Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புகைப்படம் போல் காட்சியளிக்கும் ரியலிசம் ஓவியங்கள்!

நன்றி குங்குமம் தோழி

ஓவியங்கள் பலவிதம்... அதில் ஒன்று தான் ரியலிசம் ஓவியங்கள். 19ம் மத்திய காலத்தில் உருவான ஓவிய முறை இது. இயற்கையில் மனிதர்கள் மற்றும் உலகம் எவ்வாறு இருக்கின்றனவோ, அதை மிகவும் நுணுக்கமாகவும், உண்மையோடு வரைந்து காட்டும் பாணிதான் ரியலிசம் ஓவியங்கள்.வாழ்க்கையை நேர்த்தியாக காட்சிப்படுத்தும் ரியலிசம் ஓவியங்கள், கலை வரலாற்றில் ஒரு முக்கிய இடம் பெற்றுள்ளன. இது பார்வையாளர்களை உணர்வுபூர்வமான சிந்தனையாளராக மாற்றுகிறது. இந்த வகை ஓவியங்களை வரையும் ஓவியர்கள் அதிகளவில் இல்லை.

இந்த ஓவியங்களை மிகவும் நிதானமாகவும் பொறுமையாகவும் வரைய வேண்டும். அந்தளவு பொறுமையாக வரையக்கூடியவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ரியலிசம் ஓவியத்தின் தனித்

தன்மையே பார்க்கும் போது புகைப்படத்தினை பார்ப்பது போல் இருக்கும். அந்த நேர்த்திதான் இதன் தனிச்சிறப்பு. அந்த நேர்த்தி மாறாமல் தத்ரூபமாக வரைந்து வருகிறார் வர்ஷிதா.

‘‘கள்ளக்குறிச்சியில்தான் பிறந்து வளர்ந்தேன்.

சின்ன வயசில் இருந்தே எனக்கு ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் அதிகமாக இருந்தது. அதே போல் ஃபேஷன் டிசைனிங்கை தேர்வு செய்து படிக்க விரும்பினேன். ஆனால் பொறியியல் முடிச்சேன். அதன் பிறகு எனக்கு அது சார்ந்த தொழிலில் ஈடுபட விருப்பமில்லை. கலை சார்ந்து என்னை ஈடுபடுத்த விரும்பினேன். ஓவியங்கள் மேல் ஆர்வம் இருந்ததால், அதற்கான பயிற்சியில் முழுமையாக ஈடுபட ஆரம்பித்தேன்.

நான் ஓவியங்கள் பயில ஆரம்பித்த காலத்தில்தான் கேலிகிராஃபி பற்றி தெரிய வந்தது. இது ஒரு வகையான எழுத்துக் கலை. நாம் எழுதும் ஆங்கிலம் மற்றும் தமிழ் எழுத்துக்களை புதுவிதமாகவும் ஸ்டைலாகவும் எழுதுவதுதான் கேலிகிராஃபி. அதனால் அதை கற்றுக் கொண்டேன். அதைத் தொடர்ந்து ரியலிசம் ஓவியங்களை வரைவதற்கான பயிற்சி எடுத்தேன். அந்த ஓவியங்கள் என்னை மிகவும் கவர்ந்ததால், முழுதிறனுடன் பயிற்சியினை மேற்கொள்ள ஆரம்பித்தேன்’’ என்றவர்

ரியலிசம் ஓவியங்கள் குறித்து பேசத் தொடங்கினார்.

‘‘மற்ற ஓவியங்களை விட இந்த ஓவியங்கள் வரைய பொறுமை தேவை. குறிப்பாக இந்த ஓவியங்கள் வரைய அதிக நாட்கள் ஆகும். மேலும் ஒவ்வொரு ஓவியங்கள் வரையும் போது அதிலுள்ள ஒவ்வொரு விஷயங்களையும் தனித்து காட்ட வேண்டும். அதன் காரணமாகவே இந்த ஓவியங்களை வரைபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஒரே விஷயத்தை தினமும் செய்யும் போது மனமும் உடலும் பொறுமையிழக்கும். அந்த நிலைக்கு செல்லாமல் கவனமாக அதை செய்து முடிக்க வேண்டும். லைவ் பெயின்டிங் வரையும் போது நாம் கண்களால் பார்த்து வரைவோம். ரியலிசம் ஓவியங்களில் நாம் என்ன ஓவியம் தீட்டப் போகிறோம் என்பதை முன்பே முடிவு செய்து, அதை புகைப் படமாக எடுத்துக் கொண்டு பிறகு அதைப் பார்த்து வரைவேன். சிலர் தங்கள் குழந்தையின் புகைப்படத்தினை கொடுத்து கிருஷ்ணராக வரைய சொல்வார்கள். அதில் நம்முடைய தனித்தன்மையை காட்ட முடியும்.

ரியலிசம் ஆர்ட் பொறுத்தவரை இதற்கு தொடர் பயிற்சிகள் தேவை. மற்ற ஓவியங்களை பொறுத்தவரை கற்றுக்கொண்டு அதை நாமே வரையத் தொடங்கும் நேரத்தை விட இந்த ஓவியத்தை வரைவதற்கு ஆகும் நேரம் அதிகம்தான். தொடர் பயிற்சி எடுத்துக் கொண்டாலே இந்த ஓவியத்தை வரையலாம். ரியலிசம் போர்ட்ரேட் ஓவியங்கள் பொறுத்தவரை முதலில் பென்சிலால் வரைவோம். அதற்கே பல மணி நேரமாகும்.

பென்சிலால் இந்த ஓவியத்தை வரைந்து பார்ப்பதற்கு அழகாக இருக்கும். என்னிடம் ஒருவர் தன் தந்தையின் புகைப்படத்தை கொடுத்து வரைய சொல்லிக் கேட்டார். அவரிடம் அந்த ஒரு புகைப்படம்தான் இருந்தது. அதிலும் வெளுத்துப் போகும் நிலையில் இருந்தது. அந்த புகைப்படத்தை வைத்து நான் அப்பாவின் தோளில் கைப்போட்டு நிற்பது போல ஒரு ஓவியத்தை வரைந்து கொடுத்தேன். அதைப் பார்த்த அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். அந்த சம்பவம் என்னை நெகிழ வைத்தது. நான் ஓவியங்கள் வரைவது மட்டுமில்லாமல், பயிற்சியும் அளிக்கிறேன்’’ என்கிறார் வர்ஷிதா.

தொகுப்பு: மா.வினோத்குமார்