நன்றி குங்குமம் தோழி
‘‘2018ல் நிகர் கலைக்கூடம் என்ற பெயரில் பறை இசைப் பள்ளி ஒன்றை நான், எனது இணையர் ஸ்ரீ னிவாசன், நண்பர் சுரேஷ் மூவரும் இணைந்து ஆரம்பித்தோம்’’ எனப் பேசத் தொடங்கிய சந்திரிகா, ஆர்கானிக் கெமிஸ்ட்ரியில் பி.எச்.டி படித்த நிலையில், கோவை தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகவும் வலம் வருகிறார்.‘‘கல்லூரியில் படிக்கும் போதே வீதி நாடகங்களில் அதிகம் பங்கேற்றிருக்கிறேன். அப்போது மக்களின் கவனத்தை திருப்ப பறை இசைக்க ஆரம்பித்தோம். இப்படியாகத்தான் பறை என் கைகளுக்கு வந்தது’’ என்றவர், இதனை முறையாக கற்க ஆரம்பித்த போதுதான், பறை சார்ந்த அரசியல் புரிய ஆரம்பித்தது என்கிறார்.
‘‘பறை ஏன் ஒடுக்கப்பட்டவர்களுக்கான இசைக் கருவியாக மட்டுமே இருக்கிறது? ஏன் குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் ஒதுக்கி பறை இசைக்க வைக்கிறார்கள்? ஒரு இசைக் கருவியாய் சாதிய பாகுபாடுகளுக்குள் பறை ஏன் வருகிறது? போன்ற விஷயங்கள் தெரிந்த பிறகு பறை மீதான ஆர்வம் கூடுதலாக முழுமையாய் கற்கத் தொடங்கினேன்.எங்களின் நிகர் கலைக்கூடம் வழியாக ஒவ்வொரு ஞாயிறும் பறை இசை வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தொடங்கும்போது, பெண்கள் குறைவாக இருந்தோம். இன்று பாதிக்கும் அதிகமாய் பெண்களே இருக்கிறோம். எட்டு வயதில் தொடங்கி, 65 வயதுவரை பறை கற்க ஆர்வத்தோடு வருகிறார்கள்.
நிகர் குழுவில் மாணவர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள், ஐ.டி துறையினர், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், திரைதுறை சார்ந்தவர்கள், மாடலிங் துறைக்குள் இருப்பவர்கள், நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் என கலந்தே இருக்கிறார்கள்’’ என்கிற சந்திரிகா, ‘‘படிக்கின்ற மாணவர்கள், மன அழுத்தத்திற்குள் இருந்து தங்களை விடுவிக்கவும், உடலுக்கு வழங்கும் பயிற்சியாகவும் இதைப் பார்க்கிறார்கள். சாதி சார்ந்த மன நிலையை உடைத்து, அரசியலாய் ஒரு இசைக் கருவியை கற்க வேண்டும் என்கிற ஆர்வத்திலும் சிலர் வருகிறார்கள். மேலும், அழிந்து வரும் ஒரு இசைக் கருவியை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் நோக்கத்திலும் சிலர் ஆர்வத்தோடு கற்க வருகிறார்கள்.
இதில் எங்களின் நோக்கம் வெறும் கலைஞர்களை உருவாக்குவதல்ல...
சமூக பொறுப்புள்ள, சாதி, மதம், இனம், பாலினம், நிறம் பார்த்துப் பழகாத கலைஞர்களை உருவாக்குவதுதான். எனவே, சாதி சார்ந்து, மதம் சார்ந்து, மொழி சார்ந்து, இனம் சார்ந்து, நிறம் சார்ந்து, பாலினம் சார்ந்து, வர்க்கம் சார்ந்து, ஒடுக்கப்படுபவர்கள் எவராயினும், அவர்களின் குரலாக, கலையின் குரலாக, கலகக் குரலாக ஒலிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். பயிற்சிக்கு வருபவர்கள், சாதிக்கும், சாவுக்கும், சாமிக்கும் பறை வாசிக்க மாட்டேன். தனி மனித ஒழுக்கம் இல்லாமல் பறை வாசிக்க மாட்டேன்.
பறையை இழிவு செய்யும் இடத்தில் இசைக்க மாட்டேன். மக்களுக்கும், இந்த சமூகத்திற்குமே எனது பறையை பயன்படுத்துவேன். யாரையும் எந்தவிதத்திலும் ஒடுக்க மாட்டேன் என்கிற உறுதி மொழி ஏற்ற பிறகே கற்றுக் கொடுப்போம். பயிற்சியை நிறைவு செய்தவர்கள், பயிற்சியாளர் என்ற இடத்தை அடைவார்கள். பிறகு எங்களில் ஒருவராய் தொடர்ந்து பயணிப்பார்கள். 75க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் தற்போது எங்கள் குழுவில் இருக்கிறார்கள். 100 மாணவர்கள் வரை பறை கற்க வருகிறார்கள். ஒவ்வொரு வகுப்பிலும் மூன்று முக்கியமான புத்தகங்களை மாணவர்களை வாசித்து விமர்சிக்கச் சொல்லுவோம்.
அரசியல் சார்ந்த நிகழ்வுகள், திருமண நிகழ்வுகள் தவிர்த்து, பிற்போக்குத்தனமான சடங்குகள், சாவு இவற்றுக்கு நாங்கள் வாசிப்பதில்லை’’ என்பவரைத் தொடர்ந்து பேச ஆரம்பித்தவர் அவரது இணையரான ஸ்ரீ னிவாசன்.‘‘சுருக்கமாய் எனது பெயர் ஸ்ரீ . தனியார் நிறுவனத்தில் பணியில் இருக்கிறேன். எனக்குப் பிடித்தது இசை. காரணம், தஞ்சாவூர் தவில் சத்தம் கேட்டே வளர்ந்தவன் நான். தவில் தாண்டி பறை மீதும் ஆர்வம் இருந்தது. சாதிய கட்டமைப்புகளை பின்பற்றும் ஊராக தஞ்சை இருந்ததால், நான் பறை வாசித்தது தெரிந்து, என் தாத்தா என்னை பயங்கரமாக அடித்தார். இது என் மனசுக்குள் ஆழமாய் பதிந்தது. புத்தக வாசிப்பின் வழியாக சாதிய அழுத்தங்கள் புரிய ஆரம்பித்தது. பிறகு பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் அறிமுகமானார்கள்.
கோவைக்கு மாறிய பிறகே தேடல் அதிகமானது. பறை கற்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் வீட்டில் எதிர்ப்பு இருந்தாலும், போகப்போக புரிந்துகொண்டார்கள். இதையே என் தொழிலாய் மாற்றிவிடுவேனோ எனவும் பயம் இருந்தது. பிறகு தொழிலாக மாற்றினாலும் என்ன பிரச்னை என்கிற மனநிலைக்கு வந்தார்கள்’’ என்கிற ஸ்ரீ , பறை கற்க கலைக்காகப் போன இடத்தில் காதலும் கிடைத்தது என புன்னகைக்கிறார்.
‘‘2016ல் சந்திரிகாவை சந்தித்தேன். நட்பானோம். பத்து வருடம் காதலித்தோம். 2 ஆண்டுகளுக்கு முன்பு, பறையும்... கலையும்... காதலுமாய் இணைந்தோம். அடிப்படையில் சந்திரிகா வீதி நாடகக் கலைஞர். நாடகங்களின் மீதான பிரமிப்பு எனக்குள்ளும் இருந்தது. சந்திரிகாவோடு இணைந்து வீதி நாடகங்களை கற்கவும், எழுதவும் ஆரம்பித்தேன்.மூன்று வருடப் பயணங்களுக்குப் பிறகு எங்களுக்கென தனி நோக்கம்... தனிப் பயணம்... தனி சிந்தனைகள் வர, ஒரு குழு ஆரம்பிக்கலாம் என முடிவு செய்ததில் உருவானதே நிகர் கலைக்கூடம்.
எங்களோடு நண்பர் சுரேஷும் இணைந்தார். இன்னும் சில நண்பர்களையும் இணைத்து நிகர் கலைக் கூடத்தை உருவாக்கினோம்.பறை வாசிச்சால் படிக்காதவனாய் இருப்பான் என்கிற பொதுப் பார்வையை உடைத்தோம். குழுவில் உள்ள எல்லோருக்கும் படிப்பு இருக்கிறது. வருமானம் தருகிற தொழில் கைவசம் இருக்கிறது. எனவே, உபரி நேரத்தில்தான் பறை வாசிக்கிறோம்.
பறை கற்க வயது தேவையில்லை. யாரால் பறையை தூக்கி தோளில் மாட்ட முடிகிறதோ அவர்கள் கற்கலாம். குழந்தைகள் பறை ஒன்று முதல் ஒன்றே கால் கிலோ எடையிலும், பெரியவர்கள் பறை இரண்டு முதல் இரண்டரை கிலோ எடையிலும் இருக்கும்’’ என்ற ஸ்ரீ , ‘‘பறை கற்க எல்லைகள் இல்லை. ஒரு குழுவோடு இணைந்து மேடையேறி அடவுகட்டி ஆடும் அளவுக்கு கொண்டு வந்துவிடுவோம். மாற்றுத் திறனாளிகளும் வீல்சேரில் அமர்ந்தபடி கற்கிறார்கள்’’ என்றவரைத் தொடர்ந்து, நிகர் கலைக் குழுவின் சுரேஷ் கிருஷ்ணன் பேசத் தொடங்கினார்.‘‘என்னுடைய தனிமனித விடுதலைக்காக, பத்தாண்டுகளுக்கு முன்பு பறை கற்கத் தொடங்கினேன்.
அப்போது எனது தொழிலில் இழப்புகளையும், ஏமாற்றங்களையும் நிறையவே சந்தித்திருந்தேன். எனவே 2 ஆண்டுகள் வீட்டுக்குள் முடங்கிய நிலையில்தான் பறை அறிமுகமானது. நவீன உடைகளில், ஷூ அணிந்து ஒரு குழுவினர் பறை ஆடிக்கொண்டிருந்தனர். நடனத்தில் எனக்கும் ஆர்வம் இருந்ததால், மன அழுத்தத்தில் இருந்து என்னை விடுவிக்க, என் மகள் மற்றும் மகனோடு பறை கற்க ஆரம்பித்தேன். அங்குதான் சந்திரா மற்றும் இணையர்களின் நட்பு கிடைத்தது.
என் மகள், மகனை அவர்களோடு இணைத்துக்கொண்டு, மேடைகளில் பறை இசைத்து ஆடியதில், என் துயரங்களை மறந்தேன். மாற்றம் வந்தது. ஒருமுறை திருமாவளவன் எம்.பி பங்கேற்ற மேடையில் எங்கள் நிகழ்ச்சி பார்த்து, ‘சிறப்பாக ஆடுகிறீர்கள், உங்கள் கலைக் குழுவுக்கு பெயர் வைத்து, அமைப்பாக கொண்டு செல்லுங்கள்’ என்றார். அதன் பிறகே நிகர் கலைக்கூடம் உருவானது. இன்று எங்களிடம் பறை கற்றவர்கள் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டும். ஓய்வு நேரத்தில் மக்களோடு மக்களாக பறையுடன் இருக்கிறேன் என்பதுடன், எனது தொழிலையும் சிறப்பாகக் கொண்டு செல்கிறேன்.’’
பறை தமிழர் இசைக்கருவி!
- சந்திரிகா, ஆசிரியர்.
‘‘என் குடும்பத்தில் எல்லோரும் மில் தொழிலாளியாய் காலையில் சங்கு ஊதியதும் வேலைக்குச் செல்பவர்கள். வறுமையில் வளர்ந்ததால் பசியையும், பாகுபாடு பார்க்காமல் நட்பையும் பாவிக்கும் தன்மை இயல்பிலேயே இருந்தது. அம்மாவும், மாமாவும் கம்யூனிச இயக்கம் சார்ந்து இயங்கியவர்கள் என்பதால், சக மனிதனை மனிதனாய் பார்க்க வேண்டும், பழக வேண்டும் என சொல்லி வளர்த்தார்கள். பறை தமிழர் கருவி என்பதால், நான் பறை வாசிப்பதையோ, வீதி நாடகங்களில் நடிப்பதையோ ஒரு நாளும் என் குடும்பம் கேள்விக்கு உட்படுத்தியதில்லை. ‘ஏன் நீ இந்த நாடகத்தில் இல்லை’ என்ற கேள்விகளே வரும்.
எனக்குள் சிந்தனைகளை விதைத்து, புரிதல் இல்லாத விஷயங்களை பலவற்றை மாற்றியது கல்லூரி வாழ்க்கைதான். சமூகத்தில் நடக்கும் அவலங்களை, அரசியலை நாடக வடிவில் போட எனது பேராசிரியர் ராமராஜ் கற்றுக்கொடுத்தார். நிலா முற்றம், சிந்தனை மன்றம் என்ற பெயரில் புத்தகம் வாசிப்பு, புத்தக விமர்சனம், நாடகம் போடுவதென அரசியலாய் நிகழ்வுகள், விவாதங்களுடன் கல்லூரி படிப்பு நகர்ந்தது. முதுகலைப் படிப்பு வரை கோல்டு மெடலிஸ்டாக வலம் வந்தேன். கல்லூரி முடிந்த மாலை நேரங்களை, சமூகம் சார்ந்த பொது வாழ்க்கைக்கு பயன்படுத்தினேன்.’’
பறை ஓர் உணர்வு!
- சுசித்ரா, இன்டீரியர் டிசைனர்.
‘‘எது என்னை பறை இசைக்க வைத்தது எனக் கேட்டால் எனக்கு பதில் சொல்லத் தெரியாது. அது ஓர் உணர்வு. சென்னையில் வளர்ந்ததால், சாவு ஊர்வலங்களில் பறை ஒலி கேட்டு கடந்திருக்கிறேன். அப்போதே, சாலையில் இறங்கி ஆடத் தோன்றும். எப்படியாவது பறை கற்க வேண்டும் என்பது பலநாள் கனவாய் இருந்தது.
கோவை மாறிய பிறகு நிகர் கலைக்குழு குறித்து தெரிய வந்தது. எனக்குப் பயிற்சியாளராக ஏழு, எட்டு வயது மாணவர்களில் தொடங்கி 50 வயது வரை இருந்தார்கள். என்னைவிட வயது குறைந்தவர்களோடு மேடையை பகிர்வது புதுவித அனுபவமாக இருந்தது. அந்தளவுக்கு அவர்களோடு நம்மை இணைத்துக் கொண்டு ஆட வைத்துவிடுவார்கள். குழுவில் அனைவருமே சமம். ’’
தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்
படங்கள்: மூர்த்தி