நன்றி குங்குமம் தோழி
“கற்பகம்! கற்பகம்!!” உரக்கக் கூப்பிட்டாள் அன்னபூரணி.“இதோ வந்துட்டேன்” என்று கூறிவிட்டு, அவசர அவசரமாகக் குளித்து விட்டு, ஈர உடையுடன் வெளியே வந்தாள் கற்பகம். அம்மா துரிதப்படுத்தினாள்.“ஏண்டி! காலேஜுக்கு நேரமாகலையா? குளிக்கப் போனால் எவ்வளவு நேரம்” என்றாள் அன்னபூரணி.தன் அறைக்குச் சென்று வேகமாக உடை மாற்றிக் கொண்டு வெளியே வந்த கற்பகம், கண்ணாடி முன் நின்று தலையை வாரிப் பின்னி, இரட்டை ஜடை போட்டுக் கொண்டு, பவுடர் பூசி, பொட்டு வைத்துப் பின்னர் டைனிங் டேபிள் முன்பு வந்து அமர்ந்தாள்.
தட்டில் வைக்கப்பட்டிருந்த மூன்று இட்லிகளை சட்னியில் தோய்த்து வேகமாக வாயில் போட்டு விழுங்கினாள். பின் கைகளை அலம்பி விட்டு புத்தகப்பையை முதுகில் மாட்டியபடி “அம்மா! போயிட்டு வர்றேன்” என்றாள். “பார்த்துப் போடி...” அம்மா வழக்கம் போல உபதேசம் செய்தாள்.கற்பகம் வீட்டிற்கு வெளியே வந்து நின்றாள். மஞ்சள் நிற வண்ணம் பூசிய கல்லூரிப் பேருந்து வந்து நின்றது. பஸ்ஸில் ஏறி இருக்கை ஒன்றில் அமர்ந்தாள். பஸ்ஸில் உள்ள சக மாணவிகளைப் பார்த்து “குட்மார்னிங்” என்றாள். “குட்மார்னிங்...” எல்லா மாணவிகளும் ஒரே குரலில் கோரஸ் பாடினார்கள்.
பஸ்ஸில் ஒரே சிரிப்பு, கும்மாளம். ஒரு வழியாகப் பேருந்து கல்லூரி வாசலில் வந்து நின்றது. மாணவிகள் ‘திபுதிபு’ என்று கீழே இறங்கினார்கள்.கற்பகம் இறங்கி வந்ததும், எதிரே கபாலி நிற்பதைப் பார்த்தாள். அவளை நோக்கி வந்தான் கபாலி.“கற்பகம்! உனக்காக எவ்வளவு நேரம் காத்திருக்கேன். தெரியுமா? என்றான்.“கட்டிக்கப் போறவளுக்காக காத்திருந்தால் என்னடா குறைந்து போகும்” என்றாள் கற்பகம்.இருவரும் சிறிது நேரம் பேசிய பின்னர், கல்லூரி மணி அடித்ததும், கற்பகம் விடை பெற்றுக் கொண்டு, கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தாள்.
கற்பகத்தை விட கபாலி மூன்று வயது பெரியவன். கற்பகத்தின் சொந்த மாமன் மகன். அவளை விட மூன்று வயது பெரியவனாக இருந்தாலும், சிறு வயது முதல் ஒன்றாகப் பழகியதால் வாடா, போடி என்றுதான் இருவரும் பேசிக் கொள்வார்கள்.நாட்கள் நகர்ந்தன. கபாலி வங்கி ஒன்றில் காசாளராகப் பணிபுரிந்து வந்தான். கற்பகம் எம்.ஏ. பட்டம் பெற்ற பின்னர் கல்லூரியில் ஆசிரியையாகப் பணிபுரியத் தொடங்கினாள்.கபாலிக்கு 28 வயது ஆன பொழுது கற்பகத்திற்கு 25 வயது.இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புவதை அறிந்திருந்தும் இவர்களது பெற்றோர் எதுவும் பேசவில்லை. ஒருநாள் கபாலி தன் தாய் பார்வதியிடம் மெல்லத் தன் விருப்பத்தைக் கூற ஆரம்பித்தான்.
“அம்மா! வந்து...”
“என்ன? சொல்லு” என்றாள் பார்வதி.
“கற்பகம்…”
“என்னடா இழுக்கிறே? சொல்ல
வந்ததைச் சொல்...”
“கற்பகம் என் அத்தை பெண் தானே?”
“அதுக்கு என்ன இப்போ?”
“எங்கள் இருவருக்கும் திருமணம் செய்வதைப் பற்றி பேசாமலே இருக்கிறீர்களே...”
“இப்போ என்ன செய்யச் சொல்றே?”
“அப்பாவிடம் சொல்லி அத்தை
வீட்டில் பெண் கேட்கச் சொல்...”
“சரி! உன் அப்பாவிடம் பேசுகிறேன்...”
சமயம் பார்த்துப் பார்வதி, தன்
கணவர் விஸ்வநாதனிடம் விவரத்தை எடுத்துரைத்தாள்.
“என்னங்க...”
“என்ன சொல்ல வருகிறாய், பார்வதி...”
“உங்க பையன்...”
“உனக்கும் பையன்தானே...”
“இந்த நக்கல் தானே வேண்டாங்கிறது. உங்க தங்கை அன்னபூரணியின் வீட்டிற்குச் சென்று பெண் கேளுங்கள். நம்ம பையன் கேட்கச் சொல்றான்...”
“பார்ப்போம்...” பட்டும் படாமல் பதில் கூறினார் விஸ்வநாதன். ஆனால், மேற்கொண்டு எதுவும் செய்யவில்லை.
அதே நேரம் கற்பகம், தன் தாய்
அன்னபூரணியிடம் கேட்டாள்.
“அம்மா!”
“என்னடி” என்றாள் அன்னபூரணி.
“கபாலிக்கும் எனக்கும் எப்போ
கல்யாணம் பண்ணி வைக்கப்போறே?”
“ஏண்டி! அதற்கு இப்போ என்ன
அவசரம்?”
“பாட்டியானதற்கு அப்புறம்
கல்யாணம் பண்ணி வைப்பாயா?”
“வாய் நீளம் உனக்கு. அப்பாகிட்ட சொல்றேன்...”
“அப்பாவிடம் சொல்லு முதலில். அதுதான் எனக்கு வேண்டும்.”
“சரி! பார்க்கலாம்” என்றாள் அன்னபூரணி. பிறகு தன்
கணவர் அண்ணாமலையுடன் கலந்தாலோசித்தாள்.
“ஏங்க! கபாலிக்கு நம்ம பெண்ணைத் திருமணம் செய்வதில் என்ன தடை இருக்கு” என்றாள்.
“நல்ல, பெரிய இடமாகப் பார்த்துக் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்” என்றார் அண்ணாமலை.
“ஏங்க! என் அண்ணன் பையனுக்கு என்ன குறைச்சல்...”
“ஒரு டாக்டர் அல்லது என்ஜினீயருக்கு நம் பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுத்தால் வசதியாக வாழ்வாள்...”
தொடர்ந்து அன்னபூரணி வற்புறுத்தியதால் வேண்டா வெறுப்பாகச் சம்மதித்தார் அண்ணாமலை. மறுநாள் அண்ணாமலை, விஸ்வநாதனுடன் தொலைபேசியில் தொடர்பு ெகாண்டார். அவருடைய பேச்சு அடக்கமின்றி இருந்தது.
“ஹலோ விஸ்வநாதன். நான்
அண்ணாமலை பேசுகிறேன்...”
“மைத்துனரே” என்று அழைத்துப்
பேசினால் குறைந்தா போய்விடும்”
என்றார் விஸ்வநாதன்.
“சரி! விஷயத்துக்கு வருகிறேன். என் பெண் கற்பகம், உன் பையன் கபாலியை விரும்புகிறாள். நீ என்ன சொல்கிறீர்?”
“ஓய்! சம்பந்தம் பேசும் லட்சணமா இது? நேரில் வந்து பேசுவதுதானே...”“சரி! பார்க்கலாம்” என்று கூறி போனை வைத்துவிட்டார் அண்ணாமலை.
“என்ன நெனச்சுக்கிட்டு இருக்கான் இந்த அண்ணாமலை. பேச்சில் மரியாதை இல்லை...’’ பொரிந்து தள்ளினார்
விஸ்வநாதன்.
“கபாலி கிட்ட என்ன சொல்றது”
என்றாள் பார்வதி.
“இந்த இடம் வேண்டாம் என்று சொல்” என்றார் விஸ்வநாதன்.
“பாவங்க அவன்...”
“நமக்கென்று ஒரு மரியாதை இருக்கு. அதை இழக்கத் தயாராக இல்லை” என்று கூறித் திருமணப் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் விஸ்வநாதன்.
இரு வீட்டாரின் வறட்டுக் கௌரவம், பிள்ளைகளின் திருமணத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டது.
கபாலியின் நண்பன் ராமநாதன். கபாலியுடன் வங்கியில் பணிபுரிந்து வந்தான். அதே போல் ராமநாதனின் தங்கை பகவதி ஆசிரியையாகக் கற்பகத்துடன் பணிபுரிந்து வந்தாள். நடந்த சம்பவங்களைக் கேள்விப்பட்ட ராமநாதனும் பகவதியும் ஒரு திட்டத்தை வகுத்து, அதைப் பற்றி கபாலியிடமும், கற்பகத்திடமும் கூறினர். முதலில் மறுத்த அவர்கள், அரை மனத்துடன் சம்மதித்தனர்.ஒருநாள் காலை 5 மணி இருக்கும். கல்லூரி மாணவிகளுடன் சேர்ந்து, கல்விச் சுற்றுலா செல்வதாகக் கூறி கற்பகம் பெட்டியில் துணிகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள். அதே நேரம் வங்கி வேலையாக வெளியூர் செல்வதாகக் கூறி விட்டு சூட்கேசை எடுத்துக் கொண்டு புறப்பட்டான் கபாலி.
மறுநாள் காலை ஒன்பது மணி ஆனபோது, விஸ்வநாதன் வீட்டிற்கும் அண்ணாமலை வீட்டிற்கும், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஒரு நபர் பேசினார். தன் பெயரைக் கூறவில்லை. “சார்! வடபழனி முருகன் கோவில் பக்கத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் கபாலி-கற்பகம் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. உங்களுக்குத் தெரியுமா?”
என்றது அந்தக் குரல்.“ஹலோ! ஹலோ” நீங்கள் யார் பேசுகிறது என்று இருவீட்டாரும் கேட்ட பொழுது, போன் கட்டாகி விட்டது.செய்வதறியாது திகைத்து இரு வீட்டாரும், தங்கள் கார்களில் ஏறி அமர்ந்து, வடபழனி நோக்கி விரைந்தனர். அப்போது கெட்டி மேளம் கொட்டும் சத்தம் கேட்டது. ஒரே நேரத்தில் விஸ்வநாதன்-பார்வதி, அண்ணாமலை-அன்னபூரணி ஆகியோர் திருமண மண்டபத்திற்குள் நுழைந்தனர்.
அவர்கள் வேகமாக வருவதைப் பார்த்த சிலர் அவர்களைத் தடுத்தனர். அவர்களை தள்ளிக் கொண்டு மணமேடை அருகே வந்த அண்ணாமலை கொந்தளித்தார்.
“திருட்டுக் கல்யாணமா பண்றீங்க” என்றார்.“ஏண்டி கற்பகம் பெத்த தாய் கிட்டயே உன் கற்ற வித்தையைக் காட்டுகிறாயா?” என்றாள் அன்னபூரணி.
ராமநாதன் அவர்கள் முன்பு வந்து பேச ஆரம்பித்தான்.
“நீங்கள் முறைப்படி திருமணம் செய்து வைக்க முன்வரவில்லை. வறட்டுக் கௌரவம் பார்க்கிறீர்கள். நண்பர்கள் நாங்கள் ஏற்பாடு செய்தோம். இதில் என்ன தவறு?’’ என்றான்.
“இதெல்லாம் உன் வேலையா? கல்யாணத்தை நடக்கவிட மாட்டேன்” என்றார் விஸ்வநாதன்.ராமநாதன் அமைதியாக பதிலளித்தான். பையனும், பெண்ணும் மேஜர். முறைப்படி, ரிஜிஸ்டர் ஆபீஸில் பதிவு செய்யப்பட்டு விட்டது. நீங்கள் விரும்பினால், மாங்கல்ய தாரண நிகழ்ச்சியை பார்க்கலாம். இங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எப்படி உத்தேசம்?” என்றான்.
பார்வதியும், அன்னபூரணியும் கூடிப்பேசினர். வேறு வழி இன்றி கணவன் மார்களுடனும் பேசிச் சம்மதிக்கச் செய்தனர். தாங்கள் கௌரவம் பார்த்தது தவறு என்பதைப் புரிந்து கொண்டு, சம்மதம் தெரிவித்தனர்.“கெட்டிமேளம்! கெட்டிமேளம்’’ என்றான் ராமநாதன். கெட்டிமேளம் முழங்க கற்பகத்தின் கழுத்தில் தாலி கட்டினான் கபாலி.அனைவரும் ஆசீர்வதித்தனர்.
“எங்களை மன்னியுங்கள்” என்று கூறி தம்பதிகள் பெற்றோர்களின் கால்களில் விழுந்து வணங்கினர்.“பரவாயில்லை... எழுந்திருங்கள்” என்றார் அண்ணாமலை.
“நாங்கள் செய்யத் தவறியதை உங்கள் நண்பர்கள் செய்துவிட்டார்கள்” என்றார் விஸ்வநாதன். இரு மனம், ஒரு மனம் ஆனால், திருமணம்தானே என்றான் ராமநாதன். இந்த மகிழ்ச்சியான நேரத்தில் கபாலியின் நண்பர்கள் சேர்ந்து பாடல் ஒன்றைப் பாடினார்கள்.
“சொர்க்கத்திலே முடிவானது...
சொந்தத்திலே நிலையானது...
வாழ்நாளெல்லாம் வளமானது...
இவர் வாழ்வுதான் வாழ்வென்பது.
தொகுப்பு: ஜி.ராதா