Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உன்னத உறவுகள்

நன்றி குங்குமம் தோழி

உயிரையே வைக்கும் உறவுகள்

குடும்பத்தை ஒரு வரைபடமாக வரைந்து பார்த்தால், அதிலுள்ள ஒவ்வொரு திசையிலும் பல்வேறு உறவுகள் இருப்பார்கள். முன்னோர்கள் வழியில் வளர்ந்து கொண்டே வருவதுதான் உறவுமுறைகள். இது நம் பாரம்பரியத்தின் நியதி. குடும்பம் வளர வளர, உறவுகள் மற்றும் சொந்தங்கள் பெருகும். அதனால்தான் பெரியவர்கள் ‘எத்தனை பிள்ளைகள்?’ என்றுதான் கேட்டார்கள். பிள்ளையில்லாத குடும்பங்களில், வாரிசுகள் இல்லாமல் போனால், ஒரு கட்டத்தில் உறவு முறைகளும் நிறைய சேராமல் போய்விடும் என்று கவலையடைவார்கள்.

வாரிசு இல்லாத குடும்பங்களில் கூட உறவுமுறைப் பிள்ளைகளை ‘தத்து’ எடுத்துக் கொண்டார்கள். அதன் மூலம் குடும்பம் வளர்ந்து, உறவுகளும் சேரத் தொடங்குவார்கள். மொத்தத்தில், மனிதர்கள் யாருமே தனித்து இருப்பதில்லை. உறவுகள் புடை சூழ வாழ்வதுதான் சமூகத்தில் நமக்குப் பெருமையையும், நல்ல ஒரு மதிப்பையும் தருகிறது. குறிப்பாக புனிதமான உறவுகளாகக் காணப்படும் தந்தை-மகள், தாய்-மகன் உறவுகளை எதனோடும் ஒப்பிட முடியாது.

தந்தைக்கு முதல் நெருக்கமான பெண் உறவு தாய். அவரின் அன்பும், பாசமும், பரிவும் வேறு யாரிடமும் காண முடியாது. ‘தாய் சொல்லை தட்டாதே!’ என்பது நாம் அறிந்ததே! ‘தாய்க்குப் பின் தாரம்’ என்பார்கள். தாய் முதுமை அடையும் பொழுது, அவரின் இடத்தை தாரம் நிரப்புவதாக சொல்வார்கள். தாரம் மூலம் வரும் பெண் வாரிசு தந்தைக்கு உயிராக அமைந்து விடுகிறது. அதே போல் தமக்கையும் அதீத பாசத்தை அள்ளித் தருவாள். ஆண் பிள்ளைகளை கண்டித்து வளர்க்கும் தந்தை பெண்களிடம் அவ்வளவாக கோபப்பட மாட்டார். பெண்களுக்கு, தந்தை என்றாலே ஒரு கதாநாயகன் என்ற பாவனைதான் மேலோங்கும். எந்தப் பிரச்னையாக இருந்தாலும், அப்பா அருகில் இருந்தால் எதையும் சமாளித்து விடலாம் என்ற தைரியம் பெண்ணுடைய மனதில் ஆட்கொள்ளும்.

ஆண்களுக்கு மனைவி என்ற பக்கபலம் உடன் இருந்தால் போதும். அவர்களால் சாதிக்க முடியாவிட்டாலும், துணை நின்று கைகோர்த்தால் போதும். வீட்டில் பெரியவர்கள் இருந்த காலத்தில் யாரும் கணவன் பெயரை சொல்லக்கூட மாட்டார்களாம். மாப்பிள்ளை எதிரில் மாமியார் நின்று பேசக்கூட மாட்டார்களாம். மாமனார்கள் கூட மாப்பிள்ளையை வாங்க, போங்க என மரியாதை கொடுத்துத்தான் பேசுவார்களாம். இன்று அத்தகைய உறவுகள் அனைத்துமே நட்பு போல் அமைந்து விட்டது. தன் பிள்ளை போன்றே மாமியார், மாமனாரும் மருமகளை நடத்துகிறார்கள். மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான்.

ஒரு குடும்பத்தில் ஒருவரின் மனைவி இறந்து விட்டார். இரு மகள்களும் வெளிநாட்டில் வாழ்ந்து வந்தனர். மூத்த மகள், அப்பா தனித்து இருப்பதை விரும்பாமல், தன்னுடன் அழைத்துச் சென்றாள். அங்கு எல்லோரும் தங்கள் வேலைகளில் மும்முரமாக இருக்கவே, தனிமை அவரை மிகவும் பாதித்தது. இதனால் உடல் நலம் பாதித்தது. அப்பாவின் இந்த மாற்றத்தைப் பார்த்த மகள் அப்பாவின் இருப்பிடத்திற்கே செல்ல ஆயத்தமானாள். வேலையை தாய்நாட்டிற்கு மாற்றிக்கொண்டாள். தன் இரண்டு பிள்ளைகளையும் பிறந்த ஊரில் பள்ளியில் சேர்த்தாள். கணவர் மட்டும் அவ்வப்பொழுது வந்து போனார். மனைவி வாழ்ந்த இடம் என்பதால், தந்தையும் பழைய நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருந்தார்.

கோவில், குளம் என இஷ்டத்துக்குச் செல்லவும், தன் வயதையொத்த நண்பர்களோடு பேசி நேரம் கழிப்பதும் நல்ல ஒரு பொழுதுபோக்காக அவருக்கு அமைந்தது. தந்தை தனிமையில் பட்ட ேவதனையை மகளால் புரிந்துகொள்ள முடிந்தது. தந்தையின் பாசத்திற்கு முன்னால், தன் வேலையையும் சம்பாத்தியத்தையும் அவள் பெரிதாக நினைக்கவில்லை. வயிற்றில் சுமந்த தாயின் பாசம் ஒரு புறமென்றால், தோளில் சுமந்த தந்தையின் பாசம் மறுபுறம். தாயின் தியாகம் அனைவரும் அறிந்த உண்மை. அதே சமயம் தந்தை-மகள் பாசம் என்பதும் மறுக்க முடியாதுதான். பெண் பிள்ளைகள் அப்பாவிடம் அளவு கடந்த பாசம் வைப்பதும், மகன்கள் அம்மாவிடம் அதீத அன்பு கொள்வதும் இயற்கையானது.

அப்பா கண்டிப்பாக இருக்கும் பட்சத்தில், பிள்ளைகள் அம்மாவிடம் ஒண்டிக்கொள்வார்கள். சில வீடுகளில் அனைத்தும் அம்மாவே பார்த்துக்கொள்வதால், அப்பாவின் தலையீடு அதிகம் இருக்காது. ஒரு பையன் படிப்பில் குறைவான மதிப்பெண் எடுக்கும் போது அப்பா அதுகுறித்து கேட்டால், ஏதாவது பொய் சொல்லி தப்பித்துக் கொள்வான். அம்மா ஆறுதல் தருவாள் என்பதால் மதிப்பெண் அட்டவணையை அம்மாவிடம் காட்டி கையெழுத்துப் பெற்று விடுவான். மொத்தத்தில் அப்பா, அம்மா இருவருக்கும் அனைத்தும் அவர்களின் பிள்ளைகள் தான். சில குடும்பங்களில் அப்பா-அம்மா தெம்புடன் இருக்கும் பொழுது, பிள்ளைகள் வெளிநாட்டில் படிக்கவும், உத்தியோகம் செய்கிறார்கள். ஆனால், அவர்களில் ஒருவர் உடல் நலம் பாதித்தால் கூட பிள்ளைகளால் தாங்க முடிவதில்லை.

நம் தாத்தா-பாட்டி காலத்தில், கணவன்-மனைவி கூட ஒருவர் மேல் ஒருவர் உயிரையே வைத்திருந்தனர். கணவனுக்கோ மனைவிக்கோ வயதாகும் போது, வாரிசுகளின் துணைதான் தேவைப்படுகிறது. நாம் பாசம் காட்டி வளர்த்து விடும் பிள்ளைகள் கண்டிப்பாக வேண்டிய காலகட்டத்தில் உடனிருந்து காப்பாற்றுவார்கள். சில இடங்களில் பிள்ளைகள் அப்பாவிடம், நண்பன் போல் பழகுவதும், பெண் பிள்ளைகள் அம்மாவின் தோழி போல் பழகுவதும் இன்றைய காலகட்டத்தில் சகஜமாகிவிட்டது. அப்பா, மகன் ஒரே மாதிரி நிறத்தில் உடை அணிவதும், அம்மா, பெண் ஒரே மாதிரி காணப்படுவதும் அவர்களின் நெருக்கத்தைக் காட்டுகிறது. இது போல் அதீத அன்பைக் காட்டும் உறவுகள் கண் டிப்பாக ஒருவர் மேல் மற்றொருவர் உயிரையே வைத்திருப்பார்கள். அந்நியோன்ய உறவு என்று கூட இப்படிப்பட்டவர்களை சொல்லலாம்.

ஒரு குடும்பத்தில் அப்பா சில நாட்களுக்கு நோய் வாய்ப்பட்டிருந்தார். அவரின் வயது மூப்புக் காரணமாக அவர் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படவில்ைல. இந்த விஷயம் அம்மாவின் மனதை பாதித்தது. மனதை தனக்குள் திடப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தாள் அம்மா. எப்படியும் சில தினங்களில் அவரின் பிரிவை தாங்க வேண்டிய காலகட்டம் வரும் என நினைத்து மனதை திடப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தாள். ஆனால், அவரை இழந்துவிட்டால் தான் மட்டும் தனியாக வெகு காலம் வாழக்கூடாது என்பதை மனதில் ஜெபிக்க ஆரம்பித்தாள். தன் பிள்ளைகளிடமும் வெளிப்படையாகவே இக்கருத்தை சொல்ல ஆரம்பித்தாள். ஒரு நாள் தந்தை அப்படியே தன் தூக்கத்தில் உயிரை துறந்தார்.

பத்துப் பதினைந்து நாட்கள் வீட்டில் உறவு மனிதர்கள் நிறைய பேர் இருக்கும் வரை அம்மா கொஞ்சம் தன்னை சமாளித்துக் கொண்டு, மனம் ரொம்ப தளராமல் காணப்பட்டார். வந்திருந்த அனைவரும் சென்றுவிட்ட பிறகு, அம்மாவின் மனநிலை மோசமாகி சாப்பிடாமல், அவ்வப்பொழுது உடல் நலம் பாதிக்கப்பட்டார். ஆனாலும், இறக்கும் நிலையை அடைவார் என்று யாரும் நினைக்காத தருணத்தில், நன்கு மனம் திறந்து பேசி விட்டு உறக்கத்திலேயே ஆழ்ந்துவிட்டார். சரியாக தந்தை இறந்த நூறாம் நாளில் தாய் இறந்தது பிள்ளைகளால் சிறிதும் யோசித்துக்கூடப் பார்க்க முடியவில்லை. கண்டிப்பாக அவர்கள் ஒருவர் மேல் மற்றொருவர் உயிரையே வைத்திருக்க வேண்டும் என்பதுதான் நிஜம்.

பிள்ளைகள் சுகமாக வளர வேண்டும் என்று எப்படி பெற்றோர் நினைக்கிறார்களோ, அதேபோல் பிள்ளைகளும் தங்கள் தாய், தந்தை கௌரவமாக வாழ வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். சிறிய வயதில் வேண்டுமானால் அத்தகைய பக்குவம் வராமல் இருக்கலாம். மொத்தத்தில் இவையெல்லாமே ஒருவர் ஒருவர் மேல் வைத்திருக்கும் அதீத அன்பு, பாசத்தையே காட்டுகிறது. எங்கேயோ ஒரு சில இடங்களில் காணப்படும் விதிவிலக்குகள்தான் பெற்றோர் இருப்பிடத்தையே மாற்றுகிறது. இந்த பிரபஞ்சம் நம்மை குடும்பம் என்ற பாச பந்தத்தால் ஆன கூட்டில் இணைத்துள்ளது. கூட்டை விட்டுப் பறந்தாலும், பாசம் விட்டுப் போகாமல் மீண்டும் நம் கூட்டையே வந்தடைவோம்.

தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீநிவாசன்