Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குழந்தைகளின் உணர்வுகளை மதியுங்கள்!

நன்றி குங்குமம் தோழி

‘‘குழந்தைகளுடன் உரையாட வேண்டுமென்றால் அவர்களுடைய உலகத்திற்குள் செல்ல வேண்டும். குழந்தைகளின் மனநிலை எப்போதும் சந்தோஷமாகவும், விளையாட்டுத்தனமாகத்தான் இருக்கும். அந்த நிலையில் அவர்களை கட்டுப்படுத்தி வேலைகளை செய்ய வைப்பது அவர்களுக்குள் இருக்கும் குழந்தை தன்மையை கொன்று விடுவதற்கு சமம். ஒவ்வொரு குழந்தையின் உணர்வுகளையும் புரிந்து கொண்டு அதற்கு மதிப்பளிக்க வேண்டும்’’என்று பெற்றோர்களுக்கு பயிற்சிகளை கொடுத்து வருகிறார் ‘அம்மா டுடே’ நிறுவனத்தை சேர்ந்த வைஷாலி.

குழந்தைகளை எப்படி பெற்றோர்கள் வளர்க்க வேண்டும் என்பது குறித்து தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதோடு மட்டுமில்லாமல் புத்தகங்களையும் எழுதி வெளியிட்டு வருகிறார். குழந்தைகள் குறித்து அவரிடம் பேசிய போது... ‘‘நான் பிறந்தது தூத்துக்குடி அருகில் உள்ள கிராமம். பயோடெக்னாலஜியில் முதுகலைப் பட்டம் பெற்றேன். படிப்பு முடித்தவுடன் ஆசிரியராக வேண்டும் என்று நினைத்தேன். அதனால் கல்லூரியில் படிக்கும் போதே அங்குள்ள பகுதிகளுக்கு சென்று வகுப்புகள் எடுப்பேன். ஆசிரியராக வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்ததால், பி.எட் முடித்து விட்டு முழு நேர ஆசிரியராக வேலை செய்தேன்.

திருமணத்திற்குப் பிறகு சென்னையில் செட்டிலாகிட்டோம். நான் ஆசிரியராக இருந்ததால், என்னுடைய குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுத்து வளர்த்தேன். அதையே ஏன் மற்ற குழந்தைகளுக்கும் சொல்லித்தரக்கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. அதாவது, பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பாடங்களை எப்படி சொல்லித்தர வேண்டும். குழந்தைகளின் உணர்வுகளுக்கு எவ்வாறு மதிப்பளிக்க வேண்டும்.

ஆசிரியர்களும் கதை அல்லது விளையாட்டு வழியாக குழந்தைகளுக்கு எப்படி பாடங்களை சொல்லித்தரலாம் என மூன்று பாகமாக பிரித்து பயிற்சி அளிக்க ஆரம்பித்தேன்.மேலும் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று குழந்தைகளை எப்படி கையாள வேண்டும், பாடங்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை அளித்து வருகிறோம்’’ என்றவர், தான் அளித்து வரும் பயிற்சிகள் குறித்து பேசத் துவங்கினார்.

‘‘இன்று பெற்றோர்கள் குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதில்லை. முதலில் அவர்களுடன் பேசுங்கள். அதை தவிர்த்து அவர்களை பார்த்ததும், உடனே கணக்கு அல்லது மற்ற பாடங்களில் இருந்து கேள்விகளைதான் கேட்கிறோம். அவர்களின் மனநிலை என்ன என்பதை நாம் புரிந்துகொள்வதில்லை. அதைத் தவிர்த்து அவர்களிடம் பேசினாலே பாடங்களை பற்றித்தான் பேசுவோம் என்று நினைக்கக்கூடிய நிலைக்கு கொண்டு போகிறோம்.

இந்த மாதிரியான எண்ணங்கள் மாற வேண்டும். குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்று நினைத்து பெற்றோர்களில் ஒருவரிடம் குழந்தைகளுக்கு எப்போதும் பயம் இருக்க வேண்டும் என்று அதற்கேற்ப நடந்து கொள்கிறோம். பயந்த மனநிலையில் இருக்கும் குழந்தைகள் தங்களின் வயதிற்கேற்ற செயல்களை செய்ய அச்சப்படுவார்கள். அவர்களை படிப்படியாக வளர அனுமதிக்க வேண்டும்.

இங்கு குழந்தைகளுக்கான புத்தகங்கள் அதிகம் இல்லை. அப்படியே இருந்தாலும் அவை வெளிநாட்டு எழுத்தாளர் எழுதிய புத்தகமாகத்தான் இருக்கிறது. அப்படியே இருந்தாலும் பெரும்பாலான புத்தகத்தில் பெண்கள் கோபப்பட்டால் அவர்களுக்கு நண்பர்கள் இருக்க மாட்டார்கள் என்று தான் புத்தகங்கள் குறிப்பிடுகிறது. ஒருவரின் உணர்வுகளை வெளிப்படுத்துவது தவறு என்றுதான் குழந்தைகளுக்கான புத்தகத்திலும் எழுதப்பட்டுள்ளது. நான் அப்படி இல்லாமல் குழந்தைகள் இயல்பாக இருப்பது குறித்து என் புத்தகங்கள் வழியாக சொல்லித்தர விரும்பினேன்.

முக்கியமாக புத்தகங்கள் குழந்தைகளுடன் உரையாடலை நிகழ்த்துவது போல் இருக்க வேண்டும். அப்படி நான் எழுதிய புத்தகங்கள் ஒன்று விலங்குகளின் உணர்வுகள் பற்றியது. விலங்குகள் தன் குட்டிகளுடன் எவ்வாறு நடந்து கொள்கிறது என்பதை சுவாரஸ்யமாக எழுதியுள்ளேன். உதாரணத்திற்கு சிலந்தி பூச்சிகள் தான் இட்ட முட்டைகளை முதுகில் சுமந்து செல்லும், சிங்கம் தன் குட்டிகளை பாதுகாக்க ஒளிந்து கொள்ளும், ஒரு பெண் யானை குட்டியை ஈனும் போது மற்ற பெண் யானைகள் அதனை சுற்றி நின்று கொள்ளும் போன்ற தகவல்களை அதில் குறிப்பிட்டு மனிதர்களுக்கும் விலங்குகளை போல் உணர்வுகள் உள்ளது என்று புத்தகம் இருக்கும்.

வெந்து தணிந்தது கோபம், என் இரண்டாவது புத்தகம். இதில் கோபப்பட்டு குழந்தைகள் கத்தும் போது, அழும் போது அவர்களை எப்படி கையாள்வது என்பது குறித்து பேசியிருக்கிறேன். அந்த புத்தகம் குழந்தைகளுக்கானது என்றாலும் பெற்றோர்களும் படித்து தெரிந்துகொள்ள நிறைய விஷயங்கள் உள்ளது. குழந்தைகளுடைய பார்வையிலிருந்து பெற்றோர்கள் பார்த்தால்தான் குழந்தைகள் ஏன் அந்த தவறினை செய்தார்கள் என்று யோசிக்க தோணும். குழந்தைகளுக்கு புதிது புதிதாக கற்றுத்தர வேண்டும் என்பதால், ஒவ்வொரு குழந்தைக்கும் புதிய விஷயங்களை சொல்லித் தருகிறோம்.

குழந்தைகளை ஆறு வயதிற்கு மேல் தான் பள்ளிகளில் சேர்க்க வேண்டும். காரணம், ஆறு வயது வரை குழந்தைகளின் மூளை மற்றவர் சொல்வதை அப்படியே கேட்டுக் கொள்ளும். அந்த வயதில் அவர்களை கட்டுப்படுத்தி பாடங்களை கற்றுத் தருவதால், அவர்களின் சிந்தனை திறனை பாதிக்கும். ஆறு வயதிற்கு பிறகுதான் கைகளில் உள்ள எலும்புகள் வளரத் தொடங்கும். அதற்கு முன் அவர்களை எழுத வைப்பது சரியானதல்ல. இன்றைய பெற்றோர்கள் அதனை புரிந்துகொண்டுள்ளனர். அதனால் காலம் தாழ்த்தியே சிலர் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். இன்றைய குழந்தைகள் நாளைய இளம் தலைமுறையினர். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உரையாட பழகினால் அடுத்து ஒரு நல்ல தலைமுறை உருவாகும்’’ என்கிறார் வைஷாலி.

மா.வினோத்குமார்