Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

ரெடி... ஸ்டார்ட் 1...2...3...83 வயதில் அந்தரத்தில் ஜம்ப்!

நன்றி குங்குமம் தோழி

உண்மையான வயது உடலில் இல்லை... மனதில்தான்! ஏஜ் இஸ் ஜஸ்ட் எ நம்பர் என்பதை தன் சாகசத்தின் மூலம் நிரூபித்து, பார்வையாளர்களை திக்குமுக்காட வைத்திருக்கிறார் வெள்ளைக்காரப் பெண் ஒருவர். இங்கிலாந்து நாட்டில் இருந்து இந்தியாவை ஜாலியாய் சுற்றிப் பார்க்க வந்த அந்த வெள்ளைக்கார பெண்ணின் மனதில் நீண்ட நாள் நிறைவேறாத கனவு ஒன்று இருந்திருக்கிறது. அட, கனவுதான எனக் கடக்க, அவருக்கு வந்தது சாதாரண கனவல்ல. ஆம்!! அந்தரத்தில் தலைகீழாய் பாயும் பங்கி ஜம்ப் கனவே அது. ஆனால், குதிக்க ஆசைப்பட்டு கனவு கண்ட பெண்மணியின் வயதோ ஜஸ்ட் 83!

தன்னுடைய நீண்டநாள் கனவை நிறைவேற்றும் பயணமாக, சரியான வாய்ப்பை அவரின் இந்த இந்திய சுற்றுப் பயணம் அமைத்து தந்தது.வடக்கில் அமைந்துள்ள ரிஷிகேஷ் அருகில், கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள பிரபல சுற்றுலாத் தலம் ஷிவ்புரி. இது சாகச விளையாட்டுகளுக்கு பெயர் போன இடம். உலகெங்கிலும் உள்ள சாகசப் பிரியர்களை ஈர்க்கின்ற வெள்ளை நீர் ராஃப்டிங்கும் இங்கு ரொம்பவே பெயர் பெற்ற ஒன்று. இங்குதான் உயரத்தில் இருந்து அந்தரத்தில் குதிக்கின்ற அந்த பங்கி ஜம்ப் தளமும் இருக்கிறது.

117 மீட்டர் உயரத்தில் இருந்து கீழ் நோக்கி அந்தரத்தில் பாய்ந்து குதிக்கத் தயாரான அந்த மூதாட்டியின் முகத்தில் துளியும் பயம் இல்லை. பாய்வதற்கு முன் நடனமாடி, தனது மகிழ்ச்சியையும்... உற்சாகத்தையும் வெளிப்படுத்தியவர், கண்ணிமைக்கும் நொடியில் காற்றைக் கிழித்து அந்தரத்தில் பாய்ந்து, பறவையாய் வானில் பறக்க ஆரம்பிக்கிறார். அவர் பாய்கிற நொடியில், சுற்றியிருந்தோர் மூச்சை பிடித்தபடி, திக்... திக்கென இதயப் படபடப்பில் கலக்கமடைய... மூதாட்டியோ புன்னகை மாறாமல், தலைகீழாய் அந்தரத்தில் தொங்கியவாறே கைகளை அசைத்து வட்டமிட, அந்த நிமிடத்தில் கேமராவை சற்றும் அவர் கவனிக்கவில்லை.

மாறாக கைகளை காற்றில் அசைத்து அசைத்து நடனமாடி, தன் உலகத்திற்குள் மூழ்குகிறார். அவரின் அசைவுகளில் துளியும் பயமில்லை. அவரின் புன்னகையிலும் உயிர்ப்பு தெரிகிறது. பங்கி ஜம்பிங் பயணத்தை முடித்து அவர் தரைக்கு திரும்பிய போது, சுற்றியிருந்தோர் உற்சாக மிகுதியால் கைத்தட்டி ஆரவாரம் செய்து ஆர்ப்பரிக்கின்றனர்.

இந்த வீடியோவை Himalayan Bungy நிறுவனம் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர... பார்வையாளர் பலரின் இதயங்களை வெள்ளைக்காரப் பெண்மணியின் வீடியோ வென்று வருகிறது. வீடியோ வைரலானதுமே, நெட்டிசன்கள் அவரின் தைரியத்தைப் பாராட்டி பல்வேறு கருத்துக்களையும் பதியத் தொடங்கி விட்டனர்.

“கேமராவை அவர் பார்க்கவே இல்லை. தன் உலகத்திற்குள் மூழ்கி ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து ரசித்தார். அவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் இது” என ஒருவரும்... “பாலரினா (ballerina) போல அவரைப் பறக்க விடுங்கள்! எத்தனை அழகாய் கைகளை விரித்து அவர் அசைக்கிறார் பாருங்கள்” என இன்னொருவரும்... “ஒரு இசையமைப்பாளராய் மாறி, அவர் கைகளை அசைக்கும் விதத்தைப் பார்க்க, அவர் உடலின் அசைவு ஒவ்வொன்றுமே அவருள் இசையாய் ஓடுகிறது” என மற்றொருவரும் தங்கள் கருத்துக்களை ரசனையோடு பகிர்ந்துள்ளனர்.

நம்பிக்கை இருந்தால், எந்த வயதிலும் எந்தக் கனவையும் நிறைவேற்றலாம் என்பதை சொல்லால் அல்ல செயலால் நிரூபித்திருக்கிறார் இந்த 83 வயது பாட்டி. இப்ப புரியுதா..? Age is just a number...

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்