நன்றி குங்குமம் தோழி
நம் சமுதாய இலக்கணங்களில் இயற்கையாக விழாதவர்கள் கூட தன்னை அந்தப் பெட்டிக்குள் அடைத்துக்கொண்டு வாழும் நிலைதான் இன்றுவரை நீடிக்கிறது. இதற்கு காரணம், வழி வழியாக நம்மை இப்படித்தான் வழிநடத்தி இருக்கிறார்கள் நம் பெற்றோரும், மற்றோரும். இந்த இலக்கணம் ஒரு தனி மனிதருக்கு ஒத்து வராத போதும், நம்மை நாமே ஏன் வருத்திக்கொண்டு அதற்குள் வாழ முற்படுகிறோம் என்றால், அதற்கு முதற் காரணம் அந்த நாலு பேர் என்ன சொல்வார்கள், வீட்டில் இருப்பவர்கள் இதை எப்படி ஏற்பார்கள் என்ற பயம்.
இந்த சமுதாயத்திற்கு பயம் கொள்ளாதவர்கள், வீட்டில் நம்முடன் இருப்பவர்களால் கேள்வி கேட்கப்படாதவர்கள் கூட, பலர் இவ்விலக்கணத்துடன்தான் வாழ முற்படுகிறார்கள். அதற்கு காரணம் நம் மனம் மட்டுமே. நாம் இன்னும் கற்ற சிலவற்றை உதறிவிடத் தயங்குவதே. நாம் அந்த இலக்கணத்தில் விழாதபோது, நாம் குற்ற உணர்வுக்கு ஆளாகிறோம். நாம் நல்லவர்கள் இல்லையோ, சரியானவர்கள் இல்லையோ என்று நம்மை நாமே சந்தேகிக்கிறோம்.
உதாரணமாக, கணவனைப் போல் தினமும் தானும் வேலைக்குப் போகும் ஒரு மனைவி, குடும்பத்திற்கான உணவு மற்ற ஏற்பாடுகளை செய்துவிட்டுதான் வேலைக்குப் போகிறார் இன்றும் பல வீடுகளில். ஒருநாள் அலுவலகத்தில் அவசர வேலையோ இல்லை நிறைய வேலை இருப்பதினால், சிறிது சீக்கிரம் வேலைக்குப் போக வேண்டியிருந்தால் கூட, சிறிது முன்னமே எழுந்து, அனைவருக்குமான தேவைகளை கவனித்துவிட்டுதான் போவார். இன்று ஒருநாள் நீங்கள் இவற்றை பார்த்துக்கொள்ளுங்கள் என்று புரிதல் உள்ள கணவரிடம் கூட சொல்வதில்லை. மாலை நேரம் கழித்து வந்தாலும், வீட்டில் அனைவரும் பசியுடன் காத்திருப்பார்களே என்ற பதட்டத்துடன்தான் வருவார். அப்படிப்பட்ட நேரங்களில் குற்ற உணர்வு ஒரு பதட்டத்தை ஏற்படுத்திவிடுகிறது. இதை வழி வழியாக ஒரு சாபமாகவே அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்திவிடுகிறார்கள் நம் பெண்கள்.
ஒரு வேளை தான் இருந்து பிள்ளைகளையோ கணவனையோ கவனிக்க இயலாமல் போனால் பதட்டம், குற்ற உணர்வு. தான் எதுவும் செய்யாவிட்டால் குடும்பம் இயங்காதது போல் ஒரு அனுமானம். இப்படிப்பட்ட எண்ணங்களினால்தான் பெண்கள் பொதுவாக திருமணம் ஆன கையுடன், தன் நட்பு வட்டத்தையே குறுக்கிக்கொள்ளவோ இல்லை அறவே அகற்றிவிடவோ செய்துவிடுகிறார்கள்.
ஓர் ஆண் வேலை முடித்து நண்பர்களைச் சந்தித்து மெதுவாக வீடு வரலாம். விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் வெளியில் செல்லலாம், ஏன் வெளியூர் சென்று கூட வரலாம். ஆனால், கணவரே வெளியில் போய்வா என்று சொன்னால் கூட, ஐயோ நான் வெளியில் சென்றால், வீட்டில் எல்லோரும் என்ன செய்வார்கள் என்று இவர்களே அது தவறு, ஓர் அம்மாவாக, மனைவியாக இப்படி பொறுப்பற்று இருக்கக் கூடாது என்று எல்லாவற்றிற்கும் வேலி போட்டுக்கொள்வார்கள்.
ஆண்களை வளரவிடாமல் செய்வதே இப்படி குற்ற உணர்வுடன் இருக்கும் அம்மாக்களும், மனைவிகளும்தான். வளர்ந்த ஆண் பிள்ளைகளோ இல்லை கணவனோ யாராக இருந்தாலும், அவரவர் தேவையை அவரவர் நிறைவேற்றிக்கொள்ள, தானில்லாத போது வீட்டில் இருக்கும் வயதானவர்களையோ, சிறு பிள்ளைகளையோ பார்த்துக்கொள்ள பழக்குதலும், அப்படி அவர்கள் செய்கையில் ஏதோ நாம் மட்டும்தான் இதற்காக அவதாரம் எடுத்தது போலும், அவர்கள் நமக்கு உதவுகிறார் போலும் நன்றியுடனோ குற்ற உணர்வுடனோ வாழ வேண்டிய
அவசிய மேயில்லை. அது அவர்களுக்கும் வீடுதான். அவர்களுக்கும் அதில் பொறுப்பிருக்கிறது என்ற புரிதலை முதலில் நமக்குள் நாம் கொண்டுவர வேண்டும்.
ஆண் வேலை என்று நிர்ணயித்து வைத்திருப்பவையை ஆணும், பெண் வேலை என்று நிர்ணயித்து வைத்திருப்பதை பெண்ணும்தான் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை முதலில் விட்டொழிக்க வேண்டும். இங்கு குற்ற உணர்வுக்கு இடமேயில்லை என்பதை ஆணித்தரமாக மனதில் ஏற்றிக்கொள்ள வேண்டும். இவை முதலில் மாற்றம் கண்டாலே குடும்பத்தை சுற்றியே தன் வாழ்வை அமைத்துக்கொண்டு வாழ்ந்து, அந்த விரக்தியில், கோபத்தில் எப்பொழுதும் சண்டை போட்டுக்கொண்டிருக்கும் மனைவிகள் குறைவார்கள். குடும்பத்தின் பணத் தேவைகளுக்கு தன் வருமானம் போதாமலோ இல்லை தன் மனைவி தன்னைவிட அதிகம் வருமானம் கொண்டுவந்தால் தாழ்வுணர்வுடன் வாழ்ந்து எப்பொழுதும் சிடுசிடுத்துக்கொண்டிருக்கும் கணவர்கள் குறைவார்கள்.
ஒரு குடும்பத்தில் வளர்ந்த பிள்ளைகளும், அப்பாக்களும், அம்மாக்களும் அத்தனை வேலையிலும் பங்கெடுக்க வேண்டும் பாலின பேதங்கள் இல்லாமல். நாம் குற்ற உணர்வு கொண்டு எல்லாவற்றையும் நம் தோளில் சுமந்து கொண்டே இருந்தால் நம்மின் மீதான குடும்பத்தாரின் எதிர்பார்ப்பும் அதிகரித்துக்கொண்டே இருக்கும். என்றாவது நாம் ஒரு வேலையை செய்ய இயலாமல் போகும் போது மற்றவர்களின் ஏமாற்றமானது நம்மை நல்ல மனைவி/கணவன் இல்லையென்றோ, நல்ல அம்மா/அப்பா இல்லையென்றோ சொல்ல வைக்கும். அன்று நாம் புலம்பிப் பிரயோசனம் இல்லை.
வாழ்க்கை முழுவதும் உங்களுக்காகத்தானே வாழ்கிறேன், இன்று இப்படி சொல்கிறார்களே என்று. ஏனெனில் அவர்களை அப்படி எண்ண வைப்பதே நாம்தான். இயலும் போது இயன்றதை செய்வதும், இயலாத போது, இன்று என்னால் இதை செய்ய இயலாது என்று சொல்லி ஒதுங்கிக்கொள்வதும் ஒரு சாதாரண இயல்பான விஷயம்தான். இதை நாம் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளல் அவசியம்.
குற்ற உணர்வினால் தூண்டப்பட்டு எல்லாவற்றையும் நான்தான் செய்வேன் என செய்து கொண்டே இருந்தால், ஒரு வேளை ஒரு சந்தர்ப்பத்தில் நாம் இல்லாமலே போய்விட்டால், அன்று நம் குடும்பத்தில் உள்ளவர்கள் எப்படி திண்டாடுவார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். யார் இல்லாவிட்டாலும் அவர்கள் வாழக் கற்றுக்கொண்டு விடுவார்கள். ஆனால் கற்றுக்கொள்ள நேரம் எடுக்கும். அதுவரை திண்டாட்டம்தான். உண்மையில் நம் அன்பு என்பது நாம் நாளை இல்லாவிடினும் அவர்கள் குறையில்லாது வாழவேண்டும் என்று நினைப்பதே தவிர, நாம் இல்லாவிட்டால்தான் தெரியும் என்ற நிலையில் அவர்களை விடுவதல்ல.
ஆண்களும் சமைக்கலாம், துணி துவைக்கலாம், வீடு பெருக்கலாம், பெண்கள் நன்றாக சம்பாதிக்கும் குடும்பத்தில் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிக்கலாம்; பெண்களும் ஆண்களுக்கென வகுக்கப்பட்டிருக்கும் அத்தனை வேலைகளையும் பார்க்கலாம். இப்படி பாலின பேதங்கள் அற்று பொறுப்பேற்று வாழும் குடும்பங்களில் குற்ற உணர்வுகொள்ள வழியே இல்லை. அதனால், நம் அடுத்த தலைமுறைக்கும் இப்படி ஒரு குற்ற உணர்வை கடத்த வேண்டிய அவசியமும் இல்லை.
காலங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன. தனிப் பெற்றோர்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். பாலின பேதமில்லாமல், குற்ற உணர்வுகள் இல்லாமல் அத்தனை வேலையும் தானும் செய்து, தன் பிள்ளைகளுக்கும் பொறுப்புகளை ஏற்று வாழ கற்றுக்கொடுக்காவிடில் வாழ்வு மிகவும் சுமையாகவே இருக்கும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் பேதங்கள் இல்லாமல் அத்தனை பொறுப்புகளும் இருக்க வேண்டும், அத்தனை சுதந்திரங்களும் இருவருக்கும் இருக்க வேண்டும். நிறைய குடும்பங்களில் பெண்கள் இன்னும் வெளியில் எங்காவது, தோழிகளுடனோ இல்லை, தனியாகவோ, எப்படியோ செல்ல வேண்டுமெனில், கணவர்களிடம் அனுமதி பெற்று போவதென்பது எழுதப்படாத விதியாகவே உள்ளது. ஆனால் ஓர் ஆண் விவரம் தெரிவித்தால் போதும்.
அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை என்பதாகவே உள்ளது. (சில விதி விலக்குகள் இருக்கலாம் ஆண்களும் அனுமதி கேட்க வேண்டிய குடும்பங்களும், இருவருமே விவரம் தெரிவித்தால் போதும் என்ற குடும்பங்களும்) ஆனால் பொதுவிதி இதுதான். அதற்கு பெண்ணடிமைத்தனம் மட்டும் காரணமில்லை. நாமாக பெண்களின் வேலை ஆண்களின் வேலை என்ற இந்த பாலினத்தை அடித்தளமாக வைத்து ஏற்படுத்தி வைத்துள்ள பொறுப்புகளும் காரணம். ஓர் ஆண் வெளியில் சென்றால், வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு குறையும் ஏற்படாது. ஏனெனில் அவனுக்கு வீட்டில் செய்ய வேண்டிய வேலை என எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
ஆனால், ஒரு வீட்டிற்குள் நடக்க வேண்டிய அத்தனை வேலைகளும் பெண்ணின் பொறுப்புகளாக இருப்பதால், அவர் வெளியில் சென்றால், வீட்டில் உள்ள அனைவரையும், அவரது இல்லாமை பாதிக்கிறது. குற்ற உணர்வை உடைத்து இன்று நான் வெளியில் போகிறேன். வீட்டு வேலைகளை பாருங்கள் என்று பெண்களால் தாங்களே போட்டுக்கொண்ட வேலியில் இருந்து வெளி வருகிறார்களோ அன்று பேதங்கள் சிறிது மாற்றம் அடையலாம். என்று ஓர் ஆண் இவ்வளவுதான் என்னால் வருமானம் ஈட்ட முடிகிறது, மேலும் வேண்டுமென்றால், நீயும் எனக்கு சிறிது வருமானத்திற்கு கைகொடு என்று சொல்ல முடிகிறதோ அன்று மாற்றங்கள் ஏற்படும்.
(தொடர்ந்து சிந்திப்போம்!)
தொகுப்பு: லதா