நன்றி குங்குமம் தோழி
ஹிந்தி, சமஸ்கிருதம் மொழிகளில் இருக்கும் இலக்கியங்களை தமிழ், மலையாளம், சமஸ்கிருதம், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார் அலமேலு கிருஷ்ணன். இவரது தமிழ் இலக்கிய பங்களிப்பிற்காக தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை 2023ம் ஆண்டிற்கான ‘மொழி பெயர்ப்பாளர் விருதி’னை வழங்கி கௌரவித்தது. அதே போல், ஹிந்தி, சமஸ்கிருதம் மொழிகளுக்கு இவரது பங்களிப்புகளை வட மாநில அரசுகள், இலக்கிய அமைப்புகள் பாராட்டி விருதுகள் வழங்கியுள்ளன. தமிழில் மொழி பெயர்ப்பதற்கான ஆர்வம் ஏற்பட்ட காரணத்தை விவரித்தார் அலமேலு.
‘‘எங்களுடையது சாதாரணக் குடும்பம். திருவனந்தபுரத்தில் நாங்க வசித்து வந்தோம். எனது தகப்பனாரின் பூர்வீகம் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்குறிச்சி. அம்மா, கேரளத்திலுள்ள வைக்கம் பேரூரைச் சேர்ந்தவர். திருமணத்திற்குப் பிறகு என் பெற்றோர் திருவனந்தபுரம் சென்றுவிட்டனர். எனக்கு உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள். அதில் இரண்டு பேர் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் பயின்று வந்தனர். அதனை மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக்க விரும்பி, ‘நிராலா ஹிந்தி காலேஜ்’ என்ற கல்வி நிறுவனத்தைத் தொடங்கினர். ஆரம்பத்தில் ஹிந்தி மட்டும்தான் சொல்லிக் கொடுத்தார்கள். அதன் பிறகு சமஸ்கிருதம் மற்றும் கீதையினை இலவசமாக சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்கள். தங்களிடம் கற்றுத் தேர்ந்தவர்களுக்கு தனியாகக் கல்வி நிறுவனங்களும் அமைத்துக் கொடுத்தனர். அந்த கல்வி நிறுவனத்தில்தான் நானும், என் கடைசி அண்ணாவும் ஹிந்தி, சமஸ்கிருதம் இரண்டும் பயின்றோம்.
என்னுடைய தாய்மொழி தமிழாக இருந்தாலும் கேரளாவில் வளர்ந்ததால், அங்கு மலையாளம் கற்றுக் கொண்டேன். ஏற்கனவே ஹிந்தியும் சமஸ்கிருதமும் கற்றுக் கொண்டிருந்ததால், நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே அண்ணனுடைய கல்வி நிறுவனத்தில் நான் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். அப்படியே நானும் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் உயர் மட்ட கல்வியைக் கற்றேன். பள்ளிப் படிப்பு முடித்தவுடன் கல்லூரியில் படிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், வீட்டில் திருமணம் பேசி முடித்தார்கள். அதன் பிறகு சென்னைக்கு வந்துவிட்டோம். திருமணத்திற்குப் பிறகு படிக்க விரும்பினேன். முடியவில்லை. அதனால் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஹிந்தி, ஆங்கிலம் கற்பிக்கத் தொடங்கினேன்.
அந்த சமயத்தில்தான் கேரள மாநில முகவரி உள்ளவர்கள் வீட்டிலிருந்தே படித்துத் தேர்வு எழுத கேரள பல்கலைக்கழகம் 1973ம் ஆண்டு அனுமதி அளித்தது. என்னுடைய கல்விப் பயணம் நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் துவங்கியது. சென்னையில் படிப்பேன், தேர்வு மட்டும் திருவனந்தபுரம் சென்று எழுதுவேன். பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றேன். அப்போது எனக்கு இரண்டு குழந்தைகள். இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு ஹிந்தியில் முதுகலைப் பட்டம் முடித்தேன். அதனைத் தொடர்ந்து சென்னையிலுள்ள மெட்ரிக் மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் ஆசிரியையாகப் பணியாற்றினேன். பிறகு ‘கல்வியியலில்’ முதுகலைப் பட்டம் பெற்றேன். ஹிந்தி ஆசிரியையாக இருந்து அந்த துறையின் தலைவியாக பதவி உயர்வு பெற்றேன்.
சமஸ்கிருதத்தில் என்னுடைய கல்வித் தகுதியை மேலும் உயர்த்திக்கொள்ளும் நோக்கத்தில் மைசூர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றேன். இந்தப் பட்டம் பெறும் போது எனக்கு பேரக்குழந்தைகளே பிறந்துவிட்டார்கள். அண்ணாக்கள் மூவரும் மொழியாக்கப் பணியில் இடம் பெற்று வந்தார்கள். அதில் பல விருதுகளும் பெற்றார்கள். ஆனால், அவர்கள் ஓய்வு
பெற்ற சில ஆண்டுகளில் மூவரும் ஒருவர் பின் ஒருவராக காலமாயினர். அவர்கள் விட்டுச் சென்ற மொழி பெயர்ப்பு வேலைகளை நான் தொடர ஆரம்பித்தேன்.
ஹிமான்சு ஜோஷி என்ற புகழ்பெற்ற ஹிந்தி எழுத்தாளரின் ‘யாதனா சிபிர் மேன்’ என்ற புத்தகத்தை ‘சித்திரவதை முகாமில்’ என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்தேன். அது புத்தகமாக வெளிவந்தது. இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் அந்தமானிலுள்ள சிற்றறைச் சிறைச்சாலையில் அனுபவித்த கடும் சித்திரவதைகள் குறித்து அந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டு இருந்தது. தமிழ், மலையாளம், சமஸ்கிருதம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மொழியாக்கம் செய்திருக்கிறேன். தமிழ் இலக்கியத்தில் பெண் எழுத்தாளர்கள், அதாவது, சங்க காலப் புலவர்கள் முதல் தற்காலப் பெண் எழுத்தாளர்கள் வரை எழுதியுள்ளேன். பல ஹிந்தி கருத்தரங்குகளில் தமிழ் இலக்கியம் பற்றி ஹிந்தியில் பேசியுள்ளேன்’’ என்றார் 77 வயதான அலமேலு.
தொகுப்பு: பாரதி


