Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உன்னத உறவுகள் - ஒட்ட வேண்டிய உறவுகள்!

நன்றி குங்குமம் தோழி

‘அரிது அரிது, மானுடராய் பிறத்தல் அரிது’

என்பதற்கேற்றபடி மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்தப் பிரபஞ்சம் உறவுமுறைகளை ஏற்படுத்தித் தந்துள்ளது. அதன் மூலம் பாசம், பந்தம், அன்பு, அரவணைப்பு, ஆற்றல் போன்ற அனைத்து உணர்வுகளையும் உணரச் செய்துள்ளது. இத்தகைய உணர்வுகள் நம்மை எந்தவித கவலைக்கும் ஆளாக்காமல், சந்தோஷத்துடன் வாழவைக்கிறது. திருமணம் நிச்சயிக்கப்பட்டால் கூட, மணமக்கள் வீட்டில் பெரியவர்கள் இருக்கிறார்களா? அவர்கள் குடும்பம் எத்தகையது? எல்லோரும் சுகமாக வாழ்கிறார்களா என்று பார்ப்பார்கள்.

குடும்பப் பின்னணி நன்கு அமைந்துவிட்ட பிறகுதான் திருமணம் பேசி முடிப்பார்கள். பெரியவர்கள் பார்த்து முடித்த கல்யாணங்களில் குடும்பம் செழித்து உறவுகளும் நிரம்பி வழிந்தன. பிள்ளைகள் நிறைய இருந்தால் அதை சுபிட்சமான குடும்பம் என்றார்கள். பெரும்பாலான குடும்பங்களில் பத்து, பன்னிரெண்டு குழந்தைகள் கூட இருந்தார்கள். தாய் - தந்தை இருபக்க உறவுகள், அவர்களின் உறவுகள் என உறவுகள் கூடிக்கொண்டேயிருந்தன. பிள்ளைகள் வளர்ந்து திருமணத்திற்கு பிறகு தம்பதிகளின் உறவுகள் கூடின. ஆனால், இப்பொழுது பெரும்பாலான திருமணங்கள் பிரிவில் முடிவதால், உறவுகளும் அறுந்து போகின்றன. சந்ததிகள் உருவாவதில் ஏற்படும் பிரச்னையால், குடும்பங்கள் செழிப்பதிலும் பின்னடைவு ஏற்படுகிறது. ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு குழந்தைகள் தான்.

அவர்களும் தனித்து வளர்கிறார்கள். இன்று பெரும்பாலான பிள்ளைகள் வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறார்கள். பெற்றோர்களும் ஆறு மாதம் ஒவ்வொரு பிள்ளையுடன் வசிப்பதால், உறவுகளிடம் இடைவெளி ஏற்படுகிறது. ‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்’ என்பது போல் உறவுகளோடு இருக்கும்பொழுது நம் வாழ்க்கையை திடமானதாக அமைத்துக் கொள்ள வேண்டும். நெருங்கிய உறவோ, ஒன்று விட்ட உறவோ யாராக இருந்தாலும் நாம் மனம் விட்டுப் பேச ஒரு நம்பிக்கை உறவு கிடைத்துவிட்டால் போதும், அது நண்பராகக்கூட இருக்கலாம். ஆறுதல் தந்து நம்பிக்கை உணர்வை ஏற்படுத்தினால் போதும். பெரியவர்கள் நம்முடன் இருந்து வழிகாட்டும் வரை நமக்கு எந்த சுமையும் தெரியாது.

தனியாக இருக்கும் பொழுதுதான் குழந்தையை வளர்ப்பது கூட கஷ்டமாக தெரியும். இன்று கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் போது அனைத்து குடும்ப விவகாரங்களையும் அம்மாவோ, அத்தையோ பார்த்துக் கொள்வார்கள். உறவுகளின் துணை என்பது ஒரு யானை பலம். உறவுமுறைகளை நாம் ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாள் பார்த்துப் பழகினாலும், அவர்கள் தம் எண்ணங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்ளும் அளவு அவர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும். எந்தவித உறுதுணையும் காட்டாமல், பிறரைக் குறை சொல்லக்கூடாது. குடும்பத்தில் உள்ள உறவுகளை உதறிவிட்டு வேறு புதிய உறவுகளை தேட முடியாது.

உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குத்தான் நமக்கு என்ன தேவை என்பது புரியும். புரியாவிட்டால்கூட நம்மால் நம்பிக்கையோடு மணம் திறந்து பேச முடியும். அதனால்தான் அந்தக் காலத்தில் பிள்ளை இல்லாதவர்கள் கூட உறவினர்களிடம் இருந்து பிள்ளையினை ‘தத்து’ எடுத்துக் கொண்டார்கள். பாசபந்தமும் சொந்தப் பிள்ளைகளிடத்தில் வைப்பது போலவே இருக்கும். சில வீடுகளில் தத்துப்பிள்ளை என்று சொல்ல முடியாத அளவுக்கு பாசம் கொட்டி வளர்ப்பார்கள்.

பாரம்பரியம் செழிக்கவும், உறவு முறைகள் கூடவும் நிறைய தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். அத்தகைய உறவுகளை இன்று தேடினாலும் கிடைக்குமா? குடும்பங்கள் சிறுகச் சிறுக உறவுகளும் குறைந்து வருகின்றன. ஒரு திருமணத்திற்கு சென்றாலே, மற்றொரு திருமணம் நிச்சயமாகும். மகனோ, மகளோ மண வயது அடைந்துவிட்டாலே, திருமணங்களில் பார்க்கும் உறவினர்கள், தெரிந்தவர்களிடமெல்லாம் சொல்லி வைத்து விடுவார்கள். உறவினர் மூலம், தெரிந்தவர்கள் மூலம் திருமணங்கள் பேசி முடிப்பதில் அப்படியொரு நம்பிக்கை இருந்தது.

நாளடைவில் தொடர்புகள் குறைய வரன் பார்க்கும் மையங்கள் நிறைய வந்துவிட்டன. பரம்பரையாக காணப்பட்ட பாச பந்தங்கள் குறைய தொடங்கின. நாம் வாழும் காலத்தில் பிள்ளைகளுக்கு நிறைய உறவு முறைகளை சொல்லித் தந்து வளர்ப்போம். நாம் அனுபவித்த மகிழ்ச்சியை அவர்கள் மனதில் உணரச் செய்வோம். இதனால் நமக்குப் பின்னும் குடும்பம் ஆல மரமாக செழித்தது. உறவுகளோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை நமக்கு விட்டுக் கொடுத்து வாழ கற்றுத் தந்தது.

நம் பிள்ளைகள் நம்மிடம் பார்த்துக் கற்றுக் கொண்டால்தான், அவர்களின் வாரிசுக்கு உறவின் அர்த்தத்தை சொல்லித்தர முடியும். இப்பொழுதே இத்தனை மாற்றங்கள் உறவுகளுக்குள் இடைவெளியை ஏற்படுத்திவிட்டதே என்று நினைக்கும் போது நம் பிள்ளைகளின் பிள்ளைகள் பாசத்தைப் பார்ப்பார்களா?

ஒவ்வொரு உறவிலும் ஆத்மார்த்தமான புரிதல் என்பது காணப்படுகிறது. அம்மா வீட்டில் பெண் பிள்ளையை திட்ட காரணம் அவள் நன்கு வளர வேண்டும் என்ற ஆதங்கத்தினால் மட்டும் தான். தன்னுடைய பெண் அனைத்தையும் தெரிந்து கொண்டு செழிப்புற வாழ வேண்டும் என்ற எண்ணத்தில்தான் கட்டுப்பாடு களை விதிக்கிறார். அண்ணன், தம்பி, அக்கா, தங்கைகளுடன் வளரும் பிள்ளைகள் விட்டுக் கொடுத்து வாழ கற்றுக்கொடுக்கிறார்கள். குடும்ப உடன்பிறப்புகள் மட்டுமல்ல, ரத்த பந்தங்களும் இப்படித்தான்.

அண்ணி தன் நாத்தனாருக்கு ‘போளி’ பிடிக்கும் என்பதால், அவள் வரும் போது அதை செய்து கொடுப்பாள். அத்தை உறவில் பேச்சிலேயே பாசம் கொட்டும். நமக்கு இது பிடிக்கும் என்று கூறிவிட்டால் போதும், வாழ்நாள் முழுவதும் அன்போடு கலந்து, பாசத்தைக் கொட்டி, பரிவுடன் சமைத்துத் தருவார்கள். கடவுள் தாய், தந்தையை நமக்குக் கொடுத்துள்ளது போல, இதர உறவுகளையும் கொடுத்துள்ளார்.

அன்று நமக்குக் கிடைத்த அரவணைப்பும், ஆனந்தமும் அடுத்தடுத்த சந்ததியருக்குக் கிடைக்க வேண்டுமானால், உறவினர்களின் மகத்துவம் பற்றி பிள்ளைகளுக்கு சொல்லித் தர வேண்டும். திருமணம் முடிந்தவுடன் சீர்வரிசைகள் கொடுத்து அனுப்புவது போல, நம் உறவினர்கள் பற்றிய அறிமுகத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். உறவினர்களை அறிந்து கொள்வதற்காகவே அந்தக்காலத்தில் மறு அழைப்பு, விருந்து என்றெல்லாம் உறவினர்கள் ஒன்று கூடினார்கள்.

இன்றைய காலகட்டத்தில் எல்லாம் மாறிவிட்டன. பெரியவர்கள் இருக்கும் வரை உறவுகளை ஒட்டவைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் காலம் முடிந்து விட்டாலும், அடுத்த சந்ததிகள் உறவுகளை நீடிக்க வேண்டும். அப்பொழுதுதான் அடுத்தடுத்த சந்ததிகளின் தொடர்பில் உறவுகள் தொடரும். வெளிநாடுகளில் வசித்தாலும், வார விடுமுறை நாட்களில் உறவினர்களுடன் தொடர்பு கொள்ளலாம். பொழுது போக்கிற்காக ‘மால்’, ஃபுட் ஸ்ட்ரீட் போன்ற இடங்களுக்குச் செல்கிறோம். அதே போல் ஒரு நாள் உறவினர்களை சந்தித்து வரலாம்.

குறிப்பாக வயதானவர்கள், அதிகம் வெளியே போகாதவர்களை நாம் நேரில் சென்று பார்க்கலாம். சக பிள்ளைகளுக்கும் இந்தப் பழக்கங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். உறவுகளுடன் கூடி வாழாமல் போனால், நாளைய வளரும் பிள்ளைகள் உறவுகள் தெரியாமல் தனித்து விடப்படுவார்கள். எத்தனையோ விஷயங்களில் கவனம் செலுத்துகிறோம். நம் கலாச்சார உறவு முறைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்று, அவர்களும் சுபிட்சமாக வாழ துணை புரிவோம்!

தொகுப்பு: சரஸ்வதி நிவாசன்