Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிறந்த சமையல் கலைஞர்!

உலகளவில் சிறந்து விளங்கும் சமையல் கலைஞர்களுக்கு வழங்கப்படும் மதிப்புமிக்க ஒரு விருது, ஜேம்ஸ் பியர்ட் விருது. சமையல் கலையின் ஆஸ்கர் என்று இந்த விருது வழங்கப்படுகிறது. நியூயார்க் மாகாணத்தின் சிறந்த சமையல் கலைஞர் என்று விஜய் குமாருக்கு ஜேம்ஸ் பியர்ட் விருது வழங்கப்பட்டிருக்கிறது. நியூயார்க்கில் உள்ள ‘செம்ம’ எனும் உணவகத்தில் தலைமை சமையல் கலைஞராக இருக்கிறார் விஜய். தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளைச் சமைத்து, நியூயார்க்கின் சிறந்த சமையல் கலைஞர் விருதைத் தட்டியிருக்கிறார் விஜய். மதுரைக்கு அருகிலுள்ள நத்தம் எனும் ஊரில் பிறந்து, வளர்ந்தவர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சமைக்கும் நத்தை பிரட்டலுக்கு அமெரிக்காவே அடிமை என்கின்றனர். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

டாப் 50 உணவகங்கள்

சமீபத்தில் உலகின் தலைசிறந்த 50 உணவகங்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது ஓர் ஆய்வு நிறுவனம். இதில் பெருவில் உள்ள ‘மைடோ’ என்ற உணவகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தை ஸ்பெயினில் உள்ள ‘அசடோர் எக்ஸ்பாரி’ என்ற உணவகம் பிடித்திருக்கிறது. ஐரோப்பாவிலேயே சிறந்த உணவகம் இதுதான். மூன்றாம் இடத்தை மெக்சிகோவில் உள்ள ‘குயிண்டோனில்’ என்ற உணவகம் பிடித்துள்ளது.

வட அமெரிக்காவிலேயே சிறந்த உணவகம் இதுதான். பாங்காங்கில் உள்ள ‘காக்கன்’ என்ற உணவகம், ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆசியாவிலேயே சிறந்த உணவகம் இதுதான். பாரிஸ், நியூயார்க், லண்டன், டோக்கியோ, சியோல், முனிச் போன்ற நகரங்களில் உள்ள உணவகங்களும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. ஆனால், இந்தியாவைச் சேர்ந்த உணவங்கள் இந்தப் பட்டியலில் இடம்பிடிக்கவில்லை என்பதும், 10 உணவகங்கள் முதல் முறையாக தலைசிறந்த 50 உணவகங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வைரல் பாட்டி

சமீபத்தில் இன்ஸ்டா பிரபலம் காசிஷ் சோனி பதிவிட்ட வீடியோ ஒன்றுதான் சமூக வலைத்தளங்களில் செம வைரல். இந்தூரில் உள்ள ஒரு தெருவோரத்தில் பாட்டி ஒருவர், சிறிய அளவில் ஓர் உணவகத்தை நடத்தி வருகிறார். இட்லி, சோலா பூரி, ஆலு பரோட்டா என விதவிதமான உணவுகள் கிடைப்பதால் அந்த உணவகத்தில் எப்போதுமே கூட்டம் அள்ளுகிறது. வெறும் வருமானத்துக்காக அந்த ஹோட்டலை பாட்டி நடத்தவில்லை.

மக்களுக்கு நல்ல உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அந்த ஹோட்டலை நடத்தி வருகிறார். ஆம்; ஒரு காலத்தில் பெண் ராணுவ அதிகாரியாக இருந்தவர்தான் அந்த பாட்டி. இப்போது அவருக்கு ஓய்வூதியம் வரும். அவரது வயது 79. இந்தப் பாட்டியைப் பற்றியதுதான் அந்த வீடியோ.

இந்தியாவின் முதல் டால்பி சினிமா

இன்றைய தேதியில் மிகச்சிறந்த திரையனுபவத்தைக் கொடுக்கக்கூடிய திரையரங்கம், டால்பி சினிமாதான். ஐமேக்ஸ் திரையரங்கங்களுக்குச் சவால் விடக்கூடிய திரையரங்கம் இது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மட்டுமே டால்பி சினிமா திரையரங்கம் இருக்கிறது.

இரண்டு லேசர் 4கே புரஜக்டர்கள், டால்பி அட்மோஸ் என இதன் தொழில்நுட்பமும் அசத்தலானது. இந்த திரையரங்கில் எந்த இருக்கையில் அமர்ந்து பார்த்தாலும் நல்ல அனுபவம் கிடைக்கும். இந்தியாவிலேயே முதல் முறையாக புனே நகரில் டால்பி சினிமா வரப்போகிறது. அடுத்த மாதம் அங்கிருக்கும் ‘சிட்டி பிரைடு மல்டிபிளக்ஸி’ல் டால்பி சினிமா திரையரங்கைத் திறக்கவிருக்கின்றனர்.

ஜேம்ஸ் பாண்ட்

அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தை யார் இயக்கப்போகிறார் என்பதுதான் திரைப்பட ரசிகர்களிடம் முக்கிய விவாதமாக இருந்தது. ‘டியூன்’ படத்தை இயக்கிய டெனி வில்னவ்தான் ஜேம்ஸ் பாண்ட் படத்தை இயக்கப்போகிறார் என்ற அறிவிப்பு சமீபத்தில் வந்திருக்கிறது. சமகாலத்தின் முக்கியமான இயக்குனராக கருதப்படுகிறார் டெனி. அதனால் அவரால் சிறந்த ஜேம்ஸ் பாண்ட் படத்தைக் கொடுக்க முடியும். மட்டுமல்ல, சமீப வருடங்களில் வெளியான எந்த ஜேம்ஸ் பாண்ட் படமும் பெரிதாக ரசிகர்களை ஈர்க்கவில்லை. அந்தக் குறையை டெனி போக்குவார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

தொகுப்பு: த.சக்திவேல்