Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாசகர் பகுதி

நன்றி குங்குமம் தோழி

பொங்கல் சிறப்புகள்

*நமக்கு உணவைக் கொடுக்கும் பூமியிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்களை சூரிய பகவானிடம் காட்டவே மண் பானையில் பொங்கல் செய்கிறோம். பூமியின் அடியில் விளையக்கூடிய மங்கலப் பொருளான மஞ்சளையும் ஜீரணத்திற்கு உதவும் இஞ்சியையும் பானையில் கட்டுகிறோம். சில வீடுகளில் பூமிக்கு அடியில் காய்க்கும் காய்களால் கறி சமைத்து சூரியனுக்குப் படைக்கும் வழக்கமும் உண்டு.

*மகாராஷ்டிரா பகுதிகளில் பொங்கல் பண்டிகை இந்திரனுக்கு மரியாதை செய்யும் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகைக்கு ஹசாகா என்று பெயர். இப்பண்டிகையின் போது இந்திரனை கவுரவிக்கும் பொருட்டு இந்திரனின் வாகனமான யானை சித்திரத்தை எல்லா இடங்களிலும் வரைந்து கொண்டாடுகின்றனர்.

*பஞ்சாப்பிலும், அரியானாவிலும் லோகிரி எனப்படும் விழாவாக பொங்கல் திருநாளை கொண்டாடுகின்றனர். அப்போது அரிசி, சோளப்பொரி ஆகியவற்றை தீயிலிட்டு, கிராமியப் பாடல்களை பாடி மகிழ்வர். காவி மற்றும் அரிசி கலந்த குழம்பை சகோதரர்களின் நெற்றியிலிட்டு தீமையிலிருந்து சகோதரர்களை காப்பாற்ற வேண்டுமென்று கடவுளிடம் பிரார்த்திப்பர்.

*காஞ்சிபுரத்திலிருக்கும் வரதராஜப் பெருமாள் பொங்கல் அன்று இரவு பத்துமணிக்கு பரிவேட்டைக்கு கிளம்பி அங்கிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீ புரம் நரசிம்மர் கோயிலுக்கு செல்வார். இங்கு வரும் வரை பெருமாளுடன் கூடவே பாசுரம் பாடிக் கொண்டே வருவார்கள் ஆழ்வார்கள். வன போஜனம் விழா சிறப்பாக நடக்கும். நாற்பது படிகளைக் கடந்து குன்றின் மீது இருக்கும் நரசிம்மப் பெருமாளை வணங்குவார்கள். அதிகாலை நான்கு மணிக்கு கிளம்பி வரதராஜப் பெருமாளும், நரசிம்மப் பெருமாளும், திருமுக்கடல் என்னுமிடத்தில் உள்ள ஸ்ரீ னிவாசப் பெருமாளை வணங்கச் செல்வர். மூன்று பெருமாள்களும் அன்று பக்தர்களுக்கு காட்சி அளிப்பது மிகவும் விசேஷமானது.

*தென் மாவட்ட மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்தது பனை ஓலை. அதை புதியதாக வெட்டி சில நாட்கள் காய வைக்கப்பட்ட புதிய பனை ஓலையால் பொங்கல் வைப்பார்கள். அரிசி, வெல்லம் எல்லாம் போட்ட பிறகு பொங்கலை கிளறி விடுவதற்கு அகப்பைக்கு பதிலாக பனை மட்டையை பயன்படுத்துவார்கள். இதனால் பொங்கலின் சுவை கூடும் என்பர். அதே போன்று பனங்கிழங்கை பொங்கலிட்டு, அடுப்பில் வைத்து சுட்டு, படையலில் வைப்பார்கள். பொங்கலை சாப்பிடுவதற்காக பனை ஓலையை சிறிது சிறிதாக வெட்டி கரண்டிகளாக பயன்படுத்துவர். தற்போது பச்சை பனை மட்டை அகப்பையும் பனை ஓலையால் ஆன சிறிய கரண்டியும் காணாமல் போனாலும், பனங்கிழங்கும், பனை ஓலையும் இன்றளவும் பொங்கலில் முக்கிய இடம் பிடித்துள்ளது.

தொகுப்பு: ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.