நன்றி குங்குமம் தோழி
‘‘ஒருவரின் ஆரோக்கியத்தினை அவர்களின் சருமத்தைப் பார்த்து கண்டுபிடித்துவிடலாம். சருமம் பொலிவாக இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் முதிர்ந்த தோற்றத்தை கட்டுப்படுத்தவும் செய்யும். நம்முடைய உடலில் மிகவும் பெரிய உறுப்பு என்றால் சருமம்தான். காரணம், தலை முதல் பாதம் வரை ஒரு போர்வையாக நம் உடலை பாதுகாக்கும் கவசமாகத்தான் சருமம் செயல்பட்டு வருகிறது.
பொதுவாகவே பெண்கள் தங்களின் சருமப் பராமரிப்புக்கு அதிக கவனம் செலுத்துவது வழக்கம். அவர்களின் சருமப் பொலிவு மற்றும் அழகிற்காக சோப், பேஷ்வாஷ்களில் ஆரம்பித்து... எண்ணில் அடங்காத சருமப் பாதுகாப்பு பொருட்கள், மேக்கப் சாதனங்கள் மற்றும் கிரீம்கள் என மார்க்கெட்டில் கொட்டிக் கிடக்கிறது. இவை அவர்களின் சருமத்தை பாதுகாப்பது மட்டுமில்லாமல், பளபளப்பு, பிரகாசம், மென்மை என அனைத்தும் தரும் என்று சொல்லிக் கொண்டே போகலாம். இவற்றை மட்டுமே பயன்படுத்தாமல், உணவிலும் கவனம் செலுத்த வேண்டும். காரணம், நாம் சாப்பிடும் உணவுகள் நம்முடைய சருமத்தை என்றும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது’’ என்கிறார் மருத்துவ இயக்குநர் மற்றும் அழகு சாதன நிபுணர் டாக்டர் கீதிகா மிட்டல்.
“பெண்கள் அனைவரும் தங்களின் சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். இப்போது கூடுதலாக இளமையான ேதாற்றத்தினையும் எதிர்பார்க்கிறார்கள். ஒருவரின் சருமம் என்பது அவர்கள் பிறக்கும் போதே நிர்ணயிக்கப்படுகிறது. அதனால்தான் எண்ணெய் பசை, நார்மல் மற்றும் வறண்ட சருமம் என்று மூன்று வகையாக பிரிக்கிறார்கள்.
இதில் எண்ணெய் பசை சருமம் கொண்டவர்களுக்கு முகத்தில் அதிகளவு எண்ணெய் பிசுக்கு இருக்கும். முகப்பரு பிரச்னை ஏற்படும். வறண்ட சருமம் உள்ளவர்களின் சருமம் வறண்டு போய் பொலிவற்று காணப்படும். சிலருக்கு தோல் உரியவும் வாய்ப்புள்ளது. வறண்ட சருமம் கொண்டவர்கள் வயதாகும் போது அவர்களின் சருமத்தில் அதிகப்படியாக சுறுக்கம் ஏற்பட்டு வயதான தோற்றத்தினை கொடுக்கும். அவர்களுக்கு இது போன்ற அழகு சாதனப் பொருட்கள் பெரிய அளவில் பலனை கொடுக்காது. அதே சமயம் எந்த சருமம் கொண்டவர்களாக இருந்தாலும், அவர்கள் சிறு வயதில் இருந்தே ஆரோக்கியமான உணவினை சாப்பிட்டு வரும் போது அது அவர்களின் சருமத்தை ஆரோக்கியமாகவும், பொலிவுடனும், இளமையாகவும் வைத்துக் கொள்ள உதவும்.
சருமத்தை இளமையாகவும், அதே சமயம் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க என்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்று பலருக்கும் குழப்பமாக இருக்கும். ஒருவர் சிட்ரஸ் உணவுகளை சாப்பிட்டால் சருமம் பளபளப்பாகும் என்பார்கள். ஒரு சிலர் பால் சார்ந்த பொருட்களை உண்பதால் சருமம் மிருதுவாகும் என்று ஆலோசனை கூறுவார்கள். இவர்களுக்கு எல்லாம் ஒரு படி மேலே சமூக வலைத்தளங்களில் இன்று பலர் தங்களுக்கு தெரிந்த ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள். இதில் எதை பின்பற்றுவது, ஒருவரின் சருமத்திற்கு எது சரியானது, என்ன உணவினை சாப்பிடுவது என்று தீர்மானிப்பதே சவாலாகத்தான் இருக்கிறது.
சிறு வயதில் குழந்தைகள் எல்லா வகையான உணவுகளையும் சாப்பிடுவார்கள். அது தவறில்லை. காரணம், அந்த வயதில் அவர்களின் மெட்டபாலிசத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உணவில் இருக்கிறது. ஆனால், வயதான பிறகு எந்த உணவினை எப்போது, எப்படி, எந்த அளவில் சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அதனோடு ஆரோக்கியமான முறையில் சருமத்தை பராமரிக்கவும், சருமத்தில் ஏற்படும் முதிர்வை தாமதப்படுத்துவதற்கும் என்ன வழி என்பதை தெரிந்து கொள்வது இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் அவசியமாக உள்ளது.
ஒரு ஆய்வின்படி, சர்க்கரைக்கும் சில உணவுகளை தயாரிக்கும் முறைகளுக்கும் (கிரில், எண்ணெயில் பொரிப்பது மற்றும் பேக்கிங் முறைகள்) சரும முதிர்வுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. சருமம் ஆரோக்கியமாக இருக்க ஊட்டச்சத்து நிறைந்த உணவு அவசியம். இது சருமத்தில் உள்ள அனைத்து உயிரியல் செயல்முறைகளுக்கும் தேவைப்படுகிறது. இளைஞர்கள் முதல் வயதானவர்கள் அல்லது நோயுற்றவர்கள் அனைவருக்கும் நாம் சாப்பிடும் உணவுகள் அவர்களின் சருமத்தை பாதுகாக்கவும் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் உதவும்.
நாம் தொடர்ந்து பின்பற்றாத பல எளிய விஷயங்கள் வயது முதிர்வை ஏற்படுத்தும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பது, வைட்டமின்கள், புரதங்கள் குறைபாடு மட்டுமில்லாமல் துத்தநாகம், தாமிரம், இரும்பு, அயோடின் போன்ற குறைபாடுகளும் சருமத்தை பாதிக்கும். உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் சத்து இல்லாமல் இருந்தால் அது திசுக்களை பாதிப்பது மட்டுமில்லாமல், அதன் செயல்பாட்டிலும் சிக்கல்களை ஏற்படுத்தும். நம்முடைய உடலில் தண்ணீரின் அளவு குறையும் போது அது முகத்தில் மட்டுமில்லாமல் உதடு, கை கால்கள் போன்றவற்றிலும் பிரதிபலிக்கும். முகம் மற்றும் உதடு வறண்டு காணப்படும். கால் பாதங்களில் வெடிப்பு ஏற்படும்.
ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீராக மட்டுமில்லாமல் இளநீர், சூப், பழச்சாறுகள் போன்ற வடிவிலும் எடுத்துக் கொள்ளலாம். பழங்கள் மற்றும் காய்கறிகளில் நீர்ச்சத்து மட்டுமில்லாமல் அதில் இருக்கும் விட்டமின்கள் மற்றும் இதர சத்துக்கள் சருமத்திற்கு கூடுதல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
வைட்டமின் ஈ, மெக்னீசியம், புரதம், தாமிரம், துத்தநாகம், அயோடின் போன்ற 15 ஊட்டச் சத்துக்களின் உறைவிடமாகும் பாதாம். தினமும் உங்கள் உணவில் பாதாம் சேர்த்துக் கொண்டால் சரும பராமரிப்புக்கு மிகவும் உதவும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வழக்கமான கலோரி பொருந்திய தின்பண்டங்களுக்கு பதிலாக தினமும் பாதாம் சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் நின்ற பெண்களின் சருமத்தில் சுருக்கம் ஏற்படாமலும் அதே சமயம் அவர்களின் சருமத்தின் நிறம் மாறாமல் பாதுகாக்கும். பாதாமில் நம் சருமத்திற்கு தேவையான ஆன்டி ஆக்சிடென்ட் வைட்டமின் ஈ, நல்ல கொழுப்பு அமிலங்கள் மற்றும் பாலிஃபினால்கள் உள்ளன. பாதாமை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சரும ஆரோக்கியம் மேம்படும். வைட்டமின் சி குறைபாடும் சருமப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். ஆரஞ்சு, எலுமிச்சை, ஸ்ட்ராபெர்ரி, சாத்துக்குடி மற்றும் கொய்யாவில் விட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது.
நம்முடைய உடலில் திசுக்களை புதுப்பிக்கவும், ஆரோக்கியமாக செயல்படவும், பாதிப்படைந்த திசுக்கள் மேலும் வலுப்பெறவும், புரதம் மிகவும் அவசியம். அதனால் புரதம் நிறைந்த உணவுகளையும் நாம் உணவில் சேர்த்துக் கொள்வது கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும். நம்முடைய சருமம் மாதம் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ளும் தன்மை கொண்டது. அந்தச் சக்கரம் எந்தவித பாதிப்பும் இல்லாமல் சுழல்வதற்கு புரதம் முக்கியம். புரதச்சத்து நிறைந்த பாதாம் தவிர தயிர், பயறு, பனீர், டோஃபூ, ஓட்ஸ் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதை கடைபிடிக்க வேண்டும்’’ என்று ஆலோசனை வழங்கினார் டாக்டர் கீதிகா மிட்டல்.
தொகுப்பு: ரிதி