நன்றி குங்குமம் தோழி
ரக் ஷா பந்தன், சகோதரத்துவத்தைக் கொண்டாடும் வட இந்திய பண்டிகை. தற்போது தென்னிந்தியாவிலும் இந்தப் பண்டிகை பிரபலமாகி வருகிறது. ஒவ்வொரு ஆவணி மாத பௌர்ணமி நாளன்று இவ்விழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு முழு பௌர்ணமி நாளான ஆகஸ்ட் 9ம் தேதி ரக் ஷா பந்தன் கொண்டாடப்பட்டது. உடன் பிறந்தவர்கள் மட்டுமல்லாமல் சகோதர, சகோதரிகளாக நினைத்து வாழும் யார் வேண்டுமானாலும் இந்நாளில் ராக்கிக் கயிற்றை தன் சகோதரர் கையில் கட்ட, அவர் சகோதரிக்கு பரிசுகள் தருவது வழக்கம். அன்று முதல் தன் சகோதரியின் பாதுகாப்பிற்கும் நல்வாழ்விற்கும் தான் மட்டுமே பொறுப்பு என்று உறுதி அளிக்கும் அர்த்தத்தில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ரக் ஷா பந்தன் உருவாகக் காரணமாக ஒரு குட்டி ஸ்டோரி சொல்லப்படுகிறது. மகாபாரதப் போரில், கிருஷ்ணருக்கு ைகயில் காயம் ஏற்பட்டது. திரௌபதி தன் புடவையை கிழித்து காயத்தின் மேல் கட்டி ரத்தம் வடிவதை தடுப்பார். கிருஷ்ணரும் திரௌபதியை சகோதரியாக பாவித்து, அவரை எதிர்காலத்தில் எந்தப் பிரச்னை வந்தாலும் பாதுகாப்பதாக உறுதியளித்தார். அதை காப்பாற்றும் விதமாக சூதாட்டத்தில் துச்சாதனன், திரௌபதியை துகிலுரித்த போது அவளின் மானத்தை கிருஷ்ணர் காப்பாற்றினார். திரௌபதி கிருஷ்ணரின் கையில் புடவையை கிழித்துக் கட்டிய நிகழ்வே இன்று ரக் ஷா பந்தன் விழாவாக கொண்டாடப்படுகிறது என்கிறது புராணங்கள்.
“உன் கூடவே பொறக்கணும்... தாய் போலவே காக்கணும்..!” பாடல் வரிகள் சகோதர, சகோதரிகளின் பாச கீதமாக மாறியுள்ளது. என்ன ேவலையாக இருந்தாலும், வெளிநாட்டிலே இருந்தாலும், தங்கையிடம் இருந்து வரக்கூடிய அந்த ஒரு பாசக்கயிறுக்காக அண்ணன் வருடம் முழுக்க காத்திருக்கத்தான் செய்கிறான். ஆனால், இந்திய எல்லையில் வெயில், மழை, பனி, வெள்ளம் என எதையும் பொருட்படுத்தாமல் நம் எல்லோரின் பாதுகாப்பிற்காக உழைக்கும் இந்திய ராணுவ வீரர்களும் நம் சகோதரர்கள் தானே! அவர்களுக்கும் அந்தப் பந்தத்தை கொடுக்க முடியும் என்கிறார் கோவையைச் சேர்ந்த ரேவதி கணேசன்.
சென்னையில் வசிக்கும் மூத்த குடிமக்களான ரேவதி கணேசன், கைத்திறனில் வல்லவர், தஞ்சாவூர் ஓவியர். பல ஆண்டுகளாக, அந்த ஒரு விஷயத்தை அமைதியாக செய்து வருகிறார். 1998ல் ஆரம்பித்த அவரின் அந்தப் பாசம் இன்று வரை தொடர்கிறது. நாட்டில் உள்ள சகோதரிகள் அனைவரும் நிம்மதியாக வாழ வேண்டும் என்று எல்லையில் காவல் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு வருடா வருடம் ராக்கிகளை அனுப்பி அவர்களுடன் சகோதர பந்தத்தில் இணைந்துள்ளார். அவரை சந்தித்த போது...
“சொந்த ஊர் கோவை, சென்ற வருடம் சென்னையில் செட்டிலாயிட்டோம். என் கணவர் பிசினஸ் மேன். இரண்டு பிள்ளைகள். 1998, கோயம்புத்தூரின் துயரமான வருஷமுன்னுதான் சொல்லணும். அந்தாண்டு பிப்ரவரி மாதம், 12 இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்தன. அதில் பலர் இறந்தனர். ஆயிரக்கணக்கானவர்கள் காயம் அடைந்தனர். அந்த சம்பவத்தின் தாக்கம் இன்றும் எங்கள் மனதைவிட்டு நீங்கவில்லை.
நிலமையை கட்டுக்குள் கொண்டு வர இந்திய ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர். அதில் பெண்களும் அடங்குவர். இவர்கள் பல மாதங்களாக அங்கு ஒரு கல்யாண மண்டபத்தில் தங்கி கோவையை பாதுகாத்து வந்தனர். ஒரு நாள் நான் வெளியே சென்ற போது என்னுடைய வாகனம் இவர்கள் தங்கியிருந்த மண்டபத்தின் வாசலில் நின்றுவிட்டது. அப்போது நான் பார்த்த அந்த காட்சிகள் என்னை மிகவும் பாதித்தன. பெண் ராணுவ வீரர் ஒருவர் கையால் துணி துவைத்துக் கொண்டிருந்தார். வீரர்கள், மண்டபத்தில் பாயை விரித்து தூங்கிக் கொண்டிருந்தனர். அது சிறிய மண்டபம். போதிய வசதிகள் இல்லை. ஆனால், அவர்கள் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. நம்மை காக்க தங்கள் உயிரை பணயம் வைக்கும் ராணுவ சகோதரர்களுக்கு இவ்வளவுதான் மரியாதையா என்று என் மனம் வருத்தியது.
என் கணவர் ரோட்டரி கிளப்பில் முக்கிய உறுப்பினர். கிளப்பின் தலைவர் என்னை அழைத்து பெண் உறுப்பினர்களை சேர்த்து நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்ய சொன்னார். மண்டபத்தில் தங்கி இருந்த ராணுவ குழுவினர்களை சந்தித்து அவர்களுக்கு ராக்கி கட்டலாம் என்ற யோசனை வந்தது. அதன்படி, மும்பையிலிருந்து 250 ராக்கிகளை வாங்கி அவர்களுக்கு ராக்கி கட்ட அனுமதி பெற்றுச் சென்றோம்.
முகாமிலிருந்த ஜவான்களுக்கு முறைப்படி ஆரத்தி எடுத்து, இனிப்பு வழங்கி ராக்கிகளை கையில் கட்டினோம். அப்போது ஜவான் ஒருவர் அழ ஆரம்பித்துவிட்டார். அவருக்கு தன் குடும்பத்தின் நினைவு வந்துவிட்டது என்று புரிந்தது. என்னால் அந்நிகழ்ச்சியை மறக்கவே முடியாது. அன்று முடிவு செய்தேன். ராக்கி கட்டுவதை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து செய்ய வேண்டும்’’ என்றவர், வாகா எல்லைக்கு முதன்முறையாக ராக்கிகளை அனுப்பியதை நினைவுகூர்ந்தார்.
‘‘ராக்கிகளை அனுப்ப முடிவு செய்துவிட்டேன். ஆனால், எப்படி அவர்களிடம் கொண்டு சேர்ப்பது என்று தெரியவில்லை. அப்போது கோயம்புத்தூர் கேம்ப்பிலிருந்து ராணுவ ஹெலிகாப்டர் பொருட்களுடன் நேரடியாக நகருக்கு செல்வது தெரிந்தது. எண்ணங்கள் உயர்ந்ததாக இருந்தால் கடவுள் துணை இருப்பார் என்பதற்கு அந்நிகழ்ச்சி உதாரணம். ஆனால், ராணுவத்தில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களும் இருப்பார்கள். அவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா என்று தயங்கினேன். கடற்படையைச் சேர்ந்த என் நண்பர், ராணுவத்திற்கு மத பேதங்கள் கிடையாது.
கண்டிப்பாக ஏற்பார்கள் என்று ஊக்குவித்தார். அதன் பிறகு தொடர்ந்து வருடா வருடம் என்னுடைய ராக்கி அவர்களை சென்றடையும். கடந்த வருடம் ராணுவ வீரர்களுக்கு நேரடியாக ராக்கி கட்ட என்னை அழைத்திருந்தார்கள். என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் அது. ஐந்து நாட்கள் அங்கு அவர்களுடன் தங்கியிருந்தேன். விருந்தினர் வீட்டிற்கு வந்தால் எப்படி உபசரிப்பார்களோ அப்படி பார்த்துக் கொண்டார்கள்.
எல்லையில் இருந்து LOCல் உள்ள வீரர்கள் என அனைவருக்கும் ராக்கி கட்டினேன். மீண்டும் திரும்பி வரும் வழியில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஜவானையும் பார்த்தோம். அவருக்கும் ஒரு ராக்கி கட்டினேன். அவர் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷத்தை பார்க்க முடிந்தது. ஆனால், அவரால் எனக்கு பரிசு கொடுக்க முடியவில்லை என்று வருத்தப்பட்டார். நான் அவரிடம், ‘எங்களை பாதுகாக்கிறீர்கள், இதற்கு மேல் என்ன வேண்டும்’ என்று கூறிவிட்டு வந்த போது மனசுக்கு நிறைவாக இருந்தது.
ஆரம்பத்தில் ரோட்டரி கிளப் உதவியது. தற்போது சொந்த செலவில் செய்கிறேன். நான் செய்வதை அறிந்து சிலர் ஸ்பான்சர் செய்வார்கள். ஆரம்பத்தில் சிறிய அளவில் அனுப்பிய போது, ராக்கியினை என் கையால் செய்து அனுப்பி வந்தேன். இப்போது 1000த்துக்கும் அதிகமாக செய்வதால், தனி நபராக செய்ய முடியவில்லை. பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளின் உதவியுடன் செய்கிறேன். ராக்கிக்கான மணி மற்றும் கயிறு எல்லாம் நானும் என் கணவரும்தான் பார்த்து பார்த்து வாங்குவோம்.
இந்த வருடம் 3,400 ராக்கிகளுடன், குங்குமம், விபூதி, அர்ச்சனை, சாக்லேட், கூடவே ‘ராம் ராம்’ என்று எழுத ஒரு பாக்கெட் புத்தகம் ஆகியவை அடங்கிய கவரை இந்திய எல்லைக்கு அனுப்பி வைத்து விட்டோம். அவர்கள் அங்கிருந்து ராணுவ கேம்ப்புகளுக்கு பிரித்து அனுப்பி விடுவார்கள். ஒருமுறை குங்குமம் அனுப்பியதை பெண் வீரர்கள் மிகவும் விரும்பியதாகவும், ஹனுமான் சாலிசா மந்திரம் அனுப்பியதை உற்சாகமாக வீரர்கள் படித்ததாகவும் நண்பர் ஒருவர் வாட்ஸ் அப்பில் பகிர்ந்திருந்தார்.
ராணுவ வீரர்கள் மதிக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு பள்ளியிலே அவர்களின் தியாகம் பற்றி சொல்லித் தர வேண்டும். எண்ணற்றவர்களின் உயிர் தியாகமே இன்று காஷ்மீரின் இயல்பு நிலைக்கு காரணம். ராணுவ சகோதர, சகோதரிகளுக்கு எங்கள் மூச்சு உள்ள வரை ஆண்டுதோறும் ராக்கிகளை அனுப்புவோம்’’ என்று முதுமையிலும் உற்சாகத்துடனே கூறுகிறார்கள் ரேவதி கணேசன் தம்பதியினர்.
தொகுப்பு: கலைச்செல்வி
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்