Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நிரந்தர உறவுகள்!

நன்றி குங்குமம் தோழி

உன்னத உறவுகள்

தாய் வழி உறவுகள், தந்தை வழி உறவுகள், ஒன்று விட்ட உறவுகள் என ஊர் முழுவதும் உறவுகள் இருந்தாலும், ஒரு சில நேரங்களில் நிரந்தர உறவுகள்தான் முக்கியமான சில முடிவுகளை எடுக்க வேண்டி வரும். வீடு முழுவதும் ஆட்கள் இருந்தாலும், ‘மகன் எங்கே’, ‘மகள் எங்கே’ என்று பலரும் சொல்வதை கேள்விப்பட்டிருப்போம். கூட்டுக் குடும்பங்களில் வீட்டிற்குப் பெரியவர் எடுக்கும் முடிவிற்கு அனைவரும் கட்டுப்படுவார்கள்.

இன்று சிறு குடும்பங்களில் இருக்கும் ஒன்று, இரண்டு பிள்ளைகளும் உத்தியோகத்திற்காக வெளிநாட்டிற்கு சென்றுவிடுகிறார்கள். அந்த சமயத்தில் பெற்றோர்களுக்கு வயதாகும் போதுதான் சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. இன்றுள்ள சமூக ஊடகங்களால் நாம் எங்கிருந்தாலும் தொடர்பு கொள்ள முடிகிறது. உள்ளங்கையில் அடங்கும் கைப்பேசி மூலம் ஒருவருடன் எளிதாக தொடர்பு கொண்டு அனைத்து முடிவுகளையும் எடுக்க முடிகிறது. அதுவே தோளுக்கு மிஞ்சின ஒரு பையனோ பெண்ணோ இருந்து விட்டால் யானை பலம் வந்து விடுகிறது. நாம் நம்மைப் பற்றி நினைக்கிறோமே, நம் பிள்ளைகளின் வாழ்க்கை முறையை யோசித்தால், அவர்கள் வயதாகும் போது நிலைமைகள் எப்படி மாறும், அவர்களின் பிள்ளைகள் எல்லாவற்றையும் சமாளிப்பார்களா என்று யோசித்துப் பார்ப்போம்.

நம் மூதாதையர்கள் நூறு ரூபாயில் சந்தோஷமாக குடுத்தனம் நடத்தினார்கள். நம் பெற்றோர் ஆயிரக்கணக்கில் சம்பாதித்து திருப்தியாக வாழ்ந்தனர். நமக்கு இன்று லட்சம் என்பது சாதாரண விஷயமாக ஆகிவிட்டது. சுகமான வாழ்க்கையும், அனைத்து வசதிகளையும் அடைய வேண்டுமானால், அதற்கேற்ற படிப்பும் உத்தியோகமும் அவர்களுக்கு தேவைப்படுகிறது. காலத்தின் கட்டாயமும் அதுதான் என்றாகிவிட்டது. உண்மையில் சொல்லப் போனால், வெளி இடத்துக்குச் சென்றவுடன் அதீத பாசத்தைக் காட்ட குழந்தைகள் தவறுவதில்லை.

ஒரு சில குடும்பங்களில் இரண்டு பிள்ளைகள் இருந்தால், இருவரும் இருவேறு நாடுகளில் வசிக்கிறார்கள். பெற்றோர்களும் இரண்டு பிள்ளைகள் இருக்கும் இடத்திற்கு சென்று தங்களின் நாட்களைக் கழிக்கிறார்கள். சிலர் கிராமங் களில் வசிப்பதை அதிகமாக விரும்புவர். அவர்களுக்கு பெரிய நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பது சிரமம். நமக்காக பிள்ளைகள் தங்கள் எதிர்காலத்தை தியாகம் செய்து விட்டு, கிராமத்திலேயே இருந்துவிட்டால், முன்னேற்றப் பாதை அவர்களைத் தேடிவராது. அவர்கள் சந்ததி வளர வளர வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்களை பிள்ளைகள் எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகிறது. இப்போதைய நிலை இதுதான் என்றாலும், நம் தமிழ் பாரம்பரியம், முன்னோர்கள் ஏற்படுத்தி தந்த உறவுமுறைகள் “ஊருடன் ஒத்து வாழ்” என்பதையே அறிவுறுத்தின.

குழந்தைப் பருவத்தில் அண்ணன்-தம்பி, அக்காள்-தங்கை போன்ற நம் உறவுகள் எவ்வளவு பாசமான பந்தமாகக் கருதப்பட்டதோ, அவரவர் திருமணம் ஆகி குழந்தைகள் வந்துவிட்டால், பழைய பாச உறவுகள் தொடர்பில் கொஞ்சம் இடைவெளி ஏற்படுகிறது. பாத்தியமான உறவுகளை விட்டுக் கொடுக்காமல், நம் உறவுகள் என்று நினைக்கும் பொழுது எந்த வித சிரமங்களையும் சமாளிக்கும் ஆற்றல் தானே வந்து விடும். பலவித உறவுகளின் தொடர்போடு வாழ்கிறார்கள். உறவுகள் இருக்கிறார்கள் என்று நினைத்தாலே பிரச்னைகள் தீர்ந்து விடும்.

நடுத்தர வயதை கடக்கும் வரை நமக்கு சில விஷயங்கள் புரியாது. தனிமையில் இருக்கும் பொழுதும், பலவித அனுபவங்கள் கிடைக்கும். அப்பொழுதுதான் மனிதர்களின் மதிப்பும், உறவுகளின் அருமையும் தெரியவரும். மனதிலுள்ள அனைத்து விஷயங்களையும் அனைவரிடமும் சொல்லி பகிரமுடியாது. உறவுகளில் ஒரு சிலர் மட்டுமே நெருக்கமாக இருப்பார்கள். அவர்களும் நம்மை நன்றாகவே புரிந்து கொள்வார்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உறவுகளை தக்கவைத்துக் கொள்வது அவசியம். ஒவ்வொரு வயதிற்கும் ஏற்றவாறு நமக்கு அன்பும் அனுசரணையும் தேவைப்படுகிறது.

நம் வயதையொத்தவர்களுக்குத்தான் நம் சங்கடங்கள் புரிய வரும். இறப்பினை யாராலும் நிறுத்திவிட முடியாது. ஒரு குடும்பத்தில் தந்தைக்கு புற்றுநோய். வெளியூரிலிருந்த பையன் தந்தையுடன் இருந்து கவனித்துக் கொள்ள விரும்பினான். ஆனால், எத்தனை தினங்கள் விடுமுறை எடுக்க முடியும்? தந்தைக்கான அனைத்து வசதிகளையும் வீட்டில் அமைத்துத் தந்தான். திடீரென ஒருநாள் பெரிய பெட்டியுடன் வந்து இறங்கினான். ஒரு மாதம் விடுமுறையில் வந்துள்ளதாகக் கூறியிருந்தான். டாக்டர் தந்தையின் உடல் நிலை மோசமடைவதாக அவனிடம் கூறியிருந்தார். சில தினங்கள் தந்தைக்கு சேவை புரிந்தான். எந்தவித குறைபாடுகளும் இன்றி தன் கடமைகளை செய்து முடித்தான்.

உறவுகள் தொடர்பில் இருந்த சமயங்களிலெல்லாம், எத்தனையோ சிரமங்களை நாம் சமாளித்து வந்தோம். இன்று பணம் கொடுத்தால் சிகிச்சை வீட்டிற்கு வரும். கவனித்துக் கொள்ள ஆட்கள் என அனைத்து செளகரியங்களும் கிடைத்துவிட்டன. ஆனால், அவர்களிடம் நாம் பாச உணர்வை எதிர்பார்க்க முடியுமா? சொந்த பந்தங்களின் பாச வார்த்தைகளும், பரிவும் நோயாளிகளுக்கு பாதி மருந்தாக செயல்படுவதுதான் உண்மை. “கவலைப்படாதே, நான் பார்த்துக் கொள்கிறேன், எல்லாம் சரியாகும்” என்று மனப்பூர்வமாக கூறுபவர்கள் உறவுகளாகத்தான் இருக்க முடியும். அதை உணர்ந்துவிட்டால், நாமும் பிறருக்கு உதவியாவோம்.

எத்தனையோ விஷயங்களை பாடத் திட்டத்தில் புகுத்துவது போன்று, ‘வீடு’ என்கிற பல்கலைக்கழகத்தில் அனைத்தும் பிள்ளை களுக்குக் கற்பிக்கப்பட வேண்டும். தாய்-தந்தை, உடன் பிறப்புகள் மட்டுமின்றி குடும்பத்தை வரைபடங்கள் போன்று எடுத்துக் காட்டி 2 தலைமுறை உறவுகளின் முகங்களையாவது காட்டலாம். உறவுகளின் தொடர்பு இல்லாத குடும்பங்களில் தான், பாசம் காட்ட ஆளில்லாமல் மனம் நொந்து போகிறார்கள். உறவின் துணை கிடைத்து விட்டாலே நம்பிக்கையோடு செயல்பட்டு விடுவோம். சமூகத்தில் எந்த மனிதரும் தனித்து இயங்குவதில்லை.

ஒரு துணை அல்லது ஏதாவது ஒரு

உறவு சார்ந்தே வாழ்கிறோம். நம்

முன்னோர்கள் நமக்கு கற்றுக்

கொடுத்ததை, நம் பெற்றோர்

நம்மிடம் காட்டிய பாச-பந்த

உறவுகளைக் கட்டிக் காத்தால்தான் நாளைய சமூகம் அன்பின் வழி நடக்க முடியும். பணமும் வசதிகளும் மட்டும் நமக்குப் போதாது. அன்பு செலுத்த ஆட்களும், பாசம் காட்ட பந்துக்களும், உரிமை எடுத்துக்கொள்ள உறவுகளும் அவசியம் தேவை என்பதை பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லி, இனிமையான குழந்தைப் பருவத்தை, பாசம் என்னும் பரிவைக்காட்டி உறவைக் கூட்டித் தருவோம்.

தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீ நிவாசன்