Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போட்டோ ஏஜிங்… இது வெயிலால் வரும் முதுமை!

நன்றி குங்குமம் டாக்டர்

வயதானால் ஏற்படும் பாதிப்புகளில் ஒன்று, சருமத்தில் ஏற்படும் சுருக்கம். ஆனால் இந்தப் பிரச்னை இன்று சிலருக்கு இளம் வயதிலேயே ஏற்படுகிறது. காரணம், புறஊதாக் கதிர்களின் தாக்கம். கோடை காலம் வந்துவிட்டாலே வெயில் நம்மை அனலில் போட்டு வாட்டி எடுத்துவிடும். அதுவும் காலை பத்து மணி முதல் பின் மதியம் நான்கு மணி வரை அடிக்கும் வெயில் ஆளையே உருக்கிவிடும். இந்த கொடும் வெயில் நேரத்தில் வேலை செய்ய வெயிலில் வாடியபடி அலைந்து திரிபவர்கள், பணியின் நிமித்தம் வெயிலில் வாடுபவர்கள் நிலை பரிதாபம்தான். இவர்கள் சருமத்தில் வெயிலின் புற ஊதாக் கதிர்கள் ஊடுருவி, இவர்கள் சருமத்துக்கு ஒரு முதுமையான தோற்றத்தை உருவாக்கிவிடுகிறது.

மருத்துவமொழியில், இதை `போட்டோ ஏஜிங்’ (Photo Aging) என்பார்கள். மனித உடலில் அதிக சென்சிட்டிவான பகுதி சருமம்தான். சருமத்தின் அமைப்பில் டைப் 1, டைப் 2, டைப் 3, டைப் 4, டைப் 5, டைப் 6 என மொத்தம் ஆறு வகைகள் உள்ளன. மரபுரீதியாகவோ அல்லது அன்றாடம் எதிர்கொள்ளும் வெப்பநிலையின் அளவைப் பொறுத்தோ, சருமம் தினமும் உள்வாங்கும் புறஊதாக் கதிர்களின் அளவைப் பொறுத்தோ இந்த வகைகள் அமையும்.

இந்தியர்களுக்கு பெரும்பாலும் டைப் 3 அல்லது டைப் 4 வகை சருமம்தான் இருக்கும். வெப்பம் அதிகரிக்கும்போது சருமத்தில் எரிச்சல் ஏற்படும். நிறத்தைப் பொறுத்து பாதிப்பின் தன்மை அமையும். உதாரணமாக, கறுப்பு நிறத்தில் இருப்பவர்களுக்கு, புறஊதாக் கதிர்களின் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறைவாக இருக்கும். இவர்களின் சருமத்தில் `மெலனின்’ (Melanin) என்ற புரதம் அதிகமாக இருக்கும். அது, இவர்களின் சருமத்தைக் காக்கும் கேடயம் போன்றது.

எனவே, சிவந்த நிறமாக இருப்பவர்கள்தாம், சருமப் பராமரிப்பில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.சரும அமைப்பில் டைப் 1 வகையினர் வெள்ளை நிறத்தில் இருப்பார்கள். அடர் கறுப்பு நிறமாக இருப்பவர்கள், டைப் 6-ன் கீழும், மாநிறமாக இருப்பவர்கள் டைப் 3, டைப் 4-ன் கீழும் வருவார்கள். இதில் டைப் 3, டைப் 4 வகை உள்ளவர்கள், சருமத்தை முறையாகப் பராமரித்தால், புறஊதாக் கதிர்களின் தாக்கத்தால் ஏற்படும் போட்டோ ஏஜிங் பிரச்னையைத் தடுக்கலாம்.

சூரிய ஒளியிலிருந்து வெளிப்படும் கதிர்கள், சருமத்தின் அடிப்பகுதியிலிருக்கும் `எலாஸ்டிக் ஃபைபர்ஸ்’ (Elastic Fibres) என்ற பகுதியில் மாற்றத்தை ஏற்படுத்தும். இது வயதாவதால் ஏற்படும் இயல்பான மாற்றம்தான். ஆனாலும், சூரிய ஒளி அதிகமாகபடும்போது சிலருக்கு முன்கூட்டியே மாற்றம் ஏற்படும். அதுதான் `போட்டோ ஏஜிங்.’

கண்களைச் சுற்றிலும் சுருக்கங்கள், உதடுகளில் சிறு குழிகள், மூக்கு, கன்னம், கழுத்து ஆகிய பகுதிகளில் சருமத்தின் மேற்பரப்பில் நரம்புகள் தெரிவது (Spider Veins) ஆகியவை போட்டோ ஏஜிங் பாதிப்புக்கான அறிகுறிகள். சருமம் பொலிவிழந்து காணப்படுவதும், ஆங்காங்கே சிவப்பு அல்லது கறுப்பு நிறத் திட்டுகள் காணப்படுவதும்கூட போட்டோ ஏஜிங் பாதிப்புக்கான தொடக்கமாக இருக்கலாம்.

போட்டோ ஏஜிங் தவிர்க்க...

*காலை 10 மணி முதல் மதியம் 4 மணி வரை வீட்டைவிட்டு வெளியே செல்வதைக் குறைத்துக்கொள்ளவும்.

*பகல் நேரத்தில் வெயில் அதிகமுள்ள பகுதிக்குச் செல்ல நேர்ந்தால் கைகள், முகம், தலையை மறைக்கும் வகையில் பிரத்யேக ஆடைகளை உடுத்தலாம். தொப்பி, கைகளுக்கு கிளவுஸ் அணியலாம். குடை உபயோகிக்கலாம்.

*தளர்வான பருத்தி ஆடைகளை வெயில் காலத்தில் பயன்படுத்தலாம். இது சருமத்தை காத்து அதிக வியர்வை சுரப்பு வராமல் தடுக்கிறது. இதனால் சருமம் மேம்படும்.

*உடலில் அதிகம் வெயில்படும் இடங்களில் சன்-ஸ்க்ரீன் பயன்படுத்தவும். சன்-ஸ்க்ரீனில் எஸ்.பி.எஃப் அளவு 15 முதல் 30வரை இருக்க வேண்டும்.

*அதிகம் நீர் பருக வேண்டும். நீராகாரங்களை வெயில் காலங்களில் எடுத்துக்கொள்ள வேண்டும். உடலில் நீர்ச்சத்து இருக்கும்போது சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.

*போட்டோ ஏஜிங் அறிகுறிகள் தென்பட்டால், சரும மருத்துவரிடம் முறையான ஆலோசனை பெறவும். சருமத்தின் தன்மைக்கேற்ப சன்ஸ்கிரீன் பரிந்துரைக்கப்படும். சில நேரங்களில் சன்ஸ்கிரீன் மாத்திரைகளும் ஆன்டிஆக்ஸிடன்ட் மாத்திரைகளும் பரிந்துரைக்கப்படலாம்.’’

தொகுப்பு: சரஸ்