளிப்படும் இடங்கள், கோர்ட்டில் நடக்கும் வாதங்கள் அனைத்தையும் கனகச்சிதமாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன். சந்திரசேகராக வரும் ஹர்ஷ ரோஷன், ஜாபிலியாக வரும் ஸ்ரீதேவி இருவரும் பதின் பருவ வயதிற்கே உரிய யதார்த்தமான வெள்ளந்தியான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். ஜாபிலியின் மாமா மங்கபதியாக வரும் சிவாஜி கண்களாலேயே மிரட்டுகிறார்.

வழக்கறிஞர்களாக வரும் ஹர்ஷா வர்தன், சாய்குமார் ஆகியோரின் நடிப்பும் கச்சிதம். படத்தின் நாயகன் சூர்யா தேஜா கதாப்பாத்திரத்திற்கான உணர்வு பூர்வ உழைப்பை கொடுத்து படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார். வாய்ப்புக்காக ஏங்குவதாகட்டும், தான் ஏமாற்றப்படுகிறோம் எனும் போது சோர்ந்து உட்கார்ந்து தன் நிலையை எண்ணி வருத்தப்படும் காட்சிகள், சளைக்காமல் கேள்விகளை கேட்டு வழக்கில் உள்ள ஒவ்வொரு முடிச்சையும் அவிழ்க்கும் போது வெளிப்படும் உறுதித்தன்மை என எல்லா இடங்களிலும் ஸ்கோர் செய்கிறார் பிரியதர்ஷி.

ஒரு வழக்கை வலுவில்லாமல் உருவாக்கி இருந்தாலும் அது பெரிதாக தெரியாமல் வழக்கறிஞர்களின் வாதங்கள் பார்த்துக் கொள்கின்றன. ‘இந்திய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது

5 கோடி வழக்குகள் அல்ல... அவை 5 கோடி அநீதிகள். சரி, தவறு என்பதை இறுதி செய்வதற்கு முன் முடிவிற்கான நிலைமை ஏன் வந்தது என கேள்விகளை தொடங்க வேண்டும்.’ ‘100 பேரில் 90 பேர் ஒன்றை செய்வார்கள் என்றால் அதிலேயே 10 பேர் செய்யமாட்டார்கள் என்ற ஸ்டேட்மென்டும் இருக்கு’ என்பது போன்ற வசனங்கள் கூர்மை.

ஒவ்வொரு சட்டங்கள் கொண்டு வரும் போதும் அதில் சம்பந்தமில்லாத ஆட்கள் எப்படி சிக்க வைக்கப்படுகிறார்கள் என்பது குறித்து படம் பேசுகிறது. பெண்கள் பாதுகாப்பிற்காக கொண்டு வரப்படும் சட்டங்களில் அவர்களுடைய சுதந்திரமும் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக போக்சோ சட்டத்தில் உள்ள சிக்கல்கள் குறித்து ஒரு காட்டமான விமர்சனத்தையும் அதில் பாதிக்கப்படுவோருக்கான நீதியையும் கோருகிறது இந்த கோர்ட்.

போக்சோ சட்டம், அதற்கான தண்டனைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து வழக்கறிஞர் ரஞ்சித் பகிர்கிறார். ‘‘போக்சோ சட்டம் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்குமே பொருந்தும். இந்த சட்டத்தின் படி 18 வயது பூர்த்தியடையாத ஒரு ஆண் அல்லது பெண் மீது நிகழ்த்தப்படும் குற்றத்தின் தன்மை பொறுத்து கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். போக்சோ வழக்கு ஒருவர் மேல் பதிந்தால், அவரை உடனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

இச்சட்டத்தின் பிரிவு 3ன் படி ஒருவரை பாலியல் வன்காடுமை செய்தால் 7 வருடங்களிலிருந்து ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம். அரசு அதிகாரிகள், ராணுவம் மற்றும் காவல்துறையை சார்ந்தவர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்தால், குறைந்தபட்சம் 10 ஆண்டுகளிலிருந்து ஆயுள் தண்டனை வரை கொடுக்கப்படும். பிரிவு 7 மற்றும் 11ன் படி தவறான நோக்கத்தோடு ஒரு குழந்தையை தொடுதல், சைகை செய்தல், ஆபாசமாக பேசுதல் போன்றவைகளும் குற்றம்தான். இதற்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் தொடங்கி குற்றத்தின் தன்மை பொறுத்து தண்டனை காலம் அதிகரிக்கலாம்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படம், பெயர், இருப்பிடம் குறித்து எந்த ஒரு தகவலும் பத்திரிகைகளில் வெளியிடக்கூடாது. FIR நகல் கூட ஆன்லைனில் பதிவேற்றம் செய்யக் கூடாது. காவல்துறை ஒரு பெண்ணை விசாரிக்கும் போது சாதாரண உடையில் இருக்க வேண்டும். அவர்கள் சொல்வதை பதிவு செய்ய வேண்டும். மற்ற நேரங்களில் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையங்களுக்கு அழைக்கக்கூடாது.

நீதிமன்றத்தில் விசாரிக்கும் போதும் பாதிக்கப்பட்ட சிறுமி, அவருடைய வழக்கறிஞர், நீதிபதி, எதிர் தரப்பு வழக்கறிஞர் மட்டுமே நீதிமன்றத்தில் இருக்க வேண்டும். பொதுவாக மற்ற வழக்குகளில் குற்றம் சுமத்துபவர் குற்றம் சாட்டப்பட்டவர் தவறு செய்துள்ளார் என்று நிரூபிக்க வேண்டும். ஆனால் போக்சோவில் குற்றம் சாட்டப்பட்டவர்தான் அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டும்.

இச்சட்டத்தில் பெண்களுக்கு ஆதாயம் இருந்தாலும் அதை தவறாக பயன்படுத்தவும் செய்கிறார்கள். ஒருவரை பழி வாங்கவும், தனக்கு பிடிக்காத ஒருவர் மீது குற்றம் சுமத்த, பொய்யாக போக்சோ வழக்கு பதிவு செய்கிறார்கள். குழந்தைகளை வற்புறுத்தி பொய்யான விஷயத்தை சொல்ல வைக்கிறார்கள். 18 வயது பூர்த்தியடையாத சிறுமி ஒருவரை காதலித்தாலும் அந்த சிறுமியை காதலன் தொடுவதும் தவறு என்கிறது இந்த சட்டம். சட்டத்தை பொறுத்தவரை 18 வயது பூர்த்தியடையாத ஒருவர் மனதளவில் பக்குவப்பட்டிருக்க மாட்டார். அவரை ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி விடுவார்கள் என்பதற்காகவே இச்சட்டம் அமலாக்கப்பட்டது. குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பிற்கானது இந்த போக்சோ சட்டம்’’ என்கிறார் ரஞ்சித்.

தொகுப்பு: மா.வினோத்குமார்