Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சோலோ ஆக்டிங் Queens!

நன்றி குங்குமம் தோழி

நடிப்பதே கஷ்டம். அதிலும் தனி ஆளாய் கேமரா முன் நின்று, கெட்டப்ப மாத்தி, வசனத்தை மாத்தி, ஒரே ஆள் மாமியாரா, மருமகளா, அம்மாவா, பொண்ணா, போலீஸா, ரவுடியா, பக்கத்து வீட்டு அக்காவா, சாமியாரா, பக்தையா, டிரைவரா என சோலோ காமெடியில் அதகளம் செய்து பட்டையை கிளப்புகிறார்கள் அழகிய இளம் பெண்கள் சிலர்.

ஸ்கிரிப்ட் ரைட்டிங்... மேக்கப்... ஆக்டிங்... ஷூட்டிங்... எடிட்டிங்னு தனியாளாய் ஆவர்த்தனம் செய்கிற இந்த மல்டி டேலென்ட் பெண்களுக்கு சோஷியல் மீடியாவில் வியூவ்ஸ், சப்ஸ்க்ரைபர்ஸ், ஃபாலோவர்ஸ் என ரசிகர் பட்டாளம் மில்லியனைத் தாண்டுகிறது. அட, யு டியூப் சேனலை இப்படியும் பயன்படுத்தி வியூவ்ஸ் அள்ள முடியுமா என சில நேரம் நம்மை திக்கு முக்காட வைக்கிறார்கள் இந்தப் பெண்கள்.மோனோ ஆக்டிங் காமெடியில் டாப் கியரில் அதிரி புதிரி பண்ணும் இளம் பெண்கள் சிலரின் யுடியூப், இன்ஸ்டா, முகநூல் போன்ற சோஷியல் மீடியா பக்கங்களை துலாவியதில்...

ஆர்யா அருண்…

‘‘இந்த மோனே பிறந்து வளர்ந்ததெல்லாம் கேரளா மாநிலம் கோட்டயமாக்கும். ஏட்டா இரண்டு குழந்தைகள்னு ஈ கேரளத்து கிளி செட்டிலானது அரபு எமிரேட்ஸான துபாய் நாட்டில்...’’ நேரம் கிடைக்கும்போதெல்லாம் தனது காமெடி டிராக்கை சோலோ ஆக்டிங்காக பதிவேற்றி இளசுகளின் இதயங்களை ஃபாலோவர்ஸாக கொத்திச் செல்கிறது ஈக் கேரளத்துப் பைங்கிளி.ஆர்யா அருணின் ஸ்பெஷல் நடிப்பு மலையாளம் மட்டுமல்ல... தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில் இருக்கும் சின்னச் சின்ன டயலாக்குகளை, வித்தியாசமான கெட்டப்பில் அசால்டாய் முக பாவத்தில் கொண்டுவந்து, கண்கள், முகமெனஐம்புலன்களையும் நடிக்க வைத்து, காமெடி டிராக்கில் பட்டையை கிளப்புவது இவர் பாணி.

பல காமெடி டிராக்கிலும் அவர் உடுத்தி இருப்பது சாதாரண லுங்கி, டிஷர்ட், தலைப்பாகைதான். லோக்கல் பாடி லாங்வேஜை அசால்டாய் நடிப்பில் காட்டும் இவர், தமிழில் பெரும்பாலும் எடுக்கும் டயலாக் பட்டிமன்றத்தில் வருகிற மேடைக் காமெடிகள்தான்.வீடியோக்களை குறைவாகவே பதிவேற்றும் இவரின் நடிப்புக்கும் சிரிப்புக்கும் கேரண்டி கட்டாயம் உண்டு. கூடவே இவருக்கு லட்சங்களில் ஃபாலோவர்ஸ் உண்டு.

திவ்யா கிரண்...

Passionate Actress And Singer

Acting makes myself expressive and

Singing makes my life tuned

எனத் தன்னை வலைத்தளத்தில் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும் திவ்யா கிரண் 2019ல் இருந்தே தனது காமெடி டிராக்கை யு டியூப் மற்றும் முகநூலில் தொடங்கி 1743 மோனோ ஆக்டிங் காமெடி வீடியோக்களை வெரைட்டி கெட்டப்பில் இதுவரை பதிவேற்றி இருக்கிறார். கேரள மாநிலம் கன்னூர் திவ்யா சேச்சியின் பிறப்பிடம் என்றாலும் கணவர், மகன்னு குடும்பத்தோடு குடியிருப்பது மகாராஷ்டிராவிலுள்ள மும்பை. சேச்சி வீடியோவைப் பதிவேற்றினால், அடுத்த நிமிடமே அவரின் நடிப்புக்காக பலரும் அவரின் வலை பக்கத்தில் ஆஜராவது நிதர்சனம். இவருக்கான வியூவ்ஸ் 16 மில்லியனைத் தாண்டி டாப் கியரில் நிற்கிறது. அந்தளவுக்கு நடிப்பில் பட்டையை கிளப்புகிறார் சேச்சி.

விடாமல் தொடர்ந்து மூச்சு வாங்க வாங்க தினம் ஒரு வீடியோவை பதிவேற்றும் திவ்யா கிரணின் ஸ்பெஷலே, நடிப்பைத் தாண்டி அவர் போடுகிற கெட்டப்புகள்தான். அந்தளவுக்கு கெட்டப்பை மாற்றி... செட்டப்பை மாற்றி... ரொம்பவே மெனக்கெட்டு மாற்றி மாற்றி நடிப்பில் அதகளம் செய்கிறார் இந்த நடிப்பு ராட்சசி.

சோலோசைன் சோனியா…

சோனியா பாட்ஷாவாய் தன்னை வலைத்தளங்களில் அறிமுகப்படுத்திக் கொண்டு, தன் சோலோசைன் வீடியோக்களில் இவர் எடுப்பது உண்மையிலே பாட்ஷா அவதாரம்தான். அந்தளவுக்கு பக்காவான மேக்கப், நடிப்பு, டயலாக் டெலிவரின்னு, ஒரே பிரேமில் இரண்டு மூன்று கெட்டப்புகளை கொண்டுவந்து, காமெடி டிராக்கில் தொடர்ந்து பட்டையை கிளப்புகிறார் சோனியா பாட்ஷா. தன் தனிப்பட்ட ஆவர்த்தன நடிப்பால், 2019ல் இருந்தே சமூக ஊடகங்களை ஆட்கொண்டவருக்கு சப்ஸ்க்ரைபர்ஸ் மற்றும் வியூவர்ஸ் மில்லியனைத் தாண்டுகிறது. இதுவரை 680க்கும் மேற்பட்ட சோலோசைன் வீடியோக்களை பதிவேற்றி, பிரபல யு டியூப்பர் ரேஸில் முந்துகிறார் இந்த அழகிய நடிப்பு ராட்சசி. இவரின் சோலோசைன் சேனலுக்காக சோனியாவுக்கு பாராட்டுகளும், விருதுகளும் கிடைத்துள்ளன.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்