Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வாசகர் பகுதி- நவராத்திரி துளிகள்!

நன்றி குங்குமம் தோழி

நவராத்திரி துளிகள்!

*வாக்தேவி என வேதங்களால் போற்றப்படும் ஸ்ரீ சரஸ்வதி ஞான வடிவமாக திகழ்பவர். இவளின் திருமுகம் - பிரம்ம வித்தை, திருக்கரங்கள் - நான்கு வேதங்கள், கண்கள் - எண்ணும் எழுத்தும், திருப்பாதங்கள் - இதிகாசங்கள். தேவியின் தனங்கள் - சங்கீத சாகித்யம். இவள் கரத்தில் இருக்கும் யாழ் ஓம்காரம் எனப்படும் ஸர்வ சித்தி மந்திரத்தை குறிக்கின்றன.

*ஆந்திராவில் பாசாரா எனும் ஊரில் ஸ்ரீ சரஸ்வதிக்கு தனிக் கோயில் உண்டு. விநாயகர் வழிபட்ட ஆலயம். இங்கே வீணை இல்லாமல் காட்சி தரும் கலைவாணியை விநாயகர் வழிபட்டதாகவும் சொல்வர்.

*குமரி மாவட்டம் தக்கலைக்கு அருகில் உள்ள பத்மநாபபுரம். இங்கே தனிக் கோயிலில் அருள்பாலிக்கிறாள் ஸ்ரீ சரஸ்வதி. திருவனந்தபுரம் ஆராட்டு விழாவின் போது இங்குள்ள சரஸ்வதி தேவியே எழுந்தருளுகிறாளாம்.

*விளக்கில் வாசம் செய்பவள் ஸ்ரீ மகாலட்சுமி. எனவே, திருவிளக்கை தீபலட்சுமி என்பர். ஸ்ரீ துர்க்கையின் வடிவங்களிலும் ஸ்ரீ தீப துர்க்கை உண்டு. தீபத்தில் தீப ஒளியாக தீப லட்சுமியாக திகழ்பவள் வைகுண்டத்தில் ஸ்ரீ மகாலட்சுமியாகவும், சொர்க்கத்தில் ஸ்ரீ சொர்க்க லட்சுமியாகவும், இல்லங்களில் கிரக லட்சுமியாகவும், விலங்குகளிடம் ஸ்ரீ சோப லட்சுமியாகவும், சத்திரியர்களிடம் ஸ்ரீ கீர்த்தி லட்சுமியாகவும், வேதாந்திகளிடம் ஸ்ரீ தயா லட்சுமியாகவும் அருள்பாலிக்கிறாள்.

*அழகிய யானைகள், கங்கை நீர், தாமரை ஆசனம், திருமாலின் மார்பு, மன்னவர்கள், பசுக்கூட்டம், நெற்பயிர் விளைச்சல், பொய் பேசாத சான்றோர்கள், நல்ல சுபம் பொருந்திய வீடுகள், வீரர்களின் தோள்கள், அரசனின் கொடி, துளசி, வில்வம், மலர்கள் நிறைந்த கடம்ப மரம், பழங்களின் சுவை, அழகும், குணமும் கொண்ட பெண்கள் ஆகியோரிடத்து மகாலட்சுமி நீங்காது இருப்பாள்.

*கோவை சிங்காநல்லூர் செல்லபாண்டியம்மன் கோவிலில் நவராத்திரி முதல் நாளன்று கொலு வைக்க அம்மன் உத்தரவு கேட்பார்கள். உத்தரவு கிடைத்தால் கொலு வைப்பார்கள். இல்லையெனில் அந்த ஆண்டு கொலு வைப்பதில்லை.

*திருவீழிமிழலை திருத்தலத்தில் சரஸ்வதி, காயத்ரி, சாவித்ரி ஆகிய 3 தேவியரும் தனித்தனியே சிவலிங்கம் ஸ்தாபித்து, சிவ பூஜையை செய்தனர். இவர்கள் வழிபட்ட லிங்கத் திருமேனிகள் சரஸ்வதீஸ்வரர், காயத்ரீஸ்வரர், சாவித்ரீஸ்வரர் என வழங்கப்படுகின்றன.

தொகுப்பு: மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.