“தொடர்பு என்பது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது” என்கிற வீரமணி சேகர் பிறவியிலேயே கேட்கவும், வாய் பேசவும் இயலாத மாற்றுத்திறனாளி. ஆனால், இதை அவருக்கு ஏற்பட்ட தடையாய் நினைக்காமல், முறையாக பயிற்சி பெற்ற மைக் கலைஞராய், சாலை விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளோடு பள்ளி, கல்லூரி வளாகங்கள் இருக்கும் முக்கிய சாலைகளில், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன...
“தொடர்பு என்பது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது” என்கிற வீரமணி சேகர் பிறவியிலேயே கேட்கவும், வாய் பேசவும் இயலாத மாற்றுத்திறனாளி. ஆனால், இதை அவருக்கு ஏற்பட்ட தடையாய் நினைக்காமல், முறையாக பயிற்சி பெற்ற மைக் கலைஞராய், சாலை விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளோடு பள்ளி, கல்லூரி வளாகங்கள் இருக்கும் முக்கிய சாலைகளில், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இதற்காக இந்திய சாதனைப் புத்தகத்திலும் (India book of records) இடம் பிடித்திருக்கிறார். வீரமணியிடம் பேசியதில்...
‘‘என்னோடு படித்து, ஓடி ஆடி விளையாடிய நண்பன் சாலை விபத்தில் அகால மரணம் அடைய, அதை நேரில் பார்த்த எனக்கு அதிர்ச்சியானது. அதேபோல் என் மகனையும், மகளையும் வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது எதிர்பாராமல் எனக்கும் விபத்து நேர, இதற்குப் பிறகே சாலை விழிப்புணர்வு பிரச்சாரத்தில் இறங்கினேன்’’ என்கிற வீரமணி, தான் கற்ற மைம் கலை வழியாக, நடிப்பு மற்றும் பாவனைகளைச் செய்து, உடல் அசைவுகளைக் காட்டி, மக்களை சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கிறார். வீரமணி செய்கிற பிரச்சாரம் மக்களை வெகுவாக ஈர்க்கிறது.
ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவது, சீட் பெல்ட் அணிவதன் அவசியம், குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டக் கூடாது, மொபைலில் பேசியபடி வாகனம் ஓட்டக் கூடாது, இயர்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது, சாலை விதிகளை மதிக்க வேண்டும் என பொதுமக்களிடம் பாதாகைகளை காட்டி பாவனை செய்கிற வீரமணி, எம்.என்.சி நிறுவனத்தின் வங்கி ஒன்றில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக பணியாற்றுகிறார்.
‘‘ ‘விபத்தில்லா இந்தியா’ என்பதை என் கனவாகக் கொண்டு, கடந்த 10 ஆண்டுகளில் தொடர்ச்சியாக 500க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் தன்னார்வலராய் பங்கேற்றதுடன், ஒரே நேரத்தில் 100 சிக்னல்களில் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களோடு இணைந்து, சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியதற்காக, இந்திய சாதனைப் புத்தகத்திலும் இடம் பிடித்திருக்கிறேன். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் என்னை அழைத்துப் பாராட்டினார். ஒரு வார்த்தையையும் பேச முடியாத எனக்கு இந்தப் பயணம் சிறந்த மேடையை வழங்கியுள்ளது’’ என்கிற வீரமணி, தோழன் மற்றும் Seed For Safety அமைப்புகளுடன் தன்னார்வலராக இணைந்து, சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுடன், மரம் வளர்ப்பின் அவசியம், மழைநீர் சேமிப்பு, சுற்றுச்சூழலுக்கான நெகிழி விழிப்புணர்வு, போதை விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் செய்து வருகிறாராம். வீரமணியின் மனைவி ஜெயஸ்ரீயிடம் பேசியதில்...
‘‘நமது எண்ண அலைகள்தான் நம்மை வழிநடத்தும் என்று உறுதியாக நம்புபவள் நான். நான் பள்ளியில் படிக்கும் போது வடபழனியில் இருந்து போரூர்வரை பெண்களுக்கான சிறப்பு பேருந்தில், ஆவிச்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி சென்று படித்துவிட்டு திரும்புவேன். அப்போது பச்சை வண்ண சீருடை அணிந்த காது கேளாதோர் பள்ளி மாணவிகள் பலர் பேருந்து முழுவதும் ஏறுவார்கள். அவர்களுக்குள் அப்போது சைகை மொழியில் பேசி சிரிப்பதை பார்த்துக்கொண்டே பயணிப்பேன். என் மனதில் அப்போது, நான் திருமணம் செய்தால் இதுபோல காது கேட்காத, வாய் பேச முடியாத நபரைத்தான் திருமணம் செய்ய வேண்டுமென ஒருமுறை நினைத்தேன்.
ஏன் அப்படி நினைத்தேன் என்று எனக்கே தெரியாது. ஆனால், எனக்குத் திருமணம் பேச ஆரம்பித்த போது வந்த முதல் மாப்பிள்ளை இவர்தான். எனக்கு அப்போது 20 வயதுதான். எனக்கு ஒரு குழந்தை இப்படி பிறந்தாள் வச்சு வளர்க்க மாட்டேனா? இல்லை என் கூடப் பிறந்த யாராவது இப்படி பிறந்திருந்தாள், அவர்களோடு இருக்க மாட்டேனா?’’ என்ற கேள்விகளை நம்முன், தனக்கான கேள்விகளாக முன்வைத்த ஜெயஸ்ரீ ‘‘என் வீட்டில் என்ன வசதியோ அதே வசதிதான் அவர் வீட்டிலும். இவரைத்தான் நீ திருமணம் செய்ய வேண்டுமென என் வீட்டில் என் பெற்றோர் உட்பட யாரும் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை. என் வாழ்க்கைக்கான முடிவை நானேதான் எடுத்தேன்’’ என மிகையான பிரமிப்பை நமக்குள் விதைத்தபடி மேலும் பேச ஆரம்பித்தார்.
‘‘என் கணவர் வீட்டுக்கு ஒரே பையன். 8 மாதத்திற்குப் பிறகே அவருக்கு காது கேட்கவில்லை என்பதை அவரின் பெற்றோர் கண்டுபிடித்துள்ளனர். அவரின் அப்பா வழிக் குடும்பம் கூட்டுக் குடும்பம் என்பதால், பிறவியில் மாற்றுத்திறனாளியாய் பிறந்த என் கணவரை, சிறப்பு பள்ளியில் சேர்த்து கல்வி மற்றும் பிற விஷயங்களை பயில முழுமையான ஆதரவுக் கரத்தை நீட்டியுள்ளனர்.
சைகை மொழி கற்பதைவிட, லிப் மூவ்மென்ட் பார்த்து பேசுவதற்கான பயிற்சியினை பள்ளியில் அவர் எடுத்திருப்பதால், கூடுமானவரை உதட்டு அசைவுகளை கூர்ந்து கவனித்துப் பேச முயற்சிப்பார். முதலில் அடையாரில் இருந்த பாலவித்யாலயா காது கேளாதோர் பள்ளியில் 5ம் வகுப்புவரை படித்தவர், பிறகு +2 வரை நார்மல் குழந்தைகள் படிக்கும் அரசுப் பள்ளிகளில் இணைந்து தமிழ் வழியில் +2 வரை படித்திருக்கிறார்.
பிறகு பி.காம் படிப்பை அஞ்சல் வழியில் முடித்து, வேலைக்காக 10 ஆண்டுகளாக தொடர்ந்து முயற்சித்தும், காது கேட்காது, வாய் பேச வராது என்ற காரணத்தால் வேலை கிடைக்காமலே இருந்திருக்கிறது. இந்த நிலையில், சிலர் அவருக்கு ஊதியமே வழங்காமலும், பயிற்சி என்கிற முறையில் குறைந்த ஊதியத்தைக் கொடுத்தும், இவரது திறமையையும், ஆற்றலையும் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்த நேரத்தில்தான் 2007ல் எங்கள் திருமணம் நடந்தது. அவரின் அப்பா வழியில் தூரத்து உறவுப் பெண் நான். எங்களுக்கு திருமணம் நடந்தபோது எனக்கு 20 அவருக்கு 25 வயதுதான். அப்போது இவருக்கு வேலை இல்லையென்பதால், குடும்ப நிர்வாகம் முழுவதையும் அசோக் லேலண்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த என் மாமனார்தான், அவரது வருமானத்தில் பார்த்து வந்தார். எனவே, இவர் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்காக நிறைய போக ஆரம்பித்தார். அதன் பிறகே என்.என்.சி நிறுவன வங்கியில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணி கிடைத்தது.
ஒரு முறை இவர் வேலை செய்யும் நிறுவனத்தில் ஃபேம்லி டே நிகழ்ச்சி ஒன்று நடந்தது. நாங்கள் குடும்பத்தோடு அங்கு சென்றபோது, பல்வேறு மாற்றுத்திறனாளி ஊழியர்களை, அவர்களின் மனைவிகள் வீல்சேரில் வைத்து தள்ளிக்கொண்டு வருவதை நேரில் பார்த்தபோது, நான் என் கணவருக்கு செய்வதெல்லாம் ஒன்றுமே இல்லை எனத் தோன்றியது’’ என மீண்டும் நம்மை பிரமிப்புக்குள் கொண்டு சென்ற ஜெயஸ்ரீ-வீரமணி தம்பதிக்கு தற்போது, கல்லூரியில் படிக்கும் மகனும், +2 படிக்கும் மகளும் இருக்கிறார்கள்.
‘‘இவரின் நெருங்கிய நண்பர் ஒருவர் படித்து முடித்து வேலையில் இணைய முதல்நாள் கிளம்பிய அன்றே, சாலை விபத்தில் சிக்கி, அதே இடத்திலேயே பலியாக, அந்த இறப்பில் இவர் முழுவது மாக இருந்ததால், அந்த வலி இவர் மனதை பாதித்துவிட்டது.
அன்று முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இருக்கும் இடம், மக்கள் நெருக்கடி மிகுந்த சாலைகளில் இருக்கும் சிக்னல்களுக்குள் நுழைந்து, சாலை விழிப்புணர்வு வாசகம் தாங்கிய அட்டைகளை கழுத்தில் தொங்கவிட்ட நிலையில், தான் கற்ற மைக் கலை வழியாக சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செய்து வருகிறார்’’ என்ற ஜெயஸ்ரீ, ‘‘இதற்காகவே நாங்கள் வசிக்கும் அம்பத்தூர் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகள் பல இவரை அழைத்து விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளனர்’’ என்றவாறு புன்னகைத்தபடி விடைபெற்றார்.
தன்னிச்சையாக செயல்படுபவர்!
- முகம்மது முபாரக், தோழன் அமைப்பு.
‘‘வீரமணியின் அர்ப்பணிப்பையும், உழைப்பையும் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. தனக்கு நேர்ந்த விஷயம் இனியும் தொடரக் கூடாது என்கிற எண்ணத்தில், தனக்கு காது கேட்காது, வாய் பேச முடியாது என்றாலும், அதை வைத்து மக்களுக்கு என்ன நல்லது செய்துவிட முடியும் என்கிற உந்துதலில், சாலை விழிப்புணர்வு பிரச்சாரத்தை கையிலெடுத்து தன்னிச்சையாக செயல்பட்டு வந்தவர்.
பிறகு திரைப்படக் கலைஞர் மைம் கோபியின் நடிப்பு பட்டறையில் இணைந்து, மைம் கலையை முறையாகக் கற்று, கடந்த எட்டு ஆண்டுகளாக தோழன் அமைப்பில் சாலை விழிப்புணர்வு பிரச்சார தன்னார்வலராக செயல்பட்டு வருகிறார். தேசிய சாலை பாதுகாப்பு வாரம், முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் தினம் போன்ற முக்கிய நாட்களில், சாலை விழிப்புணர்வு பிரச்சாரங்களை, டிராஃபிக் சிக்னலில் நின்று வீரமணிசேகர் மூலமாக நாங்கள் செய்து வருகிறோம்.’’
அரசு விருது கொடுத்து கவுரவப்படுத்த வேண்டும்!
- மைம் கோபி, நாடகம் மற்றும் திரைப்பட நடிகர்.
‘‘ஒரு ஆசானாக வீரமணிக்கு வகுப்பு எடுத்தது மகிழ்ச்சி. இது வீரமணியால் எனக்கு கிடைத்த ஆசீர்வாதம். வீரமணி போன்றவர்களுக்கு மைம் கலையை கற்றுக் கொடுப்பது ரொம்பவே சுலபம். சைகையை வைத்து, ரிதத்தைப் பிடித்து, பூமியில் வருகிற அதிர்வுகள் வழியாக மைம் கலையை செய்யும் மிகச் சிறந்த திறமைசாலி. வீரமணி வருமானத்தைப் பற்றி பெரிதாக கவலைப்படுவதில்லை. அவர் நேசிக்கும் கலைக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்கிறார். சாலைகளில் பயணிப்பவர்களை வீரமணி தன்னோடு பிறந்தவர்களாகப் பார்ப்பதனால்தான் விழிப்புணர்வு பிரச்சாரங்களை தொடர்ந்து செய்கிறார்.
இயற்கையை பாழாக்கிவிடக் கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறார். இதனால்தான் மைம் கலை இவரை கோபுரத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது. அவர் பழகும் மக்களுக்கு அவரைப் பிடிக்கிறது. கடவுளுக்கு அருகில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் வீரமணிக்கு, தமிழக அரசு விருது கொடுத்து கவுரவப்படுத்த வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.’’
தொகுப்பு : மகேஸ்வரி நாகராஜன்
படங்கள்: பி.கிருஷ்ணமூர்த்தி