நன்றி குங்குமம் தோழி
* இஞ்சியின் மேல் தோலை கழுவி நிழலில் காய வைத்து, ஏலக்காய் தோலுடன் பொடித்து, ¼ டீஸ்பூன் டீயுடன் சேர்த்தால் மணமாக இருக்கும்.
* வாழைக்காயின் தோலை பொடியாக நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்தால் டேஸ்டான பொரியல் ரெடி.
* பிரெட் ஸ்லைஸ் மீதமிருந்தால் மிக்ஸியில் பொடித்து, வறுத்து பொரியல், குருமாவில் சேர்க்கலாம்.
* மீதமிருக்கும் ரவா அல்லது அரிசி உப்புமாவுடன் கடலைமாவை சேர்த்து பச்சைமிளகாய், சோம்பு, பட்டை, கிராம்பு, புதினா, உப்பு சேர்த்து வடை அல்லது பக்கோடா செய்யலாம்.
* சப்பாத்தி மீதமானால் விருப்பமான நீளத்தில் நறுக்கி, வாணலியில் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி-பூண்டு பேஸ்ட், தக்காளி சேர்த்து வதக்கி மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், கரம்மசாலா, உப்பு சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும். பிறகு சப்பாத்திகளை சேர்த்து மிதமான தீயில் கிளறினால் மசாலா சப்பாத்தி ரெடி. இதே பக்குவத்தில் பூரியை சேர்த்தால் மசாலா பூரி.
* முருங்கைக்கீரை அதிகமிருந்தால் ஆய்ந்து, நிழலில் காய வைத்து பொடித்து வைத்துக் கொண்டால் டீத்தூளுக்கு பதில் கீரைப் பொடி சேர்த்து டீ தயாரிக்கலாம். தோசை மாவுடன் கீரைப் பொடி சேர்த்து தோசை வார்க்கலாம்.
* விசேஷ நாட்களில் மீதமிருக்கும் ஸ்வீட்களை மிக்ஸியில் ஓட விட்டு, தேவையான அளவு கன்டென்ஸ்ட் மில்க் சேர்த்து உருண்டைகளாக உருட்டி ஜெம்ஸ் மிட்டாய் கொண்டு அலங்கரித்தால் சுவையாக இருக்கும்.
தொகுப்பு: பார்வதி கோவிந்தராஜ், நாகப்பட்டினம்.