நன்றி குங்குமம் தோழி
உன்னத உறவுகள்
நெருங்கிய உறவுகள், ரத்த பந்த உறவுகள், பங்காளி என பல்வேறு உறவு முறைகளைப் பற்றி பார்த்தோம். அறுபது, எழுபது வயதைக் கடந்தவர்கள் இளமையை எப்படியெல்லாம் சந்தோஷமாக கொண்டாடியிருப்பார்கள் என்பதை அறிய முடிகிறது. ‘கவலை என்றால் என்ன’ என்பதே அப்பொழுது அவர்கள் கேட்டிருக்கக்கூட முடியாது. ஆனால், இன்று மூன்று வயது குழந்தை கூட “என்னை டென்ஷன் ஆக்காதே!”என்று கத்திப் புலம்புகிறது. பணமும், வசதிகளும் இல்லாத காலகட்டத்தில், பந்தமும், பாசமும் குறைகளை நிறைவாக்கியது.
இன்று அனைத்தும் இருந்தும், நான்கு சுவற்றுக்குள் வாழ்க்கை முட்டி மோதிக் கொண்டிருக்கிறோம். யாரைக் கேட்டாலும், ஏதாவது பிரச்னை இருப்பதாகத்தான் காட்டிக் கொள்கிறார்கள். பிரச்னைகளை சுமுகமாக பேசித் தீர்த்து விடுகிறோம். ஆனால், ஒன்றுமில்லா விஷயங்களை பெரிய பிரச்னையாக மாற்றி விடுகிறோம். காரணம், ஆறுதல் கூறி, அரவணைத்து அன்பு செலுத்த அருகிலேயே இருந்த உறவினர்களுக்கு இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டு இருக்கிறது. சரித்திரம் படித்து மன்னர்கள் வாழ்வை அறிந்து கொண்டது போல், நம் முன்னோர், மூதாதையர், பெற்றோரின் இளமைப் பருவத்தை கேட்டுத் தெரிந்து கொண்டால், நடைமுறை வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்துகொள்ள முடியும்.
ஒன்றாக, கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த காலத்தில் பெரியவர்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டார்கள். உறவினர்கள் கை கோர்த்து வழி நடத்தினார்கள். காலத்தின் கட்டாயம், விஞ்ஞான முன்னேற்றம், சமூக ஊடகங்களின் வளர்ச்சியின் விளைவு, மன அழுத்தம். பிரச்னைகளை பகிர்ந்து கொள்ள நல்ல உறவுகள் உடனில்லை. இளம் வயதிலேயே அனைத்து சுமைகளையும் சுமக்கும் பொழுது வாழ்க்கையின் இனிமையான தருணங்களைக் கூட அனுபவிக்க முடிவதில்லை. உறவினர்கள் மட்டுமல்லாது, உறவினர்களின் உறவுகளும் கூட நம்முடன் நல்லது-கெட்டதில் பங்கெடுத்துக் கொண்டார்கள். நம் சொந்த உறவுகளை விட, அவர்கள் நெருக்கமாகிவிடுவார்கள். ஒரு குடும்பத்தில் தாய், தந்தையில்லாத இரண்டு திருமணமாகாத பிள்ளைகள் இருந்தார்கள்.
அவர்களின் அண்ணன் திருமணமாகி வேறு இடத்தில் வசித்து வந்தார். பேச்சலர்களுக்கு வாடகைக்கு வீடு எளிதாக கிடைக்காது. அவர்களின் அண்ணியின் வீட்டில் இரண்டு அறைகள் அதிகப்படியாக இருந்ததால், அங்கு தங்கிக்கொள்ள அழைத்தார். இவர்கள் நெருங்கிய உறவுகளாக மாறினார்கள்.
உறவு பந்தம் பிறப்பால் மட்டும் அமைவதில்லை. சில சமயங்களில் நெருங்கிய உறவுகளை விட, உறவுகளின் உறவுகளிடம் நமக்கு அதீத அன்பும், பாசமும் கிடைக்கும். நடைமுறை வாழ்க்கையில் பல்வேறு குடும்பங்களில் கண்கூடாகவே பார்க்கலாம். மாமா, தன் தங்கையின் பிள்ளைகளை குறைகூறிக் கொண்டே இருப்பார். ஆனால், மாமி பிள்ளைகளிடம் அதிகம் பாசம் காட்டினார். மாமா குறை கூறும் விஷயங்களை அவர்கள் பெருமைப்பட எடுத்துரைத்தார்கள். அவர்களை ஊக்குவித்து அதற்கான யுக்திகளையும் சொல்லித் தந்தார். அன்பாகப் பேசும் உறவுகளைத்தான் அனைவரும் விரும்புவார்கள். உறவுகளின் உறவுகள் நெருக்கம் காட்டும் பொழுது நம் மனம் அதைத்தான் விரும்பும்.
ஒருவர் மனம் புண்படாமல் பேசும் போது அவர்கள் மேல் அன்பு அதிகரிக்கும். உறவுகள் என்றுமே முடிவதில்லை. அடுத்தடுத்த பரம்பரைகள் மூலம் வளர்ந்து கொண்டேதான் இருக்கும். அதனால் தான் ‘குடும்ப வாரிசு’ வேண்டும் என்று பெரியவர்கள் சொன்னார்கள். வாரிசு இல்லாத குடும்பங்களில் பரம்பரையே சில நாட்களில் மறைந்துவிடும். எதுவுமே அருகில் இருக்கும் போதோ, உடன் கிடைத்துவிட்டாலோ அதன் மதிப்புத் தெரிவதில்லை.
நமக்குள்தான் எத்தனை உறவுமுறைகள், அத்தனை உறவுகளின் உறவு முறைகளும் நமக்குப் பின்னாலும் வரும் சந்ததிகளுக்கு தோள் கொடுக்கத் தயாராகிறார்கள். உறவுகளை வளர்த்துக் கொள்வதற்காகவே, மேலை நாடுகளில் பிறந்த நாள், திருமண நாள் போன்ற தினங்களில் ஒன்று கூடுகிறார்கள். உறவுகள் இல்லாத மனிதர்களே இல்லை. உறவுகளை அனுசரித்து, அரவணைத்து வாழ்வதுதான் நம் மனிதப் பிறப்பின் சிறப்பு.
கிராமத்தில் படித்து வளர்ந்த பையன் வேலைக்காக வெளிநாடு செல்ல நேர்ந்தது. தந்தையை தனியாக விட்டுச் செல்ல அவனுக்கு மனமில்லை. தன்னுடன் வந்து தங்கும்படி கூறினான். தந்தையோ, கிராமத்தை விட்டு தன்னால் வர இயலாது என்று கூறிவிட்டார். கிராமத்தில் அவர் அக்கம் பக்கத்து மக்களுடனும், உறவுகளுடனும் இருப்பதால் கவலைக் கொள்ள தேவையில்லை என்று அவனுக்கு தைரியம் கூறி வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தார். உறவிற்கும் உறவுகள், விட்டுக் கொடுத்து வாழ்; உறவை மட்டும் விடாதே!
தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீ நிவாசன்