Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சிறுகதை-இன்னார்க்கு இன்னாரென்று!

நன்றி குங்குமம் தோழி

23 வயது குழலி, மாலை ஆபீஸ் முடிந்து வீட்டுக்குள் வருவதை கவனித்த அவள் அம்மா மங்கை பிறகு பேசுகிறேன் என போனை துண்டித்தாள்.இது எதேச்சையான நிகழ்வாக தோணலை குழலிக்கு. சில நாட்கள் கழித்து ஒருநாள்… குழலியுடன் வேலை பார்ப்பவரின் அம்மா இறப்பிற்கு போய்விட்டு வீட்டிற்குள் வந்தாள் குழலி. அப்போது மங்கை போனில் மோகன் என உச்சரித்து பேசிக் கொண்டிருப்பதை கவனித்தாள் குழலி.குழலி எதிர்பார்த்தது போலவே மங்கை போனை துண்டித்தாள்.

“என்ன குழலி மதியமே வந்துட்ட?”

குழலி விவரம் கூறிக்கொண்டே மதிய சாப்பாட்டை இருவரும் சாப்பிட்டனர். குழலியின் மூளைக்குள் கேள்விகள்

ட்ரெயின் போல் ஓடிக்கொண்டே இருந்தது. கேள்விகளை சிவப்புக் கொடி காண்பித்து நிறுத்திவிட்டு…

“அம்மா மோகன் யார்? சொல்லும்மா?”

இந்தக் கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத மங்கை அதிர்ச்சி அடைந்தது ஆச்சரியமில்லை.சிறிது நேர அடர்ந்த மௌனத்துக்குப் பின்… மங்கை, “எனக்கு கல்யாணமாகி

8 வருடத்தில் உன் அப்பா ஆக்ஸிடன்டில் இறந்தது. அதனால் சில மாதங்கள் நான் நடை பிணமாக இருந்தது, அப்ப உன் வயது 5. உன் அப்பா போஸ்டல் டிப்பார்ட்மென்டில் உயர் பதவியில் இருந்ததால் வரும் பென்ஷன் பணத்தாலும், நான் யோகா எடுப்பதாலும் நாம் கௌரவமாக வாழ்வது எல்லாமே உனக்கு தெரியும். ஆனால், உனக்கு தெரியாத விஷயம் ஒன்று உண்டு…”

“அது என்னம்மா எனக்கு தெரியாத விஷயம்..?” என்ற குழலியின் கேள்வியில் ஆவல் அதிகம் இருந்தது.

மங்கை அருகிலிருந்த தண்ணீரை எடுத்து குடித்துவிட்டு ஒரு பெருமூச்சுக்குப் பின், “குழலி காலேஜ் படிக்கும் போதே நானும் மோகனும் லவ் பண்ணினோம். மோகன் மிக நல்லவர். இரு வீட்டார்

சம்மதமும் கிடைக்காததால் உன் அப்பாவை கல்யாணம் செய்து கொள்ள நேர்ந்தது. உன் அப்பா என்னை விட்டு சீக்கிரம் பிரிய நேர்ந்தது…”“சில நாட்களுக்கு முன் மோகனை கடைத் தெருவில் சந்தித்தேன். அடிக்கடி போனில் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இன்னும் நேரில் சந்திக்கவில்லை. இதுவரை நடந்தது இதுதான் குழலி…”அன்று இரவு மோகனிடமிருந்து போன்… “மங்கை நாளை காலை உன் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள அம்மன் கோவிலுக்கு வா. நேரில் பேசுவோம் குட்நைட்” என சுருக்கமாக கூறி போனை துண்டித்தார்.

மறுநாள் கோவிலில் இருவரும் பழைய நினைவுகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது சட்டென மோகன், “மங்கை நான் ஒன்று கேட்பேன்... நீ தப்பா நினைக்கக் கூடாது…”

“என்ன மோகன் பீடிகை பலமாக இருக்கு? என்ன விஷயம்னு சொல்லு…”“மங்கை நாம் ஏன் கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது” என கேட்டு விட்டு, மங்கையின் முகத்தையே பார்த்திருந்தான்.

இப்படி ஒரு கேள்வியை மோகனிடமிருந்து எதிர்பார்க்காத மங்கை பதற்றத்துடன் “என்ன மோகன் கேட்கிறீங்க நீங்க?”

“மங்கை நிறைய டைம் எடுத்துக்க… என்னால் இப்பவரை உன்னை மறக்க முடியலை. என் வயது 45. நான் இன்னும் கல்யாணம் செய்துக்கலை. குழலியிடம் நான் பேசுகிறேன்...”

மங்கையின் மனக் குளத்தில் கல் விழுந்ததை போலானது.மங்கை இரவு குழலியுடன் சாப்பிட்டு முடித்ததும் குழலி, “அம்மா நான் உன்னிடம் ஒன்று கேட்கிறேன். அம்மா

நீ ஏன் மோகன் சாரை கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது?”

குழலியிடமிருந்தும் இதே கேள்வியா? மங்கை தன்னை ஆசுவாசப்படுத்திக்கவே சில நிமிடங்களானது. சிறிது நேர அமைதிக்கு பின் மங்கை, “குழலி நீ புரிந்துதான் பேசுறியா? இப்படியொரு எண்ணம் ஏன் உனக்கு தோணியது?”

“ஏம்மா இது என்ன தவறான கேள்வியா? நான் நல்லா யோசித்து கேக்கறேம்மா... இன்னொரு விஷயம்மா. நீ கல்யாணத்துக்கு நோ சொன்னால் நான் கல்யாணம் செய்துக்க மாட்டேன். இது பிராமிஸ். நா மோகன் சார்கிட்ட பேசுறேன்” என உறுதியான குரலில் கூறிவிட்டு தன் அறைக்கு போய்விட்டாள்.மங்கை வெகு நேரம் சோபாவிலேயே உட்கார்ந்தாள். பின் ஒரு முடிவுக்கு வந்தவளாக மோகன் நம்பரை அழுத்தினாள்.

மோகன் அதிக ஆவலுடன் போனை காதில் பொருத்தி, “சொல்லு மங்கை என்றார்...”“மோகன் நாளை காலை 10 மணிக்கு அம்மன் கோவிலுக்கு வாங்க. நேரில் பேசுவோம்” என கூறி போனில் சிவப்பு பட்டனை அழுத்திவிட்டு நிம்மதியாக தூங்கினாள்.குழப்பம் அவர் மனம் முழுவதும் புகையாக சூழ்ந்திருந்ததால் அவரால் அமைதியாக தூங்க முடியலை.மறுநாள் காலை மணி 10.10 மங்கையும் மோகனும் கோவிலில் எதிர் எதிரே உட்கார்ந்திருந்தனர். சில நிமிடங்களுக்கு பின்…“என்ன மங்கை என்னை பேசணும்னு வரச் சொல்லிட்டு பேசாமல் இருக்க?”

“எப்படி ஆரம்பிப்பதுன்னு தெரியலை மோகன்…”“ம்ம்ம்... பிள்ளையார் சுழி போட்டு துவங்குங்கள்...” மங்கை பேசாமலிருந்தால் அவள் பேசப் போவது சீரியசான விஷயம் என மோகனுக்கு தோணியது.மங்கைக்கு தான் நினைத்ததை மோகனிடம் சொல்லி முடிக்க அதிக நேரம் தேவைப்பட்டது. “சரி மோகன் கிளம்பலாமா” என மங்கை கேட்டதும், இருவரும் வெவ்வேறு சிந்தனையுடன் விடை பெற்று கிளம்பினர்.மோகன் வீட்டுக்குள் போனதுமே குழலியிடமிருந்து போன். “சார் நான் குழலி பேசுறேன். இன்று ஈவினிங் சிக்ஸ் தேர்ட்டிக்கு K.K. காஃபி ஷாப்பிற்கு வர்றீங்களா சார்? ப்ளீஸ் சார்… நேரில் பேசுவோம்... பை சார்…”ஒரு நிமிடம் யோசித்த மோகன் “சரி வர்றேன் குழலி” என்றார்.

மாலை குழலியுடன் பேச மோகன் தன்னை நிறையவே தயார்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது.மாலை 6.15க்கு மோகன் காஃபி ஷாப்பில் காத்திருந்தார். 6.30க்கு குழலி காஃபி ஷாப்பிற்குள் நுழைந்தாள். மங்கை சாயலில் குழலி இருந்ததால் மோகனால் குழலியை உடன் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது.குழலி ஜீன்ஸ்+டாப்ஸில் முன்னால் விழுந்த முடியை பின்னால் போகாதபடி பின்னுக்கு தள்ளிக் கொண்டே, அலட்சிய நடையுடன் வந்தாள்.தன்னை எப்படி அடையாளம் கண்டு கொண்டார் என்று ஆச்சரியப்பட்ட குழலி ‘எப்படி சார்’ என்றாள்.மோகன் புன்னகையை பதிலாக தந்த பின் இருவரும் எதிர் எதிர் சேரில் அமர்ந்தனர்.

மோகன் குழலியை கேட்டுக் கொண்டு 2 காஃபிக்கு ஆர்டர் கொடுத்தார்.சிறிது நேரம் அமைதிக்கு பின் குழலி, “சார் நான் நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன். நீங்க

என் அம்மாவை கல்யாணம் பண்ணிக்கோங்க சார்…”சிறிது நேரம் குழலியின் முகத்தையே பார்த்த வண்ணமிருந்த மோகன்…

“குழலி ஏன் கல்யாணம் செய்துக்கணும்?”

“இனி மேலாவது ஒருவருக்கொருவர் துணையாக இருக்கலாமே என்றுதான் சார்…”“ஒரு விஷயம் குழலி… இத்தனை வருடங்கள் எங்கள் விருப்பம் போல் சுதந்திரமாக வாழ்ந்திட்டோம். கல்யாணம் செய்து கொண்டால், இது போலவே வாழ முடியுமா சொல் குழலி?”“மற்றுமொரு விஷயம் எனக்கு முன் கோபம் அதிகம். அட்ஜஸ் செய்து போகும் குணமும் குறைவு. குழலி ஏதாவது நெகட்டிவான விஷயம் நடந்தால் இருவராலும் தாங்கிக்க முடியாது. சோ, கல்யாணம் என்பது வேண்டாமே. பட் குழலி, நான் உனக்கும் உன் அம்மாவுக்கும் ஒரு நல்ல வெல்விஷராக இருப்பேன். இது பிராமிஸ்…”“நான் சொன்ன விஷயங்களையும், என்னையும் புரிந்துகொள்வாய் என நம்புகிறேன் குழலி. சரி, வா கிளம்புவோம்” என கூறி விடைபெற்றனர்.

இதுவரை குழலி இப்படியொரு குழப்பமான நிலையிலும் சோகமான முகத்துடனும் இருந்திருக்கவே மாட்டாள்.இரவு மணி 8.10... தளர்வான நடையில் வீட்டுக்குள் நுழைந்தார். அவர் மனசு போலவே அவர் வீடும் இருண்டிருந்தது. லைட் கூட போடனும் என தோணாமல் அப்படியே சோபாவில் படுத்தவர் மனதில் காலையில் மங்கை பேசிய விஷயங்கள் அலை அலையாய் நினைவுக்கு வந்தது மோகனுக்கு.

மோகனின் மனம் சோகச் சுமை தாங்காமல் தவிப்புடனிருந்தார். மங்கை கூறியது எல்லாமே ஏற்புடை யவையே... ஆனால், அவர் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தார்.“நான் என் கணவருடன் வாழ்ந்ததைப் பற்றி உங்களிடம் சொல்லியே ஆகணும் மோகன். அப்போது என் அம்மா, அப்பா கம்பல்ஷனால்தான் என் கணவரை கல்யாணம் செய்து கொள்ளும்படி ஆனது. எங்கள் ஃபஸ்ட் நைட்டின் போது அவர் என்னிடம் பேசிய முதல் வார்த்தை ‘மங்கை நான் உங்களிடம் பொய் சொல்ல மாட்டேன். எந்த ஒரு விஷயத்தையும் மறைக்கவும் மாட்டேன் என்றார்.

நம் இருவரிடையே எந்த ஒரு ஒளிவு மறைவும் இருக்க வேணாம்னு நினைக்கிறேன். எந்த விஷயமா இருந்தாலும் என்னிடம் சொல்லு. நா ஸ்போட்டிவா எடுத்துப்பேன்’ என்றார். அவர் வார்த்தையில் உண்மை தெரிந்தது. ஆனாலும், நம் காதலைப் பற்றி பயத்துடன் சொன்னேன். அவர் எந்தவித முக மாற்றமும் இல்லாமல் ‘இதை ஏன் இவ்வளவு பயந்துட்டு சொல்ற. காலேஜ் லைஃப்ல காதல் என்பது ஒரு உணர்வு. இது உன் மனச உறுத்த வேண்டியதில்லை’ என்றார். அவர் எவ்வளவு உயர்ந்த மனமுடையவர் என்று அப்போதே புரிந்தது.

என்னை நேசித்தது மட்டுமல்ல... என் உணர்வுகளை புரிந்து நடப்பார். எந்த ஒரு விஷயத்திலுமே என்னை முன்னிருத்தியே முடிவெடுப்பார். ஒரு பெண் தனக்கு எப்படி கணவன் வேண்டும் என எதிர்பார்ப்பாளோ அத்தனை தகுதியும் அவரிடமிருந்தது என் அதிர்ஷ்டமே...”“மோகன் இப்பவும் அவர் பீரோவை நான் திறக்கும் போது அவரிடம் நான் உணர்ந்த வாசத்தை உணர்கிறேன்... அனுபவிக்கிறேன் அவருடன்.மோகன் நான் இன்னும் மனதளவில் வாழ்ந்துட்டு இருக்கும் போது எப்படி மோகன் என்னால் உங்களை கல்யாணம் செய்துகொள்ள முடியும்? தயவு செய்து என்னை புரிஞ்சிக்கோங்க...” இதை மங்கை கூறியதும், பூமி பிளந்து உள்ளுக்கு போவது போல் மோகனுக்கு தோன்றியது.

“இந்த என் உணர்வை புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் குழலிக்கு கிடையாது. அதனால் தயவு செய்து ப்ளீஸ் எனக்காக நீங்க ஒரு உதவி செய்யணும் மோகன். நாம் இருவரும் கல்யாணம் செய்து கொள்வதில் உங்களுக்கு விருப்பமில்லை என குழலியிடம் நீங்க சொல்லணும் மோகன்...”அழகான பலூனில் ஊசி பட்டது போலானது அவர் மனநிலை. துக்கம் ஒன்று சேர்ந்து தொண்டையை அடைத்தது. அவர் நினைவு ஓட்டம் நின்றது. ஆனால், அவர் கண்களில் வழிந்த கண்ணீர் நிற்கவில்லை.

இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தது கடவுள்.

தொகுப்பு: பார்வதி கோவிந்தராஜ்